செவ்வாய், 21 ஜூன், 2016

நானும் தையற்கலையும்!





எத்தனை தான் அம்மாவிற்கு பிடித்ததைச் செய்தாலும் அம்மா என்னை அந்த தையல் இயந்திரம் அருகில் விடவே மாட்டாள். எனக்கு ரொம்பவும் பிடித்தமான பாபினில் நூல் சுற்றுவது என்பதை செய்ய எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. எப்படியாவது அதைச் செய்துவிட வேண்டும் என்று எனக்கு ஆசை எழுந்துகொண்டே இருந்தது. இப்போது வரும் தையல் இயந்திரங்களில் இருப்பது போல அந்த பழைய கால இயந்திரத்தில் பாபின் வட்டமாக சின்னதாக இருக்காது. நீளமாக இருக்கும். பாபினின் மேல் மூடியும் நீளமாக இறக்கை இல்லாத குட்டி விமானம் போல இருக்கும்.
                   தையல் இயந்திரம்                            மூடியுடன் 

'என்னுடையது சிங்கர் மிஷின்' என்று அம்மா ரொம்பவும் பெருமையாகச் சொல்லிக் கொள்வாள்.
என் அம்மா அதி தீவிர ஒழுங்கை கடைப்பிடிப்பவள். தைக்க உட்கார்ந்தால் தைக்க வேண்டியதை தைத்து முடித்துவிட்டு தையல் இயந்திரத்தை அதன் இடத்தில் வைத்துவிட்டுத்தான் எழுந்திருப்பாள். நாங்கள் இருந்த வீடுகள் எல்லாமே சின்னவை. பெரிய அலமாரிகளோ இரும்பு பீரோக்களோ எங்கள் வீட்டில் இருந்ததில்லை. ஒரு ஓரத்தில் படுக்கைகள் அடுக்கப்பட்டிருக்கும். படுக்கை என்றால் ஆளுக்கு ஒரு ஜமக்காளம். ஒரு தலைகாணி, ஒரு போர்வை அவ்வளவுதான். என் அக்காவிற்கு மட்டும் இரண்டு தலைகாணிகள். காலுக்கு தலைகாணி இல்லையென்றால் அவளுக்குத் தூக்கமே வராது. வீட்டுச் சாமான்கள் எல்லாம் கீழே தான் இருக்கும். அவைகளுடன் கூட தையல் இயந்திரமும் சுவர் ஓரமே இருக்கும். மிகச் சுலபமாக எடுத்துவிடலாம். ஆனால் அம்மாவிடம் எங்கள் எல்லோருக்குமே பயம் அதிகம். அம்மாவின் அனுமதி இல்லாமல் எதையும் செய்யமாட்டோம்.

ஒருநாள் எனது ஆசையைத் தீர்த்துக் கொள்ளும் நேரமும் வந்தது. அம்மா எங்கள் சக குடித்தனக்காரர் விமலா மாமியுடன் சினிமாவிற்கு போயிருந்த சமயம். ரொம்பவும் தைரியமாக தையல் இயந்திரத்தை நகர்த்தினேன். தையல் இயந்திரத்திற்கு மூடி உண்டு. அதை எடுத்துவிட்டு ஊசி அருகேயிருந்த பாபினை எடுக்க முயன்றேன். சரியாக எடுக்க வரவில்லை. நூல் சிக்கிக்கொண்டது. தையல் இயந்திரத்தின் மேலேயே இருந்த கத்தரிக்கோலை எடுத்து நூலை கத்தரித்தேன் – விளைவு புரியாமலேயே. நூல்தண்டில் நூல் ஏற்கனவே இருந்தது. என்ன செய்வது? பரவாயில்லை. அதன்மேலேயே சுற்றலாம் என்று ஆரம்பித்தேன். சரியாகவே வரவில்லை. சுற்றவும் முடியாமல் நூலை அவிழ்க்கவும் முடியாமல்...! திண்டாடி....

ஒருவழியாக நூல்தண்டை எடுத்து பாபினுக்குள் போட முயன்றால் அது பாபினுக்குள் போகவே மறுத்தது. அதிகமாக நூல் சுற்றிவிட்டது புரிந்தது. நூலை அவசரஅவசரமாகப் பிரித்தேன். பிரித்த நூலை என்ன செய்வது? மறுபடியும் நூல்கண்டிலேயே சுற்ற ஆரம்பித்தேன். அழகாகச் சுற்றப்பட்டிருந்த நூலின் மேல் கோணாமாணாவென்று சுற்றி...... கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய தைரியம் எல்லாம் காணாமல் போய் பயம் பிடித்துக்கொண்டது. மறுபடி மறுபடி முயன்று, தோற்று......அம்மா வரும் நேரம் ஆகிவிட்டதே!

எப்படி எப்படியோ என்னென்னவோ செய்து தையல் இயந்திரத்தை மூடி, மறுபடியும் சுவரோரம் தள்ளி வைத்துவிட்டேன்! அம்மா அன்று முழுவதும் எதுவும் தைக்கவில்லை. நானும் பேசாமல் இருந்துவிட்டேன். அடுத்தநாள் அதற்கடுத்தநாள் எதுவுமே நடக்கவில்லை. ஒருவாரம் கழித்துத்தான் அம்மா தையல் இயந்திரம் அருகே வந்தாள். அதுகூட என்னாவாயிற்று என்றால் அம்மாவின் தோழி ஒருவர் வந்து ஏதோ தைக்கவேண்டும், கொஞ்சம் உங்கள் தையல் இயந்திரத்தில் தைத்துக்கொள்ளலாமா என்று கேட்டார். அம்மாவிற்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. தன்னைத்தவிர வேறு யாரும் அதைத் தொடுவதை அம்மா விரும்பமாட்டாள். ஆனால் இந்த தோழி அம்மாவிற்கு ரொம்பவும் பிடித்தமானவர். வேறுவழியில்லாமல், மனசில்லாமல் அம்மா தையல் இயந்திரத்தை நகர்த்தி அந்த மாமி தைப்பதற்கு வசதி செய்து கொடுத்தாள்.

தையல் இயந்திரத்தின் அருகில் உட்கார்ந்து கொண்டு தைக்க ஆரம்பித்த மாமி, சிறிது நேரத்திற்கெல்லாம் பாபின் சுற்றவில்லையே என்றார் அம்மாவிடம். நான்தான் குளறுபடி பண்ணி வைத்திருந்தேனே! அம்மாவிற்கு ஒரே சந்தோஷம்! ‘அடடா! எனக்கு மறந்தே போய்விட்டது. பாபினில் ஏதோ கோளாறு. அதுதான் தைக்கவில்லை. ரிப்பேருக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன்’ என்றவாறே தையல் இயந்திரத்தை மூடி சுவரோரமாக நகர்த்தி வைத்துவிட்டாள். பாவம் மாமி! எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டார்.

அம்மா அன்றைக்கு நல்ல மூடில் இருந்தாள். உண்மையை சொல்லிவிடலாமா என்று பலதடவை நினைத்துக்கொண்டேன். ஆனால் தைரியம் வரவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அம்மா தையல் இயந்திரத்தை எடுத்து வைத்துக்கொண்டாள். ‘இன்னிக்கு எனக்கு இருக்கு’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் ஆன்டி-கிளைமாக்ஸ் ஆகிவிட்டது. அம்மா சரியாகப் போடாதிருந்த பாபினை வெளியில் எடுத்து மாட்டிக்கொண்டிருந்த நூலையெல்லாம் பிரித்து எடுத்துவிட்டு மறுபடி பாபினில் நூல் சுற்றி போட்டாள். இயந்திரம் நன்றாகத் தைக்க ஆரம்பித்துவிட்டது! அம்மா சொன்னாள்: ‘தையலே தெரியாம தைக்கவந்துட்டா பாரு! பாபின் சுத்தல அது சரியில்ல; இது சரியில்லன்னுட்டுப் போறா. ஆடத் தெரியாதவ கதைதான்....’ என்று சொல்லிக் கொண்டே போனாள். முதலில் புரியாத எனக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.

தன்னுடைய தோழிதான் நூலைச் சுற்றத் தெரியாமல் சுற்றியிருக்கிறாள் என்று அம்மா நினைத்துவிட்டாள். அப்பாடா! நான் தப்பித்தேன். அந்த மாமியை மனதார வாழ்த்தினேன். அம்மாவிற்கு நான் தையல் இயந்திரத்தைத் தொட்டதும் தெரியாது. நூலைக் கன்னாபின்னாவென்று சுத்தியதும் தெரியாது.  பாவம் மாமி என்று நினைத்துக்கொண்டாலும் என் அம்மாவிடமிருந்து என்னைத் தப்பிக்க வைத்த மாமிக்கு ஒரு ‘ஓ’ போட்டேன்.

பிறகு அம்மாவிடமே போய் என் ஆசையைச் சொல்லி பாபினில் நூல் சுற்றுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன். அன்றிலிருந்து அம்மாவிற்கு நான்தான் அப்ரசெண்டி! கலர் துணிகள் தைக்கும்போது அந்தந்தக் கலர் நூல் சுற்றிக் கொடுப்பேன். இதையெல்லாம் செய்த நான் தையல் மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. கொஞ்சம் பொறுமையுடன் அம்மாவிடமே தையல் கற்றுக்கொண்டிருந்தால் நானும் தையல் கலையில் நிபுணி ஆகியிருப்பேன். அநியாயமாக உலகம் ஒரு அதிசிறந்த தையல்காரியை இழந்துவிட்டது!

இன்னும் அசைபோடலாம்.....!

அதீதம் இதழில் வெளியாகி வரும் தொடர்




.

1 கருத்து:

  1. மிக அருமை.மத்ய தரக் குடும்பம் எப்படி இருக்கவேண்டுமோ அப்படித்தான் நாமும் வளர்ந்திருக்கிறோம். நான் தையல் வெறுமே கற்றுக் கொண்டதோடு சரி. நல்ல பெடல் மெஷினைத் தானம் கொடுத்தேன். அம்மா எல்லாக் கலைகளிலும் கெட்டிக்காரி. அதனால் தான் பெண் மக்கு. மிக நன்றி ரஞ்சனி. அழகான நினைவுகள்.

    பதிலளிநீக்கு