வெள்ளி, 9 நவம்பர், 2012

ரமாவும் ரஞ்சனியும்!ரஞ்ஜனியை எல்லோருக்கும் தெரியும். அதாங்க, அ. உ. பு. பதிவாளர்.


ரமா யார்? அ. உ. பு. பதிவாளர் ரஞ்ஜனியின் அக்கா. என்னைவிட 3 வயது மூத்தவள்.

என்னைவிட புத்திசாலி. எல்லாவிதத்திலும் என்னைவிட சிறந்தவள். மிக நன்றாகப் பாடுவாள்.

சின்ன வயதில் அவளுடன் நான் எப்பவுமே எல்லாவற்றிற்கும் போட்டி போடுவேன். அவள் திருமணம் ஆகிப் போகும் வரையிலும் இது தொடர்ந்தது.

கோலம் போடுவதில் வல்லவள். புள்ளிக் கோலங்கள் அனாயாசமாகப் போடுவாள். எனக்கு வராத பல கலைகளில் இதுவும் ஒன்று. நான் போடும் கோலங்கள் மாடர்ன் ஆர்ட் வகையை சார்ந்தவை. மிகுந்த பொறுமையுடன் புள்ளிகள் வைத்து அவள் கோலத்தை போடுவதைப் காணக் கண் கோடி வேண்டும்.

‘நீ புள்ளி வைத்துப் போடும் கோலத்தை நான் புள்ளி இல்லாமலேயே போடுவேன்’ என்று பல தடவை சவால் விட்டு தோற்றவள் நான்.


வெள்ளிக்கிழமைகளில் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து நடுக் கூடத்தில் கூடத்தை அடைத்துக் கோலம் போடுவாள், பாருங்கள்! கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கும்.


கோலத்திற்கு அடுத்தபடியாக இப்போது அவள் விரும்பிச் செய்வது ஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பது.  


திருமணம் ஆவதற்கு முன் சுருக்கெழுத்து. 

மேலும் படிக்க


வானொலியில் வரும் ஆங்கில செய்திகளை கேட்டு சுருக்கெழுத்தில்  எழுதிக் கொண்டே இருப்பாள். சுருக்கெழுத்தில், சுருக்கெழுத்தாளர் எழுதும் ஸ்ட்ரோக்ஸ் (strokes) ரொம்ப முக்கியம். அதை வைத்துதான் எழுதிய விஷயத்தை ஆங்கிலத்தில் transcribe செய்ய வேண்டும். அக்காவின் ஸ்ட்ரோக்ஸ் perfect ஆக இருக்கும். நான் எப்போதும் போல ‘சமாளி’ தான்!


அவளுக்குத் திருமணம் ஆகி குழந்தை பிறந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. ஆபீஸிற்கு அப்பா போன் செய்திருந்தார். ‘அக்காவை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறோம். முடிந்தால் லீவு சொல்லி விட்டு வா’ என்று.


எனக்கு ஆபீஸ் போவதை விட லீவு போடுவது பிடித்தமான விஷயம் ஆயிற்றே! உடனே லீவு சொல்லிவிட்டுப் பறந்தேன்.


இன்னும் குழந்தை பிறந்திருக்கவில்லை. அம்மா அப்போதுதான் அக்காவிற்கு காபி கலந்து எடுத்துப் போகலாம் என்று வீட்டிற்கு வந்திருந்தாள். ‘கொஞ்சம் போய் அவள் பக்கத்தில் இரு’ என்றாள்.


நான் உள்ளே நுழையவும் குழந்தையின் அழுகை ஒலி கேட்கவும் சரியாக இருந்தது. சிறிது நேரத்தில் ஒரு ஆயா வெளியே வந்து ‘இத பாரு, உங்க அக்கா குழந்தை’ என்று சொல்லிய படியே நல்ல ரோஸ் கலரில் ஒரு பஞ்சு உருண்டையை என் கையில் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு சிலிர்ப்புடன் வாங்கிக் கொண்டேன்.


‘முதன்முதலில் நான் தான் உன்னைப் பார்த்தேன்; நான்தான் எடுத்துக் கொண்டேன்’ என்று (அதிலும் போட்டி!) இன்றும் என் அக்காவின் பிள்ளை சம்பத்குமாரனிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அன்று தொடங்கி இன்றுவரை அவன் தான் என் முதல் பிள்ளை. அந்த வாத்சல்யம் இன்னும் குறைய வில்லை. அவனுக்கு மட்டுமில்லை - அவனுடைய இரு குழந்தைகளுக்கும் – (ஷ்ரேயா, மேக்னா) நான் சித்தி தான்! எனக்குத் திருமணம் ஆகி 3 மாதங்களில் என் அப்பா பரமபதித்து விட்டார். அந்த வருடம் தலை தீபாவளி இல்லை. அடுத்த வருடம் என் அக்காவும் அத்திம்பேரும் எங்களை அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் விருந்து கொடுத்தனர்.


எனக்கு பூச்சூட்டல் செய்து, சீமந்தத்திற்கு சீர்கள் கொண்டு வந்து வைத்து, தலைப் பிரசவத்திற்கும் தன் வீட்டிற்கு அழைத்துப் போனாள் அம்மாவாக இருந்து.


எங்கள் அத்திம்பேர் சின்ன வயதில் பரமபதித்தது எங்கள் எல்லோருக்கும் இன்னும் ஒரு அதிர்ச்சியாகவே இருக்கிறது.


தைரியமாக தனக்கு நேர்ந்ததை எதிர் கொண்டு தனி ஒருவளாக பிள்ளையை வளர்த்து ஆளாக்கினாள். அம்மாவும் அவளும் அத்தனை திவ்ய தேசங்களையும் சேவித்து இருக்கிறார்கள். நாலாயிர திவ்யப்பிரபந்தம் அத்தனையும் அத்துப்படி.


கண்களில் நீர் தளும்பப் பெருமாளை அலுக்காமல் சலிக்காமல் சேவிப்பாள்.

எனக்கு அக்காவாக, அம்மாவாக இருக்கும் ரமா ஆரோக்கியமாக, சந்தோஷமாக பேத்திகளுக்கு திருமணம் ஆகி கொள்ளுப் பேரன்களையும், கொள்ளுப் பேத்திகளையும் பார்த்து பல ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்பெருமாளையும், ரங்கநாயகித் தாயாரையும் பிரார்த்தித்து நிற்கிறேன்.


அவளுடன் கொண்டாடிய தலை தீபாவளி நினைவுகளுடன்.........


32 கருத்துகள்:

 1. என்னதான் சொல்லுங்க...இந்த அக்காக்களே பயங்கர புத்திசாலிகள்தான். எல்லாவற்றிலும் அவுங்களைப் பார்த்தே நாம் பெருமூச்சு விடும்படி வச்சுருவாங்க.!!!

  அக்கான்னதும் எனக்கு மனசு இளகிடும், கேட்டோ:-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜம் தான்! சின்ன வயதில் அத்திம்பேரை இழந்து ஒருவரையும் சாராமல் அவள் இன்று வரை வாழ்ந்து வருகிறாள் துளசி.

   எப்போது அவளை நினைத்தாலும் தொண்டை அடைக்கும் எனக்கு.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

   நீக்கு
 2. எனக்கும் ஒரு அக்கா இருக்காங்க பொதுவா அக்கா தங்கைகள் என்றால் சின்ன வயதில் அடித்து உருண்டது நினைவு வரனும் ஆனா எங்களுக்குள்ள அப்படி எதுவும் இல்லங்க. ரொம்ப கண்டிப்பான பேர்வழி அப்பவே அதனால பயமே மிஞ்சியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் சசிகலா! உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
   என் அக்கவிடமும் எனக்கு கொஞ்சம் பயம் உண்டு. அதனாலேயே போட்டி போட்டேனோ என்னவோ!

   கருத்துரைக்கு நன்றி!

   நீக்கு
 3. wordpress பதிவு திறக்காததால் பாதிதான் படிக்க முடிந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்காக முழுவதையும் இங்கேயே போடுகிறேன் ஸ்ரீனி!
   என் விசிறி ஒருவரை இழக்க விரும்பவில்லை!

   நீக்கு
  2. நன்றிகள்! முழுவதும் படித்துவிட்டேன்.

   நகைச்சுவையாக ஆரம்பித்த பதிவு நெகிழ்ச்சியாக முடிந்தது. நம் அனைவரின் வாழ்க்கையிலும் இது போல யாராவது அக்காவாக அத்தையாக மேலும் பல உறவுகளாக அல்லது நட்பாகக் கடந்துதான் செல்கிறார்கள். அவசர யுகத்தில் அவர்களை நினைத்துப் பார்க்கத்தான் நமக்கு முடிவதில்லை.

   நல்ல பதிவு/பகிர்வு. எனக்காக முழுவதும் வெளியிட்டமைக்கு மீண்டும் நன்றிகள்!

   நீக்கு
 4. எனக்கு அக்கா இல்லையே என்றிருக்கிறது. ரஞ்சனி.அவங்களையும் எழுதச் சொல்லலாமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் வல்லி!

   அக்காவைப் பார்க்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். ஒருமுறை சென்னை போகும்போது நானே ஓர் ப்ளாக் ஆரம்பித்துக் கொடுக்க வேண்டும். அப்போதாவது எழுத ஆரம்பிக்கிராளா என்று பார்க்க வேண்டும்.

   நீக்கு
 5. ப்ளாக்ஸ்பாட்டுக்கு மாறினதுக்கும், வேர் வெரிஃபிகேஷனை எடுத்ததுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ரஞ்சனி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுடன் என் நட்பு தொடர வேண்டுமே! அதற்குத்தான் இத்தனை பிரயத்தனங்கள். வல்லி!

   உங்களை பதிவர் மாநாட்டில் சந்தித்ததற்கு நான்தான் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்!

   நீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. BLOGSPOT இல் எழுத ஆரம்பித்துள்ளது அறிய மிகவும்
  மகிழ்ச்சியாக உள்ளது, ரஞ்சு மேடம். வாழ்த்துகள். ;)

  [தகவல் தரவே இல்லையே!]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் வைகோ ஸார்!

   நிறையப்பேர் wordpress -இல் பின்னூட்டம் போட முடியவில்லை என்று சொன்னார்கள். திரு தமிழ் இளங்கோ அவர்களும் ப்ளாக்ஸ்பாட்டில் எழுதுங்கள் என்றார்.

   இன்னும் முயற்சி நிலையிலேயே இருக்கிறேன். திரு வேங்கட ஸ்ரீனிவாசன் கூட wordpress இணைப்பு திறக்கவில்லை என்று எழுதி இருக்கிறார் பாருங்கள்.

   எல்லாம் நல்லபடியாக முடித்தவுடன் சொல்லலாம் என்று.

   உங்கள் பிள்ளை வந்திருக்கிறார், அவருடன் வெளியே போகவேண்டும் என்று சொன்னீர்கள் இல்லையா?

   அதனால் தான் சிறிது நிதானமாகச் சொல்லலாம் என்று. வேறொன்றும் இல்லை.

   மன்னிக்கவும்!

   புதிதாக எதுவும் எழுத வில்லை. அங்கிருப்பதை இங்கேயும் போடுகிறேன்.அவ்வளவுதான்!

   அங்கு இரண்டாவது தளம் ஆரம்பித்து இருக்கிறேன். இணைப்பு அனுப்புகிறேன்.

   வந்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸார்!
   இன்னொரு பயம்: நீங்கள் இரவெல்லாம் தூங்காமல் இருப்பது எனக்கு மிகுந்த கவலையை கொடுக்கிறது.

   உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்!

   நீக்கு
 8. என்னுடைய அக்கா மிகுந்த பாசம் கொண்டவள்... எங்களுக்குள் போட்டி இல்லை, அவள் விட்டு கொடுப்பாள்.. நல்ல அன்பான பகிர்வு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் ஆயிஷா!
   நான்தான் என் அக்காவுடன் போட்டி போடுவேன். அவள் என்றைக்குமே விட்டுக் கொடுப்பவள் தான்.

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஆயிஷா!

   நீக்கு
 9. மனம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி இராஜராஜேஸ்வரி! உங்களுக்கும் மனம் நிறைந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 10. தங்கள் மெயில் கிடைத்தது. சந்தோஷம். அதன்படி இதே பதிவுக்கு நிறைய பின்னூட்டங்கள் wordpress இல் கொடுத்துள்ளேன்.

  மனம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் ..

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதுதான் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதினேன்.

   இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

   நீக்கு
 11. திருவரங்கத்திலிருந்து என்ற வலைப்பூவை தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள்! அப்படியே Google Followers ஐயும் வலைப் பதிவில் இணைத்துவிடவும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. நன்றி திரு தமிழ் இளங்கோ.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  எனக்கு இந்த யோசனையைக் கொடுத்தவரே நீங்கள் தான்!
  அதற்கு இன்னொரு நன்றி!

  google followers எப்படி இணைப்பது என்று தான் தெரியவில்லை!

  முயன்று வருகிறேன். கூடிய விரைவில் இணைத்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. அன்புள்ள திருமதி ரஞ்சு மேடம்,

  இனிமேல் BLOGSPOT இல் மட்டுமே எழுதுங்கோ. WORDPRESS இல் எழுத வேண்டாம்.

  என்னுடைய டேஷ் போர்டை நான் பார்ப்பது இல்லை. பார்த்தாலும் உங்களின் பதிவுகள் எதுவும் அதில் எனக்குத் தெரிவதும் இல்லை.

  எனவே எனக்கு வழக்கம் போல மெயில் மூலம் லிங்க் தாருங்கள்.
  அப்போது தான் என்னால் வந்து படித்து, ரஸித்து, கருத்தளிக்க முடியும்.

  மேலும் உங்களுடைய பதிவுக்கு SUBSCRIBE ஐ, அமுக்கி விட்டு நான் பின்னூட்டம் அளித்தாலும், அதற்கு தாங்கள் அளிக்கும் பதில்கள், எனக்கு ஏனோ மெயில் மூலம் வருவது இல்லை. அது ஏன் என்று யாரையாவது கேட்டு சரிசெய்யுங்கோ ... ப்ளீஸ்.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 14. இந்தப் பாசம் தனி. சில நேரம் பெண்டாட்டி/புருஷன்/மக்கள் பாசத்தைத் தோற்கடிக்கும் நெருக்கம்.

  நினைவுகளைக் கிளறிய பதிவு. எனக்கு ஒரு அக்கா அண்ணா இருந்தா நல்லா இருந்திருக்குமே என்று சில நேரம் நினைத்ததுண்டு. எல்லாம் எனக்கு அப்புறம் வந்து வாச்சதுங்க.. ஹிஹி.. அன்போட சொல்றேன்.


  (இது வேறே wordpress blog வேறேயா? இதை இப்பத்தான் கவனிச்சேன்)

  பதிலளிநீக்கு
 15. விட்டுக்கொடுப்பதின் முழுப்பரிமாணாமும் அக்காவின் வடிவில்... அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று வலைச்சரம் மூலம் உங்கள் எழுத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்களும் அக்காவைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். அதனாலேயே என் இந்தப் பதிவின் இணைப்பை கொடுத்தேன்.

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ராபர்ட்!

   நீக்கு
 16. தங்களது பதிவிற்கு முதல் முறை வரும்பொழுதே அக்கா பற்றிய பதிவு மகிழ்வளிக்கிறது.ஏனென்றால் எனக்கு மூன்று அக்காக்கள்.அவர்களுடன் சண்டையிடும் வயது கிடையாது எனக்கு.அவர்கள் மூவருமே வயதில் மிகவும் பெரியவர்கள் என்பதால் எனக்கு அம்மாவின் பிரதிநிதிகள்தான்.இனி தொடர்வேன் என்று கூறிக்கொள்கிறேன் :-)

  பதிலளிநீக்கு
 17. வாருங்கள் ராஜி.
  தொடர்வதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 18. என் அக்காவின் நினைவுகளை ஏற்படுத்தி விட்டது. என் அக்காவும் நல்ல புத்திசாலி, எல்லா கலைகளிலும் கெட்டிக்காரி. மிகவும் அன்பானவள். என்றும் என் நினைவுகளில் இருப்பாள் என் அக்கா.
  உங்கள் பதிவு மிக சிறப்பாக இருக்கிறது. என் அப்பாவும் எனக்கு திருமணம் ஆகி 9 மாதங்களில் இறைவனடிசேர்ந்து விட்டார்கள். எனக்கு தலைதீபாவளி சீர் கொடுத்துவிட்டு சென்றது தான் நான் அவர்களை கடைசியாக பார்த்தது.

  //எனக்கு அக்காவாக, அம்மாவாக இருக்கும் ரமா ஆரோக்கியமாக, சந்தோஷமாக பேத்திகளுக்கு திருமணம் ஆகி கொள்ளுப் பேரன்களையும், கொள்ளுப் பேத்திகளையும் பார்த்து பல ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்பெருமாளையும், ரங்கநாயகித் தாயாரையும் பிரார்த்தித்து நிற்கிறேன்.//

  நானும் உங்களுடன் சேர்ந்து உங்கள் அக்காவின் நலத்திற்கு பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. வாங்க கோமதி!
  என் அக்காவைப் பற்றிய பதிவைப் படித்து உங்கள் அக்காவின் நினைவுகளில் மூழ்கி விட்டீர்கள் போலிருக்கிறது.
  உங்கள் பிரார்த்தனைக்கும், பாராட்டிற்கு நன்றி!

  பதிலளிநீக்கு