ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

காந்தி கணக்கு என்றால் என்ன?



காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட திரும்பி வராது  என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்என்றார்களாம் அந்த வியாபாரிகள்.

அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு.

ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்..

நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் 



சனி, 14 செப்டம்பர், 2013

மென்பொருள் வல்லுனர்கள் கவனிக்க:




பொதுவாகவே பார்வேர்டட் மெசேஜஸ் என்றால் படிக்காமலேயே குப்பைத்தொட்டியில் போட்டு விடுவேன். அதுவும் ஒரு  கும்பலுக்கே பார்வேர்ட் பண்ணியிருந்தால் திறக்காமலேயே மோட்சம்தான்.


ஆனால் இந்த மெசேஜ் இன்போசிஸ் திரு நாராயணமூர்த்தி அவர்கள் தனது நிறுவனத்தில் ‘கடுமையாக’ உழைக்கும் மென்பொருளாளர்களுக்கு எழுதியது என்று இருக்கவே படிக்க ஆரம்பித்தேன். நிறைய விஷயங்கள் தெளிவாயின.


இதோ உங்களுக்கும்:

“இரவு மணி எட்டரை. அங்கே பாருங்கள் நிறுவனத்தின் பல பகுதிகளிலும் விளக்குகள் எரிகின்றன; கணனிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன; காபி இயந்திரங்கள் விடாமல் காபி  வழங்கிக் கொண்டிருக்கின்றன. 


யார் இன்னும் அங்கே உட்கார்ந்திருப்பது?

நன்றாகப் பாருங்கள்! மனிதர்கள் தாம்; ஓ! சில ஆண் இனங்கள்!


இன்னும் அருகில் போய் பார்க்கலாம்; ஆஹா.... திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள்!


ஏன் அலுவலக நேரம் கடந்த பின்னரும் இத்தனை நேரம் இங்கேயே இருக்கிறார்கள்?

ஒருவரைக் கேட்கலாம்:

“வீட்டிற்குப் போய் என்ன செய்வது? இங்கே கணனியில் கால வரையன்றி மேயலாம்; ஏசி ரூம்; தொலைபேசி வசதி; உணவு, காப்பிக்குப் பஞ்சமில்லை; முக்கியமாக ‘பாஸ்’ இல்லாத நேரம்! அதனால் தான் நான் நேரம் கடந்து ‘வேலை’ செய்து கொண்டிருக்கிறேன்”.

திருமணம் ஆகாத இளைஞர்கள் அலுவலக நேரம் முடிந்த பின், வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று இதுபோல தங்களது ‘காலத்தை ஓட்ட’ அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதன் பின் விளைவுகள் என்ன என்று பார்ப்போம்.


இப்படி நேரம் காலமில்லாமல் ‘வேலை’ செய்வது அந்தக் கம்பனியின் கலாச்சாரம் என்று  வெளியுலகுக்கு தவறான செய்தி பரவுகிறது.


‘பாஸ்’- களும் இவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் டாக்ஸி வவுச்சர்களும், உணவு பில்களும் மறுபேச்சில்லாமல் மேலிடத்து அனுமதியைப் பெற்று விடுகின்றன.  இவர்களைப் பற்றிய ‘பாஸ்’ களின் feedback க்குகளும் – (ரொம்பவும் கடுமையாக உழைப்பவர், உடை மாற்றிக் கொள்ள மட்டுமே வீட்டுக்கு போவார் – என்ற ரீதியில்) நல்லவிதமாகவே அமைகின்றன.

 
அதிக நேரம் உழைப்பதற்கும் அதிக நேரம் ‘உட்கார்ந்து’ இருப்பதற்கும் வித்தியாசம் தெரியாத ‘பாஸ்’ கள்! விளைவு? எல்லோரும் அதேபோல அதிக நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று இந்த ‘பாஸ்’ கள் எதிர்பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.


இந்த பிரம்மச்சாரிகளுக்குத் திருமணம் ஆனவுடன் காட்சி மாறுகிறது. கல்யாணம் குடும்பம் என்ற இவர்களது முன்னுரிமை லிஸ்ட்டில் அலுவலகம் கடைசி இடத்தைப் பிடிக்கிறது. குடும்பத்தின் பொறுப்பும் சேர்ந்து கொள்ள, ஆரம்பமாகிறது ‘பாஸ்’ –உடன் ஆன பிரச்னை!
அவர்களுக்கு என்று இருக்கும் வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டு, அலுவலக நேரம் முடிந்து ஒரு மணி நேரம் கழித்துக் கிளம்பினாலும் ‘பாஸ்’ ஸுக்கு திருப்தி இல்லை. ஒருகாலத்தில் ரொம்பவும் ‘கடுமையாக’ உழைத்துக் கொண்டிருந்த மனிதரின் மேல் இப்போது ‘சரியில்லை’ என்று முத்திரை குத்தப்பட்டுவிடுகிறது.


வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பவர்கள் அதிகப்படியான வேலை செய்ய சுணக்கம் காட்டுகிறார்கள் என்றும், அலுவலகத்தில் அதிக நேரம் கழிக்க விரும்பாத பெண்கள் ‘ஊஹும், not upto the mark!’  என்றும் அடையாளம் காட்டப் படுகிறார்கள். 
அதிக நேரம் ‘உழைப்பதாக’ பாவ்லா பண்ணிக் கொண்டு, தங்கள் முதுகில் தாங்களே ஷொட்டு கொடுத்துக் கொண்டு, அலுவலகத்தின் வேலை கலாசாரத்தை கெடுத்துக் கொண்டிருந்த பிரம்மச்சாரிகள் ஒரு கால கட்டத்தில் தங்கள் செய்கைக்கு வருத்தப் பட ஆரம்பிக்கிறார்கள்.

இதனால் அறிவது என்ன?

நேரத்தில் அலுவலகத்திருந்து புறப்படுங்கள். உண்மையிலேயே தேவைப் பாட்டால் ஒழிய அதிக நேரம் இருக்க வேண்டாம். அனாவசியமாக அலுவலகத்தில் நேரத்தைக் கழித்துவிட்டு அதனால் உங்கள் சக ஊழியர்களுக்கும் நிறுவனத்திற்கும் அவப் பெயர் ஏற்படும்படி நடந்து கொள்ளாதீர்கள்.


அந்த நேரத்தில் வேறு என்ன செய்யலாம்? ஆயிரம் வேலைகள் செய்யலாம்.
புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளுங்கள்;


சங்கீதம், புதிய பாஷை, புதிய விளையாட்டு இப்படி ஏதாவதொன்று.


ஒரு பெண் தோழியோ, ஆண் தோழனோ நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் வெளியே போய் விட்டு வாருங்கள்.


இப்போதெல்லாம் சைபர் மையத்தில் மிகவும் சல்லீசான தொகையில் மணிக்கணக்கில் இணையத்தில் மேயலாம்.


சமையல் செய்ய ஆரம்பிக்கலாம் – வெளி உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாமல்!


Smirnoff விளம்பரத்திலிருந்து புரிந்து கொள்ளுங்கள் : Life's calling, where are you??


அதிக நேரம் அலுவலகத்தில் செலவழித்தால் கஷ்டப்பட்டு, நூறு சதவிகித அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார் என்பது அப்பட்டமான இந்திய மனோபாவம்.


வேலை நேரத்திற்கு மேல் அலுவலகத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள், தங்களது நேரத்தை சரியானபடி ஆளத் தெரியாதவர்கள்.


இந்த கடிதத்தை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் – அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் முன்.  இதை அனுப்ப வேண்டும் என்று நேரம் கடந்த பின்னும் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்க வேண்டாம்!


வாழ்த்துக்களுடன்,

என்று முடிந்திருந்தது கடிதம்.


மென்பொருள் வல்லுனர்களாக இருக்கும் பிரம்மச்சாரிகள் கவனிப்பார்களா?


தொழிற்களம் தளத்தில் வெளியிடப்பட்ட எனது கட்டுரை