வெள்ளி, 24 ஜூன், 2016

ஒருநாள் தலைவி!




அந்தக்காலத்தில் பள்ளிகூடங்களில் வகுப்பறைகள் தனித்தனியாக இருக்காது. ஒரு பெரிய ஹால். அதிலேயே இரண்டு மூன்று வகுப்புகள் நடக்கும். வகுப்புகளுக்கு நடுவில் மறைப்பும் இருக்காது. மரத்தடியில் இல்லாமல் ஒரு கட்டிடத்திற்குள் பள்ளி இருந்ததே ஒரு அதிசயம் தான், இல்லையா? கனகவல்லி பள்ளியிலும் சரி, அரசு நடுநிலைப்பள்ளியிலும் சரி வகுப்புகள் எல்லாமே நீளமான ஒரு ஹாலில் தான் இருக்கும். கனகவல்லி பள்ளியில் கீழே தரையில் உட்கார்ந்து கொள்ளுவோம். மாணவர்கள் வருவதற்கு முன் ஆயா வந்து ‘கூட்டி, மெழுகி’ விட்டுப் போவார்கள். சில நேரங்களில் நாங்கள் வந்தபின் ‘கூட்டி, மெழுகு’வார்கள். அதேபோலத்தான் அரசு நடுநிலைப்பள்ளியிலும். மாடியிலும் கீழும் பெரிய ஹால்கள். அதில் பக்கத்துப் பக்கத்தில் வகுப்புகள் நடக்கும்.

ஒரு வகுப்பில் சொல்லிக் கொடுப்பது இன்னொரு வகுப்பிற்கு நன்றாகக் கேட்கும். ஆசிரியர்களோ, மாணவர்களோ இதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. என்ன ஒரு கஷ்டம் என்றால், சில ஆசிரியர்கள் தாங்கள் சொல்வதைத் திரும்பச் சொல்லச் சொல்லுவார்கள். வகுப்பு முழுவதும் ஓ என்று இரைச்சல் போடுவார்கள். பக்கத்தில் இருக்கும் வகுப்புகளுக்கு இடைஞ்சல் ஆக இருக்கும். ஆனால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதே போல ஒரு வகுப்பில் ஆசிரியர் இல்லையென்றால் இரண்டு வகுப்புகளையும் ஒன்றாக உட்கார வைத்துவிடுவார்கள். சத்தம் காதைப் பிளக்கும். பாவம் ஒரு ஆசிரியை இரண்டு வகுப்புகளைச் சமாளிப்பது ரொம்பக் கடினம். அதனால் யாராவது ஒரு மாணவியைக் கூப்பிட்டு வகுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்வார்கள். வகுப்பிலேயே கொஞ்சம் உயரமாக இருக்கும் மாணவியைத் தான் எப்போதுமே கூப்பிடுவார்கள்.

எனக்கு இந்தப் பதவி மேல் எப்போதும் ஒரு கண். ஆனால் எந்த ஆசிரியையும் என்னைக் கூப்பிட மாட்டார்கள். குள்ளமாக, சோனியாக இருப்பேன். அதுவுமில்லாமல் முதல் நாள் கிடைத்த புது பெயர் ஒரு காரணம். ஒருநாள் அதிசயமாக எனக்கு அந்தப் பதவி கிடைத்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த ஹாலில் மூன்று வகுப்புகள். ஒருமுறை பக்கத்து வகுப்பிற்கு புதிதாக ஒரு ஆசிரியை வந்திருந்தார். எங்கள் வகுப்பு ஆசிரியை வரவில்லை. எல்லோரும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தோம். அந்த ஆசிரியைக்கு வகுப்பு நடத்தவே முடியவில்லை. எங்களிடம் வந்தார். ‘யாரு இங்க வகுப்பு பாத்துக்கறவங்க?’ வழக்கமாகப் பார்க்கும் பெண் வரவில்லை அன்று. உடனே நான் எழுந்து நின்றேன். ‘நான் பார்த்துக்கறேன், டீச்சர்!’ சரியென்று சொல்லிவிட்டு அந்த ஆசிரியை போய்விட்டார். ‘பேசாதீங்க, பேசாதீங்க....!’ ம்ஹூம்! என் வகுப்பு மாணவிகள் என் சொல்லுக்குக் கட்டுப்பட்டால் தானே? சத்தம் இன்னும் அதிகமாயிற்று!

