வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி





நம் எல்லாருக்கும் பல வருடங்களாக வெள்ளை அரிசிதான் தெரியும். அதுதான் சமைக்க சுலபம். வெள்ளை வெளேரென்று மெத்தென்று பார்க்கவே அழகாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும். ஆனால் சத்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிலிருந்து நமக்குக் கிடைப்பது மிக மிகக் கொஞ்சம். தற்போது சிவப்பு அரிசியின் நன்மைகளை அறிந்துக்கொண்டு பல நாடுகளிலும் மக்கள் சிவப்பு அரிசியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

சிவப்பு அரிசியை தீட்டப்படாத அரிசி (unpolished) என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும் சொல்லுகிறார்கள். அதன் நிறம் பிரவுன் அல்லது சிவப்பாக இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் (உமி) எனப்படுகிறது. இதற்கு அடுத்த மேல்தோல் மெல்லியதாக பிரவுன் நிறத்தில் இருக்கும் இந்த மேல்தோல் தவிடு எனப்படுகிறது. நாம் சாப்பிடும் வெள்ளை அரிசி மறுபடி மறுபடி தீட்டப்பட்டு அத்தனை சத்துக்களும் இழந்த பின் கிடைப்பது.

 இந்த சிவப்பு அரிசி ஓர் முழு தான்யமாக இருப்பதை தவிர, நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நார்சத்து நிறைந்து இருப்பதுடன், சுலபமாக செரிக்கக்கூடிய மாவுச்சத்தும் இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது.

இந்த நார்சத்து புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக் கொள்ளுவதால், கோலோன் புற்றுநோய் தடுக்கப் படுகிறது.

மேலும் மலக்கட்டு ஏற்படாமல், மலம் சுலபமாக வெளியேறவும் உதவுகிறது.

இதில் இருக்கும் கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

 ஒரு கிண்ணம் சிவப்பு அரிசியில் நமக்கு தினப்படி வேண்டிய 8% மாங்கநீசும் (magnesium) 14% நார்சத்தும் கிடைக்கிறது.

புளிக்க வைக்கப்பட்ட சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப் புற்று நோய்கள் வராமல் காக்கக்கூடிய தன்மைகள் இருக்கின்றன.

சமைக்கும் முறை:

வெள்ளை அரிசியைவிட சமைப்பதற்கு அதிக நேரம் ஆவதால் சாதம் செய்வதற்கு முன் 30-40 நிமிடங்கள் ஊறவைப்பது நல்லது. சாதம் செய்யும் போது ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு நீர் ஊற்றலாம்.

வெள்ளை அரிசியில் செய்வது போலவே இதிலும் பயத்தம்பருப்பு சேர்த்து பொங்கல் செய்யலாம். செய்முறை அதே போலத்தான்.

சிவப்பு அரிசியில் செய்யும் தோசையும் மிக ருசியாக இருக்கும். 2½ கிண்ணம் அரிசிக்கு ½ கிண்ணம் உளுத்தம்பருப்பு என்ற அளவில் சிறிது வெந்தயமும் சேர்த்து அரைத்து இரவு புளிக்க வைத்து மறுநாள் செய்யலாம்.

கடைசியாக ஒரு குறிப்பு:

இந்த அரிசியிலிருந்து எண்ணெய் எடுக்கப் படாததால் சீக்கிரமே கெட்டுப் போய்விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். வாங்கும்போது காலாவதியாகும் தேதி பார்த்து வாங்கவும்.




44 கருத்துகள்:

  1. "விலை-வெள்ளை அரிசியை விட இரண்டு மடங்கு" என்று வீட்டில் சொன்னார்கள்... ஆனால் பயன் அதிகம்...

    கடைசி குறிப்பு கவனிக்கப்பட வேண்டிய குறிப்பு... நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனபாலன்!
      விலை அதிகம்தான். பலன் அதிகம். இன்னொரு விஷயம் வெள்ளை அரிசி சாப்பிடும் அளவு இதனை சாப்பிட முடியாது. கொஞ்சம் சாப்பிடுவதே வயிற்றை நிரப்பி விடும். என் பெண் வீட்டில் செய்கிறார்கள். சாப்பிட்ட அனுபவம் சொல்லுகிறேன்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  2. புளிக்க வைக்கப்பட்ட சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப் புற்று நோய்கள் வராமல் காக்கக்கூடிய தன்மைகள் இருக்கின்றன.

    பயன்மிக்க பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இராஜராஜேஸ்வரி!
      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  3. நல்ல இடுகை! மக்கள் உணவு முறையை மாற்றவேண்டும். நம்மால் சோறு இல்லமால் இருக்க மூடியாது எனபது உண்மை..உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும்! ஆகவே, சிவப்பு, ப்ரௌன், புழுங்கல் அரிசி சாப்பிடப் பழகிக் கொண்டால் போதும்; ஒரு வாரத்தில் பழகி விடும்...

    எது சாப்பிட்டாலும் பச்சை அரிசி மட்டும் சாப்பிட வேண்டாம்; தமிழனுக்கு "வெள்ளை அரிசி" உணவே விஷம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நம்பள்கி!
      நம்மால் சோறு இல்லாமல் இருக்க முடியாது - நன்றாகச் சொன்னீர்கள்.
      வேறு எதையும் பழக்கப் படுத்திக் கொள்ளவும் தயங்குகிறோம்.

      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  4. // இந்த அரிசியிலிருந்து எண்ணெய் எடுக்கப் படாததால் சீக்கிரமே கெட்டுப் போய்விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். வாங்கும்போது காலாவதியாகும் தேதி பார்த்து வாங்கவும். //

    சிவப்பு அரிசியைப் பற்றி சிறப்பான தகவல்கள். சிறுவயதில் கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டில் சுடச்சுட சிவப்பு அரிசி சுடுகஞ்சியை சாப்பிட்ட ஞாபகம் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் இளங்கோ! உடல் நலமா? கண் ஆபரேஷன் ஆயிற்றா?
      இப்போது கணணியை பயன்படுத்த முடிகிறதா?
      வருகைக்கும், உங்கள் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி!

      நீக்கு
    2. எனது இடது கண்ணில் ஏற்பட்ட கண் எரிச்சல், கண் அரிப்பு காரணமாக சிலநாட்கள் வலைப்பதிவுகள் பக்கம் அதிகம் வராமல் ஓய்வில் இருந்தேன். அண்மையில், தஞ்சையில் உள்ள ஒரு நம்பிக்கையான கண் டாக்டரைக் கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டேன். அவர் கண் ஆபரேஷன் தேவையில்லை, கண்ணாடியை (லென்ஸ்) மட்டும் மாற்றினால் போதும் என்று சொல்லி கண் சொட்டுமருந்தும் எழுதிக் கொடுத்துள்ளார். இறைவன் அருளால் இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் சரியாகிவிடும். எனது நலன் விசாரித்த சகோதரி அவர்களுக்கு நன்றி!

      நீக்கு
    3. உங்கள் நலமறிய பெருத்த நிம்மதி!
      வேளை தவறாமல் கண்ணிற்கு மருந்து போட்டுக் கொள்ளுங்கள். நம் ஆரோக்கியத்தை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் அதனால் சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். எனது துணைவருக்கு காலை இரவு இரண்டு வேலையும் அலாரம் வைத்து மருந்து போட்டு விடுவேன். அந்தப் பழக்கம் யார் உடல் நிலை சரியில்லை என்றாலும் அறிவுரை வழங்க ஆரம்பித்து விடுவேன்.

      நீக்கு
  5. அழகிய தொகுப்பு !

    எங்கள் வீட்டில் கருப்பு அரிசி பயன்படுத்துவது உண்டு. டேஸ்ட் அருமை ! விலையும் சற்றுக்கூடுதல்.

    பயன்தரும் பதிவு

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சேக்கனா!
      கருப்பு அரிசி? கேள்விப்பட்டதில்லையே!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
    2. இம்போர்ட் செய்யப்பட்ட கருப்பு அரிசி. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வசிப்போருக்கு நல்ல பரிச்சையம். இவை அனைத்து சூப்பர் மார்கெட்டிலும் கிடைக்கும். டேஸ்ட் அருமையாக இருக்கும். டிரைப் பண்ணி பாருங்கோ

      நீக்கு
    3. கருப்பு அரிசி பற்றி உடனே விவரங்கள் கொடுத்ததற்கு நன்றி. நிச்சயம் ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.

      நீக்கு
  6. புளிக்க வைக்கப்பட்ட சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப் புற்று நோய்கள் வராமல் காக்கக்கூடிய தன்மைகள் இருக்கின்றன.//

    சிவப்பு அரிசியின் பயன்களை நன்றாக சொன்னீர்கள்.
    சிவப்பு அரிசி புட்டுமாவு கிடைக்கிறது கடைகளில்.
    நாகர்கோவிலில் இருக்கும் போது கோயில் பிரசாதமாக சிவப்பு அரிசி சாதம் சாப்பிட்டு இருக்கிறேன்.
    இலங்கை போன போது ஓட்டல்களில் சிவப்பு அரிசி சாதம், சிவப்பு அரிசி இடியாப்பம் எல்லாம் வைத்தார்கள்.நன்றாக இருந்தது.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி!
      உங்கள் அனுபவங்கள் எப்போதுமே ரசிக்க வைக்கின்றன.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  7. நல்ல பகிர்வு.

    நமது நாட்டு உணவு பெரும்பாலும் நாட்டரிசிச் சோறுதான். இப்பொழுது வெள்ளை வந்து ஆட்களை மயக்கி நிற்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் மாதேவி!
      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  8. சிவப்பு அரிசியைப்பற்றி பல நல்ல தகவல்கள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். எவ்வளவோ சத்துக்களும் நன்மைகளும் உள்ளன என அழகாகப் பட்டியலிட்டுக்கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ஒரே ஒரு முறை குருவாயூர் பக்கம், குடும்பத்துடன் ஒரு 10-12 பேர்களாகப்போனபோது, ஒரு ஹோட்டலில் சாப்பிடப்போனபோது இதையே தான் வைத்தார்கள்.

    நான் மட்டும் பயந்துபோய் எழுந்து வேறு ஒரு ஹோட்டலில் போய் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் வைகோ ஸார்!
      அந்த டிபனும் சிவப்பு அரிசியில் செய்திருந்தார்களா? (சும்மா ஒரு ஜோக்!)
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  9. மருத்துவர் சொன்ன பிறகுதான் சிவப்பரிசி வாங்குகிறேன்.என்ன ஒரு வித்தியாசம்னா சாதம் ஒன்றுக்கொன்று ஒட்டாது. ஆனால் சுவை நன்றாக இருக்கும்.சாம்பார்,ரசம் இதெல்லாம் சூப்பரா பொருந்தும்.வேக தண்ணீர் அதிகம் தேவைப்படாது, ஆனால் நேரமெடுக்கும்.இவ்வளவு பலன்களை பட்டியலிட்ட பிறகு வாங்கி பயன்படுத்தலாம்.நல்ல பதிவுக்கு நன்றிங்க.

    கருப்பரிசி (wild rice ) பார்த்ததில்லையா?முடிந்தால் வாங்கி பதிவிடுகிறேன்.விலைதான் எக்கச்சக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சித்ரா!
      வெள்ளை அரிசி மட்டுமே பயன்படுத்துகிறோம். சிவப்பு அரிசி கூட என் பெண்ணின் மாமியார் வீட்டில் ஒரு முறை சாப்பிட்டபின் தான் தெரிந்தது. இங்கு அதனை தேவமல்லிகை என்கிறார்கள். நீங்கள் சொல்வது போல சுவை நன்றாக இருந்தது.

      கருப்பரிசி பற்றி பதிவிடுங்கள்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
    2. கருப்பரிசி வாங்கிவர கடைக்குப் போனேங்க.ஒரு lb(453g) $5.எடுத்த பாக்கெட்டை அப்படியே வச்சிட்டு நடையைக் கட்டிட்டேன்.வேறு எங்காவது லூஸ்ல கெடச்சா ஒன்றிரண்டு கையளவிற்கு வாங்கி வருகிறேன்.

      நீக்கு
    3. கருப்பரிசி வாங்கியாஆஆஆச்சு.

      நீக்கு
    4. சீக்கிரமா ரெசிபி எழுதுங்க!

      நீக்கு
    5. கருப்பு கவுணி அரிசி கிலோ 150 ரூபாய்தான்

      நீக்கு
  10. இதைப்பற்றி ஏற்கனவே நானும் படித்தேன் ரஞ்சனி சிவப்பு மட்டுமல்ல கறுப்பு அரிசி கூட உண்டு அதுவும் இதைப்போலவே சத்து நிறைந்தது விலையும் அதிகம் கலர் கலராக சாதம் கலிகாலம் என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க விஜயா! வெள்ளை அரிசிதான் கலிகாலம் விஜயா.
      சிவப்பு கருப்பு இவையெல்லாம் பாலிஷ் பண்ணாத சத்து நிறைந்த அரிசி வகைகள்.
      உங்கள் ப்ளாக் ஸ்பாட் தளத்திற்கு வருகிறேன்.

      நீக்கு
  11. சிவப்பு அரிசி உபயோகித்துப் பார்த்தேன் .அதன் நன்மைகள் புரியாமல் இல்லை. ஆனால் நாக்கு சொல்படி கேட்பதில்லை
    ஆனால் உங்கள் பதிவைப் பார்த்த பிறகு திரும்பவும் முயன்று பார்க்கலாமா என்று மனம் கேட்கிறது......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி!
      நிச்சயம் முயற்சி செய்யுங்கள்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  12. பிரவுன் அரிசியை பயன்படுத்தினால் வயிறு ஏற்க மறுப்பதாக சொல்கிறார்கள் ஏனெனில் காலம் முழுதும் பாலிஷ் செய்த அரிசிக்கு பழகியவர்களால் இதற்க்கு மாற இயலாது போல..........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயதேவ்!
      நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டோம்!

      நீக்கு
  13. கேரளா பக்கங்களில் சமைக்கிறார்கள்?
    நமக்கு சத்தை விட ருசிதான் பெரியதாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்!
      நீங்கள் சொல்வது ரொம்ப நிஜம். ருசிக்கு முன்னால் சத்தாவது, ஒண்ணாவது!

      நீக்கு
  14. நல்ல விழிப்புணர்வான பகிர்வு!

    நாங்கள் வீட்டில் அடிக்கடி சமைத்து சாப்பிடுவோம். சிகப்பரிசியில் இரன்டு வகை இருக்கிறது. புழுங்கலரிசியும் இருக்கிற‌து. பச்சரிசியும் இருக்கிறது. கேரள மக்கள் சாப்பிடுவது புழுங்கலரிசி மட்டுமே. இந்த பச்சரிசியைப்பற்றி அவ்வள‌வாகத் தெரியவில்லை. ஆனால் சீக்கிரம் வெந்து விடும். சிகப்பரிசி எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு இலேசாக இருக்கும். சென்னையில் ' சஞ்சீவனம்' என்ற உணவகத்தில் சிகப்பரிசி சாதம், சிகப்பரிசி கஞ்சி எல்லாம் சாப்பாட்டில் தருகிறார்கள்! சிகப்பரிசி புட்டு மாவு இங்கு எல்லா கடைகளிலும் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ!
      என் மகள் வீட்டில் பயன்படுத்தும் அரிசி பச்சரிசியா புழுங்கல் அரிசியா தெரியவில்லை. இங்கு அதனை தேவமல்லிகை என்கிறார்கள்.
      சஞ்சீவனம் உணவகத்தைப் பற்றிய தகவலுக்கு நன்றி!

      நீக்கு
  15. சிகப்பரிசி கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைகிறது என்று படித்த ஞாபகம். வெண்மை மீதான மோகம் குறைந்தால் நம் ஆரோக்கியம் மேம்படும். சீனிக்கு பதிலாக கருப்பட்டி, வெல்லம் எடுத்துக் கொள்ளலாம். ஆனந்தவிகடனில் ஆறாம் திணை தொடர்ந்து வாசித்து வருகிறேன். பாரம்பரிய உணவு மீதான ஆர்வம் அதிகமாகியுள்ளது. சிகப்பரிசி குறித்த பல தகவல்களை கூறும் அருமையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. இங்கே (நியூஸி) சீனக்கடைகளில் சிகப்பு, கருப்பு அரிசிகள் கிடைக்கின்றன. அவை க்ளூடேனியஸ் வகைகள். ஊறவச்சு பின் நீராவியில் வேகவச்சு புட்டு போல் தேங்காய் , சக்கரை , ஏலக்காய் சேர்த்து சாப்பிடலாம். டிஸர்ட் வகையில் சேர்த்துருவேன்.

    கருப்பையும் இதே மாதிரி செஞ்சுக்கலாம்.

    நீங்க படத்தில் போட்டுருப்பது ப்ரௌன் நிறத்தில் இருக்கே.

    பதிலளிநீக்கு
  17. உங்களின் இந்த தளமும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு : http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_9.html

    நன்றி அம்மா ...

    பதிலளிநீக்கு
  18. thanks for sharing useful information about red rice

    பதிலளிநீக்கு
  19. In south arcot dist. we call it vayakondan rice. It is very tasty and any body suffering from illnes this rice is used as Kanji. Very delicious to drink that kanji. My memory is dating back to 1950s

    பதிலளிநீக்கு
  20. சிகப்பரிசி சாப்பிட்டா வயிறு அமைதியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு