செவ்வாய், 8 ஏப்ரல், 2014

பானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்!





இன்றைக்கு ஸ்ரீராம நவமி. ஸ்ரீராமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஸ்ரீராமனுக்கு என்ன வயது? இந்தக் கேள்விக்கு திரு செல்லப்பா அவர்களின் தளத்தில் ஸ்ரீராமனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. எப்படி அத்தனை துல்லியமாக ஸ்ரீராமாயணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை தேதி, வருஷம் குறிப்பிட்டு சொல்ல முடியும் என்பது வியப்பான செய்தி. பின்னூட்டத்தில் இன்னுமொரு வியப்பான தகவல். திரு காஷ்யபன் எழுதியிருக்கிறார். அதையும் படியுங்கள். வியப்பின் உச்சிக்கே போய்விடுவீர்கள்.

பானகம் என்று தலைப்பு கொடுத்துவிட்டு எதையோ பற்றிப் பேசுகிறேனே என்று நினைக்க வேண்டாம். இதோ அதைப்பற்றி சொல்லுகிறேன். நாங்கள் பெங்களூரு வந்த புதிதில் எதிர் வீட்டில் தீடீரென ஒருநாள் காலை வாசலில் பந்தல். இன்று என்ன விசேஷம் பந்தல் போட்டிருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டே இருக்கையில் அவர்கள் வீட்டுப் பெண் கையில் மூன்று பாத்திரங்களுடன் (பெரிய பாத்திரங்கள் தான்!) எங்கள் வீட்டிற்கு வந்தாள். நான் என்ன எது என்று கேட்கும் முன்பே எதிர் வீட்டிலிருந்து ஒரு குரல்: ‘இன்னிக்கு ஸ்ரீராம நவமிம்மா! பான்கா (பானகம்), கோசம்பரி, நீரு மஜ்ஜிகே (நீர் மோர்) அனுப்பியிருக்கேன். சாயங்கலாம் புதுசா பண்ணி ஸாருக்கு அனுப்பறேன். இதை நீங்களும் குழந்தைகளும் சாப்பிடுங்க!’ அங்கு இருந்தவரை இந்த விருந்து வருடாவருடம் ஸ்ரீராம நவமியன்று எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது.

பானகமும், கோசம்பரியும், நீர் மோரும் என்ன ருசி என்கிறீர்கள்! எப்படி இவ்வளவு ருசி ருசியாகப் பண்ணமுடியும் என்று நினைத்துக் கொண்டே நாங்கள் மூவரும் சாப்பிட்டு, குடித்து முடித்தோம். கொஞ்ச நேரத்தில் எதிர்வீட்டு வாசலில் நிறைய மனிதர்கள். என்னவென்று பார்த்தோம். (வயிறு நிரம்பிவிட்டது. இனி, பொழுது போகவேண்டுமே!) எதிர் வீட்டில் அந்தப் பக்கம் வருவோரையெல்லாம் அழைத்து ஒரு காகித டம்ப்ளரில் பான்கா, ஒரு டம்ப்ளரில் நீரு மஜ்ஜிகே, ஒரு தொன்னையில் கோசம்பரி என்று கொடுத்துக் கொண்டிருந்தனர். ரொம்பவும் வியப்பாக இருந்தது. நிறைய பேர்கள் வந்து வாங்கி சாப்பிட்டு, குடித்துவிட்டு சென்றுகொண்டிருந்தனர்.

ஸ்ரீராம நவமி அன்று ஒவ்வொரு வீதியிலும் இதுபோல பல தண்ணீர்பந்தல்கள் அமைக்கப்பட்டு பானகம், நீர்மோர், கோசம்பரி எல்லாம் விநியோகம் செய்கிறார்கள். பெரிய பெரிய அண்டாக்களில் இவையெல்லாம் தயார் செய்யப்படும். கிட்டத்தட்ட சாயங்காலம் வரை இந்த விநியோகம் நடக்கிறது. இதையெல்லாம் பிறகு தெரிந்துகொண்டோம். பெரிய பெரிய கடைகளில் கூட இதைபோல செய்து வைத்து வருவோருக்கெல்லாம் கொடுப்பார்கள். ஒருமுறை ‘விவேக்’ கில் சாப்பிட்டோம். (சும்மா கொடுத்தா விடுவார்களா?)




இந்தப் பானகம் இவர்கள் செய்யும் முறையும் வித்தியாசமானதுதான். நம்மூரில் கிர்ணி பழம் என்று சொல்லுகிறோமே, (அதை இவர்கள் தர்பூசணி என்பார்கள்) அந்தப் பழம், விளாம்பழம் இவற்றை இந்தப் பானகத்தில் சேர்க்கிறார்கள். முதலில் கிர்ணிப் பழங்களை தோல் சீவி, அதை விளாம்பழங்களுடன் சேர்த்து கையால் நன்கு பிசைந்து வேண்டும் அளவு நீர் சேர்த்து, பிறகு வெல்லம் அல்லது நாட்டி சர்க்கரை (நம்ம ஊரு நாட்டு சர்க்கரை) சேர்த்து, அதில் சுக்கு, உப்பு (கொஞ்சமே கொஞ்சம்) சேர்த்து பானகம் செய்கிறார்கள். ஏலக்காய் சேர்க்கிறார்கள். பானகத்தைக் குடிக்கும்போது இந்தப் பழங்கள் வாயில் சின்னச்சின்ன துண்டுகளாக அகப்படுவது பானகத்தின் ருசியை கூட்டுகிறது.

நாம் வடைபருப்பு என்று சொல்வதை இவர்கள் கோசம்பரி என்கிறார்கள். இதற்கு பயத்தம்பருப்பு, கடலைபருப்பு இரண்டையும் ஊற வைத்து, நீரை வடிகட்டி அதனுடன், வெள்ளரிக்காய், காரட், கொத்தமல்லி, தேங்காய் சேர்க்கிறார்கள். கடுகு, பச்சைமிளகாய், பெருங்காயம் தாளித்துக் கொட்டுகிறார்கள்.

நீர் மோர் எல்லோருக்கும் தெரிந்ததுதான். திரு பால ஹனுமான் பதிவில் இருக்கும் இந்தப் பதிவைப் பாருங்கள். கல்யாண மோர் எப்படி செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறார்.

சரி, வயிற்றுக்கு போட்டாயிற்று. இனி காதுக்கு இனிய இசை கேட்போமா? இன்றிலிருந்து ஆரம்பித்து சுமார் ஒரு மாதத்திற்கு எங்கள் ஊர் ஃபோர்ட் ஹை ஸ்கூலில் (Fort High School, Chamrajpet) ஸ்ரீராம நவமி கச்சேரிகள் ஆரம்பம். முதல் நாள் எல்லா வருடமும் கத்ரி கோபால்நாத் கச்சேரிதான். நம்மூரு பெரிய பெரிய பாடகர்கள் - சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, உன்னி கிருஷ்ணன், ஜேசுதாஸ், நெய்வேலி சந்தான கோபாலன் - என்று எல்லோரும் வருவார்கள். சீசன் டிக்கட் உண்டு. சீசன் டிக்கட் வாங்கிக் கொண்டு தவறாமல் கச்சேரி கேட்பேன் நான். சுமார் 76 வருடங்களாக தொடர்ந்து வருடாவருடம் நடைபெறுகின்றன இந்தக் கச்சேரிகள். எம்.எஸ். சுப்புலட்சுமி கூட வந்து பாடியிருக்கிறாராம் இங்கு.

நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன். ‘இந்த முறை இந்தக் கச்சேரிகள் பணப்பற்றாக்குறை காரணமாக 5 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று. மனதிற்கு மிக மிக வருத்தமாகிப் போய்விட்டது. இங்கு வந்து பாடி பிரபலமாக ஆகியிருக்கும் பாடகர், பாடகிகள் ஆளுக்கு கொஞ்சம் (கொஞ்சம் என்ன, நிறையவே போடலாம்) பணம் போட்டு ஒரு நிதிய மூலதனத்தை உருவாக்கி, இந்தக் கச்சேரிகள் தொடர்ந்து நடக்கும்படி செய்யலாம். அதைத்தவிர எல்லோரும் பணம் வாங்கிக் கொள்ளாமல் இங்கு வந்து பாடலாம். தங்களது வியாபார மனதை சற்று கழற்றி வைத்துவிட்டு இந்த ஒரு சரித்திர நிகழ்வு நின்று விடாமல் தொடர்ந்து நடக்க, ஏதாவது செய்வார்களா?

ஸ்ரீராமன் தான் இந்தக் கேள்விக்கு விடை அளிக்க வேண்டும்.


சீதா பிராட்டியுடன் கூடிய ஸ்ரீராமன் எல்லோருக்கும் எல்லா மங்களங்களையும் அளிக்கட்டும். 

22 கருத்துகள்:

  1. ராமநவமி ஆச்சா? இரு செல்லப்பா , மற்றும் பாலஹனுமான் தளத்திற்கு சென்று படிக்க வேண்டும். , உங்கள் ஊர் பானகம் ரெசிபி மிக மிக நன்று.
    raama! raama!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி!
      எல்லா பதிவுகளையும் படியுங்கள். ரொம்பவும் சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  2. நான் பானகம் முதன்முதலில் நாகப்பட்டினத்துத் திருவிழாவில்தான் டேஸ்ட் பார்த்தேன்!

    எங்கள் வீட்டில் என் பாஸ் உள்ளூர்ப் பெருமாள் கோவிலில் போய் ஒன்றரை மணி நேரம் சேவை செய்து வந்து, வீட்டில் பானகமும், நீர் மோரும் செய்தார். வடை, கோசம்பரி மிஸ்ஸிங்! ஸ்ரீராம் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று நம்பிக்கை!!!

    இந்த ப்ளாக்கில் எல்லாம் படிக்க முடிவதும் கமெண்ட் போட முடிவதும் சந்தோஷம்.

