வியாழன், 6 ஆகஸ்ட், 2015

வக்கீலிடமும், வைத்தியரிடமும் உண்மையைச் சொல்ல வேண்டும்!
உறவினர் ஒருவர் குளியலறையிலிருந்து வெளியே வரும்போது வழுக்கி விழுந்துவிட்டார். இரண்டு நாட்கள் எங்கேயும் அடிபடவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான்காம் நாள் இடது கை மணிக்கட்டில் வீக்கம் கண்டது. அவரை அழைத்துக் கொண்டு எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்றிருந்தோம். மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு எக்ஸ்-ரே எடுத்து வரச்சொன்னார்.

எக்ஸ்ரேயில் எலும்பு முறிவு உறுதி ஆயிற்று. மருத்துவர்  எங்கள் உறவினரிடம் சில கேள்விகள் கேட்டார். இந்தப் பதிவிற்கு இந்தக் கேள்வி பதில்தான் மிகவும் முக்கியம்.

மருத்துவர் : உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா? மருந்து எடுத்துக் கொள்ளுகிறீர்களா?
உறவினர் : ம்....ம்....கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.....!
மருத்துவர் : உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா? மருந்து எடுத்துக் கொள்ளுகிறீர்களா?
உறவினர் : ம்.....ம்.....கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.....!

இந்தப் பதில்களைக் கேட்டு மருத்துவருக்கு வந்ததே கோவம்! '

'உங்களை நான் சுகர் இருக்கிறதா என்று தான் கேட்டேன். கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா  என்று கேட்கவில்லை. இருக்கிறதா, இல்லையா? அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளுகிறீர்களா, இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள். கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா இல்லையா என்பதை நாங்கள் மருத்துவர்கள் சொல்ல வேண்டும். அதேபோலத்தான் உயர் இரத்த அழுத்தமும். இருக்கிறது, அதற்கு இந்த இந்த மருந்துகள் சாப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள். ஒரு விஷயம் புரிந்துகொள்ளுங்கள், இத்தனை மருந்துகள் சாப்பிடுவதால் உங்கள் சர்க்கரையும், இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவரிடம் சாமர்த்தியமாக பதிலளிக்க வேண்டாம். இப்போது உங்கள் சர்க்கரையையும், இரத்த அழுத்தத்தையும் பரிசோதித்தால் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்குத் தெரிந்து விடும்.

மருத்துவரிடம் எதையும் மறைக்கக்கூடாது. உங்கள் உடல் இருக்கும் நிலையைப் பார்த்து நாங்கள் மருந்துகள் கொடுப்போம். அதற்குத்தான் ஒவ்வொன்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறோம், புரிகிறதா?' என்றார்.

'நோயாளிகளின் பூரண ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும். இப்போது எல்லோருக்கும் சுகர், பிபி இருக்கிறது. இதைச் சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்?'

உறவினர் பேசவேயில்லை. சற்று நேரம் கழித்து மருத்துவரிடம் மன்னிப்புக் கேட்டார்.

வக்கீலிடமும், வைத்தியரிடமும் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பது இதுதான் போலும்.

படம்: கூகிள் நன்றி

7 கருத்துகள்:

 1. மிகச் சரியான அனைவரும் அவசியம்
  மனதில் கொள்ளவேண்டிய கருத்து
  உதாரணமாகச் சொல்லிப் போனவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. மருத்துவரிடம் உண்ணையானவற்றைச் சொல்வதுடன் நாம் சாப்பிடும் மருந்துகள்,நாம் அனுபவிக்கும் உபத்திரவங்கள் யாவையையும் ஒரு சிறு குறிப்பாக எழுதிக்கொண்டு போய் விடுதல் நலம். நம் சொந்திரவுகளைச் சில ஸமயம் சொல்லக்கூட மறந்து விடுவோம்.. இந்தக் குறிப்புகள் மிகவும் உபயோகமாக இருக்கும். பாஷை ப்ராப்ளமும் வரும்போது நம்முடன் வருபவர்களுக்கும் இதை நாம் சொல்ல அவர்கள் உதவ ஸௌகரியமாகஇருக்கும்.. மருந்துகளும் சீக்கிரம் ஞாபகம் வைத்துச் சொல்ல முடியும். என்னிடம் நிகழ்வுகளும் கதைபோலவே இருக்கிறது. உங்களை இங்கும் கண்டு பிடித்து விட்டேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
 3. இப்படிப் பேசுவதால் நமக்கான ஆபத்தை நாமே தேடிக்கொள்கிறோம்!

  பதிலளிநீக்கு