வியாழன், 6 ஜூன், 2013

1 பில்லியன் எழுச்சி



ரோஜா, கரடி பொம்மை, ஜிகினா வாழ்த்து அட்டை போன்ற எதுவும் இல்லாமல் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்குக் குரல் கொடுக்கும் தினமாக இந்த ஆண்டு காதலர் தினம் அமைந்து விட்டது. பெண்-களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகளுக்கு முடிவு கட்டவும், ஆண், பெண் பாகுபாடுகளைக் களைந்து இருவருக்கும் சமஉரிமை வேண்டும் என்று வலியுறுத்தவும் நடந்த இந்த நிகழ்வு ‘ஒன் பில்லியன் ரைஸிங்’ என்ற உலகம் தழுவிய பிரசாரத்தின் ஒரு பகுதி.
ஏன் இந்தப் பெயர்? ஒரு பில்லியன் (100 கோடி) பெண்கள் தங்களது வாழ்வில் பாலியில் வன்-முறைக்கோ அல்லது வேறு விதமான வன்முறை-களுக்கோ ஆளாகிறார்கள் என்னும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை நினைவுபடுத்தவும், இந்தப் பெண்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கவும், பெண்களின் ஒற்றுமையையும், பலத்தையும் உலகுக்கு நிரூபிக்-கவும் இந்தப் பெயரை வைத்துள்ளதாக இந்த இயக்கத்தை ஆரம்பித்த ஈவ் என்ஸ்லர் கூறுகிறார். உலகெங்கும் உள்ள ஒரு கோடி பெண்கள் சேர்ந்து தங்கள் ஒட்டுமொத்த வலிமையைக் காட்ட நடனம் ஆடவேண்டும் என்பதற்காகவே இந்த அறைகூவல் என்கிறார் இவர். பெண்களுக்கு எதிரான வன்முறை-களுக்கு ஒரு முடிவு கட்டுவோம் என்று இந்த நிகழ்ச்சி-யில் கலந்துகொண்டவர்கள் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

செப்டெம்பர் 20, 2012 அன்று 160 நாடுகளிலிருந்து வந்திருந்த மக்கள் பிரதிநிதிகள் இந்தப் பிரசாரத்தில் பங்கு கொள்வதாக கையெழுத்திட்டனர். இந்த வருடம் பிப்ரவரி 14 அன்று 190 நாடுகளில் ஊர்வலங்-கள் நடைபெற்றன. பொதுமக்களுடன் பல்வேறு துறை-களைச் சார்ந்த பிரபலங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மகளிர் அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பிரகடனப்படுத்-தினார்கள்.
டில்லியில் இந்த நிகழ்ச்சி காதலர் தினத்தன்று பார்லிமென்ட் ரோட்டில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்தது. டில்லியிலுள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி, மிராண்டா ஹவுஸ் மற்றும் கமலா நேரு கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கினர். தொடர்ந்து, டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளின் நடன நிகழ்ச்சி-களும் நடந்தன.
சென்னை மெரினா கடற்கரையில் ஒன் பில்லியன் ரைசிங் நிகழ்ச்சியையொட்டி, பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்-பட்டது. ‘இந்த எழுச்சி ஆண்களுக்கு எதிரானது அல்ல; பெண்ணியம் பேசவோ, ஆண்களை மட்டம் தட்டவோ இங்கு கூடவில்லை. இருபாலாருக்கு-மிடையே சமத்துவம் இருக்க வேண்டும் என்பதே நாங்கள் சொல்லும் செய்தி,’ என்று வந்திருந்த பிரபலங்க-ள் தெரிவித்தனர்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஒன் பில்லியன் எழுச்சி தொடர்பான நாடகங்கள், நடனங்கள், ஃபிளாஷ் மாப் (FLASH MOB) என்ற திடீர் நடனங்-கள் ஆகியவை நடைபெற்றன. தெற்காசியாவுக்கான ஒன் பில்லியன் ரைசிங் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் கம்லா பாசின், இந்திய சிறுமிகள் மற்றும் பெண்கள்மீதான வன்முறைக்கு எதிரான சுதந்தரப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து சுதந்தரம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு தலாய் லாமா, பூடான் ராணி சங்கே சோடன் வாங்சக் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

சமீபத்தில் புது தில்லியில் நடந்த வன்புணர்வு சம்பவத்-துக்குப் பிறகு ஒன் பில்லியன் ரைஸிங் நம் நாட்டில் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம். இந்த எழுச்சியின் மூலம் கீழ்த்தட்டுப் பெண்கள் மட்டுமல்ல; மேல்தட்டுப் பெண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பது தெரிய வந்திருக்கிறது.

புது தில்லி மாணவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட காணொளி ஒன்றில் பிரபல சிதார் மேதை ரவிசங்கரின் பெண் அனுஷ்கா சங்கர் தான் அனுபவித்த பாலியல் வன்முறையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: ‘சின்ன வயதில் என் பெற்றோர்கள் மிகவும் நம்பிய ஒரு நண்பரால் நான் பல வருடங்கள் தவறான வழியில் நடத்தப்பட்டேன். என்னால் இன்னும் அந்த அதிர்ச்சி-யிலிருந்து மீள முடியவில்லை. ஒரு பெண்ணாக நான் எப்போதும் ஒருவிதமான பயத்தில் வாழ்ந்து வருகிறேன். இரவு வேளைகளில் தனியாக நடக்க பயம்; யாராவது ஒரு மனிதன் என்னிடம் நேரம் கேட்டால் பதில் சொல்ல பயம்; அதுமட்டு-மல்ல; என்னைப் பற்றிய எண்ணங்கள் நான் அணியும் உடையினாலும் என் ஒப்பனை-யினாலும் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. போதும் போதும்! நான் ஜோதிக்காகவும், என்னைப் போன்ற பெண்களுக்-காகவும், என்னுள்ளே இருக்கும் இன்னும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தி-லிருந்து மீளாத சிறுமிக்காகவும் குரல் எழுப்பப் போகிறேன்!’


இந்த ஒருகோடி எழுச்சியின் பின் இருப்பவர் ஈவ் என்ஸ்லர். ஒரு நாடக ஆசிரியரும், சமூக ஆர்வலரு-மான இவர்தான் ஒன் பில்லியன் இயக்கத்தை ஆரம்பித்-தவர். இவர் வி-டே என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் 15 வது வருடம் இது. இவர் தனது ‘வஜைனா மொனோலாக்’ என்ற நாடகத்தின் மூலம் பிரபலமானவர். இந்த வஜைனா என்ற சொல்லை 50 மொழிகளில் 140 நாடுகளில் சொல்லியிருப்பதாக இவர் சொல்லு-கிறார்.

பெண் என்பவள் வெறும் உடல் சுகத்துக்காகப் படைக்கப்பட்டவள்; அவளது உறுப்புகள் ஆணின் இன்பத்துக்கே; அவளது உறுப்புகள் பற்றி பேசுவதே அசிங்கம் என்ற பலதரப்பட்ட கருத்துக்களை உடைத்து அவளும் ஒரு உயிரும் உணர்வும் உள்ள ஒரு பிறவி என்று சொல்லும் ஒரு வரி வசனங்களைக் கொண்ட நாடகம் இது.

ஒன் பில்லியன் ரைஸிங் பற்றி ஈவ் என்ஸ்லர் கொடுக்கும் முக்கிய அறிமுகம் இது.
‘ஒன் பில்லியன் ரைஸிங் என்ற இயக்கம் பெண்களுக்-கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர தொடங்கப்பட்ட ஒன்று. ஒரு பில்லியன் பெண்கள், இவர்களை நேசிக்கும் ஆண்கள் எல்லோரும் இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அவரவர்களது அலுவலகங்-கள், பணியிடங்கள், பள்ளிகள், வீடுகள் ஆகியவற்றை விட்டுவிட்டு பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர வீதியில் திரண்டு வாருங்கள் என நாங்கள் அறைகூவல் விடுத்து இன்னும் சரியாக ஒரு வருடம்கூட ஆக-வில்லை. அதற்குள் எங்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிகள் மிகப் பெரியவை.

‘பெண்களுக்கு எதிரான சமூகக் கட்டுக்களை, பலத்த மௌனங்களை உடைத்திருக்கிறோம். பல சமூக ஆர்வலர்களை ஆதரித்து அவர்கள் மூலம் பெண்களுக்கெதிரான பல விதிகளை மாற்றியிருக்-கிறோம். ஆனாலும் எங்கள் நோக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்-கையின்படி மூன்று பெண்களில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்; வேலை செய்யும் இடங்களில் முதலாளிகளால் அடிக்கப்படுகிறாள். பல்வேறு விதமான வன்முறைக்கு ஆளாகிறாள். பெண் என்ற காரணத்தால் பலவிடங்களிலும் உரிமை மறுக்கப் பட்டிருக்கிறாள். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவையெல்லாம் சமூக மடமைகள்.

‘பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் நீண்டது; எங்கள் முயற்சிகளை இன்னும் அதிகமாக்க வேண்டும். சக்தி வாய்ந்ததாகச் செய்யவேண்டும். ஆணாதிக்க அடக்குமுறை, பெண்ணுக்குரிய உரிமையை மறுத்தல் என்னும் சுவர்களை உடைத்து, பெண்களுக்கெதிரான வன்முறையை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மையை மாற்ற வேண்டும். இத்தகைய கொடுமைகளுக்கு இலக்காகி, உயிர் பிழைத்து வாழ்ந்து வரும் பெண்களுக்கு அவர்களது உடல், பலம், மனஉறுதி, ஆற்றல், அதிகாரம் ஆகியவற்றை மீட்டுத் தந்து, எங்களுக்கெதிரான கொடுமைகளை இனியும் பொறுக்க மாட்டோம் என்று இந்த உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்.

‘ஒன் பில்லியன் ரைஸிங் இத்தனை சீக்கிரம் பரவும் என்றோ வெற்றிகரமாக நிகழும் என்றோ நாங்கள் நினைக்கவே இல்லை. எங்களது குறிக்கோள் இந்த விழிப்புணர்வை மேலும் பரவலாக்குவது. நாங்கள் எந்தவிதமான அடையாளத்துக்குள்ளும் சிறைப்பட விரும்பவில்லை.

‘பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக ஒவ்வொரு நகரமும், ஊரும், கிராமமும், மனிதனும் மன உறுதியுடன் எழ வேண்டும். நாம் எதற்காக விழிப்புணர்வு பெற்று எழ வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். பாலியல் அடிமைகளாக பெண்கள் இருப்பது நிறுத்தப்படவேண்டும். பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதை நிறுத்த வேண்டும். நமது பெண்கள், அக்கா, தங்கைகள் கற்பழிக்கப்-படுவது நிறுத்தப்படவேண்டும். இளம் ஆண்களும் பெண்களும் வன்முறை இல்லாத பாலியல் உறவு-களை பற்றிய கல்வியறிவு பெற வேண்டும்.

‘இந்த ஒன் பில்லியன் ரைஸிங் பலரையும் ஒன்று  சேர்த்திருக்கிறது. இதுவரை ஒன்றாக இணையாத குழுமங்களும், தனி நபர்களும் இந்த நற்செயலுக்காக இணைந்திருக்கிறார்கள். புதிய மனிதர்கள், புதிய குழுமங்கள், பொதுமக்கள் என்று திரள், திரளாக கை கோர்த்திருக்கிறார்கள். இதனால் பெண்களுக்-கெதிரான வன்முறைகள் உலகம் முழுவதும் பட்டி-மன்றங்களில் பேசப்படும் விஷயமாகி-விட்டது. தனி மனிதர்களிடையே ஒரு தீவிர வெளிபாட்டை உருவாக்கியிருக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறை-களுக்குக் காரணம் உலகெங்கும் பரவி-யுள்ள ஆணாதிக்க அடக்குமுறை என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பெண்களுக்-கெதிரான அடக்குமுறை என்பது ஒரு தேசத்துக்கோ, இனத்துக்கோ, மதத்துக்கோ மட்டும் சொந்தமான விஷயம் இல்லை; இந்த வன்முறைகளுக்கு ஆளானது தங்கள் பிழை இல்லை; தங்களது குடும்பத்தின் தவறோ, தேசத்தின் தவறோ இல்லை என்பதை பெண்கள் உணர்ந்து தன்னம்பிக்கை பெறவும் இந்த ஒன் பில்லியன் ரைஸிங் உதவும்’.


எதிர்பாராத பல பகுதிகளில் இருந்தெல்லாம் இந்த எழுச்சிக்கு ஆதரவு கிடைத்திருப்பது ஆச்சரிய-மூட்டக்-கூடியதாக இருக்கிறது. ஆப்கனிஸ்தானிலும் பங்களாதேஷிலும் மக்கள் பேரணியாக நடந்து  சென்றிருக்கிறார்கள். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒன் பில்லியன் எழுச்சி குறித்தும் பாலியல் கல்வி மற்றும் உறவுமுறை குறித்தும் விவாதங்கள் நடை-பெற்றிருக்கின்றன. பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் சட்டப்படியாக அவற்றை எதிர்கொள்வது குறித்தும் ஜெர்மனியில் 126 நகரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. சோமாலியாவிலும் ஆஸ்திரே-லியா-விலும் உள்ள பெண்கள் ஒன் பில்லியன் எழுச்சியில் பங்கேற்றிருக்-கிறார்கள்.

எதற்காக இந்த எழுச்சியில் பங்கேற்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது ஓர் ஆப்கனிஸ்தான் பெண் சொன்ன பதில் இது.‘பெண்கள் கடத்தப்படு-வதை-யும் விற்கப்படுவதையும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதையும் எதிர்க்கவேண்டும் என்பதற்காக இதில் கலந்துகொள்கிறேன்.’

உலகம் முழுவதிலும் ஆக்ரோஷமான அலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஒன் பில்லியன் இயக்கம் பெண்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய அத்தியாயமாகத் திகழும் என்று நம்பலாம்.

ஆழம் மாத இதழில் வந்த எனது கட்டுரையை படிக்க: 1 பில்லியன் எழுச்சி சொடுக்கவும் 

5 கருத்துகள்:

  1. ஆழம் மாத இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் தனபாலன்!
    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ‘ஆழம்’ இதழில் வெளியானதற்கு முதலில் என் நல்வாழ்த்துக்கள்மா! அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மட்டுமல்ல... ஒவ்வொருவரும் தங்கள் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி அது!

    பதிலளிநீக்கு
  4. http://mymintamil.blogspot.in/2014/07/1.html

    மின் தமிழ் மேடையில் உங்கள் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. சுட்டி மேலே கொடுத்துள்ளேன். நன்றி.

    பதிலளிநீக்கு