வியாழன், 31 மார்ச், 2016

‘நாய்பாட்டு சொல்லிக்கொடு!’எமக்குத்தொழில் அசைபோடுதல் 5

ங்களை போட்டோ எடுக்கக் கூட்டிக்கொண்டு போகும் பங்களா மிகப்பெரியது. வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே வீடு இருப்பதே தெரியாது. எப்போதும் பெரிய இரும்புக் கதவுகள் மூடியே இருக்கும். உள்ளே போனாலும் முதலில் பெரிய போர்டிகோ. போர்டிகோவின் நடுவில் ஒரு நீரூற்று. வெள்ளைவெளேரென்று பூமாதிரி விரிந்திருக்கும் அதிலிருந்து நீர் பூச்சிதறலாக வெளி வந்து கொண்டிருக்கும். நீரூற்றைச் சுற்றி குட்டைகுட்டையான செடிகள் – அழகாக கத்தரித்து விடப்பட்டிருக்கும்.  நாங்க ஒருமுறை உள்ளே போட்டோ எடுப்பதற்காக நின்றிருந்தபோது ஒரு கார் (கப்பல் மாதிரி) உள்ளே வந்தது. நீரூற்றை ஒரு பெரிய சுற்று சுற்றி உள்ளே போய் நின்றது. விரிந்த கண்களுடன் நாங்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றைக்கும் எனக்கு புத்தகங்களில் பெரிய பங்களா என்று படிக்கும்போது இந்த வீடுதான் நினைவிற்கு வரும். 


நாகப்பையர் தெருவில் நிறைய விஷயங்கள் நடந்தது நினைவில் இருக்கிறது. தொம்மங்கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்ட கழைக்கூத்தாடிகள் தெருவில்  வருவார்கள். இரண்டு கம்பங்களை நட்டு, இரண்டுக்கும் இடையில் இன்னொரு கம்பு கட்டி அதில் தூளியில் தூங்கும் குழந்தையை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் வானைத் தொடும் அளவிற்கு வீசி வீசி ஆட்டுவார்கள். நான் அதைப் பார்க்கவே பயப்படுவேன். அந்தக் குழந்தைக்கு எப்படி இருக்குமோ? சின்ன பெண் ஒருத்தி மெல்லிசு கம்பியின் மேல் கையில் ஒரு மூங்கில் கழியை வைத்துக் கொண்டு அந்தரத்தில் நடப்பாள். கூத்தாடி தன்னுடன் வரும் பெண்ணை (அவனது மனைவியாக இருக்கலாம்) கூடையைப் போட்டு மூடிவிட்டு, ‘எங்க அந்தப் பொண்ணு, இங்க இருக்காளா? அங்க இருக்காளா, உங்க வீட்டுக்குள்ள இருக்காளா, எந்த வீட்டுக்குள்ள இருக்கா?  இந்தக் கூடைக்குள்ள இருக்காளா?’ என்றெல்லாம் கேட்டுவிட்டு கூடையை திறந்தவுடன் அந்தப் பெண் மாயமாகி இருப்பாள். சற்று நேரம் கழித்து எங்கள் தெருமுனையிலிருந்து அந்தப் பெண் நடந்து வருவாள். எப்படி அது சாத்தியம் என்று இன்றுவரை எனக்குப் புதிர்தான்.


ருடா வருடம் நவராத்திரி கொலு வைப்போம். வீட்டில் இருக்கும் பெட்டிகளை எல்லாம் அடுக்கி அப்பா படிகள் கட்டுவார். அதைப்பார்ப்பதே சுவாரஸ்யம் தான். படிகள் என்றே சொல்லமுடியாது. பெட்டி பெட்டியாகத் தெரியும். ‘இது சின்ன பெட்டிப்பா.... இது பெரிய பெட்டி...இது மேல அதை வைக்கலாம்’ என்று நாங்கள் சுற்றி நின்று அப்பாவிற்கு யோசனை சொல்வோம். அப்பா நாங்கள் சொல்வதை காதில் வாங்கியபடியே படிகள் கட்டுவதில் மும்முரமாக இருப்பார். பெட்டிகளை அடுக்கி முடிந்தபின் அதன் மேல் வெள்ளை வேட்டியை விரித்து அது பறக்காமல் இருக்க இரண்டு பக்கமும் செருகி விட்டு கீழே போட்டிருக்கும் பெட்டிகள் தெரியாமல் இருக்க இன்னொரு வேட்டியைப் போட்டு அதையும் நன்றாக சுருக்கம் இல்லாமல் நீவிவிட்டு, எல்லா பக்கமும் செருகி ஷ்............அப்பாடா என்றிருக்கும் எங்களுக்கு. பாவம், அப்பா, எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று தோன்றும். வீட்டில் இருக்கும் பொம்மைகளை அடுக்க ஆரம்பிப்போம். முதலில் ‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே’ பாடிக் கொண்டே சோபனம் (ஒரு கிண்ணத்தில் அரிசி, பருப்பு, வெல்லம் எல்லாம் போட்டு) வைப்பாள் அம்மா. அதுவரை நாங்கள் பொறுமை காப்போம். அப்புறம் எங்கள் ராஜ்ஜியம் தான். 

‘இந்த பொம்மைய அங்க வை...!’
‘போடி! இது எனக்குப் பிடிச்ச பொம்மை. முதல் படிலதான் வைப்பேன்!’
நானும் என் தம்பியும் சண்டை போட்டுக் கொண்டே அடுக்குவோம்.
அம்மாவின் குரல் ஒலிக்கும்: ’எங்க ரெண்டுபேரும் தசாவதார பொம்மைகளை சரியா அடுக்குங்கோ பார்க்கலாம்...!’


ருவரும் கப்சிப். மனதிற்குள் ‘மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன....’ என்று சொல்லிப் பார்த்துக் கொள்வோம். பரசுராமனுக்கும், பலராமனுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது? பரசுராமன் தாடி வைத்திருப்பார். பலராமன் கையில் கலப்பை இருக்கும் – இப்படி நாங்களாகவே கண்டுபிடித்து வைப்போம். பத்து நாட்களும் எல்லார் வீட்டிற்கும் போய் அழைத்துவிட்டு வருவோம். அவரவர் வீட்டில் கொலு இருப்பதால் எப்போது முடிகிறதோ அப்போது அடுத்தவர் வீட்டிற்குப் போய் வருவார்கள். சுண்டல் கலெக்ஷன் முடிந்து வீட்டிற்குத் திரும்பி எல்லா சுண்டல்களையும் ஒன்றாகப் போட்டு அன்றைக்கு இரவு தொட்டுக் கொள்ள ஒரு மிக்ஸ்ட் சுண்டல் கிடைக்கும்!


சில வருடங்களுக்குப் பின் நாகப்பையர் தெருவிலேயே வேறு ஒரு வீட்டிற்கு குடித்தனம் வந்தோம். அது இன்னும் விசித்திரமான வீடு. சமையலறை மட்டும் கீழே. படுக்கையறை (அதே 5 படுக்கை-அறை!) மாடியில். பக்கத்துப் போர்ஷனிலேயே வீட்டுக்காரம்மாவும் அவர்கள் குடும்பமும் இருந்தது. அவர்களுக்கும் மாடியில் ஒரு அறை. அப்போதெல்லாம் அம்மா நிறைய பாரதியார் பாடல்கள் பாடுவாள். அப்போது அம்மாவிற்கு பிடித்த பாட்டு ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா! மாடியில் அந்த இரண்டு அறைகளைத் தவிர கொஞ்சம் திறந்த வெளியும் இருக்கும். அப்பா அலுவலகத்திலிருந்து திரும்ப தாமதமாகும். அப்பா வரும்வரை நாங்கள் அந்த அறைக்கு வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். அப்போது அம்மா மெல்லிய குரலில் இந்தப் பாட்டைப் பாடுவாள். வீட்டுக்காரம்மாவிற்கு ராணி என்று ஒரு பெண். நாங்கள் எல்லாம் சமவயதினர். 


ரு நாள் ராணி வந்து என்னிடம் ‘உங்கம்மா தினமும் நாய்’ ‘நாய்என்று பாடுகிறாளே, அந்த பாட்டை எனக்கும் சொல்லிக் கொடேன்என்றாள். ஒரு நிமிடம் திகைத்த நான் என் அம்மாவிடம் ஓடிப் போய் சொன்னேன். அம்மா! ராணிக்கு நாய் பாட்டு கத்துக்கணுமாம்!எல்லோருக்கும் விவரம் புரிந்து அன்றைக்கு நாங்கள் சிரித்த சிரிப்பு! இன்றைக்கும் சிரிப்புடனேயே இதை எழுதுகிறேன்.அசைபோடுதல் தொடரும்.......


அதீதம் இணையஇதழில்வெளிவந்துகொண்டிருக்கும்தொடர்   

1 கருத்து:

  1. நினைவலைகள் அருமை.
    அசைபோடுதல் அருமை. நமக்கு இனி அசைபோடுதல்தானே! அந்தக்காலத்தில் என்று ஆரம்பித்தால் என் பையன் சொல்வான் அம்மா உனக்கு வயது ஆகிவிட்டது என்று. அந்தக்கால நினைவுகளை அசைபோடுவது ஒரு தனிச்சுவை.
    கொலுவைத்தல் உடன்பிறந்தவர்களுடன் எங்கள் வீட்டை நினைவு படுத்தியது. எங்கள் வீட்டில் அம்மா கொலுபடி செட் செய்வார்கள் நாங்கள் பொம்மைகளை எங்கள் இஷ்டம் போல் வைப்போம்.
    ராணியின் பாட்டு ஆசை சிரிக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு