வியாழன், 16 ஏப்ரல், 2015

நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன?

என்னுடைய வேர்ட்ப்ரெஸ் தளத்தில் பகிர்ந்த கட்டுரையை இங்கும் பகிர்ந்து கொள்ளுகிறேன், இன்னும் நிறைய பேர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக.




இந்திய இணையப் பயனாளர்கள் தலையில் இடியை இறக்கப் போகும் செய்தி தான் தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டு இருக்கிறது. நடக்கப் போவதை நினைத்துப் பதட்டத்தில் பலரும், என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமலே குழப்பத்தில் பலரும் ஆழ்ந்துள்ளனர்

என்ன பிரச்சனை?

மொபைல் நிறுவனங்கள் WhatsApp, Skype, Viber போன்ற நிறுவனங்களின் வரவு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி இவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க TRAI அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளன.

இதை TRAI அமைப்பு பொதுமக்களின் பார்வைக்குக் கொடுத்து கருத்துகளை வரவேற்றுள்ளது. ஏப்ரல் 24 ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளைப் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு மே மாதம் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

இந்தப் பிரச்சனை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் தொடர்ந்து படிக்கவும். என்ன செய்யணும் என்று கூறினால் மட்டும் போதும் என்பவர்கள் நேராக இறுதிக்குச் சென்று விடலாம்.

TRAI (Telecom Regulatory Authority of India – தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) என்றால் என்ன?

தொலைத்தொடர்பு சேவைகளின் செயல் பாட்டினை வழிப்படுத்தி நெறிப்படுத்தும் அமைப்பு இது.

கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் என்ன நடக்கும்?

நீங்கள் WhatsApp, Skype, Viber போன்றவற்றைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

உங்கள் இணைய இணைப்பு நிறுவனம் (Internet Service Provider)  அனுமதிக்கும் தளங்களை / செயலியை (App) மட்டுமே பார்க்க முடியும். அனுமதிக்காத தளத்தைப் பார்க்க, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

புரியலையே..!

புரியும்படி சொல்லுகிறேன்: நீங்கள் உணவு விடுதிக்குச் செல்கிறீர்கள். சாப்பாட்டிற்கான டோக்கனை வாங்கிச் சென்று சாப்பிட அமர்ந்ததும் உங்களுக்குச் சாப்பாடு மட்டும் வைக்கப்படுகிறது. சாம்பார், ரசம், மோர், பொரியல், கூட்டு, அப்பளம், ஊறுகாய் எங்கே? என்று கேட்கிறீர்கள்.
அதற்குச் சர்வர்..
இவை வேண்டும் என்றால் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். சாம்பார் ரசம் மோர்  40 ருபாய், பொரியலுக்கு 20 ருபாய், கூட்டு 20ருபாய்  அப்பளம் 10 ருபாய்., ஊறுகாய் 5 ருபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
அப்புறம் எதுக்கு 80ருபாய்  வாங்குனீங்க?
அது சாப்பாட்டுக்கு மட்டும்
சாப்பாட்டை மட்டும் எப்படிச் சாப்பிடுறது?

அது அப்படித் தாங்க.. வேண்டும் என்றால் எங்க முதலாளி TRAI கிட்ட பேசிக்குங்க. இவ்வளோ தான் இந்த விசயம்.

Net Neutrality என்ற வார்த்தையைத் தற்போது இணையத்தில் அதிகம் காண முடிகிறது. இது என்ன? Net Neutrality என்பதற்கு எந்த இணையக் கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் இணையச் சேவை என்பது அர்த்தம். அதாவது எந்த தளத்திற்கும் / செயலிக்கும் (App)  கூடுதல் கட்டணம் இல்லாமல் அனைத்தும் ஒரே கட்டணமாகத் தற்போது நீங்கள் கொடுத்துக்கொண்டு இருப்பது போல. உதாரணத்திற்கு 1 GB டேட்டா 200 ருபாய்க்கு வாங்கினால் அதை நீங்கள் உங்கள் விருப்பம் போல எதற்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம்.

இணையத்தைப் பார்வையிட, ஒரு தளத்தை செயலியில் படிக்க, இணையக் குறுந்தகவல் அனுப்ப, Viber மூலமாக மற்றவருடன் பேச, கூகுளில் தேட, இணையத்தில் பொருட்களை வாங்க, செய்திகளைப் படிக்க, YouTube காணொளிகளைப் பார்க்க என்று அனைத்துமே நம் விருப்பம். இது தான் Net Neutrality .

ஏன் மொபைல் நிறுவனங்கள் இது போலச் செய்ய முயற்சிக்கின்றன? இணையம் என்பது கட்டற்ற இடம். எனவே புதியதாகப் பல தொழில் நுட்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதில் இரண்டு சேவை உலகளவில் மொபைல் நிறுவனங்களின் அடிப்படை வருமானத்தை ஆட்டம் காண வைத்து இருக்கின்றன.

எந்தச் சேவைகள்?
இணையக் குறுந்தகவல் (WhatsApp Line Telegram) மற்றும் இணைய அழைப்பு  (Viber, Skype , WhatsApp).

குறுந்தகவல் கொள்ளை

மூன்று வருடங்களுக்குப் முன்பு மொபைல் சேவையில் இணையம் என்பது மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது. இந்தக் காலங்களில் மொபைல் நிறுவனங்கள் குறுந்தகவல் (SMS) கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தன. ஒரு அழைப்பிற்கு நிகரான கட்டணத்தைக் குறுந்தகவலுக்கு வசூலித்து வந்தன. அதோடு விழாக்காலங்களில் இரட்டிப்புக் கட்டணம் வசூலித்தார்கள். இதனால் மக்கள் முந்தைய நாள் வாழ்த்து அனுப்பினார்கள். நிறுவனங்களும் முந்தைய நாட்களுக்கும் இரட்டிப்புக் கட்டணம் வசூலித்தார்கள். தினமும் வசூலிக்கும் கட்டணமாக இல்லாமல் பண்டிகைக் காலங்களில் வேண்டும் என்றே அதிகக் கட்டணம் என்பது பகல் கொள்ளை என்பதை மனசாட்சி உள்ளவர் எவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதிகரித்த இணையப் பயன்பாடு

இதன் பிறகு இணையம் என்பது தவிர்க்க முடியாததாக ஆனதால், அதைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இணையக் குறுந்தகவல் சேவையின் அறிமுகத்திற்குப் பிறகு என்ன நடந்தது?

பல இணையக் குறுந்தகவல் சேவை பயன்பாட்டில் இருந்தாலும், இந்தியாவில் தாமதமாகவே தெரிந்து கொண்டார்கள். WhatsApp வந்த பிறகு மக்களிடையே எளிமை காரணமாகப் பிரபலமாகியது. ஃபேஸ்புக் நிறுவனம் WhatsApp நிறுவனத்தை வாங்கிய பிறகு இந்தியாவில் WhatsApp மேலும் பிரபலமாகத் துவங்கியது. இதில் எத்தனை குறுந்தகவல் வேண்டும் என்றாலும் உலகம் முழுவதும் இலவசமாக அனுப்பலாம். அதோடு குழு முறையில் இணைந்து குறுந்தகவல் அனுப்புவது, படங்கள் அனுப்புவது  உட்பட பல்வேறு வசதிகளை இந்தச் செயலிகள் கொண்டு இருக்கின்றன.

இதனால் தற்போது பொதுமக்கள் அதிகக் கட்டணமான மொபைல் நிறுவனங்களின் குறுந்தகவல் சேவையின் பயன்பாட்டை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்கள். இதனால் வேறு வழியில்லாமல் மொபைல் நிறுவனங்களும் விழாக்காலங்களில் இரட்டிப்புக் கட்டணம் வசூலித்ததை நிறுத்த வேண்டியதானது. மக்களின் இந்த மாற்றம் குறுந்தகவல் மூலம் லாபம் பெற்றுக் கொண்டு இருந்த மொபைல் நிறுவனங்களுக்கு பெரிய அடியானது.

இணைய அழைப்பு

Viber,  Skype போன்ற செயலிகள் வந்த பிறகு வெளி நாடு, மாநிலங்களில் உள்ள நண்பர்கள் குடும்பத்தினருடன் இணையம் மூலம் இலவசமாகப் பேசத் துவங்கினார்கள். தற்போது இந்தச் சேவையை அதிகப் பயனாளர்களை வைத்துள்ள WhatsApp கொண்டு வந்த பிறகு மொபைல் நிறுவனங்கள் பயந்துள்ளன. விரைவில் உள்ளூர் அழைப்புகளுக்கும் மக்கள் இணையத்திலேயே அழைக்கத் துவங்கி விடுவார்கள்.

நிறுவனங்களுக்குத் தலைவலியாகும் Whatsapp & Viber

மொபைல் நிறுவனங்கள் ஏன் கூடுதல் கட்டணம் விதிக்க TRAI யை நெருக்குகின்றன?

மொபைல் நிறுவனங்கள் இந்தக் கட்டமைப்பை உருவாக்கப் பல பில்லியன் முதலீடு செய்து இருக்கின்றன .ஆனால், இதைப் பயன்படுத்தி மற்ற WhatsApp Viber Line போன்ற  நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன. மொபைல் நிறுவனங்கள் குறுந்தகவல் மூலம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்ததால் இணையக் குறுந்தகவலான WhatsApp Line போன்ற சேவைகளை உருவாக்கத் தவறி விட்டன. இதனால் மற்ற நிறுவனங்கள் முந்திக் கொண்டன.

இணையக் குறுந்தகவலோடு தற்போது அழைப்பும் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வாய்ப்பு அதிகரித்து விட்டதால் நெருக்கடியான நிலையில் உள்ளன. இதனால் வருமான இழப்பை எதிர்கொள்ள நேரும் என்று பயப்படுகின்றன.

மொபைல் நிறுவனங்களுக்கு உண்மையிலே பாதிப்பு உள்ளதா?
ஆம். வருமானமே இல்லையா..!?
நிறுவனங்களுக்கு இது போல வருமான இழப்பு இருந்தாலும், இணையம் & மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. முன்பு குறுந்தகவலுக்குச் செய்த செலவை விட மக்கள் இணையத்திற்கு அதிகச் செலவு செய்து வருகிறார்கள். தொழில்நுட்பம் வளரும் போது மாற்றங்களும் தவிர்க்க முடியாதது. அது மொபைல் நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஒரு வகையில் நட்டம் என்றால் இன்னொரு வகையில் லாபம் இருக்கும்.

இருப்பினும் வருங்காலம் அனைத்துமே இணையம் என்று ஆகும் போது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். முன்னரே கூறியபடி அழைப்புகளுக்கும் அனைவரும் இணையத்தையே பயன்படுத்துவார்கள். எனவே, எதிர்காலத்தில் Data Pack மட்டுமே மக்கள் வாங்குவார்கள்.

தொலைதொடர்பு நிறுவனங்கள் முதலீடு செய்த செல் டவர்கள் Wifi Router போல செயல்பட்டுக்கொண்டு இருக்கும். இது நியாயமான ஒன்றல்ல. எனவே, இணையக் கட்டணத்தை உயர்த்துவது மட்டுமே ஒரே நியாயமான வழியாகும் ஆனால், தற்போது விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறினால் அதிகக் கட்டணத்தை செலுத்தியும்  பல இணையத் தளங்களைப் பார்க்க முடியாத நிலை நமக்கு ஏற்படும். அதாவது லாபம் மட்டுமே இந்த நிறுவனங்களுக்கு, பாதிப்பு முழுக்க நமக்கு என்றாகி விடும்.

Airtel Zero

ஏர்டெல் நிறுவனம் தற்போது ஏர்டெல் ஜீரோ என்ற ஒரு வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது என்னவென்றால் இந்த வசதியில் இணையும் தளங்களை இலவசமாகப் பார்க்கலாம் என்பது. உதாரணமாக நான் என்னுடைய தளத்திற்கு ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அவர்களுக்குக் கட்டணத்தைச் செலுத்தி விட்டால், என்னுடைய தளத்தை ஏர்டெல் பயன்படுத்தும் அனைவரும் இலவசமாகப் பார்க்க முடியும். அதாவது நீங்கள் டேட்டா கட்டணம் செலுத்தாமலே!

டேட்டா கட்டணம் செலுத்தி இருந்தால், இந்தத் தளங்களைப் பயன்படுத்தும் போது இதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. நீங்கள் இதில் உலவும் நேரம் இலவசம். தற்போது Flipkart நிறுவனம் இதில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன. இந்த நிறுவனத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் பலர் இணையத்தில் கூறி வருகிறார்கள். ஏர்டெல்லுடன் பல இணைய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருவதாகக்  கூறப்படுகிறது.

Update :

Flipkart நிறுவனம் மக்களின் எதிர்ப்புக் காரணமாக இதில் இருந்து தற்போது விலகி விட்டது.

இலவசமாகக் கிடைத்தால் நல்லது தானே..!
அதை ஏன் எதிர்க்க வேண்டும்?
இந்த முறை இணையக் கட்டமைப்பையே மாற்றி அமைக்கும் செயல். இதன் மூலம் பணம் படைத்தவர் மட்டுமே லாபம் பெற முடியும் என்பது போல நிலை வரும்.

உதாரணத்திற்கு
இது போலப் பணக்காரத் தளங்கள் இணைந்தால், இவை மட்டுமே இணையம் என்பது போல நிலையாகி, கட்டணம் கொடுத்து இணைய முடியாத பல தகுதியான நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும். சக்தி வாய்ந்த ஒருதலைப் பட்சமான செய்தி நிறுவனம் இது போலச் சேவையைக் கொடுத்தால், இதை மட்டும் படிப்பவர்கள் இந்த நிறுவனம் கூறும் செய்தியை மட்டும் தான் நம்பி இருப்பார்கள். இவர்கள் கூறுவதே செய்தி என்ற நிலையாகலாம். இது இணையம் என்ற அடிப்படை கட்டமைப்பையே குலைக்கும் செயல். இணையம் என்பது விருப்பம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிரத் திணிப்பாக இருக்கக் கூடாது.

இதை மேலோட்டமாகப் பார்த்தால் இலவசமாகத் தருகிறார்கள், அதை ஏன் எதிர்க்க வேண்டும்? என்பது போலத் தான் தோன்றும் .ஆனால், இது பரவலானால் பணம் படைத்தவன் வகுத்ததே சட்டம் என்பது போல நிலையாகி விடும். மக்களும் இலவசமாகக் கிடைக்கும் தளங்கள் மட்டுமே போதும் என்ற மனநிலைக்கு வந்து அவர்களின் வசதி வாய்ப்புகள் மறைமுகமாக முடக்கப்படும். இது போல ஒரு சேவையைத் தான் ஃபேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் இந்தியாவில் Internet.org என்ற தளத்தில் செய்து வருகிறது. இந்த இலவச இணைய வசதி, ஏழைகளுக்கு, வசதி குறைந்தவர்களுக்கு என்ற பெயரில் மக்களை மறைமுகமாக ஏமாற்றும் முயற்சியே!

பெரிய நிறுவனங்களின் விருப்பமே மக்களின் விருப்பமாக மாற்றும் முயற்சி. இலவசம் என்ற பெயரில் மறைமுகத் திணிப்பு. உலகத்தில் இலவசம் என்று எதுவுமே இல்லை. இலவசம் என்று தரும் ஓர் நிறுவனத்தின் எந்த ஒரு செயலுக்குப் பின்னாலும் பில்லியன் கணக்கில் மறைமுக லாபம் இருக்கிறது. எனவே தான் Net Neutrality என்பதை அனைவரும் வலியுறுத்துகிறார்கள்.



TRAI தற்போது என்ன செய்கிறது?
TRAI மொபைல் நிறுவனங்களின் வேண்டுகோளை பரிசீலித்து இதற்குக் கட்டணம் விதிப்பது குறித்து மக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மக்களைக் குழப்பும் விதத்திலும் மொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் உள்ளது. மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஏப்ரல் 24 ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. இதன் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பது தான் அனைவரும் பரபரப்பாக எதிர்பார்க்கும் விசயமாக உள்ளது. தற்போது இணையத்தில் பலரும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்கிறார்கள்.

அதில் ஒன்று தான் நீங்கள் தற்போது படித்துக்கொண்டு இருக்கும் இந்தக் கட்டுரையும்.

இதன் ஆபத்து இன்னும் பலருக்கு தெரியவில்லையே..! உண்மை தான்.

நாளையே WhatsApp க்குத் தனிக்கட்டணம் என்றால், பலர் அலறி அடித்துக்கொண்டு என்ன விசயம்? ஏன் தடை? என்று கேட்பார்கள். வட மாநில இணையப் பயனாளர்கள் இதன் ஆபத்து குறித்து அறிந்து இந்தியப் இணையப் பயனாளர்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழில் இது குறித்த பரவலான செய்திகளைக் காண முடியவில்லை.

வட மாநிலத்தவர் இந்தப் பிரச்சனைக்காக எடுக்கும் முயற்சிகளுடன் ஒப்பிடும் போது நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். அமெரிக்காவில் இது போல கொண்டு வரத் திட்டமிட்டார்கள் .ஆனால், மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. பிரேசில், சிலி மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் இதே நடந்து இருக்கிறது. நமக்கு என்ன ஆகும் என்பது நம் அனைவர் முயற்சிகளில் தான் உள்ளது.

நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் செய்ய வேண்டியது இரண்டு விசயம். இதை எதிர்த்துப்  பெட்டிசன் மற்றும் TRAI க்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். இதை எப்படிச் செய்வது?

இது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. நம்மைப் போல இணையம் பயன்படுத்தும் பலர் இவற்றை நாம் எளிமையாகச் செய்ய நமக்கு வசதி ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதைச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள். நீங்கள் பின்வரும் இணையத்தளங்கள் சென்று இரண்டு நிமிடங்களைச் செலவழிக்க வேண்டியது மட்டுமே. மிக மிக எளிமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

1. பெட்டிசன் கொடுக்க

https://www.change.org/p/rsprasad-trai-don-t-allow-differential-pricing-of-services-let-consumers-choose-how-they-want-to-use-internet-netneutrality
உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.

2. TRAI க்கு மின்னஞ்சல் அனுப்ப

http://www.savetheinternet.in/
Respond to TRAI now க்ளிக் செய்து அனுப்பவும்.

இதை நீங்கள் மொபைலில் படித்துக் கொண்டு இருந்தாலும் வெகு எளிதாகச் செய்ய முடியும். இது போல எதிர்ப்பு தெரிவித்தால் பிரச்சனை சரியாகி விடுமா? இணையம் பழைய முறையிலேயே தொடருமா? உறுதியில்லை. இது நம் எதிர்ப்பை பதிவு செய்யும் ஒரு வாய்ப்பு அவ்வளவு தான். TRAI எடுக்கும் முடிவே இறுதியானது. மக்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படலாம் அல்லது மொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்கப்படலாம்.

உங்களால் முடிந்தது தற்போது மேற்கூறிய இரண்டு வேலையைச் செய்வதும் மற்றவர்களுக்கு இது குறித்த செய்தியைக் கொண்டு செல்வதும் மட்டுமே! எனவே, இதை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து, அவர்களையும் மேற்கூறிய இரண்டு விசயங்களையும் செய்ய வலியுறுத்துங்கள். இணையம் காக்க நீங்களும் இணையலாம்! இணைய சுதந்திரத்துக்கு ஆதரவாக இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேலான மெயில்கள்! நீங்கள் தினமும் 100 இ-மெயில்களை அனுப்பலாம். அல்லது எப்போதாவது முக்கியப் பணிகளுக்கு மட்டுமே இ-மெயிலை பயன்படுத்துபவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்போது நீங்கள் அனுப்பும் இ-மெயில் இணைய சுதந்திரம் காக்க குரல் கொடுக்கும் வகையில் அமையலாம். இந்த நம்பிக்கையில்தான் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு மேல் இதுவரை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்-க்கு இ-மெயில் அனுப்பியுள்ளனர்.

வருங்காலத்தில் இணைய உரிமை பாதிக்கப்படக்கூடாது என கருதினால், நீங்களும் டிராய்க்கு இமெயில் அனுப்பி கருத்து தெரிவிக்கலாம். அதற்கு முன்னர் நெட் நியூட்ராலிட்டி (இணையதள சமநிலை) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நெட் நியூட்ராட்லிட்டியை காக்கவேஇணையவாசிகள் இ-மெயில் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நெட் நியூட்ராலிட்டி எனும் பதம் சமீப காலமாக இந்தியா முழுவதும் பலமாக அடிபடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதிலும் சமீபத்தில் டிராய் அமைப்பு இது தொடர்பாக கருத்து திட்ட முன்வடிவை வெளியிட்டு பொதுமக்களிடம் இருந்து கருத்து கோரியதை அடுத்து, இது தொடர்பான விவாதம் தீவிரமாகி இருக்கிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் நெட் நியூட்ராலிட்டி தொடர்பான விவாதம் பல ஆண்டுகளாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பதுடன் அதை காக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணையதள சமநிலை என புரிந்து கொள்ளக்கூடிய நெட் நியூட்ராலிட்டி என்றால் இணையத்தில் எல்லா வகையான இணையதளங்கள் மற்றும் சேவைகளை சமமாக கருதுவது என புரிந்துகொள்ளலாம்.

அதாவது, எல்லா இணையதளங்களையும் அணுகுவதற்கான சமமான வாய்ப்பு எப்போதும் இணையவாசிகள் கையில் இருக்க வேண்டும் என்று பொருள். எல்லா இணையதளங்களும் சமமான வேகத்தில் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும்.

இதன் உட்பொருள் எந்த ஓர் இணையதளத்தையும் பயன்படுத்த தனியே கட்டணம் கொடுக்கும் நிலை வரக்கூடாது என்பதும், இதற்கான உரிமை இணைய சேவை வழங்கும் நிறுவனம் அல்லது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் வழங்கப்படக்கூடாது என்பதுதான்.

நெட் நியூட்ராலிட்டி பாதிப்பின் விபரீதம்

இணைய சேவைய வழங்குவது மட்டும்தான் நிறுவனங்களின் வேலையே தவிர, அதை எப்படி பயன்படுத்துவது என்பது இணையவாசிகளின் உரிமை என்பதுதான் இணைய சமநிலையின் அடிநாதம்.

ஆனால், இப்போதே இணையத்தை அப்படித்தானே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் கேட்கலாம். உண்மை தான். ஆனால் இந்த நிலை தொடர்வதற்கு ஆபத்து வந்திருக்கிறது என்பதே விஷயம். எப்படி என்றால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட இணையதளங்கள் அல்லது செயலிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும் நிலை உருவாகலாம் என்பதுதான். இப்படி கட்டுப்பாடு விதிக்கப்படும் இணையதளங்களைப் பார்க்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரலாம். மற்ற இணையதளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என்று சொல்லப்படலாம்.

உதாரணத்துக்கு, வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் அல்லது இணைய தொலைபேசி சேவையான ஸ்கைப்பை பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரலாம்.  அதேபோல செல்பேசியில் வாட்ஸ்அப் போன்றவைக்கும் கட்டுப்பாடுகள் வரலாம்.

இத்தகைய உரிமை இணைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால், இணைய பயன்பாட்டுக்கான கட்டணம் வசுலிக்கப்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட இணையதளங்களை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அப்போது செலவை மிச்சமாக்க இணையவாசிகள் சில இணையதளங்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள நேரலாம்.

அல்லது சில இணையதளங்களை அதிகம் பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். இதுதான் நெட் நியூட்ராலிட்டி பாதிக்கப்படும்போது ஏற்படும் விபரீதம்.

ஏனெனில், நிறுவனங்கள் இணைய சேவையை  சமமாக வழங்குவதை நிறுத்திக்கொண்டு தங்கள் இஷ்டம்போல வழங்கத் துவங்கும். இதனால் இணையத்தின் அடிப்படை சுந்ததிரம் பாதிக்கப்பட்டு, அதன் ஆதாரத் தன்மையான எவராலும் கட்டுப்படுத்தப்படாத குணமும் பாதிக்கப்படும் என்று வல்லுனர்களும் இணைய ஆர்வலர்களும் கவலைப்படுகின்றனர்.

பொதுவாக இந்த கட்டுப்பாட்டை இணைய நிறுவனங்கள் கொள்ளைப்புற வழியாக கொண்டு வர பார்க்கின்றன. உதாரணத்துக்கு, அவை அதிவேக இணைய சேவையை பெற அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுகளிடம் அனுமதி கோரி வருகின்றன. இவை இன்டெர்நெட் பாஸ்ட் லேன்  என குறிப்பிடப்படுகின்றன. இந்த விரைவு பாதையில் பயன்படுத்தக்கூடிய இணைய சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் இவை அனுமதி கோருகின்றன.

ஆனால், இப்படி அனுமதித்தால் அதிக பயன்பாடு உள்ள இணையதளங்களை எல்லாம் அதிவேக சேவைக்கு கொண்டு சென்று இணையத்தை கூறு போட்டு விடுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஓர் இணையம் இருப்பதற்கு பதில் துண்டு துண்டாக பல இணையங்கள் இருக்கும். அவற்றின் மீது இணைய நிறுவனங்களுக்கே கட்டுப்பாடு இருக்கும் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட இணையதளங்களை இலவசமாக வழங்க முயலும் இன்டெர்நெட். ஆர்க் அமைப்பும் சரி இந்தியாவில் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஜிரோ இன்டெர்நெட்டும் சரி... இத்தகைய நிலைக்கே வித்திடும் என்று இணைய ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இணைதளங்களை இலவசமாக பார்க்கலாம் என்பது கவர்ச்சியாக தோன்றினாலும் இதையே சாக்காக வைத்து மற்ற இணைய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முற்படும் நிலை வரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இணைய ஆர்வலர்கள் எல்லோருமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இணைய நிறுவனங்கள் மட்டும் இதை ஆதரிக்கின்றன. ஸ்கைப், வாட்ஸ் அப் போன்ற இணைய சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது அவற்றுக்கு எந்த லாபமும் வருவதில்லை. எனவே, இதுபோன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உரிமை கேட்கின்றன.

அதேபோல தங்கள் சேவையை பயன்படுத்தி வருவாய் ஈட்டும் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்கின்றன. இது தொடர்பாகத்தான் டிராய் அமைப்பு இப்போது இணையவாசிகளின் கருத்தை கேட்டுள்ளது.

நெட் நியூட்ராலிட்டி காக்கப்பட வேண்டும் என்பதையும், அதற்கான காரணங்க்ளையும் விளக்கி மெயில் அனுப்பலாம்.

இணையவாசிகள் இப்படி டிராய் அமைப்புக்கு கருத்து தெரிவிக்க வசதியாக Save The Internet (http://www.savetheinternet.in/)  எனும் இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளம் மூலம் மெயில் அனுப்பலாம். இதுவரை ஒரு லட்சம் மெயில்களுக்கு மேல் அனுப்பட்டுள்ளன.



இதே போல இந்த பிரச்சனையின் அடிப்படையை விளக்கி நெட்நியூடிராலிட்டி
 (http://www.netneutrality.in/ )  எனும் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

நெட்நியூட்ராலிட்டிக்கான பாதிப்பு இணையம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் நிர்வகிக்கப்படும் விதத்தை பாதிக்கும் என்பதால் இது தொடர்பாக இமெயில் அனுப்பி கருத்து தெரிவிப்பது உங்களின் உரிமையை மட்டும் அல்ல இணையத்தையும் காக்கும்!

நன்றி  WhatsApp
தகவல், நன்றி: திரு அனந்தநாராயணன்