வெள்ளி, 8 ஏப்ரல், 2016

புதுயுகம் பிறக்கட்டும்!எமக்குத் தொழில் அசை போடுதல் 13இந்த முறை என்ன எழுதப் போகிறேன் என்ற எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் எழுத ஆரம்பித்திருக்கிறேன். மனம் முழுக்க என் அக்காவின் நினைவுகள். அவள் நடமாடியது, எங்களுடன் பேசிப் பழகியது எல்லாமே மறந்து போய்விட்டது. கடைசியில் அவள் அமைதியாக இறுக மூடிய கண்களும், வாயுமாகப் படுத்திருந்ததுதான் நினைவில் அகலாமல் இருக்கிறது. தினசரி வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறேன் – சாப்பிடுகிறேன், உணவு சமைக்கிறேன், பேசுகிறேன், உறங்குகிறேன் – அவள் நினைவு மட்டும் அடிக்கோடிட்டது போல எல்லா செயல்களுக்கும் அடியில் இழையோடிக் கொண்டே இருக்கிறது. அத்தனை சுலபமாக மறந்து போக முடியாது அவளை.


பிப்ரவரி 4 ஆம் தேதி உலகப் புற்றுநோய் தினம். செய்தித்தாள்களிலும், முகநூலிலும் நிறைய செய்திகள் புற்றுநோய் பற்றி, சிகிச்சைக்குப் பின் அதன் கோரப்பிடியிலிருந்து விடுபட்டு  வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பற்றி, வருமுன் காப்பது எப்படி என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எது ஆரம்பம் என்றே தெரியாமல் போகிறது என்பது தான் இந்த கொடிய நோயின் சிறப்புத் தன்மை என்று கூட சொல்லலாம். 


சின்னவர்கள் பெரியவர்கள், கருப்பு சிவப்பு,  ஆண் பெண் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் தாக்கும் நோய் இது. நோயைவிட கொடுமையான சிகிச்சை முறை. கீமோதெரபி என்பது பல வேதியியல் பொருட்களின் கலவை. அதை குளுகோஸ் போல ஏற்றுகிறார்கள். என் அக்காவிற்கு 24 மணிநேரமும் கீமோ மருந்துகள் ஏறிக் கொண்டிருக்கும். மிகமிக மெதுவாக ஏறும். சாப்பிடும்போது, பாத்ரூம் போகும்போது மட்டும் எடுத்துவிடுவார்கள். என் அக்கா அப்படியே அசந்து போய்விடுவாள். மிகப்பெரிய கொடுமை இந்த கீமோவில் என்னவென்றால் வீட்டிற்கு வந்தவுடன் ஒரு குமட்டல் ஆரம்பிக்கும், பாருங்கள் அடிவயிற்றிலிருந்து ஓங்கரிப்பாள். வயிறே வாய் வழியாக வெளியே வந்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு இருக்கும். நீர் கூட நிற்காது. வெளியே வந்துவிடும். கொடுமை!


நம்மூரை விட வெளிநாடுகளில் இந்த நோயால் அவதிப்படுபவர்கள் இன்னும் அதிகம் என்று புத்தகங்களில் படித்தேன். இந்த நூற்றாண்டில் மக்களை அதிகமாகக் கொல்லும் வியாதி இது தான். ‘பிணிகளின் சக்கரவர்த்தி’ (EMPEROR OF ALL MALADIES) என்று புற்றுநோயின் வாழ்க்கை வரலாறு என்ற தன்னுடைய புத்தகத்தில் இந்த நோயைக் குறிப்பிடுகிறார், டாக்டர் சித்தார்த் முகர்ஜி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த டாக்டர் அமெரிக்காவில் மருத்துவராகவும், புற்றுநோய் வல்லுனராகவும் இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தப் புத்தகம் புலிட்சர் விருது பெற்றது. புற்றுநோய் பற்றி மருத்துவ ரீதியாகவும், தனிப்பட்டமுறையிலும் செய்யப்பட நேர்த்தியானதொரு புலனாய்வுஎன்று இந்தப் புத்தகத்திற்கு விருது வழங்கிய நீதிபதிகள் குழு சொல்லியிருக்கிறது.


முதல்முறை இந்தப் புத்தகம் என் கையில் கிடைத்தபோது படிப்பதா வேண்டாமா என்று ஒருவித மிரண்ட நிலையில் இருந்தேன். எனது அக்காவிற்கு இந்த நோய் இருப்பது தெரிந்து குடும்பத்தில் எல்லோருமே இடிந்து போயிருந்த சமயம் அது. என் அப்பாவை இந்த நோய்க்குத்தான் பலி கொடுத்தோம். இன்னொரு உறவினரும் இந்த நோய்க்கு பலியானார். அதனால் அந்தப் புத்தகம் என்னுள் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது.


ஆனால் என் கண்ணெதிரே உள்ள ஒரு புத்தகத்தை படிக்காமல் விடலாமா என்ற கேள்வி மனதினுள் எழ, மனதை தைரியப்படுத்திக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன். 


குருதியியல் நிபுணராகவும், புற்றுநோய் துறையில் மாணவராகவும் இருந்த டாக்டர் முகர்ஜியின் அனுபவங்களும் புற்றுநோயின் வரலாறு, சிகிச்சை முறைகள்,  ஏற்கனவே நடந்த, தற்சமயம் நடந்து வரும் ஆராய்ச்சிகள் ஆகியவை இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 4,600 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக எகிப்திய மருத்துவர் Imhotep என்பவரால் புற்றுநோய் அறியப்பட்டதிலிருந்து இந்த நோயின் வரலாற்றை சொல்ல ஆரம்பிக்கிறார் டாக்டர் முகர்ஜி. கிரேக்கர்களுக்கு செல் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் மனித உடலில் உள்ள திரவங்களைப் பற்றியும், அவைகளின் சமநிலை பாதிப்படுவதால் நமக்கு நோய்கள் உண்டாகின்றன என்று அறிந்திருந்தனர். இந்த புத்தகத்தின் படி புற்றுநோய் கி.மு. 440 ஆம் ஆண்டிலேயே கிரேக்க வரலாற்று ஆசிரியரால் (Herodotus) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெர்சியாவின் ராணியும், சைரஸ்-இன் மகளுமான அடோசா (Atossa) தனது மார்பகத்தில் ஒரு கட்டி இருப்பதை கண்டு, தன் கிரேக்க அடிமை (Demasitis) யிடம் அந்தக் கட்டியை அறுத்து எடுக்கும்படி சொல்லுகிறாள். இந்த முறையால் தாற்காலிக குணம் கிடைக்கிறது. இதுவே புற்றுநோய்க்கு செய்யப்பட முதல் அறுவை சிகிச்சை.


நம்மூரிலும் சிலர் மூலிகை சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம் என்று சொல்லுகிறார்கள். இவையெல்லாம் எத்தனை தூரம் நடைமுறை சாத்தியம் என்பது பெரிய கேள்விக்குறி தான் இன்றுவரையிலும். நான் கூட அக்காவிற்காக சிமரூபா மூலிகை பொடி வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தேன். அவள் ஒருமுறையோ இருமுறையோ பயன்படுத்தி இருக்கிறாள் அவ்வளவுதான். சாப்பிட்டபின் வயிற்றுவலி அதிகமாக இருந்ததாகச் சொன்னாள். 


இந்த மூலிகை வைத்தியர்கள் நோயாளிகளுடன் நேரடியாகப் பேசி அவர்களது அறிகுறிகளை கவனித்து மருந்தின் அளவைக் கூட்டி அல்லது குறைத்து கொடுத்து, நோயாளிகளின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அவற்றை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கில மருத்துவம் இந்த வகையில் ஒரு முன்னோடியாக இருக்கிறது என்று சொல்லலாம். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட முகநூலில் ஒருவர் கற்றாழையை தேன், வைன் அல்லது பிராந்தியில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். முற்றிய நிலையில் இருப்பவர்களும் சாப்பிட்டு குணமடைந்து இருக்கிறார்கள்; இதற்கு ஆகும் செலவு வெறும் நூறு ரூபாய் மட்டுமே என்று எழுதியிருந்தார். ஆதாரங்கள் என்ன என்று தெரியவில்லை.


அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் திருமதி சாந்தா ‘புற்றுநோயை அடியோடு ஒழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம். இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளையும் செய்திருக்கிறோம்’ என்கிறார். ‘ஒவ்வொரு இறப்பிலும் நாங்கள் கற்கிறோம். மருத்துவர்களின் கூட்டம் கூட்டப்பட்டு, என்ன தவறு செய்திருக்கிறோம் என்று விவாதித்து திருத்திக் கொள்ளுகிறோம். அதேபோல பிழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறார்கள். ஒரு குழந்தை எங்களால் காப்பாற்றப்பட்டு வளர்ந்து படித்து எல்லோரையும் போல வாழ்க்கையைத் தொடங்கும்போது எங்களுக்கு கிடைக்கும் மனநிறைவு அளவிட முடியாதது’. 


‘இன்னும் நாங்கள் நிறைய செய்யவேண்டும். இதைத்தவிர வேறெதுவும் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை’ என்று சொல்லும் இவரது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று, இந்த உலகில் புற்றுநோய் இல்லாத ஒரு புதுயுகம் பிறக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் இறைவனை பிரார்த்திப்போம்.


அதீதம் இணையஇதழில் வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைத் தொடர்


5 கருத்துகள்:

 1. பயமுறுத்தும் நோய்களில் புற்று நோய் முதலிடத்தில் உள்ளது.பேரை கேட்கும்போதே லேசான நடுக்கம் ஏற்படுவது உண்மை

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் செய்யும் பிரார்த்தனையில் நானும் கலந்துகொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். நாராயணீயம் முடிந்தால் படிக்கவும். ஒரு நாளைக்கு இத்தனை சதகம் என்று வரையரைப் படுத்திக் கொள்ளவும்

  பதிலளிநீக்கு
 4. இவரது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று, இந்த உலகில் புற்றுநோய் இல்லாத ஒரு புதுயுகம் பிறக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் இறைவனை பிரார்த்திப்போம்.//

  நானும் பிரார்த்திக்கிறேன்.

  நானும் என் அக்காவை இந்த புற்றுநோய் அரக்கனுக்கு கொடுத்து இருக்கிறேன்.
  என் தோழி என்று தான் சொல்ல வேண்டும். என் அக்கா 25 வயதில் போய் விட்டாள் இறைவனிடம்.

  நேற்று உலக செய்தியில் இசையால் புற்று நோயை குணபடுத்தி இருப்பதை ஆராயச்சி மூலம் கண்டு பிடித்து இருப்பதாய் ஒரு டாகடர் சொன்னார்.
  புற்றுநோயாளிகள் அனைவரையும் ஒன்றாக ஒரு இடத்தில் இசை பயில்கிறார்கள், பாடுகிறார்கள். அவர்களை சோதனை செய்த போது புற்று வளர்வது கட்டுபடுத்தபட்டு இருக்கிறது என்று கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
  இசையை ரசிப்போம், வாய்விட்டு பாடுவோம். கவலையை மறப்போம்.


  பதிலளிநீக்கு
 5. புதுயுகம், புற்று நோயில்லாத உலகம் பிறக்கட்டும் ரஞ்சனி.

  பதிலளிநீக்கு