வியாழன், 5 நவம்பர், 2015

தேடித்தேடி இளைத்தோம்.......!

எமக்குத் தொழில் அசைபோடுதல் – 3


எங்க வீட்டு மாடிப்படியை ஏன் என்னால் மறக்க முடியாது என்று சொன்னேன். அதேபோல எங்கள் பள்ளி மாடிப்படிக்கும் ஒரு கதை உண்டு. எங்க பள்ளி மாடிப்படிகளை நான் கவனிக்க ஆரம்பிச்சது மூணாம் வகுப்புக்குப் போனப்புறம்தான். முதல் ரெண்டு வகுப்புகள் கீழே இருக்கும். மூணு, நாலாம் வகுப்புகள் மாடில. எங்கள் தலைமையாசிரியர் திருமதி சுசீலா எடுக்கும் ஐந்தாம் வகுப்பும் கீழேயே பள்ளியில் நுழைந்தவுடன் வலது பக்கம் இருக்கும். நான்காம் வகுப்பிற்கு நான் போனபோது என் தம்பி அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் வந்து சேர்ந்தான். அவனை பத்திரமாக அழைத்துக் கொண்டு போய் திரும்பக் கூட்டி வருவது என் பொறுப்பு.

எங்க வீடும் எங்க பள்ளியும் ஒரே தெருவுல இருந்தன. எங்க வீடு இந்தக் கோடி. அடுத்த கோடியில எங்க பள்ளி இருந்தது. தினமும் பள்ளிக்குப் போகும்போது நான் என் தம்பியின் கையைப் பிடிச்சுண்டு போகணும். அம்மாவின் கட்டளை. அம்மா எங்க வீட்டு மாடிலேருந்து ஜன்னள் வழியா  பார்த்துண்டிருப்பா நாங்க பள்ளிக்குப் போய் சேரும் வரை. கொஞ்ச தூரம் தான் என் கையைப் பிடிச்சுண்டு வருவான் என் தம்பி. பிறகு கையை விலக்கிண்டுடுவான். அம்மா கோச்சுப்பான்னு நான் சொன்னா, ‘இனிமே அம்மாவுக்கு நாம் போறது ஜன்னலேருந்து தெரியாதுஎன்பான்!  என்னைவிட விவரமானவன் அவன்! நேர் தெருன்னாலும் கொஞ்ச தூரம் போனவுடன் அந்த தெரு வளைந்து போகும். அதனால அந்த இடத்துலேருந்து நாங்க போறது அம்மாவுக்குத் தெரியாது. இதெல்லாம் அந்தச் சின்ன வயசுல அவனுக்கு எப்படித் தெரியும்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கும்.

இங்க இன்னொரு விஷயமும் ஞாபகத்துக்கு வரது: எங்க அம்மா எங்களை பயமுறுத்த நானே உங்க ஸ்கூல்ல டீச்சரா வருவேன்என்று அடிக்கடி சொல்லுவாள். இதுக்கு ஒரு பின்னணிக் கதை இருக்கு. எங்களோட மூணாம் வகுப்பு கோவிந்தம்மா டீச்சரும், எங்க மாமியும் (அம்மாவின் சகோதரர் மனைவி) ஒரே பள்ளியில படிச்சவா. வகுப்புத் தோழிகள். அதனால் மாமி அடிக்கடி, ‘நானும் கோவிந்தம்மா  மாதிரி டீச்சர்  ஆகியிருக்க வேண்டியவஎன்று சொல்லி கொள்வார். அதனால்  மாமி(யே!) டீச்சரா போயிருக்கலாம்ன்னா, எனக்குக் கிடைக்காதான்ன ஒரு டீச்சர் உத்தியோகம்?’ அப்படின்னு எங்க அம்மா சொல்வா. எனக்குக் கொஞ்சம் பயம்தான். அம்மா டீச்சரா வந்துட்டா என்ன பண்றது?’ என்று ஒருநாள் கவலையுடன் என் தம்பியிடம் கேட்டேன். அதெல்லாம் வரமுடியாது!என்றான் தீர்மானமாக. ஏன்?’ 9 கஜம் புடவை கட்டிண்ட யாரும் டீச்சரா வரமுடியாது’ ‘அப்போ நம்ம கல்யாணி மாமி?’ ‘அதான் சொன்னேனே, 9 கஜம் புடவை கட்டிண்டவா யாருமே டீச்சரா வரமுடியாது!என்று அழுத்தம் திருத்தமா சொல்லி, இதுக்கு மேலே இதுல பேசறதுக்கு விஷயம் இல்லை என்கிற மாதிரி வாயை மூடிண்டுட்டான்.

எனக்கு இந்தப் பள்ளியில் என்னுடன் படித்த சினேகிதி ஒருத்தியை மட்டுமே இன்னும் நினைவில் இருக்கிறது. அவள் பெயர் சந்திரப்பிரபா. அவளை மறக்க முடியாதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒன்றல்ல; இரண்டு காரணங்கள். முதல் காரணம் அவள் தம்பி. அவனும் எங்கள் பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் சாயங்காலம் பள்ளி முடிஞ்சு மணி அடிச்சதும் நானும் அவளுமாக  கீழே போய் அவளது தம்பியைக் கூப்பிடப் போனால் அவன் அங்கு இல்லை. எங்கே போயிருப்பான் என்று பள்ளி முழுவதும் (சின்னப் பள்ளிக்கூடம்!) தேடறோம், காணவில்லை. அழுதுகொண்டே ஆசிரியையிடம் சொன்னால்,  ‘எங்கடி போயிடுவான்? இங்கத்தான் எங்கயாவது ஒளிஞ்சிகிட்டிருப்பான், தேடிப்பாருங்கஎன்றார் எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி கோவிந்தம்மாள். உன்னைக் கண் தேடுதே என்று தேடி தேடி இளைத்தோம்! அழுது கொண்டே வாசலுக்கு வந்தால் அங்கே சந்திரப்பிரபாவின்  தம்பி அவளது அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு அலட்டிக்காம நிற்கிறான். சந்திரப்பிரபாவின் அம்மாவுக்கோ முகம் முழுக்க கோவம். வெளியில் வந்த எங்கள் ஆசிரியையை பிலுபிலுன்னுபிடிச்சுண்டுட்டா. குழந்தை தன்னந்தனியாக வீட்டுக்கு வந்திருக்கான். உங்களுக்கு எப்படித் தெரியாம போகும்? இண்டர்வெல் முடிஞ்சவுடனே வகுப்புல எல்லாக் குழந்தைகளும் இருக்காளான்னு பார்க்க வேணாமா? எங்க வீடு கிட்டக்க இருந்தது. அதனால வந்துட்டான். வேறு எங்கயாவது போயிருந்தால்...?’ எங்கள் ஆசிரியை அந்த அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அடுத்தநாள் காலை பள்ளிக்குப் போகும்போது சந்திரப்பிரபாவின் அம்மாவும் வந்தா. இனிமே சந்திரப்பிரபாவை கொஞ்சம் ஜன்னல் ஓரமா உட்கார வையுங்கோ. இவன ஒருகண் பார்த்துக்கட்டும்சரின்னு ஆசிரியையும் ஒப்புக்கொண்டார். அந்த அறையில் ஜன்னல் எல்லாம் கிடையாது. ஒரு சிறிய இடைவெளி இருக்கும். அங்கிருத்து ஒன்றாம் வகுப்பு தெரியும். அங்கு அவளது இருப்பிடம் மாற்றப்பட்டது. அப்போதெல்லாம் வகுப்பில் ஒரே இடத்தில் உட்கார வேண்டும் என்ற வழக்கம் கிடையாது. ச.பிரபாவின் தம்பி ஒரொரு நாள் ஒரொரு இடத்தில் உட்காருவான். சிலசமயம் வகுப்பிலிருந்து அவனைப் பார்க்க முடியாவிட்டால், ச. பிரபா மனசு பதைபதைக்க மாடிப்படி கிட்ட வந்து பார்ப்பாள். அவள் அவனைப் பார்க்க வருவது தெரிஞ்சு ஒளிஞ்சுக்கறானோன்னு கூட ஒரொரு சமயம் தோணும். பாவம் அவள். சிலசமயம் நான் வந்து மாடிப்படிகிட்ட வந்து அவன் இருக்கிறானா என்று பார்த்துவிட்டு வந்து அவளிடம் சொல்லுவேன். பெரிய ஹிம்சை! அந்த ஒரு தடவை தான் அதற்கு அப்புறமா சீதாவின் தம்பி வீட்டுக்குப் போகலை. அவனும் பெரியவனாகிக் கொண்டிருந்தான், இல்லையா? கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கும்!

இன்னொரு வகையிலும் எனக்கு நாங்க இருந்த மாடிவீடு மறக்க முடியாதது. கீழே இருந்தவர்கள் வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. அந்த காலத்திய அனார்கலி, (நான் பிறந்த வருடம் வெளிவந்த திரைப்படம் இது) மொகலே-ஆஜம் பாடல்கள் எப்போதும் பாடினபடி இருக்கும் அந்த கிராமபோன். அனார்கலி முழு திரைப்படமே இசைத்தட்டு வடிவில் அவர்களிடம் இருந்தது. அந்த கிராமபோனை பாட வைப்பது ரொம்பவும் சுவாரஸ்யமான விஷயம்.  அவர்கள் அந்த கிராமபோன் பெட்டியை அவர்கள் வீட்டுக் கூடத்தில் கொண்டு வைத்து முதலில் கைப்பிடி போட்டு சுத்து சுத்தென்று சுத்துவார்கள். பிறகு இசைத் தட்டை அதில் வைத்து வளைந்து இருக்கும் அதன் கை போன்ற பகுதியில் ஒரு ஊசியை சொருகி இசைத்தட்டின் நுனியில் வைப்பார்கள். அது பாட ஆரம்பிக்கும். ரொம்பவும் ஆசையாக நான் இதையெல்லாம் பார்த்துண்டு உட்கார்ந்திருப்பேன் கீகுறைந்துவிட்டால் பாட்டின் வேகம் குறைந்து கட்டைக் குரலில் நிதானமாக பேசுவது போலப் பாடும். கீ கொடுக்கக் கொடுக்க அது பழையபடி பாட ஆரம்பிக்கும். எங்களுக்கு அது ரொம்பவும் குஷியாக இருக்கும். எம்எல்வி பாடிய திருப்பாவை முப்பது பாடல்களும் அவங்க வீட்டுல இருந்துதுன்னு சமீபத்துல எங்க அக்காவ பாத்தபோது ஒரு புதுத் தகவல் சொன்னா. அம்பதுகளிலேயே எம்எல்வி இந்தப் பாடல்களை பாடியிருக்கிறார். கிரேட் பாடகி!

கீழ் வீட்டில சக்குன்னு ஒரு அக்கா இருந்தா. இன்னும் இரண்டோ மூன்றோ அண்ணாக்களும் இருந்தனர். எனக்கு அவர்கள் பெயர்கள் இப்போ நினைவில இல்லை. ஆனால் இந்த அக்கா எங்களுடன் மிகவும் ஆசையாகப் பேசிக் கொண்டிருப்பாள். அவளுக்கு அப்போது குழந்தை பிறக்க இருந்தது. பாவம் நடக்க முடியாமல் அந்த அக்கா மெல்ல மெல்ல மூச்சிரைக்க மூச்சிரைக்க தன் பெரிய வயிற்றை தடவியே படியே நடந்து வருவாள். அவ்வப்போது அக்காவிற்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும். ஒருநாள் மாலையில் நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தபோது வீடெல்லாம் அலம்பி விட்டிருந்தா. கீழ் வீட்டில் அழுகை சத்தம் வந்துகொண்டிருந்தது. அம்மாட்ட   கேட்டப்போ சக்கு அக்கா உம்மாச்சியிடம் போய்விட்டதாக அம்மாவும் அழுதுண்டே சொன்னா. காலையிலேயே அக்காவ ஆஸ்பத்திரில சேர்த்துருக்கா. என்னிக்குமில்லாம அன்னிக்கு மதியம் அம்மாவே எங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தது ஏன்னு அப்பத்தான் புரிஞ்சுது. எவ்வளவு தூரம் இந்த இறப்பு என்னை அன்று பாதித்தது என்று தெரியவில்லை. இன்று நினைத்துப் பார்க்கும்போது அந்தப் பெற்றோர்களின், கணவரின் இழப்பு புரிகிறது. மனதை வருத்துகிறது. அன்றிலிருந்து கிராமபோன் இசையும் நின்றுவிட்டது.


தொடர்ந்து அசைபோடலாம்!


அதீதம் இணைய இதழில் வெளிவரும் தொடர் 

புதன், 4 நவம்பர், 2015

‘உன்னைக் கண் தேடுதே.....ஹிக்!



நன்றி: கூகுள்



உன்னைக் கண் தேடுதே.....ஹிக்!
உ...............ன் எழில் காணவே.......வே........ஏ......ஏ.......ஹிக்! உளம் நாடுதே.... ஹிக்!
உறங்காமலே என் .....ன்  ........  ன்   மனம் வாடுதே...ஏ...ஏ....
உன்னை.......ஹிக்! .......என்.....கண்........தேடுதே.........!

அந்த காலத்து கருப்பு வெள்ளை டாக்சியில் இந்த விக்கல்பாட்டை நான் பாடியபடியே அப்பா, அம்மா, சகோதர சகோதரிகளுடன் வந்து கொண்டிருந்தேன்.  டிரைவர் மாமா சொன்னார்: பாப்பா நல்லா பாடுது ...! பெரிசா ஆன பி. சுசீலா மாதிரியே வரும் போல....!
 நல்லகாலம், டிரைவர் மாமாவின் ஜோசியம் பலிக்கவில்லை! பி.சுசீலா தப்பிச்சார்!

இப்படிப் பாடிண்டே நாங்க வந்து சேர்ந்த இடம் சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீச்வரன் பேட்டைல இருக்கற நாகப்பையர் தெரு. வந்து சேர்ந்த இடத்தைப் பற்றிச் சொல்றதுக்கு முன்னால இந்த பாட்டைப் பற்றி சொல்லியாகணும். கணவனே கண்கண்ட தெய்வம்’ (இளம் வயது ஜெமினி அவருக்கு அக்கா போல அஞ்சலி தேவி!) படத்தில் வரும் இந்தப் பாட்டுல பாடல் வரிகளை விட விக்கல்பிரபலமானது. நான் மிகச் சரியாக விக்கி, எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருப்பேன். இந்தப் பாடலை ரொம்பவும் ரசிச்சு ரசிச்சு (விக்கி விக்கி!) பாடினதாலோ என்னவோ எனது இசைப்பயணம் விக்கித்து(நின்று)விட்டது!

திருவல்லிக்கேணில நாகப்பையர் தெருவுல (இப்போதைய பெயர் என்னவோ, அந்தத் தெருவுக்கு நாகப்பா தெரு?) நாங்க குடியிருந்த மாடிவீடும், முக்கியமா மாடிப்படிகளும் இன்னமும் நினைவில பசுமையாக இருக்கு. எனக்கு நினைவு தெரிய ஆரம்பிச்சது இங்கதான். அதுதான் முதல் நினைவு - எனது சிற்றறிவில அப்போது நடந்த சம்பவங்களில் இருந்துதான் நினைவு இருக்கிறது. இந்த வீட்டிற்கு வருவதற்கு முன் நாங்க புரசைவாக்கத்துல இருந்ததா அம்மா சொல்லுவா. அங்கு நடந்ததெல்லாம் அவ்வளவா, ஏன் துளிக்கூட நினைவில்ல எனக்கு. மாதம் ஒருமுறை மெரீனா பீச்சுக்கு எல்லோருமா போவோம்; ஓரணாவிற்கு(!) தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல் வாங்கி சாப்பிடுவோம் (எல்லாருக்குமா சேர்த்து ஓரணாவுக்கு சுண்டலா, ஒவ்வொருத்தருக்கும் ஓரணாவுக்கா? தெரியல) அப்படின்னு அம்மா எப்போதாவது அசைபோடுவா. நான் திறந்தவாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பேன் அப்போ சாப்பிட்ட சுண்டலை நினைச்சோ என்னவோ? அம்மா சொல்வதற்கு சாட்சியாக நானும் எங்க அக்காவும் மெரீனா பீச்ல விளையாடற கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒண்ணு இன்னும் எங்க வீட்ல இருக்கு.

திருவல்லிக்கேணி வீட்டில கீழே ஒரு குடும்பம். மேல நாங்க. எங்க போர்ஷனுக்கு போறதுக்கு குறுகலா மாடிப்படிகள், சிமென்ட் கைப்பிடி சுவருடன். படிகள் செங்குத்தாக ஏறும். பாதி ஏறினவுடனே ஒரு திருப்பம். அதாவது, ஒரு மிகக்குறுகலான வளைவு. மறுபடி செங்குத்தான படிகள். அந்த வீட்டில் எத்தனை வருடங்கள் இருந்தோம்னு நினைவுல இல்லை. ஆனா என் தம்பி கணக்கில்லாத தடவை அந்த மாடிப்படியில உருண்டு விழுந்தது நினைவுல இருக்கிறது. எனக்கு அப்போது 5 வயசு இருக்கலாம். ஒன்றாம் வகுப்பில் இருந்ததால் இந்தக் கணக்கு. அவன் என்னைவிட மூன்று வயது சிறியவன்.

நாகப்பய்யர் தெருவுல நாங்க இருந்தது ரொம்ப சின்ன(!?), 5 படுக்கை (அறை)  கொண்ட வீடு. மாடிப்படிகளை தாண்டினவுடன் ஒரு குட்டி ரேழி. அதை ஒட்டினாப்ல சின்ன ரூம். அதுதான் எங்க கிச்சன், டைனிங் ஹால், ஸ்டோர் ரூம் அதாவது த்ரீ இன் ஒன் ரூம். அதை ஒட்டி இன்னொரு சற்றுப் பெரிய அறை. அதுதான் நாங்க அஞ்சு பேரும் அம்மா ,அப்பா, என் அக்கா, நான், என் தம்பி - படுத்துக்கற 5 படுக்கை அறை! 

அம்மா எங்க வீட்டு - மாடிக் கதவை சாத்தியே வைச்சிருப்பா. அசந்து மறந்து நாங்க யாராவது திறந்துட்டு மறுபடி சாத்த மறந்துட்டா போச்சு!  அடுத்த நொடி ஓ!ன்னு ஒரு அலறல் கேட்கும். என்னோட ரெண்டு வயசு தம்பி தத்தக்கா பித்தக்கான்னு  மாடிப்படில எறங்க போயி, கால் தடுக்கி, அந்த படிகளில் உருண்டுண்டு  இருப்பான். ஓடி போய் அவனைப் பிடி!ன்னு அம்மா கத்துவா. நானும் என் அக்காவும் (என்னை விட 3 வயசு பெரியவ)  விழுந்தடிச்சுண்டு ஓடறதுகுள்ள அவன் கடைசிப் படியில் விழுந்து கிடப்பான்.  உதட்டுல அடிபட்டோ, பல்லில் அடிபட்டோ அழுதுண்டிருப்பான். அம்மா கிட்டேருந்து அவனுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் சேர்த்து திட்டு விழும் – ‘எந்த முட்டாள் கதவை சாத்த மறந்தது?’ ன்னு. ஒருநா இப்படி அடிபட்டுதே, இனிமே படில எறங்காம இருப்பானா? சின்னக் குழந்தைதானே? அடுத்த நாளும் இதே கதை தான்! மறுபடி மறுபடி  மாடிப்படியில உருளல் தான்! மறக்கவே முடியாத மாடிப்படிகள்!

இந்தக் காலம் போல அப்போல்லாம் குழந்தை பிறக்கறதுக்கு முன்னால ஸ்கூல் அட்மிஷன், பிறந்தவோடனே ப்ளே ஹோம்ல சேர்க்கறது எல்லாம் கிடையாது. அஞ்சு வயசுவரைக்கும் வீட்டுலேயே கொட்டம். கிண்ட(ல்)ர் கார்டன் எல்லாம் கிடையாது.  நேரா ஒண்ணாங்கிளாஸ். ஸ்லேட், பலப்பம் தான் ரெண்டாவது வரைக்கும். மூணாவதுலேருந்து பென்சில் நோட்புக். அஞ்சாவதுல தான் ஆங்கிலம். மத்த சப்ஜெக்ட் எல்லாம் தமிழ்ல தான்.

நாங்க படிச்சது கனகவல்லி எலி(மெண்டரி) ஸ்கூலில். பள்ளிகூட வாசல்ல கனகவல்லி எலி. பள்ளிக்கூடம்னு ஆங்கிலத்துல (Kanakavalli Ele. School) எழுதியிருக்கும் அந்த போர்டுல இடமில்லாததால!

எங்களை பள்ளிகூடத்துல சேர்த்த பெருமை எங்க மாமா திருமஞ்சனம் சுந்தரராஜனை சேர்ந்தது. என் அக்கா, நான், என் தம்பி மூணு பேருமே இந்த பள்ளிகூடத்துல தான் அஞ்சாவது வரை படிச்சோம். மாமாதான் எங்களை அழைச்சுண்டு போய் ஸ்கூல்ல சேர்த்தது. அதுவரை ரஜினி ஆக இருந்த நான் பள்ளிகூடத்தில் சேரும்போது ரஞ்சனியாக மாமாவின் கைங்கர்யம் மாறினேன்.


தொடரும்



அதீதம் இதழில் வெளிவரும் எனது தொடர்