பக்கத்து வகுப்பிற்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு வகுப்பிலிருந்து ஆசிரியை வெளியே வந்தார், கோபமாக. ‘ஏண்டி! உங்களுக்கெல்லாம் அறிவில்லையா? ஒருமுறை சொன்னால் தெரியாதா? ஏண்டி இத்தனை பேச்சு பேசறீங்க? உங்க டீச்சர் இல்லைன்னா இப்படி அடுத்த வகுப்பு நடக்குதுங்குற  அறிவு கூட இல்லாமல் பேசுவீங்களா?’ அது யாரு வகுப்பை பார்த்துக் கொள்வது?’ என்று இரைந்து கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்தார். ‘இவளா? இவளா உங்களையெல்லாம் பாத்துக்கறா?’ என்று சொல்லிக்கொண்டே சிரிக்க ஆரம்பித்துவிட்டார். ‘இன்னும் குள்ளமா, சாதுவா வேற யாரும் கிடைக்கலையா? அவ மூஞ்சியப் பார்த்தாலே கொழந்த மாதிரி இருக்கு. அவ உங்கள மாதிரி பிசாசுங்களை பார்த்துக்க முடியுமா?’ என்று சொல்லிவிட்டு, ‘நீ போடி, போய் உன் இடத்துல உட்கார்ந்துக்க’ என்று சொல்லிவிட்டு மாலதி என்கிற பெண்ணைக் கூப்பிட்டு, ‘வகுப்ப பாத்துக்க. ஒரு துளி சத்தம் வந்தது உன் கண்ண நோண்டிடுவேன்...ஆமா!’ என்று எச்சரித்துவிட்டுப் போனார். தலைவர் பதவி தானாகவும் வரவில்லை. நானாகத் தேடிக் கொண்டதும் சில நிமிடங்களில் கைவிட்டுப் போய்விட்டது!

இசை ஆசிரியை (இவரது பெயர் மறந்துவிட்டது – இவர் சொல்லிக் கொடுத்த பாடல்கள் இன்னும் நினைவிருக்கின்றன – ஆச்சரியம், இல்லை?), எனது வகுப்பு ஆசிரியை கனகவல்லி இவர்களைத் தவிர எனக்குஹால். நன்றாக நினைவிருக்கும் இன்னொரு ஆசிரியை எங்கள் தையல் ஆசிரியை. எங்கள் வகுப்பிற்குப் பக்கத்து வகுப்பு இவருடையதுதான். ‘ஏ! புள்ளே!, எந்திரி!’ என்பார். பள்ளியில் சேர்ந்த புதிதில் எனக்கு இந்த ஆசிரியை பேசுவதே புரியாது. அதுவும் இந்த ‘எந்திரி’ என்பது புரிய வெகுநாட்கள் ஆயிற்று. முதல் தடவை என்னைப் பார்த்துவிட்டு, ‘இது யாரு? புது பொண்ணு? எந்திரி, நல்லாப் பாக்கலாம்’ என்று சொன்னபோது எனக்குப் புரியவேயில்லை. பக்கத்தில் இருந்த பெண் ‘எந்திரிச்சு நில்லு. டீச்சர் உன்னைய பாக்கணுமாம்’ என்றபோது எழுந்து நின்னேன். ‘...........?’ அதே கேள்வி அதே தலையாட்டல். ‘உனக்கு தையல் எதுக்குடி, நீங்கல்லாம் படிக்கறதுக்குத்தான் லாயக்கு. தையல் வருமா?’ ன்னு கேட்டார். ‘அம்மா நன்னா தைப்பா’ என்றேன். டீச்சருக்கு ரொம்ப சிரிப்பு நான் பேசும் விதத்தைப் பார்த்து. ‘சரி, சரி, உக்காரு’ என்றார்.

எனக்கு ரொம்பவும் பிடித்த வகுப்பு பாட்டு வகுப்பு மற்றும் தையல் வகுப்பு. விதம்விதமாக தையல்கள் போடச் சொல்லிக் கொடுத்தவர் இவர். முதலில் கைக்குட்டைக்கு ஓரம் தைக்கச் சொல்லிக் கொடுத்தார். ஹெம்மிங், ஓட்டுத் தையல், கெட்டித் தையல் என்று ஆரம்பித்து நிறைய எம்ப்ராய்டரி தையல்களும் சொல்லிக் கொடுத்தார். கிராஸ் ஸ்டிச் – சும் இவரிடம் தான் கற்றேன். கைகுட்டை ஓரங்களில் இழை எடுத்துவிட்டு அதை அழகாகத் தைக்கும் விதத்தையும் இவர் சொல்லிக் கொடுத்தார். எனக்கு இந்தத் தையல் ரொம்பவும் பிடிக்கும். நிறைய கைகுட்டைகளுக்கு இப்படி செய்து கொடுப்பேன். வீட்டிற்கு வருவோரிடம் என் அம்மா. ‘ரஜினி கைக்குட்டை தைக்கக் கற்றுக் கொண்டு விட்டாள்’ என்று சொல்லும்போது அம்மா என்னை கேலி செய்கிறாளா, புகழ்கிறாளா என்றே புரியாது!

அடுத்த பகுதியில் வண்ணமயில்!


வியாழன், 23 ஜூன், 2016

சூரியன் வருவது யாராலே?





         

அரசுநடுநிலைப்பள்ளியில் படித்ததினால் எனக்குப் பல்வேறு வகைகளில் நன்மை என்றே சொல்ல வேண்டும். பாடங்களைத் தவிர ஆடல், பாடல், கைவேலை, தையல் என்று பல கலைகளைக் கற்றுக்கொண்டேன். தமிழ் பாடல்கள் தவிர ஆங்கில ரைம்ஸ் என்று சொல்லுகிறோமே அவைகளையும் கற்றுக் கொண்டேன்.

எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி கனகவல்லி டீச்சரே ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தார். வெறும் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் சின்னச் சின்ன கதைகள், பாடல்கள் சொல்லிக்கொடுப்பார்.

Old MACDONALD had a farm
E-I-E-I-O
And on his farm he had a cow
E-I-E-I-O
With a moo moo here
And a moo moo there
Here a moo, there a moo
Everywhere a moo moo
Old MacDonald had a farm
E-I-E-I-O

இந்தப் பாட்டை நாங்கள் எல்லோரும் அர்த்தம் புரியாமலேயே ரசித்து ரசித்து சத்தமாகப் பாடுவோம். ‘இய இய யோ!’ என்று கத்துவோம். பாபா ப்ளாக் ஷீப், ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், என்று இன்றைக்கு சின்னச்சின்ன குழந்தைகள் பாடும் பாடல்களை நான் ஆறாம் வகுப்பில் கற்றுக்கொண்டேன்!

எங்கள் பாட்டு டீச்சரும் நிறைய பாடல்கள் சொல்லித் தருவார். தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், பாரதியார் என்று பல பாடல்களைச் சொல்லித் தருவார்.

‘சூரியன் வருவது யாராலே? சந்திரன் திரிவது எவராலே? காரிருள் வானில் மின்மினி போல் கண்ணில் படுவன அவையென்ன?’ என்ற பாடல் (நாமக்கல் கவிஞரின் பாடல்) கானடா ராகத்தில் மிக இனிமையாக இருக்கும். அதே மெட்டில் ‘தமிழன் என்றொரு இனம் உண்டு; தனியே அவர்கோர் குணம் உண்டு’ என்ற பாடலும் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். இந்தப் பாடலை 1954 ஆம் வருடம் எம்.ஜி. ராமச்சந்திரன், பானுமதி நடித்து வெளிவந்த மலைக்கள்ளன் படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார் என்று இணையத்தில் தகவல் கிடைக்கிறது.


மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே, ஒரு வெள்ளிவோடம் போல வரும் வெண்ணிலாவே’ (இந்தப் பாட்டிற்கு கோலாட்டம் ஆடுவோம்) போன்ற அதி அற்புதமான பாடல்களை நான் கற்றது இந்த பாட்டு ஆசிரியையிடம் தான். அவரே எங்கள் பள்ளியின்  ‘ப்ளூ பேர்ட்’ (Blue bird) என்ற – கிட்டத்தட்ட ஸ்கௌட் போன்ற ஒரு அமைப்பிற்கும் ஆசிரியை. இந்த அமைப்பின் பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதை அழகாகத் தமிழ்ப்படுத்தி எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.

எனக்கு நினைவிருக்கும் ஒரு பாடல்:
Bits of paper, bits of paper lying on the floor, lying on the floor
Make the place untidy, make the place untidy pick them up, pick them up!

தமிழ் வடிவம்:
காகிததுண்டுகள், காகிததுண்டுகள் தரையிலே பார், தரையிலே பார்,
அசுத்தபடுத்துதே, அசுத்தபடுத்துதே, பொறுக்கி எடு, பொறுக்கி எடு.

இன்னொரு பாடல்

கரடி மலைமேல் ஏறி கரடி மலைமேல் ஏறி
கரடி மலைமேல் ஏறி அது என்ன பார்த்தது?
அது என்ன பார்த்தது? அது என்ன பார்த்தது?

மலையின் அடுத்த பக்கம் மலையின் அடுத்த பக்கம்
மலையின் அடுத்த பக்கம் அது எட்டி பார்த்தது
அது எட்டி பார்த்தது அது எட்டி பார்த்தது

திரும்ப மலைமேல் ஏறி திரும்ப மலைமேல் ஏறி
திரும்ப மலைமேல் ஏறி அது வீடு சென்றது!

இதே பாடலை ஆங்கிலம், கன்னட மொழிகளிலும் நான் பாட்டு ஆசிரியையாக இருந்தபோது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன் இவரை நினைத்துக் கொண்டே. அவரே நடன ஆசிரியையும் கூட.

‘பாரத நாட்டின் தவப்புதல்வா, பாராய் அன்னை மணிக்கொடியை
வீரவணக்கம் செய்திடுவோம் வெல்க பாரதம் என உரைப்போம்’ என்ற ‘திலங்’ ராகப்பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்து எங்களை குடியரசு தினத்தன்று ஆட வைத்தவர்.



ப்ளூபர்ட் அமைப்பில் இருப்பவர்களுக்கு நீலக் கலரில் ஒரு ஸ்கார்ப் கொடுக்கப்படும். அந்த வகுப்பு வரும்போது அதை கழுத்தில் அணிந்து போகவேண்டும். இந்த வகுப்பிலும் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ போன்ற வீரப் பெண்மணிகளின் கதைகளை இந்த வகுப்பில்தான் கேட்டேன்.

அரசு நிகழ்ச்சிகளில் நாங்கள் ஆடும் நடனங்கள் இடம்பெறும். குடியரசு தினம், சுதந்திர தினம் தவிர குழந்தைகள் தினம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஆடுவோம். நடனத்தைத் தவிர பெரிய பெரிய வளையங்கள், (இவற்றின் மேல் வண்ணக் காகிதங்கள் சுற்றப்பட்டிருக்கும்) ஒரு பக்கம் மரக்கட்டை இன்னொரு பக்கம் சலங்கையுடன் கூடிய (இதன் பெயர் மறந்துவிட்டது) ஒரு கருவி, வட்டவடிவில் இருக்கும் சலங்கை என்று இவைகளை வைத்துக் கொண்டு - வெறும் இசை மட்டும் வரும் அதற்குத் தகுந்தாற்போல உடற்பயிற்சி செய்வதையும் கற்றுக் கொண்டேன். குள்ளமாக இருந்ததனால் எப்பவும் முதல் வரிசையில் இடம் கிடைக்கும்!

ஒருமுறை குடியரசு விழாவிற்கு அப்போதைய தமிழ்நாடு ஆளுநராக இருந்த திரு ஜெயசாமராஜ ஒடையார் வந்திருந்தார். என்ன கம்பீரம்! கண்களில் குளுகுளு கண்ணாடி அணிந்துகொண்டு வெள்ளைவெளேரென்ற உடையில் தலையில் சரிகை வைத்த டர்பன் அணிந்து கொண்டு – இன்றைக்கும் அந்த கம்பீரம் நினைவில் இருக்கிறது.

 அசைபோடுதல் தொடரும்......

அதீதம் இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர்







புதன், 22 ஜூன், 2016

செங்கமலமும் நானும்




 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx_B4jyHRd9cb1LTMRx5bWoYISw3lYsyvKnnJqmRYwFM9R7N2E7YLBV7fuL-UGPcGlNcgvGckEAFPaGooxeDBUtR_mB78a8veepTzPvccaXRwP32SodmVCpqiVZc23uAMPmINVJGPu-Es/s1600/little-indian-girls.jpg

என்னுடைய தையல்கலை ஆர்வம் இன்னும் என்னைவிடவில்லை! சரி, வாருங்கள் மறுபடி எங்கள் பள்ளி நாட்களுக்குத் திரும்பலாம்.


6ஆம் வகுப்பிலிருந்துதான் நாங்கள் பேனா பயன்படுத்த ஆரம்பித்தோம். பலவருடங்களாக பென்சிலில் அழுத்தி எழுதி எழுதி பேனாவையும் அழுத்தினால் நிப் உடையும். மசி தீர்ந்துவிடும். நோட்டுப் புத்தகத்தில் எழுதும்போது கீறல் கீறலாக விழும். சரியாக எழுதாது. நல்ல பேனா எடுத்துக்கொண்டு போனால் - முதலில் வாங்கியே கொடுக்க மாட்டார்கள். ஒருவேளை வாங்கிக் கொடுத்தாலும் - தொலைந்து போகும். ஒரு பேனா தான், இரண்டாவது பேனா வேண்டும் என்று பெற்றோர்களிடம் கேட்க முடியாது. இப்படி எத்தனையோ தொல்லைகள்.

இந்த நிலையில் தான் பக்கத்துச் செட்டியார் கடையில் மசி கிடைக்கும் என்பது எங்கள் எல்லோருக்கும் பெரிய விஷயமாக இருந்தது. அவரிடமே பேனாக்களும் விற்பனைக்கு இருந்தன.
செட்டியார் கடையில் ஒருமுறையாவது மசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அம்மாவிடம் கேட்டு காலணா காசும் வாங்கி வந்துவிட்டேன். மதிய இடைவெளியில் கடைக்குப் போனால் ஜன்னல் மூடியிருந்தது. ஆபத்பாந்தவி செங்கமலத்திடம் வழக்கம்போல மூன்று சொட்டு மசி வாங்கிக்கொண்டு அன்றைய பொழுதைக் கழித்தேன். இத்துடன் தான் இந்தத் தொடரின் 16 வது பகுதியை நிறுத்தியிருந்தேன். அதற்குள் சரித்திர நிகழ்வுகள் சிலவற்றை சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.

அன்றைக்கு சாயங்காலம் பள்ளிவிட்டு வீட்டிற்குப் போகும்போது செட்டியார் ஜன்னலைத் திறந்து வைத்திருந்தார். பேனாவிற்கு மசி போட்டுக் கொள்ளலாம் என்று ஓடினேன். ஆனால் செங்கமலம் இல்லையே! நாளைக்கு அவளுடன் வரலாம் என்று நினைத்துக்கொண்டு செட்டியாரிடம் கேட்டேன் ‘நாளைக்கு மதிய இடைவெளியில் கடையை திறந்திருப்பீங்களா?’ என்று. ‘ஏம்மா?’ என்றார். ‘இல்லை, இன்னைக்கு பேனாவிற்கு மசி போடலாம்ன்னு வந்தோம், ஜன்னல் மூடியிருந்தது....!’ என்றேன். ‘அடக் கடவுளே! ஜன்னல் மூடியிருந்தால் முன்பக்கமா வரவேண்டியதுதானே?’ என்றார். ‘ஐயையோ...அப்போ கடை திறந்திருந்ததா?’ என்றேன். ‘ஆமாம்மா, நான் என்னிக்குக் கடையை மூடியிருக்கேன்?’ என்றார் செட்டியார். கடையின் முன்பக்கம் என்பது எத்தனை முக்கியமானது என்று அன்றைக்குப் புரிந்தது!

தினமும் சாயங்காலம் பள்ளி விட்டவுடன், வாசலிலேயே நானும் செங்கமலமும் பிரியாவிடை பெற்றுக் கொள்வோம். அது ஒரு பெரிய ரிச்சுவல். என்னவோ பலநாட்கள் பிரிந்து இருந்ததை போலவும் இனிமேல் பார்க்கவே மாட்டோம் என்பது போலவும் இருவரும் ‘போயிட்டு வரேன்’, போயிட்டு வரேன்’ என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டு எதிர் எதிர் திசையில் நடப்போம். வீட்டிற்குப் போனாலும் ‘செங்கமலம் இதைச் சொன்னாள், அதைச் சொன்னாள் என்று அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பேன் நான். அவளும் அப்படித்தானாம். ‘நாமதாண்டி ரொம்ப நெருக்கமான தோழிகள்’ என்று என்று இருவரும் அடிக்கடி சொல்லிக்கொள்வோம்.

