ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

தேனும் கசந்ததடி, ஹார்லிக்ஸ் –உம் பிடிக்கவில்லையடி!எமக்குத் தொழில் அசைபோடுதல் – 8

அரசு நடுநிலைப் பள்ளியில் என் அனுபவங்களைப் பற்றி எழுதுவதற்கு முன், திருவட்டீச்வரன்பேட்டையில் இன்னும் என் நினைவில் நிற்பவைகளை  எழுதுகிறேன்
.

முதலில் நினைவிற்கு வருவது திருவேட்டீச்வரன் கோவில். மிகப்பெரிய சிவன் கோவில். நேர் எதிரே ஒரு பிள்ளையார் கோவில். இவரைத் தான் தேர்விற்கு முன் ‘சோப்’ போட்டுவிட்டுப் போவோம். கையில் காசு என்பதே இருக்காது. அதனால் வேண்டுதல் எல்லாமே தோப்புக்கரணம் போடுவதுதான். அதுவும் கணக்குப் பரீட்சைக்கு முன்னால் நான் போடும் தோப்புக்கரணம் கணக்கில்லாதது. நாங்கள் கானாபாக் லேனுக்குக் குடியேறிய பின் அந்த வீட்டின் சொந்தக்கார மாமி திருமதி காமாட்சியுடன் இந்தக் கோவிலுக்கு சோமவாரம், பிரதோஷம் என்று வருவோம். சிலசமயங்களில் மாமி ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து வைப்பார். 


பிரதான சந்நிதியில் மூலவர் திருவேட்டீச்வரன் லிங்க வடிவில் காட்சி அளிப்பார். உற்சவர் திருப்பெயர் சோமாஸ்கந்தன். தாயார் ஷண்பகாம்பிகை. பிராகாரத்தில் நடராஜர் இருப்பார். தட்சிணாமூர்த்தி இருப்பார். தட்சிணாமூர்த்திக்கு கைதட்டிவிட்டு வருவோம். அவர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதால் அவருக்கு நாம் வந்து போவது தெரியாதாம். அதனால் நாங்கள் கைதட்டி அவரை தியானத்திலிருந்து எழுப்பி நாங்கள் வந்ததை அறிவித்துவிட்டு வருவோம்! இன்னொரு வேடிக்கையான வழக்கமும் எங்களிடையே இருந்தது. நாங்கள் கட்டியிருக்கும் பாவாடை நாடாவிலிருந்து  நூல் பிரித்துப் போடுவோம். அப்படிப் போட்டால் புதிய பாவாடை கிடைக்குமென்று! அந்தக் கோவிலில் 63 நாயன்மார்கள் உற்சவம் மிகவும் கோலாகலமாக நடக்கும். மார்கழி மாதம் திருவாதிரை அன்று ஸ்வாமி அதிகாரநந்தி வாகனத்தில் வீதி உலா வருவார். மார்கழி திருவாதிரை என் மாமாவின் பிறந்தநாள். மாமாவிற்காகவும் திருவாதிரை உற்சவத்திற்காகவும் என் அம்மா அன்று திருவாதிரைக்களியும், 7 கறிக்கூட்டும் செய்வாள். 
 

டாக்டர் ரிஷி: கோவில் அமைந்திருக்கும் அந்த அக்ராஹாரத்திலேயே எங்கள் குடும்ப டாக்டர் திரு ரிஷியின் வீடு இருந்தது. அவரது முழுப்பெயர் சப்தரிஷி. அவரது மருத்துவமனை வேறொரு இடத்தில் இருந்தது. எனக்கும் என் தம்பிக்கும் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகும். வேறென்ன, ஜுரம் தான். தொண்டைப்புண் ஆகி ஜுரம் வந்துவிடும். அதனால் அம்மா எங்களுக்கு பச்சைத் தண்ணீர் தரவே மாட்டாள். எப்போதும் காய்ச்சி ஆறின தண்ணீர்தான். அதேபோல ஐஸ்க்ரீமுக்கும் தடை. ஜுரம் வந்துவிட்டால், அம்மா எங்களைத் தூக்கிக்கொண்டு ரிஷி டாக்டரிடம் போவாள். எங்கள் வீட்டிலிருந்து அவரது மருத்துவமனை நல்ல தூரம். பாவம் அம்மா, எப்படித்தான் எங்களை தூக்கிக்கொண்டு போனாளோ என்று இன்றைக்குத் தோன்றுகிறது. அம்மாவிற்கு முடியவில்லை என்றால் கை ரிக்ஷாவில் போவோம். வேகாத வெய்யிலில் வியர்வை வெள்ளமாகப் பெருக, ரிக்ஷாக்காரர் எங்களை சுமந்து கொண்டு போவதைப் பார்த்தால் ரொம்பவும் பாவமாக இருக்கும். அதனாலேயே அம்மா தானே தூக்கிக் கொண்டு போவாள். அதுமட்டுமல்ல காரணம்.


மருத்துவமனை என்பது ரொம்பவும் பெரிதாக இருக்காது. போனவுடன் காத்திருப்பிற்கு ஒரு வராந்தா. அதில் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதைத்தாண்டி ஒரு அறை. அங்கு தான் டாக்டர் உட்கார்ந்திருப்பார். யாரையாவது பரிசோதிக்க வேண்டுமென்றால் அடுத்த அறைக்குள் அழைத்துப் போவார். அங்கு ஒரு படுக்கை இருக்கும். அதையும் தாண்டி அவரது மருந்து அலமாரிகள் இருக்கும் அறை. 


அந்த அறையில் ஒரு கலவையான வாசனை வரும். அவர் எழுந்து அந்த அறைக்குள் போகும்போது நாங்களும் கூடவே போவோம். சின்னதாக ஒரு உரல் வைத்திருப்பார். அதில் இரண்டு மூன்று வெள்ளை நிற மாத்திரைகளைப் போடுவார். சின்னதாக ஒரு உரல் வைத்திருப்பார். சின்னதாக ஒரு உலக்கை வைத்திருப்பார். (mortar & pestle) அந்த உரலில் மாத்திரைகளைப் போட்டு உலக்கையால் அதிராமல் தட்டி அவற்றைப் பொடி செய்து ஆறாகப் பிரித்து தனித்தனி பொட்டலம் கட்டுவார். பிறகு மருந்து பாட்டிலில் இரண்டு மூன்று மருந்துகளை ஒன்றாகக் கொட்டிக் கலந்து சிவப்பு நிறத் திரவம் ஆக மாற்றுவார். ஒரு கையகல நீள் செவ்வகக் காகிதத்தை எடுத்து நாலாக மடிப்பார். அதன் நான்கு மூலைகளையும் கத்தரித்து,  அதை பிரித்து அந்த பாட்டிலின் மேல் ஒட்டிக் கொடுப்பார். பாட்டிலில் இருக்கும் சிவப்பு மருந்தை அந்த காகிதத்துண்டு நாலாகக் பிரிக்கும் – நான்கு வேளைக்கு. சிலசமயம் அந்தக் காகிதத்தை 6 ஆக மடித்து கத்தரித்து ஆறுவேளைக்கு மருந்து கொடுப்பார். ஒரு வேளைக்கு மருந்துப் பொட்டலம் ஒன்று (தேனில் குழைத்து), ஒரு அளவு சிவப்புத் திரவம் சாப்பிட வேண்டும். அவர் மருந்து தயாரிக்கும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்போம். அந்த உலக்கையும், உரலும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். கத்தரித்து கீழே போடும் காகிதத் துண்டுகளை நாங்கள் பார்க்காத போது எங்கள் தலைமேல் போட்டு, ‘ஆரொரு தலைல ஆட்டுக்குட்டி மேயுது; கண்டவா கேட்டவா சொல்லாதீங்கோ!’ என்று பாட்டும் பாடுவார். அந்த மாதிரி ஒரு டாக்டரை இனி காணமுடியாது.


இரண்டு நாட்களில் ஜுரம் சரியாகி நாங்கள் பழையபடி ஆகிவிடுவோம். அந்தப் பொடிக்கு பெயர் ஹை-ஃபீவர் பொடி. தேனில் குழைத்து எங்கள் நாக்கில் தடவி விடுவாள் அம்மா. குமட்டும்! ‘ஊம்.....!’ என்ற அம்மாவின் மிரட்டலில்  குமட்டலையும் சேர்த்து முழுங்குவோம்! இரண்டு நாட்கள் அம்மா சாப்பாட்டு விஷயத்தில் ரொம்பவும் கெடுபிடி காட்டுவாள். கஞ்சிதான். சாதத்தைக் கண்ணில் காட்டவே மாட்டாள். டாக்டர் வீட்டிலிருந்து திரும்பி வரும்போது ஹார்லிக்ஸ் பாட்டில் ஒன்று வாங்கி வருவாள் அம்மா. ஜுரம் சரியாகும் வரை காலையில் காப்பிக்கு பதில் ஹார்லிக்ஸ் தான். இந்த அனுபவம் அடிக்கடி ஏற்படும். அதனாலேயோ என்னவோ, இன்றைக்கும் எனக்கு ‘தேனும் கசந்ததடி, ஹார்லிக்ஸ் –உம் பிடிக்கவில்லையடி!’


தொடர்ந்து அசை போடுவோம்!
அதீதம் இணையஇதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர்

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  அம்மா
  சொல்லிய விதம் சிறப்பு இணைய இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அனேகமாக எல்லா அம்மாக்கள் பட்டு இருக்கும் வேதனை. வெகு சுவாரஸ்யம் ரஞ்சனி. புரசவாக்கத்தில் ஆச்சார்யா என்று ஒரு டாக்டர். பாட்டி அங்கே அழைத்துப் போவார். மூன்று நாட்களில் சரியாகிவிடும். எனக்கு ஹார்லிக்ஸ் இன்றும் பிடிக்கும்மா. சாப்பிடத்தான் முடியாது.

  பதிலளிநீக்கு