ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

இசை உலகின் பேரிழப்பு: மாண்டலின் ஸ்ரீநிவாஸ்Mandolin Srinivas


குழந்தை மேதை என்று அறியப்பட்ட மாண்டலின் ஸ்ரீநிவாஸ் கல்லீரல் செயலிழப்பால் மறைந்தார் என்பதை மிகுந்த மன வேதனையுடன் இங்கு பதிவு செய்ய விழைகிறேன். 


எப்போதுமே முகத்தில் தவழும் புன்னகையுடன், இசையைத் தவிர வேறு எதையும் பேசாமல் இருந்த அவரை மரண தேவதையும் விரும்பியதில் வியப்பு இல்லை.


ஆந்திராவிலுள்ள பலகோல் என்னுமிடத்தில் 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி பிறந்த உப்பலாபு ஸ்ரீநிவாஸ் மிகவும் சிறு வயதிலேயே தனது தந்தையின் மாண்டலின் வாத்தியத்தால் ஈர்க்கப்பட்டார். தனது முதல் கச்சேரியை 1978 ஆம் ஆண்டு செய்தார்.  இவரது தந்தையின் குருவான ருத்ரராஜூ சுப்புராஜூ தான் இவரது குருவும் கூட. சுப்புராஜு ஒரு வாய்பாட்டுக் கலைஞர். அவர் வாயால் பாடிக் காண்பிப்பதை அப்படியே மாண்டலினில் வாசிப்பார் ஸ்ரீநிவாஸ்.


எல்லோரிடத்திலும் மரியாதையாகவும் பணிவுடனும் நடந்து கொள்ளுவார். ஆரம்ப காலத்தில் மேற்கத்திய இசைக்கருவியான மாண்டலினை கர்நாடக இசை வாசிக்க பயன்படுத்தியபோது நிறைய எதிர்மறை விமரிசனங்கள் எழுந்தன. அவர் வாசிப்பது கர்நாடக இசையே இல்லை என்று கூட கேலி செய்தனர். தமது அபாரமான வாசிப்பால் அத்தனை வாய்களையும் மூட வைத்தார். மாண்டலின் என்றால் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீநிவாஸ் என்றால் மாண்டலின் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய மாண்டலின் இசை உலகை மயக்கியது. கர்நாடக இசையின் நெளிவு சுளிவுகளை அனாயாசமாக மாண்டலினில் வரவழைத்தார்.


மாண்டலினை வாசிக்கும் போது ஸ்ரீநிவாஸ் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை நிரந்தரமாக இருக்கும். தான் வாசிக்கும் இசையை தானும் ரசித்து கேட்பவரையும் ரசிக்கச் செய்வார். மாண்டலினுக்கு தவில் வாத்தியத்தை துணையாகக் கொண்டு இவர் செய்த கச்சேரிகள் ரசிகர்களிடையே பரபரப்பையும், வியப்பையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தின. அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களை மாண்டலின் இசை ஈர்க்க ஸ்ரீநிவாஸ் 11 வயதில் தமிழக அரசின் ஆஸ்தான வித்துவான் ஆக நியமிக்கப்பட்டார்.


‘மாண்டலின் ஒரு மேற்கத்திய இசைக்கருவி. அதில் எப்படி அவர் கமகங்களைக் கொண்டு வருகிறார் என்பது எனக்கு ஒரு புரியாத புதிராகவே இன்னும் இருக்கிறது’ என்கிறார் தூரதர்ஷன், ஆல்இந்தியா ரேடியோவில் மாண்டலின் ஸ்ரீனிவாஸின் கச்சேரிகளை பதிவு செய்த திரு சம்பத்குமார். ‘முதன்முதல் ஸ்ரீநிவாஸ் ஒரு கோவிலில் வாசிப்பதைக் கேட்டு அவரை தூரதர்ஷனுக்குக் கூட்டி வந்தேன். அவரது தேர்வு ஒத்திகையின் போது இமனி சங்கர சாஸ்த்ரி உடனிருந்தார். நாங்கள் அவரது கச்சேரியை ஒலிபரப்பியவுடன் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களிடமிருந்து கச்சேரியின் ஒரு நகல் அவருக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டு தொலைபேசி வந்தது’ என்று திரு சம்பத்குமார் பழைய நினைவுகளை அசைபோடுகிறார்.


கிடார் கலைஞர் வாசு ராவ் கூறுகிறார்: ’ஸ்ரீனிவாஸின் அப்பா சத்யநாராயண அவரை அழைத்துக்கொண்டு எனது தந்தையின் ஆசி கேட்க வந்திருந்தார். சிறுவன் ஸ்ரீநிவாஸிடம் ஒரு பொறி இருப்பதை உணர்ந்த என் தந்தை  என்னை அவருக்கு சொல்லிக் கொடுக்கும்படி கூறினார். அப்போது ஸ்ரீநிவாஸிடம் இருந்தது ஒரு பழைய உடைந்த மாண்டலின் தான். அவரது குடும்பம் சாதாரண நிலையில் அப்போது இருந்தது. ‘வாரம் ஒரு முறை என்னிடம் பேசுவார் ஸ்ரீநிவாஸ். இப்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குப் போகும்போது கூட எனக்கு தொலைபேசி இறைவனை பிரார்த்திக்குமாறு கூறினார்’.


முதன்முதலில் இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில் ஸ்ரீநிவாஸ் வாசித்த போது அரங்கில் முதல் வரிசையில் வீணை எஸ். பாலச்சந்தரும், பாடகர் திரு சேஷகோபாலனும் அமர்ந்திருந்தனர். முதலில் சற்று பதட்டப்பட்டாலும் மிகச்சிறப்பாக வாசித்து முடித்தார் ஸ்ரீநிவாஸ். கச்சேரி முடிந்தவுடன் திரு சேஷகோபாலன் மேடைக்கு வந்து ஸ்ரீநிவாஸை அணைத்துக் கொண்டு தனது அன்பளிப்பாக தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தை அவருக்கு அணிவித்தார்.


கர்நாடக சங்கீதம் மட்டுமில்லாமல் இணைவு இசை (fusion music) யிலும் ஆர்வமுடையவராக இருந்தார் ஸ்ரீநிவாஸ். இந்தியாவிலும் வெளிநாடுகளில் பல இசை வல்லுனர்களுடன் இணைந்து வாசித்தார். 1998 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்குக் கொடுக்கப்பட்டது. பத்மபூஷண் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டாராம். ஆனால் இவருக்கு இந்த விருதுகளில் அத்தனை ஆர்வம் இல்லை.


இசையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்ரீனிவாஸின் சொந்த வாழ்க்கை அத்தனை சந்தோஷமானதாக அமையவில்லை. தன்னை மிகவும் கொடுமைப் படுத்தியதாக கூறி மனைவி யுவஸ்ரீ மீது இவர் போட்ட வழக்கு இவருக்கு 2012 இல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தந்தது. இவர்களது ஒரே மகன் சாய்கிருஷ்ணா இப்போது அம்மாவுடன் இருக்கிறார். புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தரான இவர் 2011 இல் சாய்பாபா இறந்தது முதல் மிகுந்த துயரத்திலும், மனஅழுத்தத்திலும் இருந்ததாகத் தெரிகிறது.


மிகச் சிறந்த இசைக்கலைஞருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.


நான்காம்தமிழ் ஊடகத்தில் வெளியான கட்டுரை 


4 கருத்துகள்:

 1. ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்..
  மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அவர்களின் ஆத்மா சாந்தி அடைவதாக!..

  பதிலளிநீக்கு
 2. மாண்டலினின் இசை ஒலியில்
  என்றென்றும் வாழ்வார்

  பதிலளிநீக்கு
 3. அருமையான கலைஞர். அவர் இசையை கேட்டுக் கொண்டே இருக்க விரும்பிய இறைவன் தன் பக்கத்தில் இருத்திக் கொண்டார். வேறு என்ன சொல்வது.
  இவ்வளவு சின்ன வயதில் அழைத்து சென்று இருக்க வேண்டாம்.
  என்ன செய்வது !
  அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு
 4. //புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தரான இவர் 2011 இல் சாய்பாபா இறந்தது முதல் மிகுந்த துயரத்திலும், மனஅழுத்தத்திலும் இருந்ததாகத் தெரிகிறது. //
  இவர் திடீர் மரணம் பேரிளப்பு இவ்வளவு சொற்பவயதில், எற்க மனம் ஒப்பவில்லை
  ஆனால் இவர் சாயிபாபாவின் மரணத்தால் பாதிக்கப்பட்டார் என்பது புரியவில்லை மண்ணில் பிறந்த எவருக்குமே மரணம் என்பது உண்டு சாயிபாபா இவ்வளவு சர்ச்சைகளுடன் சராசரி மனிதவயதுக்கு மேல் வாழ்ந்து மடிந்தார்.கடைசிகாலத்தில் நோயால் அவதிப்பட்டுள்ளார்.
  உலகின் பிரபல வைத்தியர்களெல்லாம் வைத்தியம் பார்த்தார்கள் இது நியதி என்பதை , இசையூடு உலகை சிறுவயதுமுதல் பார்த்த சிறீநிவாஸ் ஏன்? உணரவில்லை. புரியமுடியவில்லை.
  குடும்பவாழ்வில் ஏற்பட்ட பாதிப்பை உணரமுடிகிறது. பிரபலங்களுக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சனை
  இவர் சில பேட்டிகளை இப்போ பார்க்கிறேன். மிகத் தெளிவாக கருத்துக்கள், இவருக்கா? குடும்பச் சறுக்கல், நேசித்தவர் மரணம் பாதிப்பை ஏற்படுத்தியது என்னால் நம்ப முடியவில்லை
  ஆனாலும் என் உறவை இழந்தது போல் இவர் மரணம் என்னை கலங்க வைத்தது.
  இவர் 14 வயதில் பாரிசில் கச்சேரி செய்தார். ஒரு சிறுவனாக அவர் மடியில் வைத்திருந்த மென்டலின் தலை இவர் தலைக்குமேல் இருந்தது. அன்று அவர் தந்த இசை ஆயிரம் பிரான்சியரை எழுந்து நின்று கரகோசமெழுப்ப வைத்தது. இந்த இசைவடிவத்துக்கு நானும் சொந்தக்காரனென நானும் அன்று நெஞ்சை நிமிர்த்த வைத்தவர். நான் துவளும் போதெல்லாம் இவர் இசை என்னைத் தூக்கியது.
  இவர் இனி இல்லை என்பது வேதனை தந்த போதும், ஔவையில் "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்" நினைத்து ஆறுதலடைந்தேன்.
  அவர் ஆத்மா சாந்தியுறட்டும்.

  பதிலளிநீக்கு