சனி, 7 பிப்ரவரி, 2015

மாமியாரும் மருமகளும்



ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ‘right in the middle’ என்ற பகுதி வரும். நான் ரொம்பவும் ரசித்துப் படிக்கும் பகுதி இது. நேற்றைய டெக்கன் ஹெரால்ட் பத்திரிகையில் வந்த ஒரு சுவாரஸ்யமா நிகழ்வை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

இந்தப் பதிவை எழுதியவர் திருமதி நாகரத்னா லக்ஷ்மண். அவர் எழுதியதை அப்படியே தமிழில் தருகிறேன்.

ஒருமுறை ராஜாஜி அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். எப்போதும் அவர் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பார். அந்தக் காலத்தில் அவர் அப்படி அணிந்திருப்பதை பத்திரிக்கைகளும், செய்தியாளர்களும் பலவிதங்களில் கிண்டல் செய்து எழுதுவார்கள். ‘அவர் யாரைப் பார்க்கிறார் என்று தெரியக்கூடாது என்பதற்காகவே அதுபோல ஒரு கண்ணாடியை அணிந்திருக்கிறார்’ என்று சொல்வார்கள்.

அவரைப் பார்க்க பல பெரிய மனிதர்கள் எங்கள் வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களின் நடுவில் ஒரு இளம் பெண் அழுது கொண்டே ‘பெரியவரைப் பார்க்க வேண்டும்’ என்று சொல்லியவாறு காத்துக் கொண்டிருந்தாள். அவள் யாரென்று தெரியவில்லை. ஆனால் அவள் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. ராஜாஜியும் அவளைப் பார்க்க சம்மதித்தார். அந்தப் பெண் அழுது கொண்டே அவர் காலில் விழுந்து வணங்கினாள். ராஜாஜி அவளிடம் அவள் எங்கிருந்து வருகிறாள் அவளது  ஊர் அவளது பெயர் குடும்ப விவரம் எல்லாம் கேட்டார். அவளும் அழுகைக்கு நடுவில் எல்லா விவரங்களையும் கூறிவிட்டு கடைசியில் தன் மாமியார் தன்னை மிகவும் கடுஞ்சொற்களால் ஏசுகிறாள் என்றும், தான் என்ன செய்தாலும் அவளுக்குத் திருப்தி இருப்பதில்லை என்றும் தன்னுடைய ஒரே பிள்ளைக்காக தான் உயிரோடு இருப்பதாகவும், இல்லையென்றால் எப்பொழுதோ தூக்கில் தொங்கியிருப்பேன் என்றும் சொன்னாள்.

ராஜாஜி தனது கண்ணாடியைக் கழற்றினார். அவரது கண்களில் கண்ணீர்! அந்தப் பெண்ணைப் பார்த்து மிகவும் இளகிய குரலில் சொன்னார். ‘காலம் எப்படி மாறுகிறது பார் பெண்ணே! இருபது வருடங்களுக்கு முன் உன் மாமியார் இதேபோல தன் மாமியார் ரொம்பவும் படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு வந்தாள். நான் அவளிடம் ‘நீ ஒரு மகளைப் போல உன் மாமியாரிடம் நடந்து கொள். அவளை உன் அம்மாவாக நினைத்துக்கொள். உனக்கு மருமகள் வரும்போது அவளை உன் மகளாக நினைத்துக் கொண்டு அன்பு செலுத்து. நான் உன் மாமியாரிடம் பேசுகிறேன்’ என்று சொன்னேன். ஆனால் அவள் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை. அதே வார்த்தைகளை இப்போது உன்னிடமும் சொல்லுகிறேன். மாமியாரிடம் நீ மகளைப் போல அன்பு செலுத்து. உன் மருமகளை உன் மகள் போல நடத்து. நான் உன் மாமியாரிடம் பேசுகிறேன்’ என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார்’

கறுப்புக் கண்ணாடி அணிந்த கண்களில் அன்று நாங்கள் கருணையைப் பார்த்தோம் என்று முடித்திருந்தார் அந்தப் பெண்மணி. இதைப் படித்தவுடன் எனக்கு ஒரு கதை நினைவிற்கு வந்தது. அதையும் உங்களுக்கு சொல்லுகிறேன்.


ஒரு ஊரில் ஒரு மாமியார் ஒரு மருமகள். எல்லாக் கதைகளிலும் வரும் மாமியார் போலவே இந்த மாமியாரும் மருமகளைப் படாத பாடு படுத்திக்கொண்டிருந்தாள். நின்றால் குற்றம்; உட்கார்ந்தால் குற்றம். மருமகளால் தாங்க முடியவில்லை. பக்கத்து ஊரில் ஒரு துறவி வந்திருப்பதாகக் கேள்விப்பட்டாள். அவரிடம் தன் குறையைச் சொல்லி பரிகாரம் கேட்கலாம் என்று போனாள் மருமகள். தன் மாமியார் தன்னை ரொம்பவும் கொடுமைப் படுத்துகிறாள் என்று சொல்லி ‘ஓ’ என்று அழுதாள். துறவியும் அவள் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு சொன்னார்:

‘இத்தனை கொடுமைக்கார மாமியாரிடம் நீ எத்தனை நாட்கள் கஷ்டப்படுவாய்? நான் உனக்கு ஒரு மூலிகை கொடுக்கிறேன். தினமும் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து உன் மாமியார் சாப்பாட்டில் கலந்து விடு. அது மெல்ல மெல்லக் கொல்லும் விஷம். ஒரு மாதத்தில் உன் மாமியார் இறந்துவிடுவாள். ஆனால் ஒரு நிபந்தனை: அவளிடம் நீ மிக மிக அன்பாக நடந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் யாரும் உன்னை சந்தேகப்பட மாட்டார்கள். ஒரு மாதம் கழித்து என்னை வந்து பார்’ என்று சொல்லி ஒரு கீரையை அவள் கையில் கொடுத்தார்.

மருமகள் மிகவும் சந்தோஷத்துடன் வீடு திரும்பினாள். துறவி சொன்னதுபோலவே அன்றிலிருந்து மாமியாரிடம் மிக மிக அன்பாக நடக்க ஆரம்பித்தாள். அவர் கொடுத்த கீரையை அரைத்து  கொஞ்சம் கொஞ்சமாக மாமியாரின் சாப்பாட்டில் கலந்து கொடுக்க ஆரம்பித்தாள். என்ன அதிசயம்! மாமியாரின் நடத்தையில் மிகப்பெரிய மாற்றம். இவள் காட்டிய அன்பிற்கு ஈடாக அவளும் பதிலுக்கு இவளை மிக நல்லமுறையில் நடத்த ஆரம்பித்தாள். நாட்கள் ஓடின. மாமியாரின் அன்பில் அகமகிழ்ந்து போன மருமகள் துறவியிடம் ஓடினாள். நடந்த விவரத்தைக் கூறினாள். துறவியிடம் மன்னிப்புக் கேட்டாள். ‘இத்தனை நல்ல மாமியாரை நான் கொல்ல நினைத்தேனே; நான் பாவி. இதற்கு மாற்று மருந்து கொடுங்கள்’ என்றாள்.

துறவி சிரித்துக் கொண்டே சொன்னார்: ‘நான் உன்னிடம் கொடுத்தது கொல்லும் விஷம் இல்லை. உணவின் ருசியை அதிகரிக்கும் மூலிகை. நீ மிகவும் அன்புடன் ருசியான சமையலும் செய்து போடவே உன் மாமியார் உன்னை நேசிக்க ஆரம்பித்துவிட்டாள். ஒரு மடங்கு அன்பு நீ செலுத்தினால், அது பன்மடங்காக உன்னிடமே திரும்பி வரும். அதுதான் உன் வீட்டிலும் நடந்திருக்கிறது. இனி சந்தோஷமாக இரு. நீயும் உனக்கு வரப்போகும் மருமகளை இனிமையாக நடத்து’, என்று சொல்லி அனுப்பி வைத்தார்.