வெள்ளி, 30 நவம்பர், 2012

நலம் நலம் தானே நீயிருந்தால்



சென்ற வாரம் வாழ்க்கை துணைவருக்கு உடல் நலம் சரியில்லை. தலை சுற்றல்.
மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு, ‘அடுத்த வாரம் வாருங்கள், தேவைப் பட்டால் ப்ரைன் ஸ்கேன் செய்யலாம்,’ என்றார்.
‘ஏதாவது நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் சொல்லுங்கள். மறதி அதிகம் இருக்கிறதா?’
எப்போதுமே யாருடைய பெயரும் நினைவிருக்காது துணைவருக்கு. ஒரு முறை வழக்கமான தொலைக்காட்சி தொடரை ஒரு நாள் பார்க்க முடியாமல் போயிற்று. துணைவரிடம் ‘என்ன ஆச்சு?’ என்றேன்.
‘ஒண்ணும் ஆகலை. அவ இருக்கால்ல… இவளோட வீட்டுக்கு அவ வரா. இவளோட அம்மா அவளைப் பத்தி எதோ சொல்ல…இவளுக்கு கோவம் வந்து…இவளோட ஆம்படையான் அவளை திட்ட….’
அடுத்த வாரம் நானே பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி விட்டேன்!
மருத்துவரும் எங்களுடன் கூட சிரித்து விட்டு ‘உட்கார்ந்த இடத்திலேயே தூங்குகிறாரா?’ என்று அடுத்த கேள்வி கேட்டார்.
‘பின்ன? உட்கார்ந்த இடத்தில் தான் தூங்குவார்.  தொலைக்காட்சி சத்தம் தான் தாலாட்டு. தொலைக்காட்சியை நிறுத்தினால் அடுத்த நொடி எழுந்து விடுவார். அத்தனை மின் விளக்குகளும் எரிய…தூங்கினால் தான் உண்டு. படுத்தால் தூக்கம் போய் விடுமே…!’
மருத்துவர் வாய் விட்டு சிரித்தார். ‘நீங்கள் இப்படி பேசினால்…..’
‘உங்களுக்கு நோயாளிகள் குறைந்து விடுவார்கள்….’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.
அடுத்த வாரம். மருத்துவ மனை செல்ல லிப்ட் அருகே போனோம். வா.து. மூக்கை இழுத்து இழுத்துப் பார்த்து விட்டு, ‘ஏதோ பர்னிங் ஸ்மெல்….!’ என்றார்.
‘ப்ரைன் ஸ்கேன் தேவை இல்லை….யு ஆர் பர்பெக்ட்லி ஆல்ரைட்’ என்றேன் நான்.
மருத்துவர் நான் சொன்னதை ரசித்துவிட்டு ‘எதற்கும் ஈ.என்.டி – யை பாருங்கள்’ என்றார்.
ஈ.என்.டி நிபுணர் பல்வேறு நிலைகளில் துணைவரை படுக்க வைத்து, எழ வைத்து…..  ‘ஒன்றுமில்லை…. காதுக்குள் இருக்கும் திரவத்தில் ஏதேனும் குறை இருக்கலாம். காதுக்குள் சிறிது மெழுகு சேர்ந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு இந்த மருந்தைப் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் காதுகளை சுத்தம் செய்யலாம்’ என்று கூறி அனுப்பினார்.
வீட்டிற்கு வந்தோம். வா.து. சொன்னார்.
‘கண்ணிற்கு மருந்து காலை 8 மணிக்கு. கொஞ்ச நேரம் கழித்து காதிற்கு மருந்து போடு’ என்றார்.
நான் சிரித்தேன். ‘பழைய வண்டிகளுக்கு எண்ணெய் போட்டு ஓவர்ஹால் செய்வது போல  ஒரொரு உறுப்புக்கும் மருந்து போட்டு சரி செய்து கொள்ள வேண்டும் – வயதானால்….’ என்றேன்.
வாழ்க்கை துணைவரும் கூடவே சிரித்தார்
வயதுடன் கூட நகைச்சுவையும் கூடினால் நல்லதுதானே?
நலம் (நான்), நலம்(ஆகத்) தானே நீயிருந்தால்!

9 கருத்துகள்:

  1. நகைச்சுவை எப்போதுமே நல்லது தான்...

    நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
  2. // ஒண்ணும் ஆகலை. அவ இருக்கால்ல… இவளோட வீட்டுக்கு அவ வரா. இவளோட அம்மா அவளைப் பத்தி எதோ சொல்ல…இவளுக்கு கோவம் வந்து…இவளோட ஆம்படையான் அவளை திட்ட…. //

    திரும்பத் திரும்ப படிக்க வைத்த நல்ல நகைச்சுவை!

    ” ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
    ... ... ... ... ...
    இளமை மீண்டும் வருமா மனம் பெறுமா முதுமையே சுகமா “
    - பாடல்: கண்ணாதாசன்
    ( படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதுமை சுகம் தான் நாம் அதை தைரியமாக எதிர் கொண்டால்!

      நன்றி திரு தமிழ் இளங்கோ!

      நீக்கு
  3. ஒன்றின் அறிகுறிகள் இன்னொன்றுக்கும் பொருந்தி இதானோ, அதானோ என்று குழம்பவைப்பது மருத்துவ உலகில் சாதாரணம். டெங்குவுக்கு அறிகுறிகள் என்னவென்று கேட்டால் சாதாரண சுரத்துக்கு உண்டான அறிகுறிகள் எல்லாம் சொல்வார்கள். பயம் தானாக வரும்! தலைவலி என்று போவோம். பிரைன் டியூமர் வரை பயமுறுத்துவார்கள்! சுஜாதா வசனம் ஞாபகம் வருகிறது! 'மழை பெய்தா ரோட் நனையும்தான்... ரோட் நனைந்திருந்தாலே மழைதான் பெய்திருக்கிறது என்று அர்த்தமா என்ன?!' :))

    மன்னுபுகழ் கோசலையிலிருந்து அன்புள்ள மான்விழியேக்கு Transfer ரா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவன் கொடுக்கும் தைரியம் தான் 'அன்புள்ள மான் விழியே' பாட வைக்கிறது, ஸ்ரீராம்!

      தொடர் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  4. நல்ல எழுத்து நடை

    ரசித்து படித்தேன்

    தொடர வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  5. நல்ல நகைச்சுவை. இதை ஏற்கனவே படித்த மதிரி இருக்கே... வேறு வலைப்பூவில் போட்டிருந்தீர்களோ?

    பதிலளிநீக்கு