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம...


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்!
      உங்கள் பாஸ் -இன் நம்பிக்கை வாழ்க! :)
      இனி இங்கேயும் நிறைய எழுத வேண்டுமென்று இருக்கிறேன். பார்க்கலாம்.....
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  3. சரித்திர நிகழ்ககள் ரசிக்கவைத்தன..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இராஜராஜேஸ்வரி!
      வருகைக்கும், படித்து ரசித்ததற்கும் நன்றி!

      நீக்கு
  4. மிக அருமையான ராமர் படம். எல்லாம் எழுதினா எப்படி ? எங்களுக்கு பானகம் எல்லாம் எங்க ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஓஜஸ்!
      வீட்டிற்கு வாங்க, ஸ்பெஷல் ஆக செய்து தருகிறேன்.
      இங்கேயும் வந்து கருத்துரை போட்டதற்கு நன்றி!

      நீக்கு
    2. வாங்க ஸ்வர்ண மாலா,
      முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  5. அது தர்பூசணி இல்லைங்க. முலாம் பழம் என்று இங்கே பெங்களூரில் சொல்வார்கள். தமிழ்நாட்டில் கிர்ணிப்பழம்தான். பானகத்தில் அந்தப் பழத்தைச் சேர்த்தால் அதன் வாசனையே தூக்கும். தர்பூசணியில் அந்த மணமெல்லாம் கிடையாது.
    சேஷாத்ரிபுரத்தில் உள்ள கல்லூரி மைதானத்திலும் இசைக் கச்சேரிகள் உண்டு. எம்எஸ், வீணைபாலச்சந்தர், எம்எல்வி கச்சேரிகள் எல்லாம் இங்கே கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க அமுதவன் ஸார்! நூறு வயது உங்களுக்கு. உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று ரொம்பவும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

    நீங்கள் சொல்வது சரி. இங்கே என் மகள் வீட்டில் நாம் தர்பூசணி என்று சொல்வதை கல்லங்கரி ஹண்ணூ என்கிறார்கள். இந்த கிர்ணி பழத்தை முலாம் பழத்தை தர்பூஸ் என்கிறார்கள்! முலாம்பழம்தான் அது.

    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி. உங்கள் மின்னஞ்சல் கொடுக்க முடியுமா? (தவறாக நினைக்கவில்லையானால்)

    பதிலளிநீக்கு
  7. பானகம் தயாரிப்பு சூப்பரா இருக்குங்க. இனி பானகம் செய்தால் பழங்கள் சேர்த்து செய்கிறேன். கோசம்பரி என்பது என்ன என்ற சந்தேகம் கடைசியில் தீர்ந்துபோச்சு.

    ஸ்ரீராமநவமி வாழ்த்துக்களுடன், உங்களின் கச்சேரி கேட்கும் ஆசையும் நிறைவேற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சித்ரா!
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
      உங்கள் பதிவுகள் இப்போதெல்லாம் மின்னஞ்சலில் வருவதே இல்லை. இன்னொருமுறை எனது மின்னஞ்சல் கொடுக்கலாம் என்றால், you are already in the mailing list என்று வருகிறது. என்ன செய்வது?

      நீக்கு
  8. பானகம் தயாரிப்பு - புதிய முறையை அறிந்து கொண்டேன்...

    திரு காஷ்யபன் அவர்கள் பகிர்ந்துள்ளதை படிக்க வேண்டும்... நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனபாலன்!
      பானகம் செய்து குடித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  9. நீங்கள் பார்த்தவுடன் இதனை இங்கிருந்து நீக்கிவிடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  10. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
    வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  11. சற்றே தாமதமான பின்னுட்டம்; தங்கள் கட்டுரை படிக்க நன்றாக இருந்தது. ஓரு காலத்தில் ( அதாவது 1990க்கு முன்) ஸ்ரீமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் ராம சேவா மண்டலி கச்சேரிகள் மிகவும் ப்ரசித்தி பெற்றவை. ஏறக்குறைய நான்கு மணி நேரம் பாடுவாராம். சில வருடங்களின் இசைப்பதிவுகள் இப்போதும் கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சூரியன்.
      காலையில் வருபவர் இரவில் வந்திருக்கிறீர்களே! (சும்மா தமாஷ்!)

      நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எம்எஸ்எஸ்ஸுக்கு, சௌடையா வயலின் வாசிப்பார் (எழு தந்தி வயலின்!) என்றும் என் தோழி சொன்னார்.

      முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  12. சற்றே தாமதமான பின்னுட்டம்; தங்கள் கட்டுரை படிக்க நன்றாக இருந்தது. ஓரு காலத்தில் ( அதாவது 1990க்கு முன்) ஸ்ரீமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் ராம சேவா மண்டலி கச்சேரிகள் மிகவும் ப்ரசித்தி பெற்றவை. ஏறக்குறைய நான்கு மணி நேரம் பாடுவாராம். சில வருடங்களின் இசைப்பதிவுகள் இப்போதும் கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு