வியாழன், 23 ஜூன், 2016

சூரியன் வருவது யாராலே?





         

அரசுநடுநிலைப்பள்ளியில் படித்ததினால் எனக்குப் பல்வேறு வகைகளில் நன்மை என்றே சொல்ல வேண்டும். பாடங்களைத் தவிர ஆடல், பாடல், கைவேலை, தையல் என்று பல கலைகளைக் கற்றுக்கொண்டேன். தமிழ் பாடல்கள் தவிர ஆங்கில ரைம்ஸ் என்று சொல்லுகிறோமே அவைகளையும் கற்றுக் கொண்டேன்.

எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி கனகவல்லி டீச்சரே ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தார். வெறும் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் சின்னச் சின்ன கதைகள், பாடல்கள் சொல்லிக்கொடுப்பார்.

Old MACDONALD had a farm
E-I-E-I-O
And on his farm he had a cow
E-I-E-I-O
With a moo moo here
And a moo moo there
Here a moo, there a moo
Everywhere a moo moo
Old MacDonald had a farm
E-I-E-I-O

இந்தப் பாட்டை நாங்கள் எல்லோரும் அர்த்தம் புரியாமலேயே ரசித்து ரசித்து சத்தமாகப் பாடுவோம். ‘இய இய யோ!’ என்று கத்துவோம். பாபா ப்ளாக் ஷீப், ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், என்று இன்றைக்கு சின்னச்சின்ன குழந்தைகள் பாடும் பாடல்களை நான் ஆறாம் வகுப்பில் கற்றுக்கொண்டேன்!

எங்கள் பாட்டு டீச்சரும் நிறைய பாடல்கள் சொல்லித் தருவார். தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், பாரதியார் என்று பல பாடல்களைச் சொல்லித் தருவார்.

‘சூரியன் வருவது யாராலே? சந்திரன் திரிவது எவராலே? காரிருள் வானில் மின்மினி போல் கண்ணில் படுவன அவையென்ன?’ என்ற பாடல் (நாமக்கல் கவிஞரின் பாடல்) கானடா ராகத்தில் மிக இனிமையாக இருக்கும். அதே மெட்டில் ‘தமிழன் என்றொரு இனம் உண்டு; தனியே அவர்கோர் குணம் உண்டு’ என்ற பாடலும் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். இந்தப் பாடலை 1954 ஆம் வருடம் எம்.ஜி. ராமச்சந்திரன், பானுமதி நடித்து வெளிவந்த மலைக்கள்ளன் படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார் என்று இணையத்தில் தகவல் கிடைக்கிறது.


மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே, ஒரு வெள்ளிவோடம் போல வரும் வெண்ணிலாவே’ (இந்தப் பாட்டிற்கு கோலாட்டம் ஆடுவோம்) போன்ற அதி அற்புதமான பாடல்களை நான் கற்றது இந்த பாட்டு ஆசிரியையிடம் தான். அவரே எங்கள் பள்ளியின்  ‘ப்ளூ பேர்ட்’ (Blue bird) என்ற – கிட்டத்தட்ட ஸ்கௌட் போன்ற ஒரு அமைப்பிற்கும் ஆசிரியை. இந்த அமைப்பின் பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதை அழகாகத் தமிழ்ப்படுத்தி எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.

எனக்கு நினைவிருக்கும் ஒரு பாடல்:
Bits of paper, bits of paper lying on the floor, lying on the floor
Make the place untidy, make the place untidy pick them up, pick them up!

தமிழ் வடிவம்:
காகிததுண்டுகள், காகிததுண்டுகள் தரையிலே பார், தரையிலே பார்,
அசுத்தபடுத்துதே, அசுத்தபடுத்துதே, பொறுக்கி எடு, பொறுக்கி எடு.

இன்னொரு பாடல்

கரடி மலைமேல் ஏறி கரடி மலைமேல் ஏறி
கரடி மலைமேல் ஏறி அது என்ன பார்த்தது?
அது என்ன பார்த்தது? அது என்ன பார்த்தது?

மலையின் அடுத்த பக்கம் மலையின் அடுத்த பக்கம்
மலையின் அடுத்த பக்கம் அது எட்டி பார்த்தது
அது எட்டி பார்த்தது அது எட்டி பார்த்தது

திரும்ப மலைமேல் ஏறி திரும்ப மலைமேல் ஏறி
திரும்ப மலைமேல் ஏறி அது வீடு சென்றது!

இதே பாடலை ஆங்கிலம், கன்னட மொழிகளிலும் நான் பாட்டு ஆசிரியையாக இருந்தபோது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன் இவரை நினைத்துக் கொண்டே. அவரே நடன ஆசிரியையும் கூட.

‘பாரத நாட்டின் தவப்புதல்வா, பாராய் அன்னை மணிக்கொடியை
வீரவணக்கம் செய்திடுவோம் வெல்க பாரதம் என உரைப்போம்’ என்ற ‘திலங்’ ராகப்பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்து எங்களை குடியரசு தினத்தன்று ஆட வைத்தவர்.



ப்ளூபர்ட் அமைப்பில் இருப்பவர்களுக்கு நீலக் கலரில் ஒரு ஸ்கார்ப் கொடுக்கப்படும். அந்த வகுப்பு வரும்போது அதை கழுத்தில் அணிந்து போகவேண்டும். இந்த வகுப்பிலும் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ போன்ற வீரப் பெண்மணிகளின் கதைகளை இந்த வகுப்பில்தான் கேட்டேன்.

அரசு நிகழ்ச்சிகளில் நாங்கள் ஆடும் நடனங்கள் இடம்பெறும். குடியரசு தினம், சுதந்திர தினம் தவிர குழந்தைகள் தினம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஆடுவோம். நடனத்தைத் தவிர பெரிய பெரிய வளையங்கள், (இவற்றின் மேல் வண்ணக் காகிதங்கள் சுற்றப்பட்டிருக்கும்) ஒரு பக்கம் மரக்கட்டை இன்னொரு பக்கம் சலங்கையுடன் கூடிய (இதன் பெயர் மறந்துவிட்டது) ஒரு கருவி, வட்டவடிவில் இருக்கும் சலங்கை என்று இவைகளை வைத்துக் கொண்டு - வெறும் இசை மட்டும் வரும் அதற்குத் தகுந்தாற்போல உடற்பயிற்சி செய்வதையும் கற்றுக் கொண்டேன். குள்ளமாக இருந்ததனால் எப்பவும் முதல் வரிசையில் இடம் கிடைக்கும்!

ஒருமுறை குடியரசு விழாவிற்கு அப்போதைய தமிழ்நாடு ஆளுநராக இருந்த திரு ஜெயசாமராஜ ஒடையார் வந்திருந்தார். என்ன கம்பீரம்! கண்களில் குளுகுளு கண்ணாடி அணிந்துகொண்டு வெள்ளைவெளேரென்ற உடையில் தலையில் சரிகை வைத்த டர்பன் அணிந்து கொண்டு – இன்றைக்கும் அந்த கம்பீரம் நினைவில் இருக்கிறது.

 அசைபோடுதல் தொடரும்......

அதீதம் இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர்







3 கருத்துகள்:

  1. ரசிக்கும்படியான நினைவுகூறல். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மலரும் நினைவுகளும் பாடல்களும் அருமை.
    நான் படிக்கும் போது புல், புல் என்று பேர் நீலகலர் ஸ்கார்ப் உண்டு நடுவில் உருண்டை கட்டையில் இஸ்பேட்மாதிரி சிம்பல் வரைந்து இருக்கும். கழுத்தை சுற்றி போட்டு உருளை உள்ளே விட்டு நடுவில் வருவது போல் செய்து கொள்ள வேண்டும்.
    சிறிய சுற்றுலா கூட்டி செல்வார்கள் அங்கு ஆடல், பாடல், முதல் உதவி செய்வது எல்லாம் சொல்லி தருவார்கள்.

    வெள்ளை கயிற்றில் முடிகள் போட சொல்லி தருவார்கள்.




    பதிலளிநீக்கு
  3. Lezim மராட்டிய மாநிலத்தில் குழு ஆட்டத்தில் உபயோகிக்கிறார்கள்

    பதிலளிநீக்கு