ஞாயிறு, 12 ஜனவரி, 2014

மீண்டும் வசீகர வசுந்தரா!

மீண்டும் வசீகர வசுந்தரா!

ஜனவரி 2014 இதழ் ஆழம் பத்திரிகையில் வந்த கட்டுரை ராஜஸ்தானின் முதலமைச்சராக இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட வந்திருக்கும் வசுந்தரா ராஜே சிந்தியாவின் வெற்றிக்கு  பக்கபலமாக நின்றது அவர் சார்ந்திருக்கும் பாரதிய ஜனதா காட்சி மட்டுமல்ல; அவரது வசீகரமான ஆளுமையும், ராஜ பரம்பரையும் கூடத்தான். பாலைவன மாநிலத்தில் ஒரு சோலை போல பெண்களையும், இளம் வயதினரையும் தன் வசீகரத்தால் கவர்ந்திழுக்கிறார் வசுந்தரா. ராஜஸ்தானில் 162 இடங்களை வென்று சரித்திரம் படைத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த வெற்றிக்குக் காரணமாக நரேந்திர மோடியை சொல்லுகிறார் வசுந்தரா. ‘குஜராத் மாநிலத்தின் முன்னேற்றமே இந்த வெற்றிக்குக் காரணம். வரும் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு இது ஒரு முன்னோட்டம்’ என்கிறார் வசுந்தரா.இளமைக்காலம்

மார்ச் 8, 1953 இல்  ராஜமாதா விஜயராஜே சிந்தியாவிற்கும் குவாலியர் மஹாராஜா ஜிவாஜி ராவ் சிந்தியாவிற்கும் நான்காவது குழந்தையாக பிறந்தவர் வசுந்தரா. ஆரம்பக்கல்வியை கொடைக்கானலில் உள்ள  பிரசண்டேஷன் கான்வென்ட்டிலும், கல்லூரிப் படிப்பை மும்பை சோபியா கல்லூரியிலும் படித்தவர். பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர் வசுந்தரா.  டோல்பூரின் முன்னாள் அரசராக இருந்த ஹேமந்த் சிங்கை நவம்பர் 17, 1972 இல் மணந்த வசுந்தராவிற்கு துஷ்யந்த் சிங் என்று ஒரு பிள்ளை இருக்கிறார். ஒரு வருடத்திற்குப் பின் இந்த திருமணம் முறிந்தாலும் தனது தேர்தல் பிரசாரங்களில் தன்னுடைய ஜாட் அரச உறவை குறிப்பிட மறப்பதில்லை இவர். அரசியல் நுழைவு

1984 இல் அவரது தாயார் விஜயராஜே சிந்தியாவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட வசுந்தரா அந்த வருடமே பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரானார். அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கட்சியிலேயே இருக்கிறார் வசுந்தரா. 1984 லிருந்து 86 வரை இரண்டு வருடங்கள் பா.ஜ.க. வின் இளைஞர் அணியின் மாநில உபதலைவராக இருந்தார். தேர்தல்களத்தில் இறங்கி, வெற்றி பெற்று 1985-89 ஆம் வருடங்களில் ராஜஸ்தான் மாநில சட்டசபையில் டோல்பூர் பகுதியின்  உறுப்பினர் ஆக இருந்தார். பின்னர் முதல்முறையாக ராஜஸ்தானில் உள்ள ஜலவரா பகுதியின் மக்களவை பிரதிநிதியாக 1989 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நான்கு முறை மக்களவை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2002 இல் ராஜஸ்தான் பாஜகவின் தலைவர் பொறுப்பேற்றார். இந்த சமயத்தில் பரிவர்தன் யாத்ராசெய்து மாநிலம் முழுமையும் சுற்றிப்பார்த்தார். இந்த யாத்ரா அவருக்கு மாநிலத்தைப்பற்றி அணுக்கமாக அறிய உதவியதுடன் மக்களுடன் நெருங்கிப் பழகவும், அவரை பிரபலப்படுத்தவும் செய்தது.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் முதலில் வெளியுறவுத்துறையின் சார்அமைச்சராகவும், பின்பு சிறுதொழில்கள், ஊழியர்கள் மற்றும் பயிற்சி துறையின் (தனி பொறுப்பு) சார்அமைச்சராகவும் பணியாற்றினார். மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்துறையை தேர்ந்தெடுக்காமல், சிறுதொழில் துறையை தேர்ந்தெடுத்து, தன் வழி தனி வழி என்று நிரூபித்தார் வசுந்தரா.


2003 ஆம் ஆண்டு முதன்முறையாக ராஜஸ்தானின் முதலமைச்சராக பதவி ஏற்ற வசுந்தரா 2008 இல் தோற்கடிக்கப்பட்டு பதவி இழந்தாலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பிரபலமான அரசியல் பிரமுகராகவே இன்றுவரை இருந்து வருகிறார்.


‘எங்கள் மாநிலம் அவரை நேசிக்கிறது. அவர் உடை உடுத்தும் பாணியை நவநாகரீக வாக்குமூலம் என்று சொல்லலாம். ராஜஸ்தானிய பெண்களுக்கு அவர் ஒரு மிகச்சிறந்த முன்னோடி; நாகரீகத்தின் சின்னம்’ என்கிறார் ஒரு கல்லூரி யுவதி. 


விமரிசனங்கள்:

இவரைப்பற்றிய ஒரு முக்கிய விமரிசனம் என்றால் அது இவர் பணியாற்றும் விதம் பற்றியது. இவரது சக கட்சியாளர்கள் இவரது இந்தப் பாணியை விரும்புவதில்லை என்பதுடன்  இவரை ஏகாதிபதி என்று வெளிப்படையாக விமரிசனமும் செய்கிறார்கள். பெயர் சொல்ல விரும்பாத பாஜக  பிரமுகர் சொல்லுகிறார்: ‘இன்னும் தாம் ஒரு மகாராணி என்றே நினைக்கிறார். மற்றவர்களை கொத்தடிமை போலவும் இவர் நடத்துகிறார்’. ‘தலைவர் என்பவர் அணுகுவதற்கு எளிமையானவராக இருக்கவேண்டும். சென்றமுறை இவர் முதலமைச்சராக இருந்தபோது இவரை அணுகுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. உள்ளூர் அரசியல் பிரமுகர்களை ஆட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களாக நினைத்தார். இந்தமுறை இவர் சற்று மாறியிருப்பார் என்று நம்புகிறோம்’ என்கிறார் இன்னொரு கட்சிப் பிரமுகர்.


‘மொத்தத்தில், மோடியைப் போன்ற ஆளுமை இல்லாதிருந்தும், அவரைப்போல அதிகாரம் செலுத்த வேண்டுமென்று எண்ணுபவர்’ என்று கட்சி உறுப்பினர்களின் பயங்களை எல்லாம் ஒருசேர கூறுகிறார் ஆர். எஸ். எஸ். இயக்கத்தை சேர்ந்த ஒரு பிரமுகர்.
மாநில முன்னேற்றம்

பாஜக விற்கு மக்கள் அளித்திருக்கும் இந்த மாபெரும் தீர்ப்பு, மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத்தான். தொழில்துறையினருக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து, அவர்களது வளர்ச்சிக்கான சூழலை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முன்னேறிய மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் இருக்க வேண்டுமானால் தொழில்துறை முன்னேற்றங்கள் மிகவும் அவசியம்என்கிறார் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன இயக்குனர் கியான் பிரகாஷ்.வசுந்தரா ராஜேயின் தலைமையிலான அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதுடன் அவர்களைக் கவரும் விதத்தில் வியாபார சூழலை மேம்படுத்த வேண்டும் என்று தொழிலதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள். சென்றமுறை அவர் உருவாக்கிய  மீண்டெழு ராஜஸ்தான் திட்டம் இந்த முறை மறுபடி புத்துயிர் பெறும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த மேம்பாட்டு திட்டம்  ராஜஸ்தானை தொழில்துறைக்கான போட்டிக்களமாக காட்டினாலும், எதிர்பார்த்த அளவு முதலீடுகள் கிடைக்காததால் விமரிசனத்திற்கு ஆளானார் வசுந்தரா.குஜராத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டாகக் கொள்வதில் ஆர்வமாக  இருக்கும் வசுந்தராவிற்கு மோடியின் துடிப்பான குஜராத்திட்டம் சில புரிதல்களை ஏற்படுத்தி அதன் மூலம் மீண்டெழு ராஜஸ்தானைமேலும் பயனுள்ளதாகச் செய்ய உதவும்  என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.


ராஜஸ்தானில் சுற்றுலா, சூரிய சக்தி, காற்றாலை, தானியங்கி வாகனங்கள் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இவர்கள் சலுகைகளை கேட்கவில்லை. மாறாக, அவர்களது  திட்டங்களுக்கு உடனடி அங்கீகாரம் கிடைக்கும் வகையில் முடிவுகளை சீக்கிரம் எடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும். மாநிலத்தின் திறனுக்கேற்ப  சாத்தியமான தொழில்களை நிறுவ முதலீட்டாளர்களை முதல்வர் அழைக்க வேண்டும்என்கிறார் பழமை வாய்ந்த வியாபார அமைப்பை சார்ந்த விக்ரம் கோல்ச்சா.தூரக்கிழக்கு நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இங்கிருந்து விமானப் போக்குவரத்து இருப்பது போல, மாநிலத்தின் உள்ளேயும் விமானப் போக்குவரத்து வேண்டும். தில்லியிலிருந்து உதய்பூருக்கு விமானப் போக்குவரத்து இருந்தாலும், ஜெய்பூரிலிருந்து உதய்பூருக்கோ, உதய்பூரிலிருந்து ஜோத்பூருக்கோ விமான போக்குவரத்து இல்லை. இந்தமாதிரியான கட்டமைப்புகள், ஒரு மாநிலத்தின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறதுஎன்று மேலும் சொல்லுகிறார் கோல்ச்சா.


தில்லி-மும்பை தொழில்துறை வளாகம் வரும் வருடங்களில் ஒரு உறுதியான வடிவம் பெறும் அளவில் இருப்பதால் பொருள் உற்பத்திக்கான வாய்ப்புகள் என்றுமில்லாத அளவில் இப்போது பெருகி இருக்கின்றன. அதுவுமின்றி, இந்த அதிவேக சரக்குப் போக்குவரத்து ஏற்றுமதியாளர்களுக்கு பல புதிய வழிகளை திறந்துவிடும். இதன் காரணமாக இப்போது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் புதிய அரசினால் ராஜஸ்தானை ஒரு பரபரப்பான உற்பத்தி ஸ்தானமாக மாற்றமுடியும்.தான் விரும்பிப்படிக்கும் புத்தகம் ரஷ்ய அரச பரம்பரையைச் சேர்ந்த கேதரின் தி கிரேட் எழுதிய சுயசரிதை என்று ஒரு வருடம் முன்பு கூறியிருந்தார் வசுந்தரா. தன்னந்தனியாக ரஷ்யாவின் பொற்காலத்தை கட்டியம் கூறி வரவேற்ற வீரப்பெண்மணி கேதரின் போல வசுந்தராவும் எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவார் என்று நம்புவோம்.
4 கருத்துகள்:

 1. வசுந்துரா அவர்கள் குறித்து இதுவரை அறியாத
  விஷயங்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரமணி ஸார்!
   வருகைக்கும் கருத்துரைக்கும், பொங்கல் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 2. அறியாத பல தகவல்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

  தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தனபாலன்!
   வருகைக்கும் பொங்கல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு