புதன், 30 மார்ச், 2016

அனுமார் சந்நிதி கிணறு!



எமக்குத் தொழில் அசைபோடுதல் 4
 




திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில நாங்க இருந்த நாகப்பையர் தெருவுல அப்பாவோட நண்பர்கள் இருவர் இருந்தனர். ஒருவர் ரங்கநாதன் மாமா. அவரது மனைவி பத்மா மாமி. மாமா பளிச்னு  திருமண் இட்டுக்கொண்டு தினமும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு வருவார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் ஒரு பெண். எங்களை விட இவர்கள் பெரியவர்கள். இன்னும் கூட ரங்கநாதன் மாமாவும் பத்மா மாமியும் திருவல்லிக்கேணியிலதான் இருக்கிறார்கள். பார்த்தசாரதியை  விட்டுட்டு போவாளோ? என்பார் மாமி. பிள்ளைகள், பெண் எல்லாம் கல்யாணம் ஆகி வேறு வேறு இடத்தில் இருந்தாலும் மாமாவும் மாமியும் பார்த்தசாரதியின் திருவடி நீழலை விட்டு வர மறுத்து விட்டு கோவிலுக்கு வெகு அருகில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வாசம். ‘தனியா இருக்கேளே’ என்றால், ‘தனி என்னடி தனி? பக்கத்துல பார்த்தசாரதியை வைச்சுண்டு அப்படி சொல்லக்கூடாது’ என்பார் மாமா. அப்பாவிற்குப் பின்னும் எங்கள் குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் என்று அன்றைய நட்பு இன்னும் தொடருகிறது. எங்கள் இல்லத் திருமணங்கள், மற்ற விசேஷங்கள் எல்லாவற்றிலும் மாமா, மாமியின் வருகை தப்பாது. இப்பவும் எப்போ திருவல்லிக்கேணி போனாலும் மாமாவோ, மாமியோ பார்த்தசாரதி சந்நிதியில் பெருமாளை சேவித்துக் கொண்டு இருப்பார்கள். எல்லோரையும் நினைவு வைத்துக் கொண்டு விசாரிப்பார்கள்.


இன்னொருவர் மோகன்ராம் மாமா. மாமி பெயர் சந்திரலேகா. உண்மையில் அந்த நிலாவைப் போல பளிச்சென்று இருப்பாள் மாமி. மோகன்ராம் மாமா நல்ல உயரமும் பருமனுமாக ஆஜானுபாகுவாக இருப்பார். (அம்மாவின் மொழியில், ‘அழிச்சா அஞ்சாள் பண்ணலாம்’) இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் என்று நினைவு. எப்போதாவது இவர்கள் இருவர் வீட்டிற்கும் அம்மாவுடன் போவோம். ரங்கநாதன் மாமா வீடு மாடியில் இருந்தது. இந்த மாமாவின் வீட்டிற்கு எதிரில், மோகன்ராம் மாமா இருந்தார். அது கீழ் போர்ஷன் தான். மோகன்ராம் மாமா எங்களுடன் எங்கள் வயதிற்குத் தகுந்தாற்போல பேசுவார். சந்திரா மாமியும் அப்படியே தான். 


ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது ஒரு டாக்சியில் மோகன்ராம் மாமா சென்று கொண்டிருந்தார். அவரது தலை டாக்சியின் ஜன்னலில் சாய்ந்திருந்தது. அன்றிரவே மாமாவும் உம்மாச்சியிடம் போய்ச்சேர்ந்து விட்டதாக செய்தி வந்தது. என் அம்மாவையும் அப்பாவையும் இந்த செய்தி மிகவும் உலுக்கிவிட்டது. மோகன்ராம் மாமா பாத்ரூமில் விழுந்து நொடியில் போய்விட்டார். எங்கள் அப்பாவைவிட சின்னவர். சந்திராவிற்கு இப்படி ஆகியிருக்க வேணாம்அப்படின்னு அம்மா பல நாட்கள் சொல்லிச் சொல்லி வருத்தப் படுவாள். சின்னவயது என்றாலும் என்னால் இன்னும் மறக்க முடியாத இரு இழப்புகள் சக்கு அக்கா, மோகன்ராம் மாமா. 


நாகப்பையர் தெருவில் இன்னொரு மறக்கமுடியாத இடம் எங்கள் பள்ளிக்கு பக்கத்தில் இருந்த அனுமார் சந்நிதி. சந்நிதியின் பின்புறம் ஒரு பெரிய அரசமரம். பண்டிகை, விசேஷம் தவிர மற்ற நாட்களிலும் இந்த அரச மரத்தை பிரதட்சணம் செய்யும் பெண்கள் கூட்டத்தில் எங்கள் வகுப்புத் தோழர்களின் அம்மாக்களும் அடங்குவர். நான் படித்த  இரண்டாம் வகுப்பு அறையிலிருந்து இந்த அரச மரம் நன்றாகத் தெரியும்.  ல அம்மாக்கள் அரச மரத்தடியிலிருந்தபடியே எங்க வகுப்பு ஆசிரியையைப் பார்த்து ‘பாப்பா நல்லா படிக்கிறாளா?’ ன்னு கேப்பாங்க. இன்னும் சில அம்மாக்கள் அரச மரத்தடியிலிருந்தே எங்க வகுப்பு ஆசிரியையை எட்டிப் பார்த்து, ‘புள்ளைக்கு ஒடம்புக்கு முடியல; அதான் இன்னிக்கு இஸ்கோலுக்கு வரல’ ன்னு ரொம்ப சகஜமா (லீவு லெட்டர் எழுதிக் கொடுக்காமலே) சொல்லிட்டுப் போவாங்க. 


இந்த அனுமார் கோவிலின் பின்புறம் ஒரு கிணறு இருக்கும். அந்தக் கிணற்றைப் பற்றி நிறைய கதைகள் எங்கள் நடுவில் உலா வரும். அந்தக் கிணற்றுக்குள், கிணற்றுக்குள், கிணற்றுக்குள் பல பல கிணறுகள் இருக்கின்றன; மிக மிக ஆழமான அந்தக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டால் அவ்வளவுதான்! எலும்பு கூட கிடைக்காது என்றெல்லாம் பயங்கரக் கதைகள்! அதைக் கேட்டு பலரும் அவரவர் கற்பனைக்கேற்றபடி திரித்து திரித்து.......! பல இரவுகள் என்னைத் தூங்கவிடாமல் செய்தது இந்தக் கிணறு! சிலசமயம் எங்கள் அம்மா இந்தக் கோவிலுக்கு வருவாள். அந்தக் கிணறை பார்க்காமல் வர வேண்டுமே என்று எனக்கு ரொம்ப பயமாக இருக்கும்.


கனகவல்லி பள்ளியில் படித்தபோது ஒவ்வொரு வருடமும் எங்களை வகுப்புவாரியாகப் புகைப்படம் எடுப்பார்கள். எங்கள் பள்ளிக் கூடம் சிறியது அதனால் எங்கள் பள்ளியின் எதிரில் உள்ள ஒரு பெரிய பங்களாவிற்குப் போவோம். அங்கு வசித்தவர் பெயர் சுபத்ரா மன்னுலால். அப்போது அவர் ஏதோ அரசு பதவியில் பெரிய வேலையில் இருந்தார். நாங்கள் அவரைப் பார்த்ததேயில்லை. மிகப்பெரிய பங்களா. நாங்கள் எல்லோரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு வரிசையாக தெருவைக் கடந்து அந்த பங்களாவிற்குள் நுழைவோம். பெரிய கேட். நாங்கள் வருவதைப் பார்த்து அந்த கேட்டின் அருகில் நிற்கும் பாதுகாவலர் கேட்டைத் திறப்பார். எங்கள் பின்னாலேயே எங்கள் ஆசிரியை வருவார். நாங்கள் வருவதற்கு முன்பே மர பெஞ்சுகள் போடபட்டிருக்கும். உயரமாக இருந்தால் கடைசி பெஞ்சில்  நிற்க வேண்டும். நான் எப்பவுமே குள்ளம்! அதனால் கீழே உட்கார்ந்து கொள்வேன். சிலசமயம் முதல் வரிசையில் ஆசிரியை பக்கத்தில் அமரும் பாக்கியமும் கிடைக்கும். இந்த முறை சென்னை போயிருந்த போது அம்மாவிடம் இருந்த பழைய போட்டோ சேகரிப்பில் என் தம்பி இரண்டாவதோ மூன்றாவதோ படிக்கும்போது எடுத்த புகைப்படம் இருந்ததைப் பார்த்தேன். என்னுடையது இல்லை....கொஞ்சம் வருத்தம் தான். வருடாவருடம் எங்க புகைப்படங்களை அப்பா வாங்கிவிடுவார். நிறைய வீடுகள் மாறினதால எல்லாம் எங்க போச்சோ?


அசைபோடுதல் தொடரும்........

அதீதம் இணைய இதழில் வெளி வந்துகொண்டிருக்கும் தொடர்

2 கருத்துகள்: