வியாழன், 24 ஏப்ரல், 2014

வோட்டு போட்டாச்சு!


வோட்டு போட்டாச்சு என்று சந்தோஷமாகச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் கர்நாடகாவில் மொத்த வாக்குப்பதிவுகள் 65% தான். மக்களின் தேர்தல் குறித்த அலட்சிய மனப்பான்மை தொடருவது வருத்தத்தைக் கொடுக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூரு நகரில் குறைவான வாக்குகள் தான் பதிவாகியிருக்கின்றன என்பது பெரிய குறைதான். சென்ற முறையை (44%) விட இந்த முறை பரவாயில்லை என்பது சரியான கருத்து இல்லை. 

செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் உங்கள் பெயர் வாக்குப் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபாருங்கள் என்று பலமுறை அறிவிப்பு வந்தும் இணையம் மூலமும் இதைச் செய்யலாம் என்ற வசதி இருந்தும் பொதுமக்களின் மெத்தனம் வாக்குச் சாவடி வாசலில் நின்று கொண்டிருந்தவர்களின் பேச்சிலிருந்து தெரிந்தது. பலருடைய பெயர்கள் பட்டியலில் இல்லை. சிலரிடம் அடையாள அட்டை இல்லை. வீடு மாற்றிய விவரம் கொடுக்கவில்லை போன்ற சாக்குபோக்குகள் காதில் விழுந்த வண்ணம் இருந்தது.


தேர்தல் தினங்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே இங்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. தேர்தல் தேதியை மாற்றி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டும், ஏனோ தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. ஏப்ரல் 14 திங்கள் அம்பேத்கர் தினம். விடுமுறை. அதற்கும் முன் சனி ஞாயிறு விடுமுறை. 15, 16 இரண்டு நாட்கள் மட்டும் வேலை. பிறகு மறுபடி புனித வெள்ளி விடுமுறை. சென்றவார சனி, ஞாயிறு தினங்களையும் சேர்த்து, நடுவில் மேற்சொன்ன இரண்டு நாட்கள் விடுமுறையை எடுத்தக் கொண்டால் தொடர்ந்து பத்துநாட்கள் விடுமுறை. ஜாலியாக சுற்றுலா போவார்களா? வாக்களிக்க வருவார்களா? இதைத்தவிர கோடை விடுமுறையும் இங்கு மார்ச் மாதத்திலேயே தொடங்கி விடும். அம்மாக்கள் எல்லோரும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தங்கள் பிறந்த வீட்டிற்குப் போயிருப்பார்கள்.

சமீபத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல்கள் காரணமாக இந்த முறை இடது கைப்பெருவிரலில் மை தடவப்பட்டது.

இந்தத் தேர்தலில் தெற்கு பெங்களூரு தொகுதிதான் விஐபி தொகுதியாக மாறி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. ஆதார் அட்டை புகழ், இன்போசிஸ் இணை நிறுவனர், கோடீஸ்வரர் நந்தன் நிலேகனி காங்கிரஸ் சார்பில், 1996 லிருந்து ஐந்து முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கும் பாஜக பாராளுமன்ற அங்கத்தினர் திரு அனந்தகுமாரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்றால் சும்மாவா? ஆதார் திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.

குழந்தைகள் உரிமைக்காக போராடும் சமூக ஆர்வலர் திருமதி நீனா நாயக் ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டாலும் உண்மையில் திரு அனந்தகுமாருக்கும் , திரு நிலேகனிக்கும் இடையில்தான் பலத்த போட்டி.

ஐந்துமுறை தொடர்ந்து வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர், நிலேகனி இந்தமுறை அனந்தகுமாருக்கு சபாஷ், சரியான போட்டிதான். நிலேகனிக்கு மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த படித்தவர்களின் வாக்குகள் கணிசமாகக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஐந்துமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மக்கள் இப்போது அனந்தகுமாருக்கு மாற்றுத் தேடுகிறார்கள் என்கிறார் நிலேகனி.


நிலேகனிக்கும் அனந்தகுமாரை எதிர்கொள்வது கடினம்தான். அனந்தகுமார் தெற்கு பெங்களூரில் பழம் தின்று கொட்டை போட்டவர். இந்தத் தொகுதி அவரது கோட்டை என்றே சொல்லலாம். ஆதார் அட்டை காலைவாரி விட்டதில் நிலேகனியின் பெயர் கொஞ்சம் கேட்டுவிட்டது. ஆதார் அட்டையில் பதிக்கப்படும் தகவல்கள் நம் நாட்டிற்கு வெளியே சேமிக்கப்படுவது நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல என்ற வாதத்தை முன் வைக்கிறது, பாஜக.  ஆதார் அட்டையின் தோல்வியைத்தான் பாஜக கட்சியினர் நிலேகனிக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு விஷயமும் நிலேகனிக்கு எதிராக இருக்கிறது. அதாவது 1989 லிருந்து இதுவரை இந்தத் தொகுதியிலிருந்து பாராளுமன்றம் சென்றவர்கள் எல்லோருமே காங்கிரஸ் கட்சி அல்லாதவர்கள் தான்.

இந்த கடும்போட்டியை உணர்ந்து தானோ என்னவோ நிலேகனியின் மனைவி திருமதி ரோஹிணியும் கணவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கிவிட்டார். தனது கணவருக்கு பலம் சேர்க்க நடிகரும், நாடக ஆசிரியருமான திரு கிரீஷ் கர்னாட்-ஐயும் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் இந்தத் தொகுதியிலிருக்கும் படித்தவர்களின் வாக்குகள் நிலேகனிக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார் ரோஹிணி.

நிலேகனியும், ரோஹிணியும் பலவிடங்களிலும் வீதி நாடங்கங்கள் நடத்தினர். கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களைச் சந்தித்தனர். பூங்காக்கள், சேரிகள், குடியிருப்புகள் என்று ஒரு இடம் விடாமல் சென்று மக்களை சந்தித்தனர் இந்த தம்பதிகள்.

பெங்களூரு மாநகரப் பேருந்துகளிலும் தேர்தல் பிரசாரத்திற்காக பயணம் செய்தார் நிலேகனி. பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் அவலநிலையை அவர் உணர்ந்திருப்பார் என்று நம்பலாம். பேருந்துப் பயணத்தின்போது பேருந்துகளின் கண்ணாடிகளின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் பலவிதமான விளம்பரங்களும் அவரது கவனத்தை கவர்ந்திருக்க வேண்டும். இதனால் மக்களுக்கு எத்தனை இன்னல்கள் என்பதையும் நிலேகனி உணர்ந்திருப்பாரா?

நிலேகனிக்கு துணை ரோஹிணி என்றால் அனந்தகுமாருக்காக அவரது மனைவி தேஜஸ்வினி வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். வாக்காளர்கள் தேசிய அளவில் இந்த தேர்தலைப் பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் அனந்தகுமார். நாடெங்கும் வீசிக்கொண்டிருக்கும் மோடி அலையில் பயணம் செய்வதே சாலச்சிறந்தது, நாட்டிற்கு இப்போது தேவை நிலையான ஆட்சி, அந்த ஆட்சியை பாஜகவின் பிரதம மந்திரியாக அறிவிக்கப் பட்டிருக்கும் திரு மோடியால் மட்டுமே அளிக்கமுடியும் என்பதை தனது பிரச்சாரத்தில் சொல்லுகிறார் அவர்.

பெங்களூரு மத்திய தொகுதியில் நந்தன் நிலேகனியின் முன்னாள் சகா திரு வி. பாலகிருஷ்ணன் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நிற்கிறார். ஜேடி (எஸ்) சார்பில் முன்னாள் முக்கியமந்திரியும், இராமக்கிருஷ்ண ஹெக்டேயின் நெருங்கிய தோழரும் ஆன ஜீவராஜ் ஆல்வாவின் மனைவி திரு நந்தினி ஆல்வா நிற்கிறார். பாஜக சார்பில் பி.சி. மோகன், காங்கிரஸ் கட்சி சார்பில் ரிஸ்வான் அர்ஷத் ஆகியோர் நிற்கிறார்கள்.

இந்த நால்வரும் சென்ற ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்களை சந்தித்து பெங்களூரு நகரத்தின் குறைகளை விவாதித்தனர். ஆமை போல நகரும் போக்குவரத்து, பொறுமையை சோதிக்கும்  போக்குவரத்து நெரிசல், வளர்ந்துகொண்டே போகும் நகரத்திற்கு தேவையான சுத்தமான குடிநீர் வசதி, தினந்தோறும் மலைபோல குவியும் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை என்று பலவும் விவாதிக்கப்பட்டன.


என்ன நடந்து என்ன பயன்? நமது வாக்குகள் மூலமே நம்மால் நமக்கு வேண்டியதை பெற முடியும் என்பதை மக்கள் உணர மறுக்கிறார்களே!20 கருத்துகள்:

 1. வணக்கம்
  அம்மா

  நாட்டின் குடிமகள் என்பதை சரியாக செய்துள்ளீர்கள்..... நன்றி அம்மா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  அம்மா

  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. வாங்க ரூபன்.
  வருகைக்கும், கருத்துரைக்கும் த.ம. வாக்கிற்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 4. உங்களின் கடமையை முடித்து விட்டீர்கள்... மற்ற தகவல்களுக்கும் நன்றி அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தனபாலன்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. V.I.P தொகுதியான தெற்கு பெங்களூருவில் போட்டியிடும் இன்போஸிஸ் நந்தன் நிலேகேனி. மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் மற்றைய வேட்பாளர்கள் குறித்து சுவையான தகவல்கள்.

  “ வோட்டு போட்டாச்சு” - மகிழ்ச்சியான அனுபவம்தான்.
  த.ம - 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தமிழ் இளங்கோ ஸார்!
   வருகைக்கும், கருத்துரைக்கும், த.ம. வாக்கிற்கும் நன்றி!

   நீக்கு
 7. ஜனநாயகக் கடமையை - இனிதே நிறைவேற்றியமைக்கு மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜூ!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 8. ஓட்டுப் போட்டதுமல்லாமல் தெற்கு பெங்களூர் வேட்பாளர்களை ஒரு அலசு அலசி விட்டீர்கள் ரஞ்சனி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ராஜி!
   இந்த தேர்தலில் எல்லாருடைய கண்களும் எங்கள் தொகுதியின் மேல்தான். நான் எழுதாமல் விட்டால் எப்படி?
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 9. பதில்கள்
  1. வாங்க மீனா!
   உங்கள் கடைசி பெயரும் எனது கடைசி பெயரும் ஒன்றாக இருக்கிறதே!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 10. நல்ல விவரமான அலசல். மக்கள் உணர்ந்து வாக்குச் சாவடிக்கு வராவிட்டால் ஒழுங்கான அரசு எப்படி அமையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லி!
   நீங்கள் சொல்வது நிஜம். எப்போது நம் மக்கள் உணருவார்களோ, தெரியவில்லை.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 11. தங்கள் பதிவின் மூலம் தொகுதி
  நிலவரத்தை மிகச் சரியாக அறிய முடிந்தது
  மகள் இருக்கும் ஊர் என்பதால் கொஞ்சம்
  கூடுதல் ஆர்வத்துடன் படித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. பதில்கள்
  1. வாங்க ரமணி ஸார்!
   அடுத்தமுறை இங்கு வரும்போது எங்கள் வீட்டிற்கும் வாருங்கள்.
   த.ம. 5 வது வாக்கிற்கு நன்றி!

   நீக்கு
 13. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  பதிலளிநீக்கு