செங்கமலத்திற்கு நிறைய அக்காக்கள், அண்ணாக்கள், தம்பிகள், தங்கைகள்  ஒருநாள் என் அம்மாவிடம் அனுமதி வாங்கி நான் செங்கமலம் வீட்டிற்குப் போனேன். அவர்கள் வீட்டில் ஒரு பாப்பா பாயில் படுத்துக் கொண்டிருந்தது. செங்கமலத்தின் லேட்டஸ்ட் தம்பி அது. குச்சி குச்சியாகக் கையும் காலுமாக அந்தக் குழந்தையைப் பார்க்க எனக்கு ஒரு பக்கம் பயம்; இன்னொரு பக்கம் பாவம். ‘என்ன இப்படி இருக்கிறது?’ என்று அவளை கேட்டேன். ‘சீக்கிரமாகப் பிறந்துவிட்டதாம்’ என்றாள் அவள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அதனால் அதற்கு தினமும் காட்லிவர்ஆயில் மருந்து கொடுக்கிறோம்’ என்றாள் தொடர்ந்து. எனக்கு அதுவும் புரியவில்லை. ‘இப்போ பாரேன் ஒரு வேடிக்கையை’ என்று சொல்லியபடியே செங்கமலம் அந்த அறையின் ஒரு ஆணியில் மாட்டியிருந்த  ஒரு துணிப்பையைத் தொட்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தை ஈனஸ்வரத்தில் அழ ஆரம்பித்தது. எனக்கு புதிராக இருந்தது. ‘ஏன் நீ அந்தப் பையைத் தொட்டதும் குழந்தை அழுகிறது?’ என்று கேட்டேன். ‘அதில் தான் அந்த காட்லிவர்ஆயில் மருந்து இருக்கிறது. என் அம்மா தினமும் அதைப் பாலில் கலந்து அதற்குப் போட்டுவாள். அதற்கு அந்த வாசனையே பிடிக்காது. அதனால் தான் பையைத் தொட்டாலே அழுகிறது...’ என்று சொல்லி சிரித்தாள். ‘பாவம்டி, அப்படிச் செய்யாதே!’ நான் அவர்கள் வீட்டில் இருந்த நேரம் முழுவதும் அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தேன். செங்கமலம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள் மூச்சு விடாமல். ஆனால் எனது கவனம் அந்தக் குழந்தை மீதே இருந்தது. கொஞ்ச நேரத்தில் என் முகமும் அதற்குப் பழகிப் போய் என்னைப் பார்த்துச் சிரித்தது. சோனியாக இருந்ததே தவிர சிரிக்கும்போது அதன் கண்கள் பளிச்சென்று தெரிந்தன. என்னுடைய ஆரம்பப்பயம் போய் அதனுடன் சிரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.

வீட்டிற்கு வந்தும் என் நினைவு அதன் மேலேயே இருந்தது. என் அம்மாவிடமும் என் பயம், அப்புறம் அதனுடன் நான் பேசியது என்று எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனேன். ‘ஏன்மா அந்த பாப்பா அத்தனை ஒல்லியாக இருக்கு?’ ஏன் அதற்கு காட்லிவர்ஆயில் கொடுக்கிறார்கள்? அது எப்ப நடக்கும்?’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தேன்.

இத்தனை வருடங்கள் கழித்தும் எனக்கு இந்த நிகழ்ச்சி நன்றாக நினைவு இருக்கிறது என்றால் அந்தக் குழந்தை என்மீது ஏற்படுத்திய தாக்கம் தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் செங்கமலத்தின் வீட்டிற்குப் போகவும் இல்லை. அந்தக் குழந்தையைப் பார்க்கவும் இல்லை. எங்கோ ஓரிடத்தில் இப்போது அந்தப் பாப்பா பெரியவனாகி நன்றாக இருப்பான் என்று தான் தோன்றுகிறது.

இரண்டு வருடங்கள் தான் நானும் செங்கமலமும் ஒன்றாகப் படித்தது. பிறகு நாங்கள் புரசைவாக்கம் வந்துவிட்டோம். செங்கமலத்தின் நட்பும் அப்படியே முடிந்து போயிற்று.

அசை போடுதல் தொடரும்......
.