வெள்ளி, 18 டிசம்பர், 2015

வையத்து வாழ்வீர்காள்!


‘என்ன ஒரு தீர்க்கமான எண்ணங்கள் இந்தக் கோதைக்கு.....!’

‘தங்களின் திருக்குமாரத்தி இல்லையா அவள்? அன்று நீங்கள் பரதத்துவ நிர்ணயம் செய்தபோது பார்த்தவர்கள், கேட்டவர்கள் எல்லோரும் மெய்மறந்து போனார்களே! பொற்கிழி தானாகவே தாழ்ந்ததே!’

ஒருநிமிடம் பெரியாழ்வாரின் கண்முன் அந்த நிகழ்வு வந்து போனது. குருமுகமாகத் தான் யாரிடமும் கல்வி பயிலாத போதும், எம்பெருமானின் இன்னருளால் பரத்துவ நிர்ணயம் செய்த நிகழ்வு. கூடியிருந்த எல்லோரும் இவரது வாதத்தை ஏற்றுக் கொள்ள, பொற்கிழி தானாகவே தாழ்ந்தது. விஷ்ணுசித்தரை யானையின் மேல் அமரச் செய்தான் பாண்டிய அரசன். திடீரென வானில் ஒரு மின்னல்! யானையின் மேல் அமர்ந்த நிலையில் தலையை நிமிர்த்திப் பார்த்தவருக்கு அதிர்ச்சி! நாம் காண்பது கனவா, நினைவா? நம் கண் முன் கருடாரூடனாக நாச்சியார் சமேதனாக நிற்பது அந்த பரமபுருஷன் இல்லையோ? இவன் எங்கு இங்கு வந்தான்? அதுவும் திருமாலுக்குரிய அடையாளங்களுடன்? ஐயோ! யாராவது பார்த்து கண்ணேறு பட்டுவிட்டால்? என்ன இப்படி ‘பப்பர’ என்று வந்திருக்கிறான்? சட்டென்று யானையின் மீதிருந்த வெள்ளி மணிகளை எடுத்தார். தாளம் தட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தார்:

‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் – மல்லாண்ட
திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருகாப்பு.....’

அவரது மனஓட்டத்தை அறிந்தவன் போல வல்லபதேவன் வாளாவிருந்தான். பெரியாழ்வாரும் அரசனின் இருப்பை அப்போதுதான் உணர்ந்தவர் போல சட்டென்று இயல்பு நிலைக்குத் திரும்பி தழுதழுத்த குரலில் கூறினார்:
‘உன்னைப் போல ஒரு அரசன் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த மிகப்பெரிய பேறு, வல்லபா! குடிமக்களின் நலம் பேணுவதை உன் வாழ்நாளின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறாய். இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல் மேலுலகத்திலும் அவர்கள் நல்லகதியை அடைய வேண்டும் என்றல்லாவா நீ பண்டிதர்களை அழைத்து பரத்துவ நிர்ணயம் செய்ய சொன்னது? அதனால் தான் எனது மகள் கோதை இரண்டாவது பாசுரத்தில் வையத்து வாழ்வீர்காள்! என்று இந்த உலகில் இருக்கும் அத்துணை மனிதர்களையும் உய்யலாம் வாருங்கோள் என்று கூப்பிடுகிறாள், போலிருக்கிறது’ என்றவாறே இரண்டாவது பாசுரத்தைப் பாட ஆரம்பித்தார்:

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!


முதல் பாசுரத்தில் நோன்பைப் பற்றிச் சொல்லியவள் அடுத்த பாட்டில் நோன்பு செய்யும்போது அனுசரிக்க வேண்டியவை என்ன, செய்யக் கூடாதவை என்ன என்று சொல்லுகிறாள், தோழிகள் முகாந்திரமாக வையத்தில் வாழும் நம் போன்றவர்களுக்கு.

வையத்து வாழ்வீர்காள்: இந்த மண்ணுலகில் வாழும் பாக்கியம் பெற்றவர்களே!
மண்ணுலகில் வாழ்வதில் என்ன பாக்கியம் என்றால், அந்த பரம புருஷனே பரமபத வாழ்வை வெறுத்து இங்கு வந்து பிறந்தானே!  அவன் பிறந்ததால் இந்த ஆயர்பாடி திருவாயர்பாடி என்று பெயர் பெற்றதே! அவன் இங்கு வந்து பிறக்கும் காலத்தில் அவனுடனேயே பிறந்து, வளர்ந்து பழகும் பாக்கியம் பெற்றவர்களாகிய பாக்கியசாலிகளான கோபியர்களையே ‘வையத்து வாழ்வீர்காள்!’ என்று ஆண்டாள் இங்கு அழைக்கிறாள்.
வாழ்வீர்காள்: வெறுமனே உண்டு உறங்குதல் வாழ்வாகாது. இங்கு வாழ்வு என்பது பெருவாழ்வு என்ற பொருளில் சொல்லப்படுகிறது. இறைவனுடைய கருணை, எளிமை, எல்லோருடனும் உயர்வு தாழ்வு பாராமல் கலந்து பழகுதல், குற்றங்களையும் குணமாகக் கொள்ளுதல் முதலிய நீர்மை குணங்கள் பிரகாசிப்பது இந்தப் பூவுலகில் தான். அதனாலேயே இந்த வாழ்வு பெருவாழ்வு என்று சொல்லப்படுகிறது. இறைவனின் இந்தக் குணங்களை அனுபவிக்க பரமபத வாசிகளான அனந்தன், கருடன் முதலிய அமரர்களும் இங்கு வசிக்க ஆசைப்படுகிறார்களாம்.
கோதையும் இங்கு வசிப்பவள் தானே? வாழ்வீர்காள் என்று பிறரை அழைப்பானேன் என்றால், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, கூடியிருந்து அனுபவிக்க வேண்டும். பகவதனுபவம் தனியே அனுபவிக்கலாகாது. ரசிக்கவும் செய்யாது.
நாமும்: அவனைப் பெற வேண்டும் என்று துடிப்புள்ள நாமும். அவனாலேயே அவனைப் பெற வேண்டும் என்ற துடிப்புடன் கூடிய நாமும்.
நம்பாவை: இது பிறர் செய்யும் பாவை அல்ல; நாம் கண்ணனை வேண்டி செய்யும் பாவை. அவனை அழிக்க வேண்டிச் செய்த யாகம் போன்றதல்ல இது. அவனையும், அவனடியாரையும் வாழப் பண்ணும் யாகம் அதாவது நோன்பு இது.
செய்யும் கிரிசைகள்: நோன்பு முடியும் அளவும் செய்தே தீர வேண்டிய  முழுமையாக கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள்.
கேளீரோ: வையத்து வாழ்வீர்காள் என்று அழைத்த பின் எதற்கு கேளீரோ என்று திரும்ப அவர்களின் கவனத்தை ஈர்ப்பது எனில், ஆண்டாள் கூப்பிட்டதும் வந்தவர்கள் பகவத் விஷயத்திற்கு விரோதமான இவ்வுலகிலே, கண்ணனையும் பெண்களையும் சேரவிடாத இவ்வூரிலே கிருஷ்ணானுபவத்திற்கு இத்தனை மகத்துவமா என்று வியப்புற்றுப் பேசாமல் இருந்தார்களாம். அதனால் கேளீரோ என்று மறுபடியும் அவர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுகிறாள்.
பாற்கடலுள்: பரமபதத்தினின்றும் அசுரர்களின் துன்பத்திற்கு ஆளாகும் தேவர்களைக் காக்க பாற்கடலில் வந்து படுத்துக் கிடக்கும் படி.
பையத்துயின்ற: படுத்துக் கிடக்கிறானே தவிர தூங்கவில்லை. உலகை காக்க வேண்டியவன் தூங்கலாமா? அதனால் கூப்பிட்டவரின் குரலுக்கு செவி சாய்த்துக் கொண்டு பொய்யுறக்கம் கொண்டிருக்கிறான்.
பரமன்: தனக்கு நிகராக ஒருவரும் இல்லாதவன்; தனக்கு மேலானவரும் இல்லாதவன். இப்பூவுலகைக் காக்க அறிதுயில் கொண்டிருக்கிறான் திருவனந்தாழ்வான் மேல். எப்படி என்றால் பொன்தகட்டில் அழுத்தின நீல ரத்தினம் போலே ஒளி நிறைந்து இருக்கிறான். எல்லாவகையிலும் மேலானவன் என்பதால் பரமன்.
அடிபாடி : அவன் மிகவும் மேலானவன் ஆனால் நாமோ தாழ்ந்தவர்கள் அதனாலே அவனது திருவடிகளைப் பாடுவோம். இன்னொரு காரணம் பரமன் என்று சொல்வதற்கு. இடையர்களுக்கு ஏற்கனவே ஆயர்பாடி சிறுமிகள் மீதும், கண்ணன் மீதும் சந்தேகம். கண்ணனைத்தான் பாடுகிறோம் என்று சொன்னால் என்ன ஆகுமோ என்று அச்சம். அதனால் தாங்கள் வேறு யாரோ ஒரு தெய்வத்தைப் பாடுவதாக சொல்ல விரும்பி, கிருஷ்ணாவதாரத்திற்கும் மூலமான  பாற்கடல்நாதனை பாடுகிறார்கள்.

நெய்யுண்ணோம், பாலுண்ணோம்:
இவர்களுக்கு உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே ஆதலால் வேறு போகப்பொருட்களை உண்ணமாட்டோம் என்கிறார்கள்.
பாலைக் குடிப்பார்கள் இல்லையோ, உண்ணோம் என்கிறார்களே என்றால், குடிப்பதற்கும், உண்பதற்கும் வித்தியாசம் தெரியாத இடைப் பெண்கள் இவர்கள்.
இன்னொரு சுவாரஸ்யமான விளக்கம் பாலுண்ணோம் என்பதற்கு நமது பூர்வாச்சாரியர்கள் காட்டுகிறார்கள்.
கண்ணன் பிறந்த பிறகு நெய் பால் எதையும் கண்ணன் மிச்சம் வைப்பதில்லையாம். அதனால் பால் என்பது குடிக்கப்படும் பொருள் என்பதே மறந்து விட்டதாம்! அதனால் பால் உண்ணோம் என்கிறார்களாம்!

நாட்காலே நீராடி
கண்ணன் வருவதற்கு முன் நீராடி விடவேண்டும். ஸ்ரீ பரதாழ்வான் ராமனைப் பிரிந்த தாபம் ஆறும்படி பின்னிரவிலே சென்று சரயூவில் நீராடுவாராம். அது போலே இவர்கள் நோன்பு என்று ஒரு சாக்கை வைத்துக் கொண்டு கண்ணனைப் பிரிந்த தாபம் ஆறும்படி அதிகாலையில் நீராடத் தலைப்படுகிறார்கள்.

மையிட்டு எழுதோம்:
இவர்கள் இயற்கையாகவே மைக்கண் மடந்தையர்கள். மை தீட்டிக் கொள்ளும் அவசியம் இல்லாத போதும், மங்களத்தின் பொருட்டு எழுதிக் கொள்ளும் மை கூட தீட்டிக்கொள்ள மாட்டோம்.

மலரிட்டு நாம் முடியோம்
பூச்சூடிக் கொள்வதும் அப்படியே. பூவிற்கு வாசம் கொடுப்பதற்காக பூச்சூட்டிக் கொள்வார்கள். இப்போது அதனையும் செய்யோம். அவனே பூத்தொடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால் சூட்டிக் கொள்ளுவோம். நாமாக முடியமாட்டோம்.
செய்யாதன செய்யோம்:
நமது முன்னோர்கள் அனுஷ்டிக்காத ஒன்றை அனுஷ்டிக்க மாட்டோம். கண்ணன் எம்பெருமான் எல்லோருக்கும் நன்மை செய்பவன். எல்லா உயிர்களுக்கும் பொதுவான சம்மந்தம் உடையவன். இருந்தாலும் அடியார்களை முன்னிட்டுக் கொண்டே அவனைப் பற்றுவோம்.தோழிகள் எல்லோரையும் எழுப்பிக் கொண்டு அனைவரும் கூடியே அவனை பற்றுவோம்.
தீக்குறளை சென்றோதோம்:
அசோக வனத்திலே தன்னை நலிந்து பேசிய அரக்கிகளை பிராட்டி பெருமாளிடம் காட்டிக் கொடுக்கவில்லையே. அதேபோல நாங்களும் தீமை விளைவிக்க கூடிய பொய்களைச் சொல்லமாட்டோம்.
ஐயமும் பிச்சையும்: ஐயமாவது தகுதி இருக்கும் சான்றோர்களுக்கு மிகுதியாகக் கொடுத்துக் கௌரவித்தல்; பிரம்மச்சாரிகளுக்கும், துறவிகளுக்கும் அன்னமிடுதல் பிச்சை ஆகும்.
ஐயம் என்பது பரமாத்மா விஷயமான ஞானம். பிச்சை என்பது ஜீவாத்ம ஸ்வரூப ஞானம். இரண்டையும் உபதேசிப்போம்.
ஆந்தனையும்: எத்தனை பேர்கள் வந்தாலும் அத்துணை பேர்களுக்கும், வந்திருந்தவர்கள் எவ்வளவு கேட்டாலும் அவ்வளவும், எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் கொடுப்போம். உபதேசிப்போம்.
கைகாட்டி: இத்தனை செய்தாலும், உபதேசித்தாலும், நாங்கள் என்ன செய்துவிட்டோம் என்று கை விரிக்கும்படி.
உய்யும் ஆறு எண்ணி: இப்படியெல்லாம் செய்து உயிர் வாழும் படி. என்றைக்கு இதுபோல பகவத் விஷயத்தில் உள் புகுந்தானோ அன்று  தான் இவன் உயர்ந்த வாழ்ச்சி பெற்றவனாவான். அல்லாத போது இல்லாதவனே ஆவான்.
எண்ணி உகந்து: இதுபோல பகவத் விஷயத்தை நினைப்பதே இனிமையாகும்; உகப்பாகும்.

முதற்பாட்டில் பரமபத நாதனை (பரத்வம்) பாடினார்கள். இந்த இரண்டாம் பாட்டில் பாற்கடல் (வ்யூகம்) நாதனைப் பாடுகிறார்கள்.4 கருத்துகள்:

  1. சிறப்புப் பதிவு வெகு வெகு அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மனதிற்கு நிறைவினைத் தரும் பாடலைக் கேட்டு இன்புற்றோம்.

    பதிலளிநீக்கு