சனி, 17 ஆகஸ்ட், 2013

முதல் கணனி அனுபவம்முதலில் என்னைத் தொடர் பதிவிற்குக் கூப்பிட்ட திரு தமிழ் இளங்கோ, மற்றும் திருமதி கீதா சாம்பசிவம் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

நானும் எல்லோரையும் போல கணனி மொழிகள் கற்கத்தான் வகுப்பில் சேர்ந்தேன். முதலில் பேசிக். அது கொஞ்சம் பரவாயில்லை போல மண்டையில் ஏறியது. அடுத்து கோபால். (cobal) யாருன்னு கேட்காதீங்க. நீங்க எல்லாம் கேட்க மாட்டீங்க. ஆனால் எங்கள் ஆசிரியர் சொன்னபோது நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். கோபாலா? யாரு? என்று! அப்படி கேட்டதுக்கு கைமேல் பலன். ஒன்றும் புரியவில்லை. திக்கி திணறி அடுத்து லோட்டஸ். வீட்டில் கணனி இல்லை. அதனால் எழுதிய ப்ரோக்ராம்கள் சரியா தவறா கண்டுபிடிக்க முடியவில்லை. கணனி மையத்திற்கு போய் கணனியில் தட்டச்சு செய்தால் திரை முழுக்க error!

என் மாமா பிள்ளை இங்கு வேலை கிடைத்து வர, தினமும் அவனைப் போட்டு படுத்த  (உண்மையில் ‘பிடுங்க’) ஆரம்பித்தேன். பாவம் ஒரே மாதத்தில், ‘அக்கா! ஆபீஸ் அருகில் வீடு பார்த்திருக்கேன்’ என்று தலைமறைவாகி விட்டான்.

ஒரு நாள் என் பிள்ளையிடம் சொன்னேன். ‘ரொம்ப கஷ்டமா இருக்கே!’ அவன் என்னை பரிதாபமாகப் பார்த்துவிட்டு, ‘இதுக்கெல்லாம் ‘logic’ புரியணும்-மா’ என்றான். அடுத்த நாள் ஆசிரியரிடம் ஏதோ விளக்கம் கேட்டேன். அவரும் ‘logic’ புரியணும் என்றார். வேறு யாரையும்  கேட்க துணிவில்லை. மூன்றாவது நபரும் logic பற்றி பேசினால் – எனக்கு logical thinking இல்லை என்பது நிச்சயமாகிவிடுமே!

நன்றாகப் புரிந்தது MS Word மட்டுமே! இதுக்கு logic எல்லாம் வேண்டாம் போலிருக்கு! இதன் நடுவில் பாண்டிச்சேரியில் இருந்த என் ஓர்ப்படி கீழே விழுந்து தலையில் அடி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தி வந்தது. அவளது பிள்ளை அப்போது SSLC. அவனுக்கு பரீட்சை சமயம். உதவ ஓடினேன். இத்துடன் கணனி மொழிக்கு ‘நீநாம ரூபமுலகு’ பாடியாயிற்று.

அடுத்து என் பெண் ஒரு யோசனை கூறினாள்: ‘உனக்கு நல்லா வரைய வருமே. நீ flash, coraldraw கத்துக்கோ’ என்று. நமக்கு யாரு எப்போ எதிரியாவாங்கன்னு சொல்லவே முடியாது!

அந்த மையம் இருந்தது மல்லேஸ்வரம். எங்க வீட்டுலேருந்து ஜெயநகர் 4வது ப்ளாக்கிற்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் பிடித்துப் போகணும். முதல்நாள் வீட்டைவிட்டு கிளம்பினேன். எங்கள் தெரு முழுக்க தோண்டி வைத்திருந்தார்கள். ஒரு பள்ளத்தில் கால் இடற, கீழே விழுந்தேன். முழங்காலில் அடி. மறுபடி வீட்டிற்கு வந்து நியோஸ்பிரின் போட்டுக் கொண்டு போனேன். முதல் நாளே வகுப்பை மிஸ் பண்ணக் கூடாது, இல்லையா?

விழுந்தால் நான் கலங்குவது இல்லை. ஒவ்வொருமுறை விழும்போதும் பிரமாதமாக எழுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும். என் அனுபவம் இது. அதையெல்லாம் பிறகு பதிவு எழுதுகிறேன். இப்படியாக திரும்பவும் கணனி! இந்தமுறை கொஞ்சம் சுவாரஸ்யமாக. இரண்டு மாதத்தில் கோர்ஸ் முடிந்துவிட்டது. ஆனால் வீட்டில் கணனி இல்லை. சிறிது காலம் கழித்து animation கற்றுக் கொள்ளலாம் என்று இன்னொரு மையத்தில் சேர்ந்தேன். இது வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தது.

இப்போது வீட்டில் கணனி வாங்கலாம் என்று தீர்மானம் செய்தோம். பிள்ளையும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தான். கணனி வாங்கி அதில் நான் கற்றுக்கொண்ட எல்லாவற்றுக்கும் தேவையான மென்பொருட்களை ஏற்றி.....

மையத்தில் முதல் முறை நான் வரைந்திருந்த படத்தை உயிரூட்டியதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன படம் தெரியுமா? வேடனும் புறாவும், எறும்பும். முதலில் வேடன் வருவான். அவன் கையிலிருந்த வில்லிலிருந்து அம்பு பறக்கும். ‘சர்..........!’ என்று. என் ஆசிரியை ரொம்பவும் சின்னப்பெண். சௌஜன்யா (இவளைப் பற்றி இங்கே படிக்கலாம்) அவளிடம் ரொம்பப் பெருமையாகக் காண்பித்தேன். ‘பார் எப்படி அம்பு பறக்கிறது’ என்று. அவள் இன்னும் சில அம்புகளை வரைந்தாள். ‘இப்போ பாருங்க!’ சர் சரென்று பல அம்புகள் பறந்தன. நான் ஒண்ணே ஒண்ணு தான் போட்டிருந்தேன்!

அப்புறம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இன்னொரு படம் வரைந்தேன். ஒரு குளம் அதில் ஒரு மீன். நீந்திக் கொண்டே இருக்கும். அப்போது மேலிருந்து ஒரு தூண்டில் வரும். அதில் ஒரு புழு. (புழு மாதிரி என்று சொல்வது பொருந்தும்!) மீன் போய் அதை சாப்பிடும். மறைந்து விடும்!

இதற்கு முன்னாலேயே மின்னஞ்சல் அனுப்பக் கற்றுக் கொண்டிருந்தேன். நான் வரைந்து உயிரூட்டிய படத்தை எல்லோருக்கும் அனுப்பினேன். என் நாத்தனார் பெண்ணிற்கு மட்டும் தான் படத்துடன் போய் சேர்ந்தது. மற்றவர்கள் படம் திறக்கவேயில்லை என்றார்கள். ‘உங்க கணனியை upgrade பண்ணிக்குங்க’ என்றேன்!
அப்புறம் தமிழ் எழுத்துருக்களை தேடிக் கண்டுபிடித்து, தம்பி வீட்டில் இருந்த என் அம்மாவிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதை ‘send’ பண்ணிவிட்டு அம்மாவிற்கு தொலைபேசி ‘அம்மா என் கடிதம் வந்ததா?’ என்றால் அம்மா ‘இன்னிக்கு தான போட்ட? இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்’ என்றாள். ‘ஐயோ! அம்மா! இது இமெயில் மா, அடுத்த நொடி வந்துடும்’

‘இமெயில், எறும்பு மெயில் எல்லாம் அனுப்பாதே. ஒழுங்கா இன்லன்ட் லெட்டர்- ல எழுதி போஸ்ட் பண்ணு. எனக்கு இந்த கம்ப்யூட்டர் தெரியாது. இனிமே கத்துக்கறாதாகவும் இல்லை’ என்று என் ஆசையை அப்படியே வழித்து குப்பைத் தொட்டியில் போட்டாள்.

2011 ல பிள்ளைக்குக் கல்யாணம். மாட்டுப்பெண் வந்தவுடன் நானும்  அவளும் எப்படி ஒருவரையொருவர் சமாளிக்கிறோம் என்று ஒரு கட்டுரை எழுதினேன். எந்தப் பத்திரிக்கையிலும் வரலை. அப்போதான் இந்த வேர்ட்ப்ரஸ் தளம் பார்த்தேன். அதிலேயே இந்த முதல் பதிவைப் போட்டேன். இதற்கு மேல நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியும். எல்லாமே வரலாறு!

33 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாருங்கள் ஸ்ரீராம்!
   வருகைக்கும் பொறுமையாய் படித்ததற்கும் கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 2. தங்கள் கணினி ஆர்வமும் அது
  குறித்து பகிர்ந்த விதம் மனம் கவர்ந்தது
  பதிவினூடேயே அடுத்த பதிவுக்கான
  லீட் கொடுத்திருந்தது அருமை
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் ரமணி!
   வருகைக்கும் அடுத்த பதிவை எழுத தூண்டும் உற்சாகமான கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 3. முதல் கணினியின் அனுபவ சுவாரஸ்யம் முதல் பதிவின் சந்தோசத்திலும் எதிர்ப்பார்க்கிறேன்... வாழ்த்துக்கள் அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் DD!
   'மிஸ் யூ DD' என்று ஒரு பதிவு எழுதலாம் என்றிருந்தேன். உங்கள் சகோதரி நலம் பெற்று வருகிறார் என்று நினைக்கிறேன்.
   நிச்சயம் எழுதுகிறேன் முதல் பதிவின் சந்தோஷத்தையும் கூடிய விரைவில்!
   மறுபடியும் வலைபக்கம் வந்ததற்கும் கருத்துரை தந்ததற்கும் நன்றி!

   நீக்கு
 4. தொடர் பதிவினைத் தந்த சகோதரிக்கும், என்னைப் போலவே உங்களை எழுத அன்புடன் அழைத்த சகோதரி திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் நன்றி!

  // விழுந்தால் நான் கலங்குவது இல்லை. ஒவ்வொருமுறை விழும்போதும் பிரமாதமாக எழுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும். என் அனுபவம் இது. அதையெல்லாம் பிறகு பதிவு எழுதுகிறேன்.//

  அவற்றையும் ஆவலாய் எதிர்பார்க்கிறோம். எழுதுங்கள்!

  // மையத்தில் முதல் முறை நான் வரைந்திருந்த படத்தை உயிரூட்டியதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன படம் தெரியுமா? வேடனும் புறாவும், எறும்பும். //

  படம் வரையும் போதும் உங்களுக்கு ஒரு நீதிக்கதைதான் ஞாபகம் வந்துள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

  // ‘இமெயில், எறும்பு மெயில் எல்லாம் அனுப்பாதே. ஒழுங்கா இன்லன்ட் லெட்டர்- ல எழுதி போஸ்ட் பண்ணு. எனக்கு இந்த கம்ப்யூட்டர் தெரியாது. இனிமே கத்துக்கறாதாகவும் இல்லை’ என்று என் ஆசையை அப்படியே வழித்து குப்பைத் தொட்டியில் போட்டாள். //

  அம்மா, நன்றாகச் சொன்னார்கள்!
  என்னால் உங்களைப் போல நகைச்சுவையோடு எழுத முடியாது.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் இளங்கோ ஸார்!
   தொடர் பதிவிற்கு கூப்பிட்டு எனக்கும் ஒரு சரியாசனம் கொடுத்தீர்களே!
   வருகைக்கும், வரிக்குவரி படித்துப் பாராட்டியதற்கும் நன்றி!

   நீக்கு
 5. முதல் கணினியின் அனுபவ சுவாரஸ்யம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் தனிமரம்!
   வருகைக்கும் என் அனுபவத்தைப் படித்து ரசித்ததற்கும் நன்றி!

   நீக்கு
 6. பதில்கள்
  1. வாருங்கள் ஜெயக்குமார்!
   முதல் வருகைக்கும் என் கணனி அனுபவத்தைப் படித்துப் பாராட்டியதற்கும் நன்றி!

   நீக்கு
 7. விழுந்தால் நான் கலங்குவது இல்லை. ஒவ்வொருமுறை விழும்போதும் பிரமாதமாக எழுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும். //

  உங்கள் தன்னம்பிக்கை வாழக!

  கணினி அனுபவம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் கோமதி!
   வருகைக்கும் எனது தன்னம்பிக்கையை வாழ்த்தியதற்கும் நன்றி!

   நீக்கு
 8. ‘இமெயில், எறும்பு மெயில் எல்லாம் அனுப்பாதே. ஒழுங்கா இன்லன்ட் லெட்டர்- ல எழுதி போஸ்ட் பண்ணு./ஹஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் கண்ணதாசன்!

   கடிதம் கையில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் என்பது அம்மாவின் கருத்து. உண்மைதானே. இன்றைக்கும் அம்மாவிற்கு என் பதிவுகளை பிரிண்ட் எடுத்துக் கொடுக்கிறேன்.வருகைக்கும் படித்து ரசித்ததற்கும் நன்றி!

   நீக்கு
 9. நானும்.

  உங்கள் நகைச்சுவை உணர்வு பிரமாதம். அனிமேசன் எல்லாம் செஞ்சிருக்கீங்களே! பிரமாதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் துரை!
   ஏதோ ஒரு பழமொழி இருக்கிறதே Jack of all trades, Master of none என்று அதைப்போலத்தான் நானும்.
   எங்கேயோ ஆரம்பித்து ஏதேதோ செய்து இங்கே வந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விஷயத்திலும் விதவிதமான அனுபவம்.
   எல்லா விஷயத்தையுமே நகைச்சுவையுடன் அணுகினால் கையாளுவது சுலபம் என்பதால் இப்படி!
   வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

   நீக்கு
 10. இந்த பிலாகை இத்தனை நாள் பார்க்கவேயில்லையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறையப்பேர் வேர்ட்ப்ரஸ் வேண்டாம். ப்ளாக்ஸ்பாட்டிற்கு மாறிவிடுங்கள் என்றார்கள். அவர்கள் ஆசையைக் கெடுப்பானேன் என்று இங்கும் ஒன்று ஆரம்பித்தேன். அம்மா வீடு வேர்ட்ப்ரஸ் தான். (வைகோ ஸாருக்கு கோபம் வரும் நான் இப்படி சொன்னது தெரிந்தால்!)

   ஒரே ஒரு தடவை வந்திருக்கிறீர்கள். ரமாவும் ரஞ்சனியும் என்ற பதிவிற்கு கருத்துரை இட்டிருக்கிறீர்கள்.

   நீக்கு
  2. ****நிறையப்பேர் வேர்ட்ப்ரஸ் வேண்டாம். ப்ளாக்ஸ்பாட்டிற்கு மாறிவிடுங்கள் என்றார்கள். அவர்கள் ஆசையைக் கெடுப்பானேன் என்று இங்கும் ஒன்று ஆரம்பித்தேன்.***

   word press will ask e-mail id. People like me dont want to reveal e-mail id to "strangers" (உங்களை சொல்லவில்லை :)) ). So, the responses wont be that many. :)

   நீக்கு
 11. உங்கள் கணினி அனுபவம் படிக்க படிக்க சுவையாக இருக்கிறது. நிறையவே உங்களுக்குக் கணினியைப் பற்றிதெரியும் போலிருக்கிறது.நிறை குடம் தளும்பாது என்பது உண்மை தானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் ராஜி!
   திரு அப்பாதுரைக்கு சொன்ன பதிலே உங்களுக்கும்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 12. ***அம்மா ‘இன்னிக்கு தான போட்ட? இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்’ என்றாள். ‘ஐயோ! அம்மா! இது இமெயில் மா, அடுத்த நொடி வந்துடும்’**

  விழுந்து விழுந்து சிரிக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் வருண்!
   வருகைக்கும், படித்து ரசித்து விழுந்து விழுந்து சிரித்ததற்கும் நன்றி!

   நீக்கு
 13. //விழுந்தால் நான் கலங்குவது இல்லை. ஒவ்வொருமுறை விழும்போதும் பிரமாதமாக எழுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும். என் அனுபவம் இது. அதையெல்லாம் பிறகு பதிவு எழுதுகிறேன். //

  நமக்குள்ளே எத்தனை ஒற்றுமைனு சுலபமாக் கண்டு பிடிக்கலாம் போல. நானும் அப்படித் தான். அதெல்லாம் சட்டுனு எழுந்துடுவேனாக்கும். :))) கணினி அனுபவங்கள் பிரமாதம். உங்களை மாதிரி நான் கோபாலை எல்லாம் பார்க்கலை. தாமரையையும் தொடலை. நேரடியா வந்து வேலை செய்ய ஆரம்பிச்சாச்சு. அதுக்கப்புறமாத் தட்டுத் தடுமாறி அதெல்லாம் என்னனு கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் லேசாப் புரிஞ்சுது.

  வரையல்லாம் கத்துட்டு இருக்கீங்க. எனக்கு அதெல்லாம் தெரியாது. கோலம் மட்டும் அவ்வப்போது போட்டுப் பார்ப்பேன். :))) இப்போல்லாம் அதுக்கும் நேரம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா!
   நம்ம தலையிலே அதெல்லாம் கத்துக்கணும்னு எழுதியிருந்ததே!
   இப்போது எதுவும் நினைவில் இல்லை என்பதுதான் ஹை லைட்!

   சின்ன வயதிலிருந்தே படங்கள் வரைவதில் ஆர்வம் அதிகம். கோலத்தில் கூட வைரையத்தான் செய்வேன்! புள்ளிக் கோலம் கொஞ்சம் கஷ்டம் எனக்கு. என் அக்கா தான் இதில் எக்ஸ்பெர்ட்.

   நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு எனது கணனி அனுபவத்தை வெற்றிகரமாக எழுதி விட்டேன். என்னைக் கூப்பிட்டதற்கு நன்றி!

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 14. எனக்கெல்லாம் ப்ளாக்ஸ்பாட் தான் தாய் வீடு, தந்தை வீடு, மாமியார் வீடு, கணவன் குடியிருக்குமிடம் எல்லாம். வேர்ட் ப்ரஸ் எல்லாம் பிடிக்கலை. :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் இதில் பழகிவிட்டீர்கள். எனக்கு அது பழகிவிட்டது. அவ்வளவுதான். மாற்றம் என்பது மிகவும் கடினம், இல்லையா?

   நீக்கு
 15. இந்த வரலாறு தான் இன்று உலகம் முழுக்க உங்கள் பெயரை உச்சரிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றதே.

  பதிலளிநீக்கு
 16. வாருங்கள் ஜோதிஜி!
  உலகம் முழுக்க? :)
  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 17. உங்க முதல் கணினி அனுபவம் சுவாரஸ்யமா இருக்கு.அம்மாவுக்கு ஈமெயில் அனுப்பியது,அது வந்ததா என ஃபோன் செய்து கேட்டது,அதற்கு அவரது பதில் என‌ எல்லாமும் நகைச்சுவையா எழுதியிருக்கீங்க‌.

  'நான் வரைந்து உயிரூட்டிய படத்தை எல்லோருக்கும் அனுப்பினேன்'____ எனக்கும் இது வேணுமே!! கொஞ்சம் தேடிப்பிடித்து அனுப்புங்கோ,உங்கள் ஓவியத் திறமையையும் பார்க்க ஆவல்.

  இவ்வளவு நாளும் இந்தப் பதிவை பார்க்காமல் விட்டிருக்கிறேனே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் சித்ரா!
   இப்போது என் கணனி ஓவியம் எங்கு போயிற்றோ, தெரியவில்லை. பல கணனிகள் மாற்றியாயிற்று. எனது ஓவியங்களையும் ஸ்கேன் செய்து போட வேண்டும். எப்போது என்று தெரியவில்லை.நிச்சயம் போடுகிறேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு