சனி, 2 ஏப்ரல், 2016

அரசு நடுநிலைப்பள்ளி.....



எமக்குத் தொழில் அசைபோடுதல் – 7



அன்னிலேருந்து நான் ஸ்கூலில் எல்லோரிடமும் ஒரே கேள்வியைக் கேட்க ஆரம்பித்தேன்:’அடுத்த வருடம் நீ எந்த ஸ்கூலில் சேரப் போற?’என்று. அப்போது திருவல்லிக்கேணியில் இரண்டு பள்ளிகள் மிகவும் பிரபலம். என்கேடி (என்.கே. திருமலாச்சாரியார்) நேஷனல் பள்ளி, மற்றும் லேடி வெலிங்டன் பள்ளி. இரண்டுமே மெரீனா கடற்கரை அருகில் இருந்த பெண்கள் பள்ளிகள். இவற்றில் படிப்பது மிகப்பெரிய விஷயம். இங்கு படிக்கும் பெண்களுக்கு தலையில் இரண்டு – இல்லை கூடுதலாக இரண்டு – நான்கு கொம்புகள் முளைத்திருக்கும். அதனால் அவர்கள் குனிந்து நிலம் பார்த்து நடக்க மாட்டார்கள். ஆகாயத்தைப் பார்த்துத்தான் நடப்பார்கள்.

என் தோழி சந்திரப்பிரபா தீர்மானமாகச் சொன்னாள்: ‘நான் லேடி வெலிங்டன் பள்ளியில் தான் படிக்கப் போகிறேன். அதற்கு பரீட்சை எழுத வேண்டும். அதில் பாஸ் செய்தால் தான் அட்மிஷன். இப்போதிலிருந்தே தயார் செய்து கொள்ளவேண்டும்’. எனக்கும் அவளைப் போலவே அந்தப் பள்ளியில் சேர ஆவல் அதிகமாயிற்று.

அப்பாவிடம் சொன்னேன். ‘எப்போ நுழைவுப் பரீட்சை இருக்கும் என்று கேட்டு வா’ என்றார். அம்மாவிற்கு இந்த யோசனை பிடிக்கவே இல்லை. ‘அவ்வளவு தூரம் இவளால் நடக்க முடியாது. பக்கத்துல இருக்கிற ஸ்கூல்ல சேருங்கோ’ என்றாள். ‘பக்கத்துல எந்த ஸ்கூல் இருக்கு?’ என்ற என் கேள்விக்கு அம்மாவின் பதில்: ‘திருவட்டீச்வரன்பேட்டையில் கார்ப்பரேஷன் ஸ்கூல் இருக்கே. நாகப்பையர் தெருவில்’ என்றாள். ‘போம்மா....அங்கெல்லாம் நான் படிக்க மாட்டேன். என் சினேகிதி சந்திரப்பிரபாவுடன் லேடி வெலிங்டன் ஸ்கூலுக்குத்தான் போவேன். என்னால் நடக்க முடியும்’ என்றேன்.

வீட்டில் அம்மாவின் செல்வாக்குத் தான் அதிகம் என்றாலும் ‘மொதல்ல நீ நுழைவுத் தேர்வு எழுது. பிறகு பார்க்கலாம்’ என்று அப்பா துளி நம்பிக்கை கொடுத்தார்.

இங்கு ஒரு இடைச்செருகல்: நாங்கள் முதலில் இருந்தது நாகப்பையர் தெரு தான். அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குக் குடி போனோம் – நாய்ப்பாட்டு ராணி வீடு அது. அதற்குப் பிறகு இன்னொரு வீடு. இது திருவல்லிக்கேணியின் அடுத்த பகுதி. இரண்டு பகுதிகளையும் பிரித்தது அன்று டிராம் ரோடு (Tram Road) – ஒரு காலத்தில் அங்கு டிராம் ஓடிக்கொண்டிருந்ததாம்  – இப்போது திருவல்லிக்கேணி ஹை ரோடு. டிராம் ஓடுவது நின்றுபோனதும், அந்தத் தண்டவாளங்களை எடுத்ததும் எனக்கு லேசாக நினைவில் இருக்கிறது.

சென்றமுறை திருவல்லிக்கேணிக்கு ஆட்டோவில் போகும்போது நாங்கள் குடியிருந்த கானாபாக் தெருவைப் பார்த்துக்கொண்டே போனேன். ஒருமுறை இங்கெல்லாம் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொள்ளுகிறேன். என் அக்கா கூட சொல்லிக் கொண்டிருக்கிறாள் கனகவல்லி பள்ளிக்கூடத்திற்குப் போய் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கித் தரவேண்டும் என்று. அவளுடன் கூட நானும் போகவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அசை போடுவதைத் தொடர்வோம் வாருங்கள். நாங்கள் இருந்த கானாபாக் லேன். (கானாபாக் தெருவில் ஒரு முட்டுச் சந்து). அங்கிருந்து தினமும் கனகவல்லிப் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தேன் நான். திருவல்லிக்கேணி பெரிய தெருவிற்கு குறுக்காகப் போகும் இந்த தெரு. பெரிய தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவில் பெரியது. பரீட்சைக்கு முதல் நாள் அங்குதான் போய் தோப்புக்கரணம் போட்டு பிள்ளையாரை காக்கா பிடித்து விட்டு வருவோம்.

நுழைவுத் தேர்வு நாள் அன்று சந்திரப்பிரபாவும் எங்களுடனேயே வந்தாள். ஆங்கிலம், கணிதம் இரண்டிலும் தேர்வு எழுதினோம். முடிவு ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் வரும்; அந்தப் பள்ளிகூடத்திற்கே வந்து பார்த்துக் கொண்டு போகவேண்டும் என்றெல்லாம் முதலிலேயே சொல்லிவிட்டார்கள். நான் அத்தனை சிறப்பாக எழுதியதாக நினைவில்லை. சந்திரப்பிரபாவும் அபஸ்வரத்தில் அதாவது ஈனஸ்வரத்தில் தான் பேசினாள். சரி இருவருக்கும் கிடைக்காது என்று நினைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு  அதை மறந்தும் போனேன். பல நாட்கள் கழித்து அப்பா சொன்னார் எங்கள் இருவரின் பெயரும் தேர்வானவர்கள் லிஸ்டில் இல்லை என்று. நான் ஏற்கனவே இந்த முடிவிற்குத் தயாராக இருந்ததால் ரொம்பவும் அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு நாள் சந்திரப்பிரபாவை கடைத்தெருவில் பார்த்தேன். அவள் லேடிவிலிங்டன் பள்ளியில் சேர்ந்துவிட்டதாகச் சொன்னாள். எனக்கு பயங்கர அதிர்ச்சி. ‘நீ எப்போ சேரப்போற?” என்றாள். ‘நானா? என் பெயரே வரவில்லைன்னு எங்க அப்பா சொன்னாரே! உன் பெயரும் இல்லை என்றாரே!’ வாயைப் பிளந்துகொண்டு சொன்னேன். ‘உங்க அப்பா பொய் சொல்றா. நம் இரண்டு பேர் பேரும் இருந்தது. நான் ஏற்கனவே பீஸ் கட்டி புத்தகம் எல்லாம் வாங்கிவிட்டேன். நீயும் உங்க அப்பாவிடம் சொல்லி சீக்கிரம் சேர்ந்துவிடு’ என்றாள்.

நான் வந்து அப்பாவிடம் கேட்டேன். அப்பா சொன்னார்: ‘உனக்கு அப்புறம் தம்பி இருக்கான் மா. அவனை நான் நல்ல ஸ்கூலில் போடவேண்டும். அதனாலே நீ ஒரு இரண்டு வருடங்கள் கார்ப்பரேஷன் ஸ்கூலுக்குப் போ. ஹை ஸ்கூலுக்குப் பார்க்கலாம். அப்போ நல்ல ஸ்கூலில் சேர்க்கிறேன்’ என்றார்.

பலநாட்கள் சாப்பிடாமல், அழுது அடம் பிடித்தேன். என் அக்கா சொன்னாள்: ‘அப்பாவிற்கு நாம ரெண்டுபேரும் தான் உதவி பண்ணனும். அண்ணா படிக்கிறான். தம்பியையும் நல்ல படிப்பு படிக்க வைக்க வேண்டும். பாவம் அப்பா என்ன செய்வா சொல்லு. புரிஞ்சுக்கோ. பேசாம கார்ப்பரேஷன் ஸ்கூலுக்குப் போ. அங்கேயும் இதே பாடங்களைத்தான் சொல்லித் தருவா. நீ நன்னா படி. அதுதான் முக்கியம்’. என்றாள்

அவள் என்றைக்குமே பெரிய மனுஷி மாதிரிதான் பேசுவாள். என் அம்மா, ‘இஷ்டமான ஸ்கூலுக்குப் போ. இல்லைன்னா பத்துப் பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து எனக்கு உதவி பண்ணிண்டு ஆத்துல இரு’ என்று பயமுறுத்தினாள். ஐயையோ! இதற்கு கார்ப்பரேஷன் ஸ்கூல் தேவலாம் என்று ஒப்புக்கொண்டு விட்டேன். என்தலையில் கார்ப்பரேஷன் ஸ்கூல் என்று எழுதியிருக்கிறது. விதியை மாற்ற முடியுமா?

தொடர்ந்து அசை போடலாம்.....


அதீதம் இணைய இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடர்

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

புடலங்காய் கொண்டு வா!



எமக்குத் தொழில் அசைபோடுதல் – 6 



முதல் வகுப்பு ஆசிரியை பெயர் தர்மு என்கிற தர்மாம்பாள். அதிகம் நினைவில்லை என்றாலும் இந்த ஆசிரியை ‘வீட்டை எப்பவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; தினமும் வீட்டைப் பெருக்க வேண்டும்; காலையில் வாசல் தெளித்து கோலம் போடவேண்டும்; வாரம் ஒருமுறை ஒட்டடை அடிக்க வேண்டும்’ என்று சொன்னார் என்பதற்காக நான் ஒரு நாள் ஒட்டடை அடித்தேன் என்று அம்மா இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பாள். சிறுவயதில் ஆசிரியர்கள் நம்மை வெகுவாகக் கவர்ந்து விடுகிறார்கள், இல்லையா? 

இரண்டாம் வகுப்பிற்கு லூசி என்றொரு ஆசிரியை. அவ்வப்போது யாரையாவது வகுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பிற ஆசிரியைகளுடன் பேசப் போய்விடுவார். தலைமை ஆசிரியை வெளியில் போய்விட்டால் மற்ற ஆசிரியைகளுக்குக் கொண்டாட்டம் தான். சொல்ல மறந்துவிட்டேனே! எங்கள் பள்ளி சிறுவர், சிறுமியர் சேர்ந்து படிக்கும் பள்ளி. கோ-எட் பள்ளி. ஆனால் அதற்குப் பிறகு நான் படித்ததெல்லாம் பெண்கள் பள்ளிகள் தான்.

மூன்றாம் வகுப்பு ஆசிரியை கோவிந்தம்மாள். பயங்கர ஸ்ட்ரிக்ட்! சரியாகப் படிக்கவில்லை என்றால் முதுகுத் தோல் கழண்டு விடும். நாங்கள் எல்லோருமே இந்த ஆசிரியைக்குத் தான் ரொம்பவும் பயப்படுவோம். அடித்து நொறுக்கி விடுவார். அப்போதெல்லாம் எந்த பெற்றோரும் வந்து ஏன் அடித்தீர்கள் என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். நீ என்ன தப்பு செய்தாய் என்று அவர்களும் சேர்ந்துகொண்டு அடிப்பார்கள்! அதனால் மூன்றாம் வகுப்பில் நாங்கள் எல்லோருமே சமத்தாக நன்றாகப் படித்தோம். 

இந்தப் பள்ளியில் இருந்தவரை ஒரே ஆசிரியை தான் எல்லா பாடங்களையும் சொல்லித் தருவார். அப்போதிலிருந்தே எனக்கு கணிதப் பாடம் சிம்ம சொப்பனம் தான். என்னைப் பாடாய்ப்படுத்தியது வாய்ப்பாடு ஒப்பித்தல் தான். 

நான்காம் வகுப்பிற்குப் போனபின் கமலா டீச்சர் வாய்ப்பாடு ஒப்பிக்கவில்லை என்றால் கண்மண் தெரியாமல் அடித்துவிடுவார். ‘வாய்ப்பாடு படித்தால்தான் கணிதம் ஒழுங்காக வரும்’ என்ற தன் கொள்கையில் மிகக் கடுமையாக  இருந்தவர் இந்த ஆசிரியை. எழுதும்போது மனதிற்குள் கூட்டி கூட்டி எழுதிவிடுவேன். சொல்லும்போது தடுமாறுவேன். கணித வகுப்பில் எப்பவும் நான் கடைசி வரிசைக்குப் போய்விடுவேன். எல்லோரையும் கேட்டுவிட்டு என்முறை வரும்போது அந்த பீரியட் முடிந்திருக்கும் அல்லது பள்ளியே முடிந்திருக்கும். இப்படியாக கமலா டீச்சரிடம் அடி வாங்காமல் தப்பித்தவள் நான். முழுக்க முழுக்க தமிழில் இந்த வாய்ப்பாடுகளைப் படித்ததால் இப்போதும் எப்போதும் தமிழில் சொன்னால் தான் வாய்ப்பாடு சரியாக வரும். கூட்டுவது, கழிப்பது எல்லாமே தமிழில் தான்!

இந்த ஆசிரியையுடன் ஒரே ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது. தேர்வு எழுதுவதற்கு தாள்கள் ஸ்கூலில் கொடுப்பார்கள். கோடு போடாத தாள்கள். மார்ஜின் நாங்கள் போட்டுக் கொள்ள வேண்டும். இந்தத் தாள்களில்  எழுதுவது எனக்கு ரொம்பவும் கஷ்டம். நேராக எழுத வராது. கமலா டீச்சரின் வகுப்பில் ஒருமுறை தேர்வின் போது ஸ்கேல் எடுத்துவர மறந்துவிட்டேன். எப்படி மார்ஜின் போடுவது? தேர்வு அதனால் யாருடனும் பேசவும் கூடாது. அதனால் ஸ்கேல் கொடு என்று யாரிடமும் கேட்கவும் முடியாது. ரொம்பவும் யோசித்தேன். பளிச்சென்று பல்பு எரிந்தது. என்னிடம் இரண்டு பென்சில்கள் இருந்தன. ஒரு பென்சிலை வைத்து இன்னொரு பென்சிலால் மார்ஜின் வரைந்தேன். டீச்சர் பார்க்கவில்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். என் பின்னாலிருந்து ஒரு குரல் வந்தது: 'நாளைக்குப் பரீட்சைக்கு மார்ஜின் போட புடலங்காய் கொண்டுவா’ என்று.

அன்று மாலை வீட்டில் எல்லோருக்கும் நான் தான் வேடிக்கைப் பொருள் ஆனேன்!

கனகவல்லி பள்ளியிலேயே நான், என் அக்கா, என் தம்பி மூவரும் ஐந்தாம் வகுப்பு வரை படித்தோம். ஐந்தாம் வகுப்பிற்கு எங்கள் தலைமையாசிரியர் திருமதி சுசீலா தான் ஆசிரியர். ஆ! சொல்ல மறந்துவிட்டேனே! ஐந்தாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தார்கள். சுசீலா டீச்சர்தான் ஆங்கிலத்திற்கும். முதல் நாள் டீச்சர் கேட்டார்: ‘யாருக்கெல்லாம் உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தெரியும்?’ எல்லோரும் கையைத் தூக்கினார்கள். நான் மட்டும் ‘திருதிரு’. டீச்சர் ரொம்பவும் ஆச்சரியப்பட்டுப் போனார். ‘என்னடி பேரு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாதா? மக்கு, மக்கு, பாரு உன் வகுப்புல இருக்கற எல்லோரும் எழுதும் போது நீ மட்டும் ஏன் கத்துக்கல?’ என்றார்.

