வியாழன், 17 டிசம்பர், 2015

மார்கழி திங்கள்

 

ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால் தான்  கொண்டுபோனான்...

நகர்வலம் வந்துகொண்டிருந்த வல்லபதேவன் ஒரு நிமிடம் இந்தப் பாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்து சிலையாக நின்றான். பொழுது புலர்ந்தும் புலராத வேளை. கண்ணைச் சுருக்கி உற்றுப் பார்த்தான். பெரியாழ்வாரின் திருமாளிகையிலிருந்துதான் அந்தப் பாடல் வந்துகொண்டிருந்தது. இதழ் கடையில் புன்னகையுடன் யோசனையும் உண்டாயிற்று. ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டு வந்ததிலிருந்தே பெரியாழ்வார் இப்படித்தான் மகள் நினைவாகவே இருக்கிறார். பெண் குழந்தையின் மீதான பாசம்! எல்லா தந்தைமார்களும் அனுபவிக்கும் பிரிவாற்றாமை தான் இவருக்கும்.
வீட்டினுள்ளே போய் அவரிடம் சற்றுநேரம் பேசிவிட்டுப் போகலாம் என்று நுழைந்தான்.
அடியேன்....!
திருத்துழாய் பறித்தபடியே மகளின் நினைவில் கண்கள் பனிக்கப் பாடிக்கொண்டிருந்த பெரியாழ்வார் திரும்பிப் பார்த்தார்.
யாரது?’
அடியேன், வல்லபதேவன்...இந்தப் பாண்டிய நாட்டு அரசன்.....
அடடா! வரவேணும், வரவேணும்.... தங்களை இந்த வேளையில் எதிர்பார்க்கவில்லை...!
தேவரீரின் பாடல் கேட்டது. கோதையைப் பிரிந்ததும், கண்ணனை மறந்து விட்டீரோ? ‘கண்ணன் கேசவன் நம்பிபிறந்தது முதல் அவனது பிள்ளை விளையாட்டுக்களை வாயாரப் பாடி அவனை நீராட்டி, அவனுக்கு பூச்சூட்டி, காப்பிட்டு, அம்மம் உண்ணக் கூப்பிட்டு இனிக்க இனிக்க பாடியவர் இன்று மகளின் பிரிவை நினைத்து ஏங்குகிறீர்களே...! அந்தத் துயரம் தணிய சற்றுப் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்....!
வறியவனுக்கு நிதி கிடைத்ததைப் போல அல்லவா. எனக்குக் கோதை கிடைத்ததும்? இப்போது நினைத்துப் பார்த்தால் கூட வியப்பாக இருக்கிறது. அவள் எனக்கு திருத்துழாய்ச் செடி அருகே கிடைத்ததும், அவளை என் குழந்தையாகவே பாவித்து வளர்த்ததும், அவள் வாரணமாயிரம்பாடி முடித்ததும் விளையாட்டாக உனக்கு யாரம்மா மணாளன்?’ என்று கேட்க, ‘‘வேங்கடவற்கு என்னை விதிஎன்று முதல் பாசுரத்திலேயே காமதேவனிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேனே, அப்பா!என்று அவள் கூறியதும்.....
கண்களை துடைத்துக் கொண்டு திருநந்தவனத்திலிருந்து வீட்டினுள்ளே வந்தார் பெரியாழ்வார்.
அடியேனும் இதை அறிவேன், ஸ்வாமின்!என்று கூறியபடியே வல்லப தேவனும் உள்ளே நுழைந்தான்.
ஆனாலும், தேவரீரின் திருவாக்கால் ஆண்டாளின் கதையைக் கேட்பது பெரிய பாக்கியம், அல்லவா?’
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் .....
பெரியாழ்வார் மகளின் நினைவில் தோய்ந்தபடியே பாட ஆரம்பித்தார். வல்லபதேவனும் அந்த பாவை பாட்டில் கரைய ஆரம்பித்தான்.
                      **************
மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்தகண்ணி யசோதையிளம்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய்.

திருப்பாவை முதற்பாட்டில், அதன் முழு தாத்பர்யத்தை கூறுகிறாள் ஆண்டாள். இந்த நோன்பைச் செய்ய யாருக்கெல்லாம் அதிகாரம் (தகுதி) இருக்கிறது, இந்த நோன்பு செய்து அதன் பலத்தை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய உபாயம் (வழி) என்ன, நோன்பின் பலன் என்ன, பலத்தை தருபவன் யார் என்பதை சுருக்கமாகக் கூறுகிறாள். கூடவே இந்நோன்பு செய்யவதற்கு வாய்த்த காலத்தையும் கொண்டாடுகிறாள்.

மார்கழித் திங்கள் மார்கழிக்கு என்ன சிறப்பு? பிரம்மமுஹூர்த்தம் என்பது நாளின் சிறப்பு போல, வருடத்திற்கு சிறப்பு மார்கழி மாதம். சாத்வீகக் குணம் தலையெடுக்கும் காலம். தேவர்களுக்கு தை தொடங்கி ஆனி முடிய பகல் காலம். அந்தப் பகலுக்கு விடியற்காலம் போன்றது மார்கழி மாதம். மாதங்களில் நான் மார்கழிஎன்கிறான் கண்ணன், கீதையில். அதனால்  வைஷ்ணவமான மாதம் இது. இடைக்கிழவர்கள் குளிருக்கு அஞ்சி வெளியே வரமாட்டார்கள், தங்கள் விருப்பப்படி கண்ணனோடு கலந்து பரிமாறலாம் என்பதால் கோபியர்களுக்கு உற்சாகமான காலம். பயிர்கள் விளைந்து பலன் கொடுக்கும் காலம். அதனாலே நம் நோன்பும் கண்ணனை பலனான அடைய உதவும் காலம்.

மதி நிறைந்த: மார்கழி மாதத்தில் இன்று நிறை பக்ஷம் தன்னடையே வாய்த்திருக்கிறது. இந்தப் பௌர்ணமி கிருஷ்ணனுடைய திருமுகம் கண்டு களிக்கும்படியான பிரகாசமான நாள் அன்றோ!
நல்நாள்
மதிநிறைந்த நாள் என்பதே நல்நாள். சேரக்கூடாது என்று பிரித்து வைத்தவர்களே சேர்த்து வைத்தபடியால் இது நல்லநாள். கிருஷ்ணனுடைய அருளுக்குப் பாத்திரமாகும் நன்னாள்; அவனைக் காணப்பெறும் நன்னாள்; ஜீவாத்மா பரமாத்மாவுடன் சம்மந்தம் கொள்ளும் நன்னாள்; மற்றைய நாள் போல அல்லாதபடி மாதம், பக்ஷம் எல்லாம் வாய்த்தது போல இரத்தினம் போல நக்ஷத்திரமும் அமைந்ததே! நன்னாளால் ஆல் என்பது வியப்பைக் காட்டும் சொல். மாதம், பக்ஷம், நாள் (நக்ஷத்திரம்) எல்லாம் இத்தனை நன்றாக அமைந்ததே எனும் வியப்பைக் காட்டும் ஆல்
நீராட
நோன்பு ஆரம்பிக்கும் முன் குளிக்க என்று மேம்போக்காக ஒரு பொருள் சொல்லப்படுகிறது. கிருஷ்ணன் என்னும் தடாகத்தில் தோய்ந்து என்று உள்ளுறைப் பொருள். கண்ணனோடு கலத்தல் விரஹதாபம் தீர என்பது உண்மைப் பொருள். ஜீவாத்மா பரமாத்மாவை அடைந்து ஒன்றாவதை நீராடஎன்கிறார்கள். கோடை உஷ்ணத்திலே அவதிப்படுபவன் தடாகத்தைக் கண்ட அளவில் அதில் அமிழ்ந்து மூழ்குவது போல நாமும் கண்ணன் என்னும் குளிர்ந்த தடாகத்தில் நீராடலாம் வாருங்கோள்!

போதுவீர் போதுமினோ:
கண்ணனாகிய தடாகத்திலே நீராடுவதற்கு வர விருப்பம் உடையவர்கள் எல்லோரும் வாருங்கோள். இதற்கு வேறு ஒரு தகுதியும் தேவையில்லை. பகவானை ஆஸ்ரியிப்பதற்கு இச்சை மாத்திரம் போதுமோ? போதும். ஏனெனில், நாம் அவனை அடைய ஆசைப்படுவதே அதற்குண்டான தகுதிதானே? அதனால் ஆசை மட்டும் போதும்.
நேரிழையீர்:
தகுதி வாய்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களே!
சீர்மல்கும் ஆய்ப்பாடி
ஆயப்பாடிக்குச் சீர்மையாவது கண்ணன் அங்கு பிறந்தமை; அவனது கல்யாண குணங்கள் என்னும் செல்வம் நிறைந்து கூடவே கறவைச் செல்வங்களும் நிறைந்திருக்கிறது. பரமபதத்தில் இருக்கும் கண்ணன் இங்கு ஆயப்பாடிக்கு வந்துவிட்டமையால் பரமபதத்தில் சீர்மை பிரகாசிக்கவில்லையாம். பரமபதத்தில் கண்ணனைவிட தாழ்ந்தவரில்லை; அதனால் அவனது நீர்மைக் குணங்கள் அங்கு பிரகாசிப்பதில்லை. அதாவது எல்லோருடனும் சமமாகக் கலத்தல், பெறுதற்கரியவன் சுலபமாக அடையக்கூடியவனாய் இருத்தல் முதலிய குணங்கள் ஆய்ப்பாடியில் பிரகாசிப்பதால் இது சீர்மல்கும் ஆய்ப்பாடி ஆயிற்று.
செல்வச் சிறுமீர்காள்
ஆய்ப்பாடிச் சிறுமியருக்கு கிடைத்த செல்வம்  கிருஷ்ண சம்மந்தம் என்னும் நிலையான செல்வம். யாரைபோலேஇலங்கை செல்வத்தை விட்டு பெருமாளை சரணடையக் கிளம்பியதால்  அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்’ (பெருமாள் என்னும் செல்வத்தை அடைய புறப்பட்டதால் ஸ்ரீமாந் ஆனவன் மேலே எழும்பினான்) என்று வால்மீகியால் கொண்டாடப்பட்ட விபீஷணனைப் போல. பெருமாள் காட்டுக்கு ஏகியபோது கூடையும் குந்தாலியுமாகப் பின்தொடர்ந்ததால் லக்ஷ்மி சம்பந்நன் என்று கொண்டாடப்படும் இலக்குவன் போல. பெருமாளுக்கென்று அன்றலர்ந்த தாமரையைக் கையில் ஏந்தியபடி முதலையின் வாயில் அகப்பட்டு துதிக்கை மூழ்கும் அளவில் ஆதிமூலமே!என்றழைத்த நாகவரச் ஸ்ரீமாந்’ (யானையரசனான ஸ்ரீமான்) கஜேந்திரன் போல இவர்களும் செல்வ நிறைந்தவர்கள்.
சிறுமிகள் என்றதால் கண்ணனை ஒத்த பருவமுடையவர்கள். அவனது கடாக்ஷத்தாலும், அவனது தொடுகையாலும் என்றென்றும் இளம் பருவத்தினராகவே இருப்பவர்கள். அவனுக்கே அற்றுத் தீர்ந்த அநந்யார்ஹர்கள் (பிறர்க்காகாமல் அவனுக்கு மட்டுமே என்று இருப்பவர்கள்) அவனுக்குப் பிரியமானவர்கள்.
கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன்:
நந்தகோபன் பரமசாது. பசும்புல்லை மிதிக்கவும் கூசுவாராம். அவர் எப்படி கொடுந்தொழிலன் ஆனார் அதுவும் கையில் எப்போதும் கூரிய வேலை வைத்துக் கொண்டு? கண்ணன் பிறந்தபின் அவனைக் கொல்ல ஏதேதோ உருவில் வந்தபடி இருக்கும் அரக்கர்களைக் கண்டபின் நந்தகோபன் எப்போதும் வேலும் கையுமாகவே நிற்கிறாராம். கண்ணனின் தொட்டிலடியில் ஒரு சிறு எறும்பு ஊர்ந்தால் கூட சிம்மத்தின் மேல் பாய்வது போலப் பாய்கிறாராம். அப்போது அவர் பாவம் செய்தவரா என்றால், தனக்கெனச் செய்தால் பாவம் வரும். ஆனால் அவர் கண்ணன் மேல் உள்ள பாசத்தால் செய்வதால் அவரைப் பாபம் தீண்டாது.

நந்தகோபன் குமரன்:
ஊரார்கள் இவன் செய்யும் தீம்புகளை வந்து சொல்லும்போது கோபம் வந்து அவன் வரட்டும், என்ன செய்கிறோம், பாருங்கள்என்று சொல்வார்களாம், நந்தகோபனும், யசோதையும். ஆனால் கண்ணன் இவர்கள் முன் வரும்போது அடக்கமான, பணிவான பிள்ளையாக வருவானாம். அவன் முகத்தைப் பார்த்தவுடன், ‘பாவிகளே! இவனைப் பற்றியா குறை சொன்னீர்கள்?’ என்று குறை சொன்னவர்களைத் திட்டி அனுப்பிவிடுவார்களாம். அத்தனை சாதுவான பிள்ளை அதனால் குமரன்ஆகிறான். நந்தகோபன் குமரன் யசோதையிடம் எப்படி இருக்கிறான்?
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை:
அழகிய கண்களையுடைய யசோதை. அவளுக்கு எங்கிருந்து இத்தனை அழகு வந்தது என்ற கேள்விக்கு பிள்ளையின் அழகை எந்நேரமும் பார்த்துக் கொண்டிருந்ததால் அவனது அழகெல்லாம் இவள் கண்களில் குடி புகுந்தனவாம்.
இளஞ்சிங்கம்:
தந்தை ஆதலால் அவனது எதிர்கால நன்மையைக் கருதி நந்தகோபன் கண்ணனை கோபித்துக் கொள்வார்; கண்டிப்பார். ஆனால் யசோதை அன்பை மட்டுமே அவனிடத்தில் காட்டுவாள். அவன் செய்யும் தீம்புகளை கண்டு உகப்பாள். அதனால் தந்தையிடம் பணிவான மகனாக வருபவன், தாயிடத்தில் வரும்போது ஒரு சிங்கக்குட்டி போல செருக்குத் தோன்ற வருவானாம். அன்றியும், இவர்கள் சிறுமிகள் என்றதாலே, இவன் அவர்களுக்கு நிகரான இளஞ்சிங்கம்.

கார்மேனி
கார்மேகம் எப்படி வெய்யில் காலத்தில் தாகத்தால் தவித்தவர்களுக்கு தண்ணீர் தருகிறதோ, அதுபோல நம்முடைய அனைத்துவித தாபங்களையும் ஆற்றக்கூடிய வடிவு இவனது திருமேனி. தாய்தந்தையர்கள் இவர்களை (கோபியர்களை) அடைத்து வைத்தாலும் இவனை மறக்க முடியாதபடி இருக்கும் வடிவழகு இந்த கார்மேனி.

செங்கண்:
இவனது திருமேனிக்கு மாற்று நிறமான சிவப்பு நிறக் கண்கள் கொண்டவன். செங்கண் என்றது இவனது வாத்சல்யத்தைக் காட்டும். கன்றினிடத்தில் தாய்ப் பசுவிற்கு இருக்கும் குணம் இந்த வாத்சல்யம். அதாவது குற்றத்தையும் குணமாகக் கொள்ளுவது. குளிர நோக்கும் கண்கள்.

கதிர் மதியம் போல் முகத்தான்:
கதிர் என்பது சூரியனையும், மதி என்பது சந்திரனையும் குறிக்கும் சொற்கள்.  சந்திரனுடைய குளிர்ந்த கதிர்களாலே குளிர்ச்சி ஊட்டப்பட்ட சூரியனைப் போல ஒளி படைத்த கோவிந்தன் என்று மகாபாரதம் சொல்லவதைப் போல விரோத பாவம் கொண்டவர்களுக்கு அணுக முடியாதவனாகவும், தன்னிடத்தில் பிரேமை கொண்டவர்களுக்கு சந்திரனைப் போல குளிர்ச்சி உடையவனாகவும் இருப்பவன்.

நாராயணனே
கார்மேனியும், சிவந்த திருக்கண்களை உடையவனும் ஆன இவனே குன்றமேந்திக் குளிர் மழை காத்தது போன்ற அமானுஷ்யமான செயலைச் செய்ததால் இவனே நாராயணன். சர்வ ஸ்வாமி, சர்வ ரக்ஷகன் இவனே என்றபடியால் இந்த ஏவகாரம்.
நமக்கே:
நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காமல் நமக்குக் காரியம் செய்பவன் என்றதால் நமக்கே. நம்மால் ஒரு முயற்சியும் செய்யாமல், அவனாலேயே பேறு என்று தீர்மானித்து, அவன் கையையே எதிர்பார்த்திருக்கும் நமக்கே.
பறை தருவான்:
பறை என்றது ஒரு வாத்தியம். ஆனால் இவர்கள் குறிப்பிடுவது பகவத் கைங்கர்யம். பறை என்ற சொல் கைங்கர்யத்தைக் காட்டுமோ எனில், திருப்பாவையின் இறுதியில் இற்றைப் பறை கொள்வான் அன்று காண்என்கிறார்கள். நாங்கள் கேட்பது இந்தப் பறை அல்ல; எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உந்தன்னோடு உற்றோமே ஆவோம், உனக்கே நாமாட் செய்வோம் என்கிற கைங்கர்யமாகிய பறைஎன்றபடியே.
பாரோர் புகழ:
ஆய்ப்பாடிச் சிறுமிகள் நோன்பு நோற்றதால் மழை பெய்து நாடு செழித்தது; பயிர் வளங்கள் பெருகின. அதனால் கண்ணனைப் பார்க்கக்கூடாது; அவனுடன் சேரக்கூடாது என்று தடுத்து நிறுத்திய இடையர்கள் உட்பட உலகத்தினர் அனைவரும் இவர்களைப் புகழும்படி ஆயிற்று.
படிந்து ஏலோர் எம்பாவாய்:
எங்களது நோன்பில் நுழைந்து திளைத்து நீராட வாருங்கோள். இது எங்கள் பாவை நோன்பு ஆகும் என்றபடி.
3 கருத்துகள்:

  1. மங்கலகரமான மார்கழிப் பதிவு..
    மனம் நெகிழ்கின்றது..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. அருமையான மார்கழிப்பதிவு. மார்கழித்திங்களில் உங்களோடு நாங்களும் இணைகிறோம்.

    பதிலளிநீக்கு