திங்கள், 4 ஏப்ரல், 2016

‘சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது!’எமக்குத்தொழில் அசை போடுதல் 9 
திருவட்டீச்வரன்பேட்டையில் நாங்கள் இருந்தபோதுதான் சீன-இந்திய யுத்தம் வந்தது. (நாங்க அங்க இருந்ததற்காக இல்லை இந்த சண்டை!) 1962 ஆம் வருடம் என்று என் அக்கா சொன்னாள். அந்த சமயத்தில் எந்த திரைப்படத்திற்குப் போனாலும் இந்த போரைப்பற்றிய ஒரு ஆவணப் படம் போடுவார்கள். பெயர் ‘சிங்கநாதம் கேட்குது’
நிறைய சினிமா நடிக நடிகையர் அதில் வருவார்கள். நடிகைகள் சாவித்திரி, சரோஜாதேவி எல்லோரும் தங்கள் கைகள் கழுத்துகளில் போட்டிருக்கும் நகைகளைக் கழற்றிக் கொடுப்பார்கள், யுத்த நிதிக்கு. ஜெமினி, சிவாஜி போன்ற நடிகர்கள் ராணுவத்தில் சேருவார்கள். படம் ஆரம்பிக்கும் போது வரும் பாடலின் முதல் நாலுவரிகள் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது:


‘சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது
சுதந்திரத்தின் சக்தி வீர சங்கநாதம் கேட்குது!’


நாங்கள் எல்லோரும் கண்கொட்டாமல் உணர்ச்சி வசப்பட்டுப் பார்த்துக் கொண்டிருப்போம். பையன்களுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையும், பெண்களுக்கு தங்கள் நகைகளை யுத்தநிதிக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டாகும் அளவிற்கு சம்பவங்கள், பாடல்கள் என்று இருக்கும் இந்தப் படம். இந்தப் படம் தியேட்டர்களில் மட்டுமல்லாமல் தெருக்களிலும் வெள்ளைத்துணிகள் கட்டப்பட்டு காண்பிக்கப்பட்டது. எங்கள் கனகவல்லி பள்ளிக்கூடம் அருகே நான் அந்தப் படத்தை முதல் முதலாகப் பார்த்தேன். இமயமலைப் பகுதிகள், வீரர்களின் அணிவகுப்பு, சண்டைக் காட்சிகள் என்று – படம் கருப்பு வெள்ளையில் தான் இருக்கும். ஆனாலும் பார்த்து முடித்தவுடன் தேசபக்தி பீறிட்டுக்கொண்டு வரும்!இணையத்தில் இந்தப்படத்தைப் பற்றித் தேடியபோது கிடைத்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.


நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தன் சொந்த செலவில் எடுத்த டாக்குமெண்ட்டரி படம் இது. இதனை இலவசமாக வெளியிட்டார். இந்த டாக்குமென்டரியில் அப்போதைய பிரபல நடிகர்கள் (ஜெமினி, தங்கவேலு உள்பட பலர்) இலவசமாக நடித்துக்கொடுத்தனர். தியேட்டரில் அரைமணி நேரம் ஒடும் இப்படம் எல்லாதிரையரங்குகளிலும் காண்பிக்கப்பட வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசால் உத்தரவிடப்பட்டு, அதன்படி தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் இடைவேளை முடிந்து, மெயின் படம் துவங்கும் முன்பாக காண்பிக்கப்பட்டது. அதிலும் தேசத்தலைவர்கள் பலர் காண்பிக்கப்பட்டனர். பார்த்த மக்கள் அனைவரும் தேசப்பற்றால் உந்தப்பட்டனர். யுத்தநிதியாக பணமாகவும், பொருட்களாகவும், நகைகளாகவும் அள்ளி வழங்கினர். நாடே ஒன்றுபட்ட நின்ற நேரம் அது. பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன், உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் ஆகியோரைக்கொண்ட பாதுகாப்புக்குழுவில், தி.மு.கவைச்சேர்ந்த நாஞ்சில் மனோகரனையும் இடம் பெற வைத்தார் அண்ணாதுரை.


ஆனால் சுதந்திரம் பெற்றதிலிருந்து நமக்கு எதிரிகள் யாரும் இல்லை என்ற ஒரு கருத்து நம் தேசத்தலைவர்களின் மனதில் இருந்தது.  பாதுகாப்புக்காக ராணுவத்தை பலப்படுத்தத்  தேவையில்லை என்று நினைத்திருந்ததால்  அந்த போரில் இந்தியா தோற்றது. லடாக் பகுதி சீனர் வசமானது. (இந்தியா தோற்ற ஒரே போர் அதுதான்). அதன்பின்னர்தான் அண்டைநாடுகளின் வஞ்சக எண்ணத்தையறிந்த நேரு, ராணுவத்தை பலப்படுத்த முனைந்தார். நேருவின் உடல்நிலை பலவீனப்பட்டதற்கு சீனப்போரில் அடைந்த தோல்வியும் முக்கிய காரணம்.


இந்நிலையில்தான் இந்திய சீனப் போரை மையமாக வைத்து கண்ணதாசன் ‘இரத்தத் திலகம் என்ற படத்தை தயாரித்தார். போர் முடிந்த பின் இந்தப் படம் எடுக்கப்பட்டது. படத்தில் 'ஒதெல்லோ' நாடகம் சிவாஜியால் நடிக்கப்பட்டது. இந்த நாடகத்தின் நீளம் அதிகமானதால் திகட்டிப்போனது. 


ஆனாலும் போர்முனைக்காட்சிகள் உணர்ச்சியை ஊட்டின.
'பனி படர்ந்த மலையின்மேலே, படுத்திருந்தேன் சிலையைப் போலே
கனிகொடுத்த மாலை தாங்கி கன்னி வந்தாள் கண் முன்னாலே’
என்று சிவாஜி பாரதத்தாயை நினைத்துப் பாடும் பாடல் மிகவும் பிரபலமானது.


பாடலின் ஒரு வரியில்...
பண்பில் நிறைந்த மகன், வள நாட்டின் மூத்த மகன்,
இருக்கின்றான் தாயே, ஏங்காதே என்றுரைத்தேன்
என்ற வரிகளின்போது, தனது அலுவலக அறையில் இருக்கும் தொப்பியில்லாத நேருவைக்காண்பிப்பார்கள். மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும். 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல், கல்லூரி ஃபேர்வல் விழா என்று மட்டுமில்லை. எந்த ஒரு பிரிவுபசார நிகழ்ச்சியிலும் ஒலிக்கும் பாடல். அதிலும் அந்த வரிகள்... 


'எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ'
அப்படியே மனதை உருக வைக்கும்.


அடுத்து ஸ்டார் டாக்கீஸ்: இன்னும் இருப்பதாக என் அக்கா சொன்னாள். அந்தக் காலத்தில் ஜனக் ஜனக் பாயல் பஜேஎன்று ஒரு படம். நாட்டியத்தை அடிப்படையாகக் கொண்டு எடுத்த ஹிந்தி படம். புரிந்ததோ இல்லையோ மதராஸ் மக்கள் எல்லோரும் போய்ப் பார்த்து பிரமித்த படம். இந்த டாக்கீஸில் தான் ஓடு ஓடு என்று ஓடியது. என் பெற்றோர்களுடன் நானும் பார்த்த நினைவு. ஆனால் ஒரு சீன் கூட இன்று நினைவில் இல்லை! அந்த நாளைய பிரபல இயக்குனர் வி. சாந்தாராம் எடுத்த படம். நடனக் கலைஞர் திரு கோபி கிருஷ்ணாவும், சாந்தாராமின் மனைவி சந்தியாவும் நடித்த படம். இணையத்தில் இந்தப் படம் பற்றித் தகவல் தேடியபோது இந்தப் படம் வெளியான வருடம் 1955 என்று தெரிய வந்தது. ஆ! இரண்டு வயதுக் குழந்தைக்கு என்ன நினைவிருக்கும்?


நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த அரசு நடுநிலைப்பள்ளியும் திருவட்டீச்வரன்பேட்டையில் தான் இருந்தது. அந்த பள்ளிக்கு அருகில் பாண்டுரங்கன் சந்நிதி ஒன்று இருக்கும். கொஞ்சம் உயரத்தில் படிக்கட்டுகளின் மேல் ஏறி சந்நிதிக்கு உள்ளே போகவேண்டும். பக்கத்தில் ஒரு செட்டியார் கடை. எங்கள் பேனாக்களுக்கு இங்க் வாங்குவது இங்குதான். பேனாவை அவரிடம் கொடுத்து முழு பேனாவிற்கும் இங்க் போட்டுக் கொள்ள மாட்டோம். ஒரு சொட்டு இரண்டு சொட்டு என் விடச் சொல்லுவோம். அவர் என்ன காசு கேட்கிறாரோ அதைக் கொடுத்து விடுவோம்!


அந்த ஏரியாவிலேயே இருந்த இன்னொரு ஸ்கூல் (பஜனை) மண்டல் ஸ்கூல். வெள்ளிக்கிழமையானால் இங்கு பூஜை நடந்து வருபவர்களுக்கெல்லாம் பிரசாதம் கிடைக்கும். பெரும்பாலும் ஏதாவது ஒரு சுண்டல் இருக்கும். அதனால் நாங்கள் இந்த பள்ளிக்கு வைத்த செல்லப்பெயர் ‘சுண்டல் ஸ்கூல்!’


அதீதம் இணையஇதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர்

2 கருத்துகள்:

  1. மலரும் நினைவுகள் மிக அருமை.
    எவ்வளவு விஷயங்கள்! தேடி சேகரித்துக் கொடுத்த தகவல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. ‘சிங்கநாதம் கேட்குது’மூலமாக அதிக நிதி தந்தது தமிழ்நாடுதான் என்று சொல்வார்கள் !இதற்கு பிரதிபலனாக, இன்று வரை தமிழகத்துக்கு வேண்டிய அளவுக்கு நிதியோ ,திட்டங்களையோ மத்திய அரசு செய்யவில்லை என்பதுதான் உண்மை !

    பதிலளிநீக்கு