எனக்கு யாரும் வீட்டில் சொல்லிக் கொடுக்கவில்லை என்று சொன்னேன். என் அக்கா ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஸ்ரீரங்கம் போய் பாட்டி அகத்தில் தங்கி அங்கேயே படிக்கவும் ஆரம்பித்துவிட்டாள். என் அண்ணா ஏற்கனவே ஸ்ரீரங்கத்தில்  படித்துக் கொண்டிருந்தான். தம்பி அப்போது இரண்டாம் வகுப்பில் இருந்தான். யாரிடம் ஆங்கிலம் கற்பது? ஐந்தாம் வகுப்பில் தான் ஆங்கில அரிச்சுவடி படித்தேன். என் வகுப்பில் எல்லோருக்குமே அரிச்சுவடி தவிர வார்த்தைகளும் தெரிந்திருந்தன. எனக்கு ரொம்பவும் வியப்பு. எப்படி இவர்கள் எல்லோரும் ஆங்கிலம் கற்றுக் கொண்டனர் என்று.

என்னுடன் படித்த இன்னொரு தோழி சுனந்தா. அவளிடம் கேட்டேன், ‘உனக்கு எப்படி ஆங்கிலத்தில் நிறைய தெரிந்திருக்கிறது?’ என்று. அவள் சொன்னாள்: ‘அடுத்த வருடம் வேற ஸ்கூலில் சேரணும், இல்லையா? ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் தான் நேஷனல் ஹை ஸ்கூல், லேடி வெலிங்டன் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் ஆறாம் வகுப்பிற்கு சேர முடியும். அங்கெல்லாம் டீச்சர்கள், மாணவர்கள் எல்லோருமே ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். அதனால நான் டியூஷன் போகிறேன்’ என்றாள். வியப்புக்கு மேல் வியப்பு. நான் ரொம்பவும் பின்தங்கி இருக்கிறேன் என்று புரிந்தது.

அன்று மாலை வீட்டிற்குப் போய் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன். அம்மா சொன்னாள்: ‘உன்னை அந்த ஸ்கூலுக்கெல்லாம் அனுப்பப் போறதில்லை’
‘பின்ன?’
‘அப்பா வரட்டும். அவரிடம் கேளு’ என்று அம்மா சொல்லிவிட்டாள்.
அப்பா கழுவுற மீனில் நழுவுற மீன். ‘நீ முதலில் ஐந்தாவது பாஸ் பண்ணு. அப்புறம் பார்க்கலாம்....!’ என்று சொல்லி கழன்று கொண்டார்.


 தொடர்ந்து அசை போடலாம்.....

அதீதம் இணைய இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர்


வியாழன், 31 மார்ச், 2016

‘நாய்பாட்டு சொல்லிக்கொடு!’



எமக்குத்தொழில் அசைபோடுதல் 5





எங்களை போட்டோ எடுக்கக் கூட்டிக்கொண்டு போகும் பங்களா மிகப்பெரியது. வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே வீடு இருப்பதே தெரியாது. எப்போதும் பெரிய இரும்புக் கதவுகள் மூடியே இருக்கும். உள்ளே போனாலும் முதலில் பெரிய போர்டிகோ. போர்டிகோவின் நடுவில் ஒரு நீரூற்று. வெள்ளைவெளேரென்று பூமாதிரி விரிந்திருக்கும் அதிலிருந்து நீர் பூச்சிதறலாக வெளி வந்து கொண்டிருக்கும். நீரூற்றைச் சுற்றி குட்டைகுட்டையான செடிகள் – அழகாக கத்தரித்து விடப்பட்டிருக்கும்.  நாங்க ஒருமுறை உள்ளே போட்டோ எடுப்பதற்காக நின்றிருந்தபோது ஒரு கார் (கப்பல் மாதிரி) உள்ளே வந்தது. நீரூற்றை ஒரு பெரிய சுற்று சுற்றி உள்ளே போய் நின்றது. விரிந்த கண்களுடன் நாங்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றைக்கும் எனக்கு புத்தகங்களில் பெரிய பங்களா என்று படிக்கும்போது இந்த வீடுதான் நினைவிற்கு வரும். 


நாகப்பையர் தெருவில் நிறைய விஷயங்கள் நடந்தது நினைவில் இருக்கிறது. தொம்மங்கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்ட கழைக்கூத்தாடிகள் தெருவில்  வருவார்கள். இரண்டு கம்பங்களை நட்டு, இரண்டுக்கும் இடையில் இன்னொரு கம்பு கட்டி அதில் தூளியில் தூங்கும் குழந்தையை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் வானைத் தொடும் அளவிற்கு வீசி வீசி ஆட்டுவார்கள். நான் அதைப் பார்க்கவே பயப்படுவேன். அந்தக் குழந்தைக்கு எப்படி இருக்குமோ? சின்ன பெண் ஒருத்தி மெல்லிசு கம்பியின் மேல் கையில் ஒரு மூங்கில் கழியை வைத்துக் கொண்டு அந்தரத்தில் நடப்பாள். கூத்தாடி தன்னுடன் வரும் பெண்ணை (அவனது மனைவியாக இருக்கலாம்) கூடையைப் போட்டு மூடிவிட்டு, ‘எங்க அந்தப் பொண்ணு, இங்க இருக்காளா? அங்க இருக்காளா, உங்க வீட்டுக்குள்ள இருக்காளா, எந்த வீட்டுக்குள்ள இருக்கா?  இந்தக் கூடைக்குள்ள இருக்காளா?’ என்றெல்லாம் கேட்டுவிட்டு கூடையை திறந்தவுடன் அந்தப் பெண் மாயமாகி இருப்பாள். சற்று நேரம் கழித்து எங்கள் தெருமுனையிலிருந்து அந்தப் பெண் நடந்து வருவாள். எப்படி அது சாத்தியம் என்று இன்றுவரை எனக்குப் புதிர்தான்.


வருடா வருடம் நவராத்திரி கொலு வைப்போம். வீட்டில் இருக்கும் பெட்டிகளை எல்லாம் அடுக்கி அப்பா படிகள் கட்டுவார். அதைப்பார்ப்பதே சுவாரஸ்யம் தான். படிகள் என்றே சொல்லமுடியாது. பெட்டி பெட்டியாகத் தெரியும். ‘இது சின்ன பெட்டிப்பா.... இது பெரிய பெட்டி...இது மேல அதை வைக்கலாம்’ என்று நாங்கள் சுற்றி நின்று அப்பாவிற்கு யோசனை சொல்வோம். அப்பா நாங்கள் சொல்வதை காதில் வாங்கியபடியே படிகள் கட்டுவதில் மும்முரமாக இருப்பார். பெட்டிகளை அடுக்கி முடிந்தபின் அதன் மேல் வெள்ளை வேட்டியை விரித்து அது பறக்காமல் இருக்க இரண்டு பக்கமும் செருகி விட்டு கீழே போட்டிருக்கும் பெட்டிகள் தெரியாமல் இருக்க இன்னொரு வேட்டியைப் போட்டு அதையும் நன்றாக சுருக்கம் இல்லாமல் நீவிவிட்டு, எல்லா பக்கமும் செருகி ஷ்............அப்பாடா என்றிருக்கும் எங்களுக்கு. பாவம், அப்பா, எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று தோன்றும். வீட்டில் இருக்கும் பொம்மைகளை அடுக்க ஆரம்பிப்போம். முதலில் ‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே’ பாடிக் கொண்டே சோபனம் (ஒரு கிண்ணத்தில் அரிசி, பருப்பு, வெல்லம் எல்லாம் போட்டு) வைப்பாள் அம்மா. அதுவரை நாங்கள் பொறுமை காப்போம். அப்புறம் எங்கள் ராஜ்ஜியம் தான். 

‘இந்த பொம்மைய அங்க வை...!’
‘போடி! இது எனக்குப் பிடிச்ச பொம்மை. முதல் படிலதான் வைப்பேன்!’
நானும் என் தம்பியும் சண்டை போட்டுக் கொண்டே அடுக்குவோம்.
அம்மாவின் குரல் ஒலிக்கும்: ’எங்க ரெண்டுபேரும் தசாவதார பொம்மைகளை சரியா அடுக்குங்கோ பார்க்கலாம்...!’


இருவரும் கப்சிப். மனதிற்குள் ‘மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன....’ என்று சொல்லிப் பார்த்துக் கொள்வோம். பரசுராமனுக்கும், பலராமனுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது? பரசுராமன் தாடி வைத்திருப்பார். பலராமன் கையில் கலப்பை இருக்கும் – இப்படி நாங்களாகவே கண்டுபிடித்து வைப்போம். பத்து நாட்களும் எல்லார் வீட்டிற்கும் போய் அழைத்துவிட்டு வருவோம். அவரவர் வீட்டில் கொலு இருப்பதால் எப்போது முடிகிறதோ அப்போது அடுத்தவர் வீட்டிற்குப் போய் வருவார்கள். சுண்டல் கலெக்ஷன் முடிந்து வீட்டிற்குத் திரும்பி எல்லா சுண்டல்களையும் ஒன்றாகப் போட்டு அன்றைக்கு இரவு தொட்டுக் கொள்ள ஒரு மிக்ஸ்ட் சுண்டல் கிடைக்கும்!


சில வருடங்களுக்குப் பின் நாகப்பையர் தெருவிலேயே வேறு ஒரு வீட்டிற்கு குடித்தனம் வந்தோம். அது இன்னும் விசித்திரமான வீடு. சமையலறை மட்டும் கீழே. படுக்கையறை (அதே 5 படுக்கை-அறை!) மாடியில். பக்கத்துப் போர்ஷனிலேயே வீட்டுக்காரம்மாவும் அவர்கள் குடும்பமும் இருந்தது. அவர்களுக்கும் மாடியில் ஒரு அறை. அப்போதெல்லாம் அம்மா நிறைய பாரதியார் பாடல்கள் பாடுவாள். அப்போது அம்மாவிற்கு பிடித்த பாட்டு ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா!’  மாடியில் அந்த இரண்டு அறைகளைத் தவிர கொஞ்சம் திறந்த வெளியும் இருக்கும். அப்பா அலுவலகத்திலிருந்து திரும்ப தாமதமாகும். அப்பா வரும்வரை நாங்கள் அந்த அறைக்கு வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். அப்போது அம்மா மெல்லிய குரலில் இந்தப் பாட்டைப் பாடுவாள். வீட்டுக்காரம்மாவிற்கு ராணி என்று ஒரு பெண். நாங்கள் எல்லாம் சமவயதினர். 


ஒரு நாள் ராணி வந்து என்னிடம் ‘உங்கம்மா தினமும் ‘நாய்’ ‘நாய்’ என்று பாடுகிறாளே, அந்த பாட்டை எனக்கும் சொல்லிக் கொடேன்’ என்றாள். ஒரு நிமிடம் திகைத்த நான் என் அம்மாவிடம் ஓடிப் போய் சொன்னேன். ‘அம்மா! ராணிக்கு நாய் பாட்டு கத்துக்கணுமாம்!’ எல்லோருக்கும் விவரம் புரிந்து அன்றைக்கு நாங்கள் சிரித்த சிரிப்பு! இன்றைக்கும் சிரிப்புடனேயே இதை எழுதுகிறேன்.



அசைபோடுதல் தொடரும்.......


அதீதம் இணையஇதழில்வெளிவந்துகொண்டிருக்கும்தொடர்