புதன், 9 ஏப்ரல், 2014

திருவாளர் பொதுஜனம் என்ன நினைக்கிறார்?


தேர்தல் முடிவுகள் – 2014

ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று ஒரு சொலவடை உண்டு. இந்தமுறை நம்மூரு மூன்று பட்டிருக்கிறதே! கூத்தாடியின் கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சிகளுக்கு கொண்டாட்டமோ, கொண்டாட்டம். சத்தம் தாங்கமுடியவில்லை, சாமி! எப்போது தேர்தல் முடிந்து வீடு எப்போது அமைதிக்குத் திரும்பும் என்று இருக்கிறது. அவர்கள் இருபத்துநான்கு மணிநேரம் ஒலிபரப்பினால், அதையே திருப்பித் திருப்பி 48 மணிநேரமும் வேறு வேறு சானல்களில் கேட்டால் வீட்டில் இருப்பவர்கள் எங்கு போவது? எங்கள் காதுகளைக் காப்பாற்று இறைவா!

இப்படி நொந்துகொண்டாலும், சில நகைச்சுவைகளும் இருக்கத்தான் செய்கிறது. Headlines today சானலில் வரும் So Sorry..! ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும் அவைகளின் தலைவர்களையும் சித்தரிக்கும்விதம் சுவாரஸ்யம், பலசமயம் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கிறது. வடஇந்தியாவில் இருக்கும் தேர்தல் தீவிரம் இங்கு நம் பக்கத்தில் இல்லையோ என்று தோன்றுகிறது. அந்த சானல்களில் வரும் ஆர்னாப் கோஸ்வாமி, பர்கா தத், ராகுல் கன்வல் போல ஏன் இங்கு எவரும் காணவில்லை? இங்கு நடக்கும் விவாதங்களும் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் இருக்கின்றன. என்ன காரணம்?

தேர்தல்கள் ஆரம்பித்துவிட்டன. முடிவுகள் எப்படி இருக்கும் என்று சில சானல்களும், எப்படி இருக்க வேண்டும் என்று கட்சிகளும் தங்களுக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று சொல்லுகிறது. சென்னையை சேர்ந்த ஜோசியர், நியுமராலாஜிஸ்ட் திரு கே.வி. கோபால்கிருஷ்ணன் ஒவ்வொரு முறை சொல்லும் கணிப்புகளும் நூறு சதவிகிதம் பலிக்கின்றனவாம். இந்த முறை அவர் சொல்லும் கணிப்புகள் இவை:

·                  அடுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி.
·                  பாஜக/என்டிஏ கூட்டணிக்கு 286 இடங்கள் காங்கிரஸ்/யுபிஏ கூட்டணிக்கு   100 இடங்கள்.
·                இந்திய வரலாற்றிலேயே மிகவும் மோசமானதொரு தோல்வியை        காங்கிரஸ் சந்திக்கும்.
·                 காங்கிரஸ் 63 இடங்களைப் பிடிக்கும்.
·               இரண்டு பெருந்தலைகள் தோல்வியை சந்திப்பார்கள். (யார் யாரென்று    ஏன் சொல்லமுடியவில்லை, திரு கோபால்கிருஷ்ணன்?)
·              தீதி, அம்மா மற்றும் நவீன் பட்நாயக் மூவரும் மோடியை ஆதரிப்பார்கள்.
·         பங்குச்சந்தை, சென்செக்ஸ் இரண்டும் மோடியின் பாதிப்பால்  ஜூன் 13 க்குப் பிறகு 25000 யை எட்டும்.
·         சரக்குகளின் விலை சரிந்து உணவுப்பண்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் விலைகள் இறங்கும்.
·         தங்கம், வெள்ளி, இரும்பு இவைகளின் விலைகளும் இறங்கும்.
·         கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படும்.

திரு மோடி எப்போது பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் திரு. கோபால்கிருஷ்ணன். மே 25 ஆம் தேதி காலை 11.41 மணிக்கு அல்லது 27 ஆம் தேதி காலை 10.34 மணிக்கு திரு மோடி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டால் அவர் அடுத்த பத்து வருடங்களுக்கு இந்தியாவை ஆளக்கூடும். இந்த பத்து வருடங்களும் நமது நாட்டின் பொற்காலமாக இருக்கும்.


ஆனால் இந்தக் கணிப்புகளை நிஜமாக்குவதும் பொய்யாக்குவதும் திருவாளர் பொதுஜனம் கையில் அல்லவா இருக்கிறது? திருவாளர் பொதுஜனம் என்ன நினைக்கிறாரோ? அவருக்கும் கடவுளுக்குமே வெளிச்சம்!




9 கருத்துகள்:

  1. இந்தக் கணிப்புகள் இப்போதைக்கு பொழுது போக உதவும். நிஜம் என்ன சொல்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்! அர்னாப், பர்கா லிஸ்ட்டில் கரன் தபாரையும், விக்ரம் (மற்றும் இன்னொருவர், அவர் பெயர் எனக்கு மறந்து விட்டது!) விட்டு விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  2. வாங்க ஸ்ரீராம்! மின்னல் போல வந்து கருத்துரை தெரிவித்ததற்கு நன்றி.
    கரன் தாப்பரை எனக்குப் பிடிக்காது. ஏனென்றால் அவர் ஒரு முடிவுடன் விவாதத்தை ஆரம்பிப்பார். அவரது முடிவுப்படியே விவாதத்தின் போக்கையும் கொண்டு செல்வார்.
    என்னை பொறுத்தவரை, விவாதத்தை நடத்திச் செல்பவர் நடுநிலையாக இருக்கவேண்டும் - அவரது தனிப்பட்ட கருத்து எதுவாக இருந்தாலும். தாபரிடம் இந்த குணம் கிடையாது. விக்ரம் (ndTv) ரொம்பவும் சாது. அவர் பிரியங்கா சோப்ராவுடன் பேசலாம். அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  3. சூடான நேரத்தில் ஒரு
    சுவாரஸ்யமான பகிர்வு
    பொறுத்திருந்து பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  4. வாங்க ரமணி ஸார்!
    மே மாதம் தெரிந்துவிடும் இந்த ஆரூடம் எவ்வளவு தூரம் பலித்திருக்கிறது என்று. நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    வருகைக்கும், தமிழ் மணம் வாக்கிற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  5. அட..... நீங்களும் அரசியல் பதிவு எழுதி விட்டீர்களே !
    கணிப்பு உண்மையாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  6. என்ன ஆனாலும் திருவாளர் நிலை...? அதே அதே...!

    பதிலளிநீக்கு
  7. ஆதலால் இதனால் மக்களுக்கு ஏதும் பயன் கிடைக்குமா? தடையற்ற மின்சாரம், தடையற்ற தண்ணீர், உணவு மருந்துப் பொருட்களின் விலை குறைச்சல், வாகன நெரிசல் தீர்வு, சுற்றுச்சூழல் மாசில் இருந்து விடுதலை, வேலை வாய்ப்பு பெருக்கம் - இப்படி ஏதாவது..?

    பதிலளிநீக்கு
  8. ஜோசியர் கூறி இருப்பது ஆருடமா ,அவரோட ஆசையையா என்று சில மாதங்களில் தெரிந்து விடும் !
    த ம 5

    பதிலளிநீக்கு
  9. ஆமாம்..தமிழ் சேனலில் அந்த அளவு இல்லையே என்று நானும் நினைத்தேன். ஆருடம் உண்மையா என்று அடுத்த மாதம் தெரிந்துவிடும்...பார்ப்போம்..சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா. நன்றி.

    பதிலளிநீக்கு