வியாழன், 31 ஜனவரி, 2013

லீப் வருடம் - பல சுவையான தகவல்கள்:





நீங்கள் உங்கள் 'பொன்னான பிறந்த' (Golden Birthday) நாளைக் கொண்டாடி இருக்கிறீர்களா?

'பொன்னான பிறந்த நாளா?' என்று வியப்பவர்களுக்கு: உங்கள் பிறந்த தேதியும், உங்கள் வயதும் ஒன்றாக இருந்தால்   (அதாவது 27 ஆம் தேதி உங்கள் 27 வது பிறந்தநாள் வந்தால் அதுதான் உங்களது 'பொன்னான பிறந்த நாள்'. 1953 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் தங்களது 53 வது பிறந்த நாளை 'பொன்னான பிறந்த நாளா' கக் கொண்டாடலாம்.

சரி லீப் வருடத்தில் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்கள் எப்போது தங்களது 'பொன்னான பிறந்த நாளை' கொண்டாடுவார்கள்? யோசியுங்கள்..... விடை கடைசியில்.......

ஒரு வருடத்தின் எண்களை மிகுதி இல்லாமல் 4 ஆல் வகுக்க முடிந்தால் அது தான் லீப் வருடம் என்று தெரியும்.தெரியாத விஷயம்: நூற்றாண்டுகள் வரும்போது அவை 400 ஆல் மிகுதி இல்லாமல் வகுக்கப் பட வேண்டும் என்பது!

லீப் வருடமும் பலவிதமான காலண்டர்களும்:
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 365.242 நாட்கள்  அதாவது 365 1/4 நாட்கள். எகிப்தியர்கள் மாறி வரும் பருவ நிலைகளும் தங்கள் நாட்காட்டியும் பல சமயங்களில் ஒத்துப் போகாததை கண்டறிந்தனர்.
  • முதன் முதலில் இந்தக் கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்த பெருமை கி.மு. 45 இல் வாழ்ந்த ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசரைச் சேரும்.

  • நாம் இப்போது பயன் படுத்தும் க்ரிகோரியன் (Gregorian) காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர் தான்.

  • ஸ்வீடனில் 1712 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு 30 நாட்கள்! காரணம் அங்கு அப்போது ஜூலியன் காலண்டரோ அல்லது க்ரிகோரியன் காலண்டரோ நடைமுறையில் இல்லாததுதான். அதன் பிறகு 1753 க்ரிகோரியன் காலண்டரை பின்பற்றி அமைக்கப் பட்ட காலண்டரில் லீப் வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதிக்குப் பிறகு மார்ச் 1 ஆம் தேதிக்குத் தாவியது. ஆனால் பொதுமக்களுக்கு இந்த முறை பிடிக்கவில்லை; தங்கள் வாழ்நாளிலிருந்து 10 நாட்களைஇழந்து  விட்டதாக நினைத்தனர்!

  • 1930 களில் சோவியத் யூனியனிலும் பிப்ரவரி 30 தேதியுடன் இருந்த காலண்டர் புழக்கத்தில் இருந்தது. தொழிலாளிகளின் உற்பத்தித் திறனைப் அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 7 நாட்களாக ஞாயிறு விடுமுறை) இருந்த வாரக் கணக்கை மாற்றி 5 அல்லது 6 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை இல்லாத வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள்! மிச்சமிருந்த 5 அல்லது 6 நாட்கள் மாதக் கணக்கில்வராத தேசீய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால் ஞாயிறு விடுமுறை என்ற வழக்கம் நெடு நாட்களாக இருந்ததால்,இந்த முறை, அதிக நாட்கள் நீடிக்க முடியவில்லை; 1940 ஆம் ஆண்டு பழையபடி க்ரிகோரியன் காலண்டர் பழக்கத்திற்கு வந்தது.

பழங்காலத்தில் லீப் வருடம்: 
  • முற்காலத்தில் ஒரு பெண் தன் மனதுக்குப் பிடித்தவனை தேர்ந்தெடுக்க லீப் வருடமே சிறந்தது என்று கருதப் பட்டது. லீப் வருடத்தில் ஒரு பெண் தன் காதலைச் சொல்லலாம் என்று 5 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்து நாட்டில் ஒரு வழக்கம் இருந்ததாம். 13 ஆம் நூற்றாண்டில் இதை அரசு பூர்வ சட்டமாக மாற்றியவர் ஸ்காட்லாந்து ராணி மார்கரெட்.

  • ஒரு பெண் லீப் வருடத்தில் தன் காதலை சொல்லி அதை ஏற்க மறுக்கும் ஆண் மகன் அவளுக்கு புதிதாக பட்டு உடையும் ஒரு ஜோடி கையுறையும் கொடுக்க வேண்டும் என்ற வழக்கமும் இருந்ததாம்.

  • சில நாடுகளில் லீப் வருடம் அமங்கலமான வருடமாக கருதப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டில் லீப் வருடத்தில் பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டம் இல்லாத குழந்தையாகக் கருதப் பட்டது. கிரேக்க நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் லீப் வருடத்தில் கல்யாணம் செய்து கொள்ளுவதையே தவிர்த்தனர்.

லீப் வருடமும் சினிமாவும்:
  • அயர்லாந்து நாட்டில் பழைய காலத்தில் இருந்த வழக்கத்தை அடிப்படையாக வைத்து 2010 ஆம் ஆண்டு 'லீப் இயர்' (Leap Year) என்ற நகைச்சுவைப் படம் வெளியானது. தன் மனதுக்குப் பிடித்தவனை 'ப்ரொபோஸ் ' செய்ய அயர்லாந்துக்கு பிரயாணம் செய்யும் ஒரு பெண்ணின் கதையை நகைச்சுவையுடன் விவரிக்கிறது இப்படம்.

  • 19 ஆம் நூற்றாண்டு வெளி வந்த 'The Pirates of Pinzance" என்கிற நகைச் சுவை இசை நாடகம், கப்பற் கொள்ளைக்காரனான ஒரு இளைஞன் பற்றியது. வேலைக்குச் சேர்ந்தவுடன் அவனது பயிற்சி பருவம் (apprenticeship) அவனது 21 வயது வரை என்று நிர்ணயிக்கப் படுகிறது. முதலில் மகிழ்ச்சி அடையும் அவன் தன் பிறந்த நாள் பிப்ரவரி 29 என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறான்! 84 வயதில் தான் அவனது 21 வது பிறந்த நாள் வரும்!

சராசரியாக 1461 குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே இந்த லீப் வருடம் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறக்கும் பாக்கியத்தைப் பெறுகிறது.


இக்குழந்தைகள் 'Leaplings' என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் பிறந்தநாளின் கால் பகுதியைத்தான் கொண்டாடுகிறார்கள். பிறந்த தேதி வராத வருடங்களில் பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1 ஆம் தேதி தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.

  • பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்த நம்மூர் பிரபலங்கள்: மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் நடனக் கலைஞா் ருக்மிணி தேவி.

  • உலகப் புகழ் பெற்ற சூப்பர் மேன் பிறந்தது இதே பிப்ரவரி 29. இவரது 50 வது பிறந்த நாளை 'டைம்ஸ்' பத்திரிக்கை 1988 ஆம் ஆண்டு தனது அட்டைப் படத்தில் சூப்பர் மேனைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு கொண்டாடியது.

  • ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மேனியா பிரதமர் சர் ஜேம்ஸ் வில்சன் பிறந்தது, இறந்தது இரண்டுமே பிப்ரவரி 29 ஆம் தேதிதான்!

2012 லீப் வருடம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த ஆண்டின் தெரியாத விசேஷங்கள்:

  • இந்த ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் Rare Disease Day யாக கடை பிடிக்க உள்ளனர். குணப்படுத்த முடியாத, அரிதான, நோய்களை 'rare disease' என்கிறார்கள். இந்நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு நாளாக பிப்ரவரி 29 ஆம் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.

  • அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட் இந்த வருடத்தில் வரும் ஒரு அதிகப் படியான நாளைக் கொண்டாட 29 ஆம் தேதி 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

சரி, இப்போது முதலில் கேட்ட கேள்விக்கு பதில் பார்ப்போமா? பிப்ரவரி 29 இல் பிறந்தவர்கள் தங்கள் பொன்னான பிறந்தநாளை தங்களது 116 வது வயதில் கொண்டாடுவார்கள்!!!!

சனி, 26 ஜனவரி, 2013

நமது தேசிய கீதம்






எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
2011 ஆம் வருடம் டிசெம்பர் 27ஆம் தேதி நமது தேசிய கீதத்திற்கு 100 ஆண்டுகள் நிறைவடைந்தன. அதை கொண்டாடும் விதமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்  உள்ள மதனப்பள்ளி என்கிற ஊரில்   சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் நமது தேசிய கீதத்தைப் பாடினார்கள். பொது மக்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி நடந்த  இடம் மதனப் பள்ளியில் உள்ள பெசன்ட் தியோசொபிகல் கல்லூரி வளாகம். இங்கு தான் சம்ஸ்க்ருதம் கலந்த பெங்காலி மொழியில் இந்தப் பாடலை திரு.தாகூர் எழுதினார். தியோசொபிகல் கல்லுரியின் அப்போதைய முதல்வரும் திரு. தாகூரின் நண்பருமான ஜேம்ஸ் ஹெச். கசின்ஸ் (James H. Cousins) என்பவரின் மனைவி திருமதி மார்கரெட் கசின்ஸ் (இவர் ஒரு மேற்கத்திய இசை வல்லுநர்) பல வித மெட்டுக்களை போட்டுக் காண்பித்து கடைசியில் தாகூர் மனத்தைக் கவர்ந்த மெட்டில் இருப்பது தான் நாம் எல்லோரும் இப்போது  பாடும் 'ஜன கண மனபாட்டு. 1911 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த மெட்டு போடப்பட்டது. 

1911 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜத்தின்  தத்வ போத பிரகாசிகை என்ற நூலில் திரு தாகூர் எழுதிய கவிதை தான் பிற்காலத்தில் நமது தேசிய கீதமாக மாறியது. முதல் முறையாக இந்தப் பாடல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் 1911 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம்   27 ஆம் தேதி  பாடப்பட்டது.

1911 ஆம் வருடம் எழுதப் பட்டிருந்தாலும்இந்தப் பாடலின் ஹிந்தி மொழியாக்கம் பல ஆண்டுகள் கழித்து 1950 ஆம் வருடம் ஜனவரி 24 ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்பால் தேசிய கீதமாக தத்தெடுக்கப் பட்டது. 

இந்தப் பாடலை திரு தாகூர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இடமும் இதே மதனப் பள்ளி தான். மதனப் பள்ளியில் இருக்கும் பெசன்ட் தியோசொபிகல் கல்லூரிக்கு  'தெற்கு சாந்தி நிகேதன்என்றே திரு தாகூர் பெயரிட்டார். இவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தன் கைப்பட எழுதிய  'ஜன கண மனபாடல் மதனப் பள்ளி தியோசொபிகல் கல்லூரி நூலகத்தில் கண்ணாடி சட்டத்திற்குள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது. திரு. தாகூர் இந்த ஆங்கில மொழியாக்கப் பாடலுக்கு 'The Morning Song of India' என்று பெயரிட்டார். 

திரு. தாகூரால் எழுதப்பட்ட 5 பத்திகள் கொண்ட இந்தப் பாட்டின் முதல் பத்தி மட்டும் தேசிய கீதமாக இசைக்கப் படுகிறது. இதைப் பாடுவதற்கு 52 வினாடிகள் ஆகும். முழுவதும் பாடாமல் சுருக்கமாக முதல் அடியும்கடைசி அடியும் மட்டுமே சில சந்தர்பங்களில் பாடப் படுகிறது. சுதந்திர தினத்தன்றும்குடியரசு தினத்தன்றும் நம் நாட்டின் தலை நகரமான புது தில்லி செங்கோட்டையில் நமது தேசியக் கோடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப் படுகிறது. 

 பிரபலமானவற்றைச் சுற்றி சச்சரவு எப்போதும் இருக்கும்இல்லையாஅதுபோல திரு. தாகூர் எழுதிய இந்த தேசிய கீதமும் பல சமயங்களில் சச்சரவுக்கு ஆளாகி இருக்கிறது. 

