ஞாயிறு, 30 டிசம்பர், 2012

எங்கள் மாமா


எங்கள் மாமா

ஸ்ரீரங்கம் என்றால் உடனே நினைவுக்கு வருவது எங்கள் பாட்டியின் வீடு மட்டுமல்ல; எங்கள் மாமாக்களின் நினைவும் தான்.
எங்கள் பெரிய மாமா சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தார். அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். அவரிடம் எங்களுக்கு சற்று பயம் அதிகம். எதிரில் நின்று பேச பயப்படுவோம்.
அடுத்த மூன்று மாமாக்களிடம் அதீத செல்லம். மாமா வா, போ என்று பேசும் அளவுக்கு சுதந்திரம். இந்த மூவரில் பெரிய மாமா திருமஞ்சனம் கண்ணன் என்கிற கண்ணப்பா மாமா. அவர்தான் இந்தப் பதிவின் நாயகன்.
நாங்கள் சிறுவயதினராக இருந்த போது  மாமா எங்களுடன் சில காலம் சென்னையில் தங்கி இருந்தார். அதனால் இந்த மாமா ரொம்பவும் நெருக்கமானவர் எங்களுக்கு.
மாமாவின் பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது. அவரது  புகைப்படங்களுக்கு பாத்திரங்கள் நாங்கள் – மாமாவின் மருமான்களும், மருமாக்களும் தான். அதுவும் நான் ரொம்பவும் ஸ்பெஷல்.
என் தோழி ஜெயந்தி எனக்கு photographic memory இருப்பதாக எழுதியிருந்தாள். என் மாமா நான் photogenic என்று அடிக்கடி சொல்லுவார். அதனால் மாமா எடுத்த படங்களின் முக்கிய கதாநாயகி நானாக இருந்தேன் – எனக்குத் திருமணம் ஆகி புக்ககம் போகும் வரை!
எங்களை சிறுவயதில் புகைப்படங்கள் எடுத்ததுடன் நிற்காமல் எங்களது திருமணங்களுக்கும் மாமாதான் புகைப்படக்காரர்.
தன்னிடமிருந்த கருப்பு வெள்ளை காமிராவில் மாமா காவியங்கள் படைத்திருக்கிறார். மாமாவின் புகைப்படங்களில் நாங்கள் எல்லோரும் உயிருடன் உலா வந்தோம். மாமா தன் புகைப்பட பரிசோதனைகளை எங்கள் மேல் நடத்துவார்.
மாமாவின் மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப நாங்கள் ‘போஸ்’ கொடுக்க வேண்டும். மாமா நினைத்தது புகைப்படத்தில் வரும் வரை எங்களை விட மாட்டார்.
இப்போது இருப்பது போல டிஜிட்டல் காமிராக்கள் இல்லாத நேரம் அது. ஒரு பிலிம் சுருள் முடியும் வரை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திருச்சி போய் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வருவார். கூடவே புதிய பிலிம் சுருளும் வரும், அடுத்த பரிசோதனைக்கு.
காவிரியில் ஆடிப்பெருக்கன்று சுழித்தோடும் வெள்ளத்திலிருந்து, மகாபலிபுரம் அர்ஜுனன் தபஸ் வரை மாமாவின் கருப்பு வெள்ளைக் காமிராவில் புகைப் படங்களாக சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும்.
எனக்கு நினைவு இருக்கும் மாமாவின்  புகைப்படப் பரிசோதனை ஒன்று. எனக்கு நானே புத்தகம் கொடுப்பது போல.
நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். காமிராவின் லென்ஸ் –ஐ பாதி மூடிவிட்டு உட்கார்ந்திருக்கும் படத்தை எடுப்பார். அடுத்தாற்போல அந்த நாற்காலி பக்கத்தில் நின்று கொண்டு காலி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். லென்ஸ்- இன் மறுபாதியை மூடிவிட்டு இந்தப் படத்தை எடுப்பார்.
திரும்பத் திரும்பத் திரும்பத் ……….
எத்தனை முறை இதனை எடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? எனக்கு இன்றுவரை நினைவு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அப்போதெல்லாம் செய்தி பரிமாற்றம் கடிதங்கள் மூலம்தான். நாங்களும் எங்கள் மாமாக்களுக்கு கடிதம் எழுதுவோம். கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது எங்கள் கண்ணப்பா மாமா தான்.
மாமாவுக்கு கணீரென்ற குரல். அகத்தில் இருக்கும் பெருமாளுக்கு அந்த கணீர் குரலில் பாசுரங்கள் சேவித்தபடியே மாமா திருமஞ்சனம் செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.
‘நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று மாமா நாத்தழுதழுக்க பெரிய திருமொழி சேவிக்கும்போது திருமங்கையாழ்வாரும், ‘எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்* எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’ என்று திருமாலை சேவிக்கும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் நம் கண் முன்னே தோன்றுவார்கள்.
கண்ணப்பா மாமாவுக்குத் திருமணம் ஆகி மாமி வந்தார். மாமா எங்களுக்கு எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ராஜம் மாமியும். திவ்யப்பிரபந்தம் மட்டுமே தெரிந்திருந்த எங்களுக்கு முமுக்ஷுப்படி, ஸ்ரீவசன பூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியவர் இந்த மாமிதான்.
‘பகவத்கீதையில் கிருஷ்ணனுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் ராஜத்தைத் தான் கேட்பார்’ என்று என் மாமா வேடிக்கையாகக் கூறுவார். அந்த அளவுக்குக் கீதையை கரைத்துக் குடித்தவர் மாமி.
பல திவ்ய தேசங்களுக்கும் சென்று அங்கிருக்கும் பெருமாள்களையும் தன் காமிராவில் சிறை எடுத்து வருவார் எங்கள் மாமா. மாமாவிற்கு தான் எடுத்த படங்களுள் மிகவும் பிடித்தமான படம் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார் தான். கூப்பிய கைகளுடன் நிற்கும் அவரது திரு முகத்தை மட்டும் க்ளோஸ்-அப் – பில் எடுத்து வீட்டுக் கூடத்தில் மாட்டியிருப்பார். ஆழ்வாரின்  கண்களின் வழியே அவரது கருணை நம்மை ஆட்கொள்ளும்.
இத்தனை திறமை இருந்தும் மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை. எத்தனையோ பேர்கள் சொல்லியும் தனது மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தார்.
எங்களது பாட்டியின் முதுமை காலத்தில் மாமாவும் மாமியும் மிகுந்த ஆதுரத்துடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டனர். மாமாவின் குழந்தைகளும் பாட்டியினிடத்தில் வாஞ்சையுடனும், மிகுந்த பாசத்துடனும் இருந்தனர். பாட்டியின்  கடைசிக் காலம் இவர்களது அரவணைப்பில் நல்லவிதமாக கழிந்தது. இதற்காக மாமாவுக்கும், மாமிக்கும் நாங்கள் எல்லோருமே நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.
கண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது. மார்கழித் திருவாதிரையில் பிறந்தவர் மாமா. எங்கள் அம்மா ஒவ்வொரு வருடமும் தனது தம்பியை நினைத்துக் கொண்டு திருவாதிரை களியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள்.
பழைய நினைவுகளுடன், மாமாவின் அன்பில் நனைந்த நாட்களை அசை போட்டபடியே இந்தப் பதிவை மாமாவுக்கு அர்ப்பணிக்கிறேன்.
மாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.

24 கருத்துகள்:

  1. மிகவும் அழகான பதிவு. படித்ததும் மனதுக்கு நிறைவாக உள்ளது.

    >>>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனதின் நிறைவு எனக்கும் நிறைவைக் கொடுக்கிறது!

      நீக்கு
  2. //கண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது. மார்கழித் திருவாதிரையில் பிறந்தவர் மாமா. எங்கள் அம்மா ஒவ்வொரு வருடமும் தனது தம்பியை நினைத்துக் கொண்டு திருவாதிரை களியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள்.//

    மிகவும் பாக்யசாலிகளும் உத்தம தம்பதிகளுமாய் விளங்கும் தங்கள் மாமா+மாமிக்கு என் நமஸ்காரங்கள்.

    >>>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமாவும், மாமியும் என் பதிவையும் அதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்களையும் படித்து மகிழ்ந்ததாக செய்தி வந்திருக்கிறது, ஸார்!
      அவர்களுக்கு உங்கள் நமஸ்காரங்களைச் சொல்லுகிறேன்.

      நீக்கு
  3. //நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். காமிராவின் லென்ஸ் –ஐ பாதி மூடிவிட்டு உட்கார்ந்திருக்கும் படத்தை எடுப்பார். அடுத்தாற்போல அந்த நாற்காலி பக்கத்தில் நின்று கொண்டு காலி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். லென்ஸ்- இன் மறுபாதியை மூடிவிட்டு இந்தப் படத்தை எடுப்பார்.//

    டபுள் ஆக்டில் ப்ளாக் அண்ட் ஒயிட்டில் எனக்கு அந்தக்குழந்தை ரஞ்ஜுவைப்பார்க்கணும் போல உள்ளதே! படத்தை ஏன் வெளியிடவில்லை? போங்க உங்களோட நான் டூஊஊஊ ;)))))

    >>>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படம் என்னிடம் இல்லை. வேறு பல படங்கள் இருக்கின்றன. அவைகளைப் போட என் தன்னடக்கம் இடம் கொடுக்கவில்லை, அவ்வளவுதான்!

      நீக்கு
  4. //இப்போது இருப்பது போல டிஜிட்டல் காமிராக்கள் இல்லாத நேரம் அது. ஒரு பிலிம் சுருள் முடியும் வரை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திருச்சி போய் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வருவார். கூடவே புதிய பிலிம் சுருளும் வரும், அடுத்த பரிசோதனைக்கு.//

    அதெல்லாம் நாம் கஷ்டப்பட்டு போட்டோ எடுத்த கஷ்ட காலங்கள் தான். நினைக்கவே இப்போது வேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளது.

    இப்போ ஒரு சின்னக்குழந்தை கூட நம்மை அப்படியே டிஜிடலில் போட்டோ பிடித்து, உடனே ஆன்-தி-ஸ்பாட் நம்மிடம் காட்டுகிறது.

    >>>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டப்பட்டு புகைப்படம் எடுத்து திருச்சிக்குப் போய் அதை பிரிண்ட் போட்டு எடுத்துக் கொண்டு வருவார் மாமா சிறிது கூட அலுப்பிலாமல்.
      மறுபடி photo session ஆரம்பித்துவிடும்! இது ஒரு சுழற்சி!

      நீக்கு
  5. //அப்போதெல்லாம் செய்தி பரிமாற்றம் கடிதங்கள் மூலம்தான். நாங்களும் எங்கள் மாமாக்களுக்கு கடிதம் எழுதுவோம். கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது எங்கள் கண்ணப்பா மாமா தான்.//

    ஆஹா, நாமெல்லாம் எவ்வளவு கடிதங்கள் எழுதியிருப்போம். கடித வருகைக்காக வழிமேல் விழி வைத்து போஸ்ட்மேனை எதிர்பார்த்துக் காத்திருப்போம். வந்த கடிதத்தை திரும்பத்திருப்ப எவ்வளவு முறை படித்து மகிழ்வோம். அதை ஒரு வளைவுக்கம்பியில் குத்தி பலநாட்கள் பாதுகாப்போம்.

    என் எழுத்துக்களையும் எழுதும் முறையையும் அழகையும் என் மாமா ஒருவர் மிகவும் பாராட்டியுள்ளார். கோபாலகிருஷ்ணன் எழுதுவது போலத்தான் எழுதணும் என்று எல்லோருக்கும் சொல்லுவார்.

    முதலில் பிள்ளையார் சுழி, ஊர் பெயர், தேதி, பிறகு விஷயங்களைக் கோர்வையாகவும் தெளிவாகவும் படித்தால் ஈஸியாகப் புரிவது போலவும் எழுதி, கையெழுத்துப்போட்டு, FROM ADDRESS எழுதியல்லவா, சோம்பல் படாமல் தபால் பெட்டியில் கொண்டுபோய் சேர்த்து விட்டு, அது உள்ளே லொட்டு என்ற சப்தத்துடன் விழுந்து விட்டதா என்பதையும் உறுதி செய்து கொண்டல்லவா நான் வருவேன்.

    ஆச்சர்யமான நாட்கள், அல்லவோ, அவை.!!!!!

    >>>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கும் என் அம்மா கடிதம் எழுது என்றுதான் சொல்லுவாள்.
      உங்களது மலரும் நினைவுகள் அசத்தல்!

      நீக்கு
  6. உங்களின் இந்தப்பதிவினில் பழைய விஷயங்கள் பலவற்றை அழகாகக் கோர்வையாக எழுதி அசத்தியுள்ளீர்க்ள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ஏன் வலைச்சரப்பக்கம் 2 நாட்களாக வரக்காணோம்?

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸார்!
      பெண், பேரன்கள் வந்திருப்பதால் நீண்ட நேரம் இணையத்தில் உலா வர முடியவில்லை.

      மிகவும் தாமதமாக வலைச்சரத்திற்குப் போய் திருமதி உஷாவை வாழ்த்திவிட்டு வந்தேன்.உங்களது பின்னூட்டங்களையும் பார்த்து ரசித்தேன்.

      நன்றி ஸார்!
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  7. // மாமா தன் புகைப்பட பரிசோதனைகளை எங்கள் மேல் நடத்துவார்.//

    இந்த கட்டுரையில் நான் ரசித்த நகைச்சுவை வரிகள்!

    // இத்தனை திறமை இருந்தும் மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை. எத்தனையோ பேர்கள் சொல்லியும் தனது மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தார். //

    அவர் ஒரு உண்மையான புகைப்படக் கலைஞர் என்றே நான் நினைக்கிறேன். (நானும் போட்டோகிராபியில் ஆர்வம் உள்ளவன்)

    //கண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது.//

    உங்கள் மாமா திரு. திருமஞ்சனம் கண்ணன் என்கிற கண்ணப்பா மாமா அவர்களின் ஆசீர்வாதம் அனைவருக்கும் தேவை. நானும் அவரது ஆசியை உங்கள் பதிவின் மூலம் பெற்றுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய பதிவையும், அதற்கு வந்திருக்கும் மறுமொழிகளையும் எனது மாமா, மாமி இருவரும் படித்து ஆனந்தப் பட்டதாக சொன்னார்கள்.
      எல்லோருக்கும் தங்கள் ஆசீர்வாதங்களையும் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

      வேர்ட்ப்ரஸ், ப்ளாக்ஸ்பாட், இரண்டிலும் மறுமொழி போட்டதற்கு நன்றி திரு தமிழ் இளங்கோ!

      நீக்கு

  8. // மாமாவிற்கு தான் எடுத்த படங்களுள் மிகவும் பிடித்தமான படம் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார் தான். கூப்பிய கைகளுடன் நிற்கும் அவரது திரு முகத்தை மட்டும் க்ளோஸ்-அப் – பில் எடுத்து வீட்டுக் கூடத்தில் மாட்டியிருப்பார். ஆழ்வாரின் கண்களின் வழியே அவரது கருணை நம்மை ஆட்கொள்ளும்.//

    இந்த ஒரு வலைப்பதிவு தாங்கள் எழுதுவது வலைச்சரம் வழியே தான் தெரிந்து கொண்டேன்.

    ஆழ்வார் திருமங்கையாழ்வார் அவர்கள் திருமுகத்தை எங்களுக்கு காட்டுங்களேன்.

    சுப்பு தாத்தா.
    meenasury@gmail.com

    பதிலளிநீக்கு
  9. வாருங்கள் சுப்பு தாத்தா!
    மிகச் சமீபத்தில் தான் இதை ஆரம்பித்தேன். வேர்ட்ப்ரஸ் பதிவுகளையே இங்கும் போடுகிறேன்.

    திருமங்கையாழ்வார் திருமுகத்தை எல்லோருக்கும் காட்ட எனக்கும் ஆசைதான். மாமா இப்போது தன் பிள்ளையுடன் அமெரிக்காவில் இருக்கிறார்.
    நாங்களே திருமங்கையாழ்வாரைப் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  10. மாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.//

    நானும் ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டிக் கொள்கிறேன்.

    மாமா, மாமியை நமஸ்காரம் செய்து அவர்களை ஆசீயை பெற்றுக் கொள்கிறேன்.
    திருமங்கை ஆழவாரை அண்ணன் கோவில் திருவிழாவில் (கருடசேவை) எடுத்து பதிவு போட்டேன். அழகு என்றால் அவ்வளவு அழகு.
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது மறுமொழிக்கு மிகவும் தாமதமாகப் பதில் போடுகிறேன். மன்னிக்கவும்.
      சென்ற வருடம் திருவாலி திருநகரியில் வேடுபரி உற்சவத்திற்கு போன போது ஆழ்வாரை கிட்டத்தில் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. அடுத்த நாள் பெருமாளுக்குத் தனித்தேர், ஆழ்வார்க்குத் தனி தேர். நீண்ட நேரம் ஆழ்வாரையும் குமுதவல்லி நாச்சியாரையும் சேவித்தேன்.
      அந்த அழகுக்கு ஈடு இணை இல்லை!

      நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் திருமதி கோமதி அரசு!

      நீக்கு
  11. என்னுடைய நமச்காரங்களையும் சொல்லி ஆசீர்வாதம் பெற்றுத் தரவும். எங்கள் மாமாவுக்கு ஒன்றாம் தேதி அன்று சதாபிஷேகம் நடந்தது!
    உங்கள் பதிவு ஸ்க்ரால் செய்யச் செய்ய பாதி எழுத்துகள் மறைகின்றன. எனக்கு மட்டும்தான் இப்படியா என்றும் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமாவும் மாமியும் என் பதிவை மட்டுமின்றி கருத்துரைகளையும் படித்து சந்தோஷப் பட்டதாகச் சொன்னார்கள்.

      ஸ்க்ரால் செய்யச் செய்ய பாதி எழுத்துக்கள் மறைகின்றனவா? எனக்குத் தெரியவில்லையே.
      வேர்ட்ப்ரஸ் - இலிருந்து என் இங்கு வருகிறாய் என்ற ப்ளாக்ஸ்பாட் கோபித்துக் கொள்ளுகிறதோ?

      நன்றி ஸ்ரீராம்!

      நீக்கு
  12. அருமையான தங்கள் மாமாவுக்கு நம்ஸ்காரங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமாவிற்குத் தெரிவிக்கிறேன், இராஜராஜேஸ்வரி!

      நீக்கு
  13. மிக அருமையாக இருக்கு தங்கள் மாமாவைப்பற்றிய பதிவு.


    //மாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.//

    நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. எங்கள் மாமா மாமிக்காக பிரார்த்தித்துக் கொண்டதற்கு நன்றி ரமா!

    பதிலளிநீக்கு