திங்கள், 10 டிசம்பர், 2012

பாத கமலங்கள் காணீரே!1974 ஆகஸ்ட் 13 என் அக்காவின் குழந்தை சிரஞ்சீவி சம்பத்குமாரன் பிறந்தபோது நான் அடைந்த  சிலிர்ப்பு  1998 டிசெம்பர் மாதம் 10 ஆம் தேதி ரீப்ளே ஆயிற்று!

என் பேரன் சிரஞ்சீவி தேஜஸ் கிருஷ்ணா அன்று தான் சுப ஜனனம்.
வெளியில் நல்ல மழை. குளிரான குளிர். பெங்களூரு இந்த அளவிற்கு அசுத்தமடையாமல் இருந்த காலம்.

மருத்துவ மனையில் திரைப் படங்களில் காண்பிப்பார்களே அதைப் போல எங்கள் குடும்பமே உட்கார்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது என் மாப்பிள்ளை எழுந்து நடந்து விட்டு வருவார்.

‘குவா....குவா.... (நிஜமாகவே இப்படித்தான் குழந்தை அழுததா என்று நினைவில்லை!) அத்தனை பேரும் மூடியிருந்த பிரசவ அறையைப் ஒருவிதப் பரவசத்துடன் பார்த்தோம்.

கொஞ்ச நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து பச்சைத் துணியில் சுற்றிய ஒரு பஞ்சுப் பொதியை கொண்டு வந்து எங்களிடம் காண்பித்து ‘மம்மக (பேரன்) என்றாள். ஆக்ஷன் ரீப்ளே! நான் தான் வாங்கிக் கொண்டேன். உடனே சுதாரித்துக் கொண்டு மாப்பிள்ளை கையில் குழந்தையைக் கொடுத்தேன். அவர் பிள்ளை பிறந்த ஆனந்தத்தில் ‘பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

என் அம்மா, என் கணவர், என் பிள்ளை எல்லோரிடத்திலும் குழந்தையைக் காண்பித்து ‘நான் இப்போ proud பாட்டி! என்றேன். எனக்கு வயது 45.

என் பிள்ளை அப்போது பி.யு.சி. இரண்டாவது வருடம் தும்கூரில் படித்துக் கொண்டிருந்தான். என் பெண்ணின் புக்ககமும் தும்கூர் தான். பிள்ளைக்காக தும்கூரில் ஒரு வருடம் நான் தனிக் குடித்தனம். என் கணவர் இங்கே பெங்களூரில்.

குழந்தை பிறந்த கொஞ்ச நாளில் பெண்ணையும் குழந்தையையும் தும்கூர் கூட்டிப் போய் விட்டேன். என் பேரனின் ஒவ்வொரு அசைவையும், அவனது ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். மறக்க முடியாத நாட்கள் அவை.

அவனைக்  காலில் போட்டுக் கொண்டு தீர்த்தாமாட்டுவதில் இருந்து ஒவ்வொன்றும் அனுபவித்து அனுபவித்து செய்தேன்.

தலைப்பில் நான் சொல்லியிருக்கும் பெரியாழ்வாரின் பாசுரங்களை அன்றிலிருந்து நானும் அனுபவிக்க ஆரம்பித்தேன்.

‘பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே....!
‘முழந்தாளிருந்தவா காணீரே..!

நம் குழந்தைகளிடம் நாம் மிகவும் கண்டிப்பாக இருப்போம். நாம் நல்ல பெற்றோர்களாக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் நமது கண்டிப்பையும் கறார் தனத்தையும் காண்பிப்போம். அவர்களைக் கொஞ்சுவதைவிட கடிந்து கொள்வது அதிகம்.

அவர்களிடம் நம் எதிர்பார்ப்புகளும் விண்ணை முட்டும். அதி புத்திசாலியாக இருக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைகளை எல்லாம் நம் குழந்தைகள் ஈடு கட்ட வேண்டும். நம்மிடம் இல்லாத ‘perfection  -ஐ அவர்களிடம் எதிர்பார்ப்போம்!

அது மட்டுமல்ல; நமக்கு குழந்தைகள் பிறக்கும்போதுதான் நாமும் நம் உத்தியோகத்தில் உச்சகட்ட நிலையை அடைந்திருப்போம்; அல்லது அடையப் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருப்போம். குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவிட  முடியாமல் போகும்.

ஆனால் பேரன் பேத்திகள் என்றால் அதீத பாசம்! நமக்கு எந்தவிதப் பொறுப்போ பாரமோ கிடையாது. ஒரு சுகமான சுமை!

ஓரளவுக்கு நம் கடமைகளும் முடிந்திருக்கும். அவர்களுடன் கொஞ்சி மகிழ நிறைய நேரம் கிடைக்கும். நாமும் ஒய்வு பெற்றிருப்போம்; அல்லது ஓய்வு பெறும் நிலையில் இருப்போம்.  

அவனுக்கு நான் பாடிய தாலாட்டு பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே... பாட்டுதான்.

நான் பாடும்போது கண் கொட்டாமல் என்னையே பார்த்துக் கொண்டு படுத்திருக்கும். ‘ஒனக்கு ரொம்ப பிடிச்சுடுத்தா என் பாட்டு.. என்று நடு நடுவே அதனுடன் பேசிக் கொண்டே தூங்க வைப்பேன்.

என் கைதான் அவனை அளக்கும் கருவி. ‘முதலில் என் கையளவு தான் இருந்தது; இப்போ பார் வளர்ந்து விட்டது. கால் என் கையை தாண்டி போறது...

மூன்று மாதங்களில் ‘ராகி ஸரி கொடுங்கள் என்றார் என் மகளின்  மாமியார். ராகியை நனைத்து உலர்த்தி, முளை கட்டி, அதை சிறிது சிறிதாக வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்து வஸ்த்ர காயம் செய்ய, ராகி ஸரி கிடைக்கும். அதையும் அவரே செய்து கொடுத்தார். முதல் நாள் மிக மிக கொஞ்சம் ராகி ஸரியை எடுத்துக் கொண்டு நீரில் கரைத்து அடுப்பில் கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பாலை கலந்து குழந்தைக்குக் கொடுத்தேன். சாப்பிட்டு முடித்து ஒரு ராகம் இழுத்தது பாருங்கள், நான் அசந்தே போய் விட்டேன். ‘இப்போதான் அதுக்கு பிடிச்சதை குடுத்திருக்கோம் போலிருக்கு.. என்றேன் மகளிடம்.

ஏழு எட்டு மாதத்தில் ‘ஜொள்ளு விட ஆரம்பித்தது குழந்தை. உடனே அதற்கு விதவிதமாக பெயர்கள் சூட்டினேன் : ஜொள்ளேஷ், ஜொள்ளப்பா, ஜொள்ளண்ணா, ஜொள்ராஜ், ஜொள்குட்டி, ஜொள்கண்ணா என்று!

அப்படி நான் சீராட்டி, பாராட்டி வளர்த்த தேஜஸ் கிருஷ்ணாவிற்கு நாளை 14 வயது பூர்த்தி ஆகிறது.

அவன் மிக நன்றாகப் படித்து, சீரும் சிறப்புமாக இன்னும் பல பிறந்த நாட்களைக் கொண்டாட வேண்டும் என்பது இந்த பாட்டி, தாத்தா, மாமா, மாமி எல்லோருடைய ஆசீர்வாதங்களும்.

14 கருத்துகள்:

 1. // அப்படி நான் சீராட்டி, பாராட்டி வளர்த்த தேஜஸ் கிருஷ்ணாவிற்கு நாளை 14 வயது பூர்த்தி ஆகிறது. //

  பேரன் பிறந்த அன்று அடைந்த அகமகிழ்ச்சியை இன்றும் அதே பரவசத்துடன் பதிந்துள்ளீர்கள். தங்கள் பேரனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!

  தங்கள் பதிவைப் படித்து முடித்ததும் எனது நினைவிற்கு வந்த சங்க இலக்கியப் பாடல் ஒன்று ... ... ...

  படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
  உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
  குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
  இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
  நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
  மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
  பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.

  - பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி (புறநானூறு – 188)
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! எத்தனை அழகாகக் குழந்தையின் விளையாட்டுக்களையும்அதனால் ஏற்படும் இன்பத்தையும் சொல்லுகிறது இந்தப் பாடல்!
   அழகான இந்தப் பாடலை எழுதியதற்கும் உங்கள் ஆசிகளுக்கும் நன்றி!
   என் மகளிடமும், பேரனிடமும் சொல்லுகிறேன் உங்கள் அன்பையும் ஆசியையும்!

   நீக்கு
 2. தங்கள் பேரனுக்கு என் அன்பான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  ஒவ்வொன்றையும் மிகவும் ரஸித்து ருசித்து அனுபவித்து எழுதியிருப்பது ஒவ்வொரு எழுத்துக்களிலும் காண முடிகிறது. பாராட்டுக்கள்.

  பெண்ணும் குழந்தையும் ’புளி’க்குப்பிரபலமான தும்கூரில் இருந்தாலும் அவனுடன் உங்களுக்கான அனுபவங்கள் என்றும் புளிக்கவே புளிக்காது.
  அவை என்றும் இனிப்போ இனிப்பான சுகானுபவங்கள் தான்.

  பேரன் பேத்தியுடன் நமக்கு கிடைக்கும் எந்தவொரு அனுபவமும் சுவையோ சுவை தான். அனுபவித்தவர்களுக்கே அதன் அருமை தெரியும். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புளிக்காத இனிமையான அனுபவங்கள் என்பது மிகவும் நிஜம்.
   உங்களது அன்பையும் ஆசிகளையும் எனது மகளுக்கும், பேரனுக்கும் தெரிவிக்கிறேன்.
   நன்றி வைகோ சார்!

   நீக்கு
 3. ரீப்ளே ஆன சிலிர்ப்பு ரசிக்கவைத்து ஆனந்தத்தைப்பகிர்ந்தது ...
  வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 4. தேஜஸ் கிருஷ்ணாவுக்கு ஒளிமயமான (தேஜஸ்) எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம்!

  பதிலளிநீக்கு
 5. //நம் குழந்தைகளிடம் நாம் மிகவும் கண்டிப்பாக இருப்போம். நாம் நல்ல பெற்றோர்களாக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் நமது கண்டிப்பையும் கறார் தனத்தையும் காண்பிப்போம். அவர்களைக் கொஞ்சுவதைவிட கடிந்து கொள்வது அதிகம்.

  அவர்களிடம் நம் எதிர்பார்ப்புகளும் விண்ணை முட்டும். அதி புத்திசாலியாக இருக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைகளை எல்லாம் நம் குழந்தைகள் ஈடு கட்ட வேண்டும். நம்மிடம் இல்லாத ‘perfection’ -ஐ அவர்களிடம் எதிர்பார்ப்போம்!

  அது மட்டுமல்ல; நமக்கு குழந்தைகள் பிறக்கும்போதுதான் நாமும் நம் உத்தியோகத்தில் உச்சகட்ட நிலையை அடைந்திருப்போம்; அல்லது அடையப் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருப்போம். குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவிட முடியாமல் போகும்.

  ஆனால் பேரன் பேத்திகள் என்றால் அதீத பாசம்! நமக்கு எந்தவிதப் பொறுப்போ பாரமோ கிடையாது. ஒரு சுகமான சுமை//

  எத்தனை நிதர்சனமான வரிகள்!!
  பேரனைக் கொஞ்சுவதை அனுபவித்து அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்! நானும் உங்களின் நிலைமையில் தான் இருக்கிறேன். உலகின் அத்தனை காயங்களும் வலிகளும் பிரச்சினைகளும் என் பேரனைக் கொஞ்சும்போது மறந்து விடுகின்ற‌ன!அதனால் தான் உங்களின் ஒவ்வொரு வரியையும் அனுபவித்து ரசித்துப் படிக்க முடிந்தது. அருமையான‌ ப‌திவு!!


  பதிலளிநீக்கு
 6. வாருங்கள் மனோ! உங்கள் வருகை மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
  நீங்களும் என்னைபோலத்தானா?
  பாட்டி என்னும் பதவியை மிகவும் ரசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் எழுத்துக்கள் பிடித்தது சந்தோஷம்.
  பாராட்டுக்களுக்கும், வருகைக்கும் நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 7. சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள். பேரனுக்கு எங்கள் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 8. வாருங்கள் ஸ்ரீராம்!
  வாழ்த்துக்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 9. நான் சீராட்டி, பாராட்டி வளர்த்த தேஜஸ் கிருஷ்ணாவிற்கு நாளை 14 வயது பூர்த்தி ஆகிறது.//

  தேஜஸ் கிருஷ்ணாவிற்கு வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் பாட்டி.

  நானும் என் பேரக்குழந்தைகளுக்கு சின்னசிறு கிளியே பாடுவேன்.
  நம் இருவருக்கும் ஒரே அலைவரிசையான சிந்தைனைகள் அது தான் நம்மை இணைத்து இருக்கிறது என நினைக்கிறேன் ரஞ்சனி.

  பதிலளிநீக்கு
 10. உங்களது வார்த்தைகள் எனக்கு மிகவும் ஆனந்தத்தைக் கொடுக்கிறது, கோமதி. உங்களின் நட்பு எனக்கு பதிவுலகம் தந்த மிகச் சிறந்த பரிசு.

  தொடரட்டும் நம் நட்பு இந்தப் புத்தாண்டில்!

  பதிலளிநீக்கு