இந்தப் பாடல் இயற்றப்பட்ட 1911 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூடிய ஆண்டு. 'பாக்கிய விதாதா', 'அதிநாயகஎன்ற சொற்கள் அரசரைப் புகழ்ந்து எழுதப் பட்டவைகடவுளின் புகழ் இல்லை என்று சிலர் அப்போதே எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாம் நாளின் முக்கிய நிகழ்ச்சி அப்போது இந்தியா வந்திருந்த ஐந்தாம் ஜார்ஜ் அரசரை வரவேற்பதுதான். இந்த மாநாட்டைப் பற்றிய செய்தியை பத்திரிகைகள் வெளியிடும் போது "வங்கக் கவி திரு ரவீந்திர நாத் தாகூர் இங்கிலாந்து அரசரை வரவேற்பதற்காக தான் இயற்றிய பாடலைப் பாடினார்" என்று குறிப்பிட்டிருந்தன. 

ஆனால் திரு. தாகூர் அவர்கள் ஒரு சிறந்த தேச பக்தராகவே கருதப் பட்டார். 1919 இல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குப் பின்தனக்குக் ஆங்கிலேய அரசால் (யாரைப் புகழ்ந்து பாடினார் என்று குற்றம் சாட்டப் பட்டாரோ அந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால்) கொடுக்கப் பட்ட 'சர்பட்டத்தையும் துறந்தார். இந்த சச்சரவுகளின் பின்னிலையில் திரு. தாகூர் 1937,1939 ஆம் ஆண்டுகளில் தான் எழுதிய கடிதங்களில் தாம் கடவுளையே ராஜா என்று குறிப்பிட்டதாகவும்தன்னை குறை சொல்பவர்களின் அறிவின்மை பற்றி வருத்தப் படுவதாகவும் கூறுகிறார். 

  'ஜன கண மனபாடலில் குறிப்பிடும் 'ராஜா', 'அரியணை', 'ரதம்போன்ற சொற்கள் பரம் பொருளான ஸ்ரீ கிருஷ்ணனைக் குறிப்பதாகவே திரு தாகூரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். 

இன்னொரு குற்றச்சாட்டு:
 'ஜன கண மனவில் குறிப்பிடும் இந்திய பிரதேசங்கள் எல்லாம் அப்போதைய ஆங்கில அரசின் கீழ் இருந்தவைமன்னர்களால் ஆளப்பட்டு வந்த மாநிலங்களைப் (காஷ்மீர்ராஜஸ்தான்ஆந்திராமைசூர்) பற்றி எதுவும் எழுதவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள இந்து மகா சமுத்திரம்அரபிக் கடல் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. எல்லைப் பிரதேசங்களைப் பாடியதால்ஒட்டு மொத்த இந்தியாவையுமே தன் பாட்டில் சேர்த்திருக்கிறார் திரு. தாகூர்; 'திராவிடஎன்பது தெற்குப் பகுதியையும், 'ஜொலதிதஎன்ற வார்த்தை கடல்மற்றும் சமுத்திரத்தைக் குறிக்கும் வடச் சொல் என்றும் பதில் அளிக்கிறார்கள் தாகூரின் ஆதரவாளர்கள்.

 சாதாரண இந்தியன் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு குடியரசு தினத்தன்று கிடைக்கும் இனிப்பை  பற்றி கனவு கண்டு கொண்டு இருக்கிறான்.




வெள்ளி, 18 ஜனவரி, 2013

வைர விழா!




உங்களிடம் இரண்டு கேள்விகள்:
தொலைக்காட்சி தொடர்களினால் யாருக்கு  லாபம்?
ஏக்தா கபூருக்கு என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஏக்தா கபூர் எடுக்கும் ஹிந்தி தொடர்களால் நம் தமிழ் தொலைகாட்சிகளுக்கு லாபம். அந்தத் தொடர்களுக்கு பழைய, புதிய திரைப் படங்களின் பெயர்களை இட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே!
இவர்களையெல்லாம் விடுங்கள். பழைய, வயதான நடிக நடிகையருக்கும் இந்தத் தொடர்களால் மறுவாழ்வு கிடைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
பதிவுகள் எழுதுவதால் என்ன லாபம்?
பல புதிய நட்புகள் உருவாகி செழித்து வளருகின்றன. எழுத்துக்களால் மட்டுமே இணையும் நட்புகள்.
தொலைக்காட்சியில் வரும் பழைய, வயதான நடிக நடிகையர் போலவே என்னைப் போன்ற வயசாளிகளுக்கு   பதிவுலகம் புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளது.
எங்களின் பொழுதுகள் வீணடிக்கப் படுவதில்லை. வளரும் தொழில் நுட்பத்தை நாங்களும் கற்று அதை எங்களுக்கு தகுந்த முறையில் பயன்படுத்துகிறோம். பொழுது போகவில்லையே என்று அலுத்துக் கொள்வதில்லை. யாரிடமாவது அரட்டை அடிக்கலாமா, வம்பு பேசலாமா என்று அலைவதில்லை. முக்கியமாக அது இல்லை, இது இல்லை என்று குறைப்பட்டுக் கொண்டு மற்றவரை பாடாய் படுத்துவதில்லை!
எங்களுக்கு வாழ்க்கை தந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் வரும் ஆனந்தத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவித்து வருகிறோம். உட்கார்ந்த இடத்தில் உலகை சுற்றி வருகிறோம் என்று கூட சொல்லலாம்.
வயது எங்கள் உடலுக்கே தவிர மனதிற்கு அல்ல.பதிவு எழுதுவது எங்களின் மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது.
நாங்கள் எத்தனை உற்சாகமாக இருக்கிறோம் என்பதை நாளை (19.01.2013) தனது 75 வது பிறந்த நாளைக் கொண்டாடிடும் திருமதி ருக்மிணி சேஷசாயியின் பதிவுகளைப் படித்தால் தெரியும்.
யார் வழிக்கும் போகாமல் இவர் தனது பதிவுகளை குழந்தைகளுக்கு கதைகள் எழுதுவதற்கென்றே வைத்துக் கொண்டு விட்டார். பெரியவர்களின் விளையாட்டுக்கு இவர் வருவதே இல்லை. சென்ற ஆகஸ்டில் நடந்த பதிவர் விழாவிலும், பிறகு பெங்களூரில் எங்கள் வீட்டிற்கு வந்த போதும் இவரை சந்தித்திருக்கிறேன்.
இவருடன் பேசிக்கொண்டு இருப்பதே மனதுக்கு நிறைவைத் தரும் விஷயம்.
சமீபத்தில் ஆழி கடந்தான் வாழி என்று சுந்தரகாண்டத்தை குழந்தைகளுக்கு புரியும்படி எழுதி இருந்தார். ஹனுமத் ஜெயந்தியை ஒட்டி இந்தக் கதையை எழுதி இருப்பதாக சொன்னார்.
இவரது தாய்மொழி கன்னட. படித்தது தமிழ் முதுகலை பட்டப்படிப்பு! நான் வியப்புடன் இவரைப் பார்த்தபோது சொன்னார்: ‘எங்கள் பள்ளியில் மூன்று தமிழ் ஆசிரியைகள். ஒருவருக்கு தாய்மொழி தெலுங்கு. இன்னொருவருக்கு மலையாளம். எனக்கு கன்னட.’
பதிவுலகத்தில் மட்டுமில்லாமல், ஜெயா தொலைக்காட்சியிலும், சுட்டி விகடனிலும் கதைகள் சொல்லி சாதனை புரிந்துள்ளார் இவர்.

புதுவருட வாழ்த்திற்காக இவருக்கு நான் தொலைபேசிய போது தனது 75 வது பிறந்தநாளை தன் குழந்தைகள் எல்லோரும் ஒன்று கூடி கொண்டாட இருப்பதாகவும், கட்டாயம் வரவேண்டும் என்றும் சொன்னார்.
வரும் வாரம் எங்கள் வீட்டில் ஒரு திருமணம் கேரளாவில். அதற்கு கிளம்ப வேண்டும் என்பதால் என்னால் போக இயலவில்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடுகிறோமே என்று கொஞ்சம் வருத்தம் தான்.
அடுத்த மாதம் இன்னொரு திருமணம் சென்னையில். அப்போது வந்து பார்ப்பதாக அவரிடம் சொல்லி இருக்கிறேன்.
இந்தப் பதிவை படிப்பவர்கள் எல்லோரும் தவறாமல் திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்களின் தளத்திற்கு போய் அவரது  ஆரோக்கிய வாழ்விற்கு  இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு, அவரை  வணங்கி அவரது ஆசிகளைப் பெற்று வருமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.


இசைப்பாவில் கேட்டு மகிழுங்கள்:’

புதன், 9 ஜனவரி, 2013

நேர மேலாண்மை


                         




தொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரம்:

மிகவும் பிசியாக இருக்கும் ஒரு அப்பா, தன் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு இரவில் வெகு நேரம் கழித்து வீடு திரும்பும்போது, தன் குழந்தை பொம்மை கேட்டது நினைவுக்கு வர, பூட்டியிருக்கும் கடையைத் திறந்து பொம்மை வாங்கி வருவார். தன் குழந்தை தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்ற அப்படிச் செய்வதாக அந்த விளம்பரம் சொன்னாலும், நாம் எல்லோருமே இப்படித்தான் பல வேலைகளை ஒரே நேரத்தில் முடிக்க முடியாமல் தவிக்கிறோம்.

“நேற்று என் மனைவிக்கு ரொம்பக் கோவம். அவளை வெளியில் அழைத்துப் போய் நீண்ட நாளாகி விட்டது. அலுவலகத்திலேயே இருந்து விடுங்கள் என்று பயங்கர சண்டை......!”

“ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதவில்லை; எத்தனை நேரம் செய்தாலும் வேலை வளர்ந்து கொண்டே இருக்கிறது; எப்படி முடிக்கப் போகிறேன்?”

“குழந்தை பாவம், ரொம்ப நாளாய் 3D சினிமா பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள்......எப்போது அழைத்து போகப் போகிறேனோ, தெரியவில்லை.....”

“வயதான அம்மாவை மருத்துவப் பரிசோதனைக்கு கூட்டிப் போக நேரமில்லை.....”

இப்படியெல்லாம் அங்கலாய்த்துக் கொள்ளுபவரா நீங்கள்? உங்களுக்காகவே இந்தக் கதை: கதையின் பெயர்:“The Mayonnaise Jar”

ஒரு கல்லூரி. தத்துவ வகுப்பு ஆரம்பமானது. பேராசிரியர் வகுப்பிற்குள் நுழையும் போதே தன் கைகளில் சில பொருட்களைக் கொண்டு வந்தார்.

மாணவர்களிடம் எதுவும் பேசாமல் முதலில் தான் கொண்டு வந்த பொருட்களிலிருந்து ஒரு பெரிய மயோனைஸ் ஜாடியை எடுத்து மேசைமேல் வைத்தார். தன்னிடமிருந்த கோல்ப் (golf) பந்துகளை ஜாடி நிரம்பும்வரை போட்டார்.  மாணவர்களை கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?”
“ஆம்” என்றனர் மாணவர்கள்.

அடுத்ததாக கூழாங்கற்கள் நிறைந்த ஒரு பெட்டியை திறந்து அவைகளை கோல்ப் பந்துகள் நிறைந்த ஜாடியில் கொட்டினார். ஜாடியை சற்றுக் குலுக்கினார்.  கூழாங்கற்கள் கோல்ப் பந்துகளின் நடுவில் இருந்த இடைவெளியில் போய் உட்கார்ந்து கொண்டன.

பேராசிரியர் மறுபடியும் கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?” மாணவர்கள் “ஆம்”  என்று தலை அசைத்தனர்.

பேராசிரியர் இப்போது ஒரு பெட்டி நிறைய மணலை எடுத்து ஜாடியினுள் கொட்டினார். ஜாடி முழுவதும் மணல் நிரம்பியது.

தனது கேள்வியை அவர் திரும்பக் கேட்க மாணவர்களும் ஒட்டுமொத்தமாக “ஆம்” என்றனர்.

பேராசிரியர் மேசையின் கீழிருந்து 2 கோப்பை காப்பியை எடுத்து ஜாடியில் ஊற்றினார். காப்பி மணலுடன் கலந்தது. மாணவர்கள் சிரித்தனர்.

பேராசிரியர் கூறினார்: “இந்த ஜாடி உங்கள் வாழ்க்கையைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். கோல்ப் பந்துகள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பொருட்களான குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், நண்பர்கள், பிடித்தமான பொழுதுபோக்குகள் இவற்றைக் குறிக்கின்றன. வாழ்க்கையில் நீங்கள் எதை இழந்தாலும் இவை உங்களுடன் இருப்பவை. இவைதான் உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்க உதவுபவை..”

சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்:

“கூழாங்கற்கள் உங்கள் வேலை, சொந்த வீடு, கார் போன்றவை. மணல் மற்ற சின்னச்சின்ன விஷயங்கள்”

“சிறிது யோசியுங்கள்: முதலில் ஜாடியினுள் மணலைப் போட்டிருந்தால் என்னவாயிருக்கும்? கூழாங்கற்களுக்கோ, கோல்ப் பந்துகளுக்கோ இடம் இருந்திருக்காது. நம் வாழ்க்கையும் அதேபோல் தான். உங்களிடம் இருக்கும் நேரம் முழுவதையும் சின்னச்சின்ன விஷயங்களில் செலவிட்டால், பெரிய விஷயங்களுக்கு நேரம் இருக்காது.”

“.........அதனால் முக்கியமான விஷயங்களுக்கு முதலில் நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்; ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரம்  ஒதுக்குங்கள்.”

“உங்கள் துணைவி/துணைவரை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். வீட்டைச் சுத்தம் செய்யவும், சின்னச்சின்ன வேலைகள் செய்யவும் கட்டாயம் நேரம் இருக்கும். முதலில் முக்கியமானவற்றிற்கு நேரம் செலவிடுங்கள். எது முக்கியம், எதை முதலில் செய்வது என்று முடிவு செய்யுங்கள்.  மற்றவை மணலை போன்றவை.”

மாணவர்கள் அவர் கூறியதை மனதில் வாங்கிக் கொண்டு சிந்தனை வயப் பட்டிருந்த போது ஒரு மாணவி கையைத் தூக்கினாள். “ஒரு கேள்வி..” எழுந்து நின்று கேட்டாள்: “காப்பி எதைக் குறிக்கிறது?”

பேராசிரியர் புன்னகையுடன் கூறினார்: “யாரும் கேட்கவில்லையே என்று நினைத்தேன். நீ கேட்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது....”

“உங்கள் வாழ்க்கை எத்தனைதான் வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தாலும், சற்று நேரத்தை சரியாக செலவழித்தால், ஒரு நண்பருடன் ஒரு கோப்பை காப்பி குடிக்க கட்டாயம் நேரம் இருக்கும் என்பதைத்தான் காப்பி காட்டுகிறது”

கதை நன்றாக இருக்கிறது ஆனால் எப்படி நேரத்தை திட்டமிடுவது என்கிறீர்களா? 

நேர மேலாண்மை வல்லுனர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.

முதலில் ஒரு ‘To-do list’ அதாவது ஒரு நாளில் பண்ண வேண்டிய வேலைகளின் பட்டியல் தயார் செய்ய வேண்டும். அவற்றை 4 விதமாக பிரித்துக் கொள்ளுங்கள்.

அவசரம் – முக்கியம்
அவசரம் – முக்கியமில்லை
அவசரமில்லை – முக்கியம்
அவசரமில்லை – முக்கியமில்லை

நாம் எவ்வளவுதான் திட்டம் போட்டாலும், நாம் எதிர் பார்க்காத வேறு வேலைகள் வரலாம். அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அதை செய்யும் நேரத்தில், நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஒரு சில வேலைகள் தாமதமாகலாம். அவைகளைச் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்.

முதலில் கடினம் என்று தோன்றினாலும் சிறிது கட்டுப் பாட்டுடன் முயற்சித்தால் நேர மேலாண்மையை எளிதாக செய்யலாம்.