ஞாயிறு, 2 டிசம்பர், 2012

கம்பளின்னு ஒண்ணு இருக்கா?


ஒவ்வொரு முறை சென்னை போய் விட்டு திரும்பியதும்  உடல் நலம் சரியில்லாமல் போய் விடுகிறது.

நிஜக் காரணம் அலைச்சல் தான். முதல் நாள் போய் விட்டு அடுத்த நாளே திரும்புதல்; அதற்குள் எத்தனை பேரை பார்க்க முடியுமோ பார்த்து விடுதல் என்று ஓய்வு இல்லாமல் போய்விடுகிறது.

சென்னை எல்லா பக்கங்களிலும் வளர்ந்து கொண்டே வருகிறது. நம் உறவினர்களும் அங்கங்கே பரந்து விரிந்து இருக்கிறார்கள். அக்கா சோளிங்க நல்லூர்; அண்ணா மேடவாக்கம். துணைவரின் ஒரு தம்பி வளசரவாக்கம்; இன்னொருவர் மடிப்பாக்கம் – எங்கு போவது? யாரைப் பார்ப்பது? யாரை விடுவது?

‘எப்போதோ வருகிறாய், காபியாவது குடி என்ற அன்புத் தொல்லைகளும் இன்னொரு காரணம்! வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு...! படைத்தவனுக்கே வெளிச்சம்!

சென்னை வெய்யிலில், வேளை இல்லா வேளையில் சுடசுட காப்பி! போதுமடா சாமி சென்னை விஜயம் என்று நொந்து போய் திரும்பி வருவோம். அடுத்தநாளே வேறு ஒரு விசேஷம் என்று சென்னையிலிருந்து அழைப்பு வரும்!

எங்கள் பெங்களூரு நண்பர்கள் சொல்லுவார்கள்: ‘நீங்கள் சென்னையில் இருந்து கொண்டு அவ்வப்போது பெங்களூரு வந்து போகலாமே! என்று.

இத்தனை சொன்னாலும் சென்னை என்றால் மனம் பரபரப்பது நிஜமோ நிஜம். நமக்கும் சென்னைக்கும் இருக்கும் பந்தம் அந்த மாதிரி! IPL–இல் பிடித்த டீம் சென்னை சூப்பர் கிங் தான்!

சென்ற ஞாயிறு சென்னை போய்விட்டு திங்கட்கிழமை இரவே திரும்பி ஆயிற்று. அடுத்தநாள் எழுந்திருக்கும்போதே உடம்பு கூடவே வந்தது. தலை நான் இருக்கிறேன் என்றது. பச்சை மிளகாய் இல்லாமலேயே கண்கள் எரிந்தன. பால் – இல்லையில்லை - காப்பி கசந்தது; படுக்கை நொந்த உடலுக்கு இதமாக இருந்தது.

நேற்று ஷதாப்தியில் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் – இல்லையில்லை ஐஸ்கட்டி தொண்டை கட்டிய வில்லன் போல தொண்டைக்குள் ‘கீச் கீச் என்றது.  மூக்கிலிருந்து, தமிழ் நாட்டுக்குக் கொடுக்க மறுத்த காவேரி – சொட்டுச் சொட்டாக இல்லை குடம் குடமாக கொட்டியது. இருமல், தும்மல் என்று விடாமல் எதோ சத்தம் போட்டுக் கொண்டே இருந்தேன். பேச வாயைத் திறந்தால் குரல் உடைந்த சிறுவன் போல என்னுடன் கூடவே யார் யாரோ பேசினார்கள்.

அவசரமாக வெந்நீர் வைத்து, அதில் மிளகு போட்டு குடிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் 100 கிராம் மிளகு தான் தீர்ந்தது.

‘டாக்டர் மதுகர் ஷெட்டிக்கு  நீ கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருக்கிறது. இரண்டு பேருமாகப் போய் கொடுத்து விட்டு வரலாம் வா என்றார் என்னில் பாதியான என் பர்த்தா.

‘காந்தி பஜார் போய் ஷால் வாங்கி வர வேண்டும் சொன்ன என்னை அதிசயமாகப் பார்த்தார்.

‘என்ன இப்படி ஒரு ஊதக் காற்று. ச்சே! என்ன ஊர் இது? கொஞ்சம் வெய்யிலில் நிற்கலாமா?

மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் கணவர் சொன்னார் மகனிடம்: ‘இன்னிக்கு அம்மா என்னவோ புதுசு புதுசா பேசறா. 27 வருடங்களா ஷால், ஸ்வெட்டர் இல்லாமல் பெங்களூரு குளிரை சமாளிச்சவளாக்கும் அப்படின்னு பெருமை பேசுவாளே, இன்னிக்கு சொல்றா, ஷால் வேணுமாம்; ஊதக் காற்றாம்; வெயில்ல நிக்கலாமான்னு வேற கேக்கறா! அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு...!

பழிக்குப் பழி வாங்கறார் என்று தெரிந்தும் ஒண்ணும் சொல்லாமல் ‘கொஞ்சம் வெந்நீர் குடுக்கறேளா, மருந்து சாப்பிடணும் என்று ஈன ஸ்வரத்தில் கேட்டு விட்டு கம்பளியை (அப்படின்னு ஒண்ணு இருக்கா?) இழுத்து மூடிக் கொண்டு படுத்துக் கொண்டேன்!



9 கருத்துகள்:

  1. இன்றைய இளைஞர்கள் கூட குளிரை தாங்கிக்கொள்ள முடியாமல் கம்பளிக்கு ஆசைபடுகின்றனர்...

    நீங்கள் வாங்கி கேட்டதில் தப்பில்லை...

    நல்லதொரு குளிர்காலப் பதிவு !

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. //‘எப்போதோ வருகிறாய், காபியாவது குடி’ என்ற அன்புத் தொல்லைகளும் இன்னொரு காரணம்! வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா’ நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு...! படைத்தவனுக்கே வெளிச்சம்!//

    எனக்கும் அண்டா அளவு இல்லாவிட்டாலும், நல்ல காஃபியாக, நல்ல திக்கான புதிய பால், புது முதல்தர டிகாக்‌ஷன், லேசாக சர்க்கரை போட்டு, சற்றே பெரிய டவரா + டம்ளரில் நுரை பொங்க சூடாகத் தந்தால் தான், அதை இரண்டு ஆத்து ஆத்திக் குடித்தால் தான் திருப்தியாக இருக்கும்.

    பை-டூ, குட்டியூண்டு டம்ளர், அரைக்கரண்டி, கால் கரண்டியெல்லாம் பத்தவே பத்தாது.

    ஆற்றிக்குடிக்க டவரா அவசியம் வேண்டும் எனக்கு. இரண்டு டம்ளர்கள் இருந்தாலும் கூட, எனக்கென்னவோ டவரா+டம்ளரில் ஆற்றிக்குடித்தால் தான் மனதுக்கு, காஃபி குடித்த திருப்தி ஏற்படும்.

    சிலர் வீடுகளில் காஃபி டவரா டம்ளரை அலம்பிய ஜலம் போல ஓடஓட காஃபி தருவார்கள். அந்தக்கால ரயில்வே காஃபி போல இருக்கும். அதை ஒரு சொட்டு கூட குடிக்கப்பிடிக்காது.

    எங்கள் வீட்டுக்கு யார் எப்போது வந்தாலும் நல்ல ஸ்ட்ராங்கான காஃபி நிச்சயமாக அளிக்கப்படும்.

    அடை + காஃபியால் அழிந்த குடும்பம் என்று ஒரு கெட்ட பெயரே வாங்கியுள்ள பரம்பரையைச் சார்ந்தவர்கள், நாங்கள்.

    >>>>>>>

    பதிலளிநீக்கு
  3. //‘டாக்டர் மதுகர் ஷெட்டிக்கு நீ கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருக்கிறது. இரண்டு பேருமாகப் போய் கொடுத்து விட்டு வரலாம் வா’ என்றார் என்னில் பாதியான என் பர்த்தா.//

    என்னைப்போலவே “இடுக்கண் வருங்கால் நகுக” என்ற டைப்பாக இருக்கிறாரே! நல்ல மனிதர். பாராட்டுக்கள். ;)))))

    பதிலளிநீக்கு
  4. //மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் கணவர் சொன்னார் மகனிடம்: ‘இன்னிக்கு அம்மா என்னவோ புதுசு புதுசா பேசறா. 27 வருடங்களா ஷால், ஸ்வெட்டர் இல்லாமல் பெங்களூரு குளிரை சமாளிச்சவளாக்கும் அப்படின்னு பெருமை பேசுவாளே, இன்னிக்கு சொல்றா, ஷால் வேணுமாம்; ஊதக் காற்றாம்; வெயில்ல நிக்கலாமான்னு வேற கேக்கறா! அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு...!’

    பழிக்குப் பழி வாங்கறார் என்று தெரிந்தும் ஒண்ணும் சொல்லாமல் ‘கொஞ்சம் வெந்நீர் குடுக்கறேளா, மருந்து சாப்பிடணும்’ என்று ஈன ஸ்வரத்தில் கேட்டு விட்டு கம்பளியை (அப்படின்னு ஒண்ணு இருக்கா?) இழுத்து மூடிக் கொண்டு படுத்துக் கொண்டேன்!//

    நல்ல தமாஷா எழுதியிருக்கீங்கோ. ஒரு சின்ன சந்தேகம். கம்பளியை இழுத்து மூடிக்கொண்டு படுக்கும்போது கூடவே லாப்டாப்புடன் தானே?

    நடந்தவற்றை உடனே சுடச்சுடப் பதிவாக்கி வெளியிட்டு விட்டீர்களே! அதனால் வந்த சந்தேகம்.

    VGK

    பதிலளிநீக்கு
  5. பாவம் என் லாப்டாப்புக்கும் உடம்பு சரியில்லை. இப்போது டேபிள் டாப்பில் தான் எழுதி வருகிறேன்.

    இப்படி கருத்துரை அடுக்கடுக்காக வந்தாலே உடம்பு சரியாகி விடுகிறதே!

    நீங்கள் கொடுக்கும் உற்சாகம் ரொம்ப பெருசு!

    பதிலளிநீக்கு
  6. சென்னையில் அண்டாவில் காபி தருபவர்கள் அதிசயம்தான்! இதெல்லாம் தஞ்சாவூர்ப் பக்கம்தான் பார்த்து வழக்கம். அப்போதெல்லாம் கொள்ளையில் மாட்டிலிருந்து பால் கறந்து நுரைக்க நுரைக்க காபி.... இப்போது கவர் கிழித்து அண்டாவில் தருவதா, தம்ளரில்தான்! ஆனாலும் பெரி.....ய டம்ளரில் தருபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சீசன் மாற்றி மாற்றி வருவதால் உடம்பு எல்லோருக்குமே ரொம்பப் படுத்துகிறது! சலைன் கார்கிள் மற்றும் பசும்பாலில் மஞ்சள் பொடி மிளகு தட்டிப் போட்டு பனங்கல்கண்டு போட்டுக் குடிக்கலாம். சமகன் கூட உபயோகமாயிருக்கும்!

    பதிலளிநீக்கு
  7. எங்கள் மதுகர் ஷெட்டி கொடுக்கும் மருந்துக்கு முன் சமகன் எல்லாம் படுத்துவிடும்.
    இரண்டு மூன்று நாட்கள் நானே குணப்படுத்திக் கொள்ள முயற்சித்து விட்டு விட்டேன்.

    எங்க ஊரு பை டூ காபி டம்ளர் பார்த்தால் மயங்கி விழுந்து விடுவீர்கள் ஸ்ரீராம்.அதற்கு சென்னை காபி அதிகம் தான்!

    http://wp.me/p244Wx-mF
    எனது இந்தக் கதையைப் படியுங்கள். இந்த ஊர்காரர்கள் காப்பி குடிக்கும் அழகு தெரியும்!

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம்!


    பதிலளிநீக்கு
  8. ‘டாக்டர் மதுகர் ஷெட்டிக்கு நீ கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருக்கிறது. இரண்டு பேருமாகப் போய் கொடுத்து விட்டு வரலாம் வா’ என்றார் என்னில் பாதியான என் பர்த்தா.

    ஆம்.. டாக்டருக்கு கொடுக்கவேண்டிய பாக்கிக்குத்தான் உடல் நலம் பாதிக்கப்படுவதாக சொல்லிக்கொள்வோம் ...

    பதிலளிநீக்கு
  9. வைத்தியருக்கும், வக்கீலுக்கும் கொடுத்தே ஆக வேண்டும் இல்லையா?
    தொடர்ந்து வாசித்து ஊக்கமளிப்பதற்கு மனமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு