புதன், 9 அக்டோபர், 2013

புர்கா அவெஞ்சர் பராக் பராக்!


செப்டம்பர் மாத ஆழம் இதழில் வந்த எனது கட்டுரை ‘பள்ளி ஆசிரியையான ஒரு பெண், அடக்குமுறையின் சின்னமான கறுப்பு புர்காவை அணிந்து கொண்டு  தனது கல்விக்கும், சுதந்திரத்திற்கும் தடையாக இருப்பவர்களை அழிக்க எடுக்கும் அவதாரமே ‘புர்கா அவெஞ்ஜர்’.


பாகிஸ்தான் ஜியோ தொலைக்காட்சி தொடராக ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து ஒளிபரப்பாகி வரும் ‘புர்கா அவெஞ்ஜெர்’ கதாநாயகி ஜியாவைப் பற்றிய அறிமுகத்தில் இப்படிக் கூறுகிறார் இந்தத் தொடரை எழுதி உருவாக்கியிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த  பாப் பாடகர் திரு ஆரோன் ஹரூன் ரஷித்.


‘புர்கா அவெஞ்ஜெர்’ என்பது வீர தீர செயல்கள் செய்யும் ஒரு பெண்ணைப் பற்றிய நகைச்சுவை கலந்த ஒரு உயிரூட்டப்பட்ட தொலைக்காட்சி தொடர். ஹல்வாபூர் என்ற கற்பனை நகரத்தின் ஊழல் மன்னனான அரசியல்வாதி வதேரோ பஜெரோ,  தீய மந்திரவாதி பாபா பண்டூக் மற்றும் இவர்களது  அடியாட்களுக்கு எதிராக போராடும் இந்த பெண்ணிற்கு மூன்று சிறுவர்கள் நண்பர்கள். உருது மொழியில் தயாரிக்கப்பட்ட,  பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட முதல் அனிமேட்டட் தொடர் இது. இதுவரை 22 நிமிடங்கள் ஓடும் 13 பகுதிகள் தயாராகி இருக்கின்றன.  


இந்த தொலைக்காட்சித் தொடரின் முக்கியக் குறிக்கோள் மக்களை சிரிக்க வைத்து, மகிழ்விப்பது மட்டுமல்ல; நேர்மறையான எண்ணங்களை இளைய தலைமுறையினரிடம் உருவாக்கவும் செய்வதும்தான்.


இதில் வரும் கதாபாத்திரங்கள்:

ஜியா என்னும் புர்கா அவெஞ்ஜெர்

சிறுவயதிலேயே பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட ஜியா, ஒரு வயதான, மிக நல்ல கபடி ஆசிரியராக இருக்கும் கபடி ஜன் என்பவரால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டு அவரது மகளாக வளர்ந்து வருகிறாள். கபடி ஜன், ஜியாவிற்கு தக்ட் கபடி என்னும் ஒரு புதிய சண்டையிடும் முறையை சொல்லித் தருகிறார். இந்த வீர விளையாட்டில் கராத்தே பயிற்சிக்குண்டான கை கால் அசைவுகளுடன் புத்தகங்களும் எழுதுகோல்களும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மலாலா நினைவு வருகிறதல்லவா?


உள்ளூர் வாசிகளுக்கு அமைதியான ஒரு பள்ளி ஆசிரியராக காட்சியளிக்கும் ஜியா, எப்போதெல்லாம் அநியாயம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் வீரப் பெண்மணியாக அவதாரமெடுக்கிறாள். அந்த அவதாரத்தில் அவள் கறுப்பு புர்காவை அணிந்து கொண்டு வருவதால் புர்கா அவென்ஜெர் என்று அறியப்படுகிறாள். அவள் அப்படி இன்னொரு அவதாரம் எடுப்பதை அவளது அப்பா கபடி ஜன் மட்டுமே அறிவார்.


இம்மு – ஆஷு

இம்மு என்கிற இம்ரான், அவனது சகோதரி ஆஷு இருவரும் இரட்டைப்பிறவிகள். இம்மு தனது சகோதரியை  பொத்தி பொத்தி காப்பவன். மிகவும் அமைதியாகவும், அடக்கமாகவும் ஆனால் யாருடனும் ஒட்டாமல் இருக்கும் இம்முவின் நண்பர்கள்  மூலி மற்றும்  கோலு (செல்ல ஆட்டுக்குட்டி). இம்மு சற்றும் பயமில்லாமல், தன் உள்ளுணர்வின்படி நடந்து தன்னையும் தன் நண்பர்களையும் இக்கட்டிலிருந்து காப்பாற்றுபவன்.


வதேரோ பஜெரோ

எல்லோரையும் தனது இரும்புக் கை கொண்டு அடக்கும் ஹல்வாபூரின் மேயர். அதிகார வெறியன். பண வெறியன். ஊழல் அரசியல்வாதியின் அசல் பிம்பம். பாபா பண்டூக் என்ற ஒரு தீய மந்திரவாதியுடன் இணைந்து எல்லாவிதமான கெட்ட செயல்களையும் செய்பவன். தனக்குக் காரியம் ஆக வேண்டுமென்றால் கழுதையின் காலையும் பிடிக்கத் தயங்காதவன்.


மூலி 

ஆஷு, இம்ரானின் நண்பன். கவர்ச்சியானவன் ஆனால் கொஞ்சம் அசடு. இரட்டையர்  பண்ணும் எல்லா சாகசத்திலும் கூட இருப்பவன். பயந்தாங்கொள்ளி ஆதலால் எப்போதும் ஆபத்தில் மாட்டிகொண்டு ஆஷு, இம்ரானால் காப்பாற்றப்படுபவன். எப்போதும் மூலி எனப்படும் முள்ளங்கியை தின்று கொண்டு தனது செல்ல ஆட்டுக் குட்டியை (கோலு) விட்டுப் பிரியாமல் இருப்பவன்.


கதை என்ன?

ஜியாவின் முக்கிய எதிரிகள் உள்ளூர் குண்டர்கள். ஜியா வேலை செய்யும் பள்ளியை மூடச் சொல்லும் இவர்களை எதிர்த்துப் போராட ஜியா புர்கா அவெஞ்ஜர் ஆக அவதாரம் எடுப்பதுதான் முக்கிய கதை. ‘ஒவ்வொரு பகுதியும் ஒரு அறநெறியை மையப்படுத்தி குழந்தைகளுக்கு ஒரு சமூக செய்தியை அழுத்தமாகச் சொல்லுகிறது’ என்கிறார் திரு ரஷித். ‘ஆனால் அது நகைச்சுவை, சாகசம், அதிரடி கலந்த கேளிக்கையாக இருக்கும்’.


பாகிஸ்தானியர்களுக்கு இது ஒன்றும் புதுக்கதை அல்ல. உள்ளூர் குண்டர்களுக்கும் புர்கா அவென்ஜருக்கும் இடையில் நடக்கும் இந்தப் போராட்டம் அவர்கள் அறிந்ததுதான். மிகவும் நகைச்சுவையுடன் புனையப்பட்டிருக்கும் இதில் வரும் வில்லன்களின் செயல்கள் பயத்தைவிட சிரிப்பையே வரவழைக்கிறது. இந்தத் தொடரை தெற்காசிய ‘நிஞ்ஜா’ தொடர் என்று சொல்லலாம். பெண்கல்வியின் அத்தியாவசியத்தை வலியுறுத்துவதுடன், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, மனிதர்களிடையே பாரபட்சமின்மை என்று பல விஷயங்களையும் சொல்லும் தொடராக இது உருவாகியிருக்கிறது.


இந்தத் தொடரின் கதாநாயகி அணியும் கறுப்பு வண்ண புர்கா பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் வாழும் பழமைவாத இஸ்லாமியப் பெண்கள் அணியும் இந்த உடை – அடக்குமுறையை குறிக்கும் உடையை, அதை எதிர்க்கப் போராடும் கதாநாயகி அணிந்திருப்பது ஏன்?


‘முதல் காரணம் ஒரு ‘தேசி’ உணர்வை பார்ப்பவர்களிடையே உருவாக்க. உண்மையான புர்கா மிகவும் பெரிதாக இருக்கும். ஆனால் இந்த வீராங்கனை அணிந்திருப்பது ‘நிஞ்ஜா’ அணிந்திருக்கும் உடையைப் போன்றது. இது உண்மையான புர்காவை விட வித்தியாசமானது. மற்ற சூப்பர் ஹீரோக்களைப் போல இந்த நாயகியும் தன் அடையாளத்தை மறைக்க இந்த உடையை அணிகிறாள்’ என்று விளக்குகிறார் ரஷித்.


செய்தித்தாள்களில் வந்த ஹரூன் ரஷித்தின் பேட்டியில் எதற்காக அவரது தொடரில் ஒரு பெண்ணை சூப்பர் ஹீரோவாக உருவாக்கினார் என்றும் எப்படி இந்தியர்களையும் இந்த தொடர் கவரும் என்றும், அவரது கதாநாயகி அணிந்திருக்கும் புர்கா எப்படி அவளைப் பறக்க வைக்க உதவுகிறது என்பது பற்றியும் கூறுகிறார்.


இந்தத் தொடர் எப்படி உருவானது?

‘2010 ஆம் ஆண்டு பல பெண்கள் பள்ளிகள் தீவிரவாதிகளால் மூடப்பட்டது எனக்கு எரிச்சலை மூட்டியது. அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். பாகிஸ்தானில் இது குறித்து ஒரு தொடர் எடுக்க வேண்டுமென்று எல்லோரும் பேசிக் கொண்டனர். நாமே எடுத்தால் என்ன என்று தோன்றியது. நானே சில வரைபடங்களை வரைந்தேன். பிறகு இஸ்லாமாபாதில் இருக்கும் திறமை வாய்ந்த உயிரூட்டப்பட்ட படங்களை வரையும் வரைகலையாளர்களை சந்தித்தேன். என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகப் புரிந்தது’.


‘எங்களது தொடரில் வன்முறை, துப்பாக்கி, குண்டு வெடித்தல் இருக்காது. அதற்கு பதில் எழுதுகோல்களும், புத்தகப்பைகளும் கெட்டவர்களின் மேல் எறியப்படும். பெண்கள் பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதும், புர்கா அவென்ஜெர் வந்து காப்பாற்றுவதும் ஆகிய பகுதிகள் மே 2012 இல் தயாராகின. அக்டோபர் 2012 இல் மலாலா சுடப்பட்டாள். நாங்கள் அதிர்ந்து போனோம். நிஜ வாழ்க்கையின் நிதர்சனம்  எங்கள் கலைப்படைப்பை கேலி செய்வதுபோல இருந்தது. இந்நிகழ்ச்சியை நிச்சயம் இதில் பிரதானமாகக் காட்ட வேண்டும் என்று நினைத்தோம். ஜனவரி 2013 இல் நாங்கள் தயாராகிவிட்டோம்.


இந்த தொடருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது?

இதுவரை வந்த கருத்துக்கள் எல்லாமே நேர்மறையானதாகவே இருக்கின்றன. மிகப் பெரிய தாக்கத்தை, ஒரு தொற்றுநோய் போல பாகிஸ்தான் முழுதும் ஏற்படுத்தியிருக்கிறது. பல நாடுகளிலிருந்தும் மக்கள் இதைப்பற்றிப் பேசி வருகிறார்கள்.


புர்கா என்ற ஆடையை நவ நாகரீக சின்னமாக நீங்கள் மாற்றி விட்டீர்கள் என்று சிலர் சொல்லுகிறார்களே?

எனது கதாநாயகி ஒரு பள்ளி ஆசிரியை. தினசரி அவள் புர்கா அணிவதில்லை. ஏன் தலையை மூடும் ஸ்கார்ப் கூட அணிவதில்லை. அவளது அடையாளத்தை மறைக்கவே – எல்லா சூப்பர் ஹீரோக்களைப் போல – புர்கா அணிகிறாள். அவள் அணியும் அந்த உடையே அவளுக்கு உயர உயர செல்லவும் உதவுகிறது. புர்கா அணிந்து போராடுவது பலவித சுதந்திரங்களை அவளுக்குக் கொடுக்கிறது’.


மேற்கத்திய நாடுகள் எப்படிப்பட்ட பெண் கதாநாயகிகளை உருவகப்படுத்தி இருக்கிறார்கள் என்று பாருங்கள் எல்லா கதாநாயகிகளுமே செக்ஸ் குறியீடாகவே, செக்ஸ் பொருளாகவே -பூனைப் பெண்ணிலிருந்து அபூர்வ பெண்மணி வரை - எல்லோருமே கவர்ச்சிகரமாக சித்தரிக்கப் படுகிறார்கள். அது தவறு. எனது கதாநாயகி உடுத்தும் உடை அவளது பாலியலைக் குறிப்பதில்லை மாறாக  அது அவளது பலத்தைக் குறிக்கிறது.


உங்கள் கதாநாயகி யாரை அல்லது எந்த தீய சக்தியை எதிர்த்துப் போராடுகிறாள்?

வதேரோ பஜெரோ என்கிற ஊழல் மன்னன் ஆன ஒரு அரசியல்வாதி, பாபா பாண்டூக் என்கிற தீய மந்திரவாதி, அவனது தோழன், சீன தேசத்தில் உருவாக்கப்பட்ட ஒரு ரோபாட் இவர்கள்தான் இந்தத் தொடரின் வில்லன்கள். ஒவ்வொரு பகுதியிலும் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சினை, மூட நம்பிக்கைகள், மின்சாரத் திருட்டு, வேற்றுமை பாராட்டுதல் என்று பலவற்றை சித்தரிக்கிறோம்.


நான் சிறுவனாக இருக்கும்போது என் அம்மா எனக்கு நிறைய அறநெறிக் கதைகள் படித்துக் காட்டுவார். ஆனால் இன்றைய பாகிஸ்தானில் கல்வியறிவு மிகவும் குறைந்திருக்கிறது. மொழிமாற்றம் செய்யப்பட கார்டூன் படங்கள் தவிர  குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மிகவும் குறைவு. இந்தியாவிலிருப்பவர்களும் இந்தத் தொடரை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் பிரச்சினைகள் இந்தியாவிலும் இருக்கின்றனவே!


என்ன மாதிரியான கலாச்சார தாக்கம் இந்த தொடரில் இருக்கிறது?

முழுக்க முழுக்க எங்கள் நாட்டுணர்வை கொண்டு வந்திருக்கிறோம். கதாபாத்திரங்கள் வேஷ்டி கட்டிக் கொண்டு பெஷாவரி செருப்புகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரோபோட் உடலில் பாகிஸ்தானின் புகழ் பெற்ற ‘ட்ரக் ஆர்ட்’ வரையப்பட்டு இருக்கும். எல்லா வீடுகளிலும் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான ஒரு ஆட்டுக்குட்டியும் இந்தக் கதையில் உண்டு.  ஹல்வாபூரின் பின்னணி லாகூர் நகரத்தை ஒத்திருக்கும். ஆனால் மிகவும் அழகான வடக்கு மலைப்பகுதியில் கதை நடக்கிறது.
இது வெறும் அனிமேட்டட் படம் மட்டுமல்ல. நான் ஒரு பாடகனாக இருப்பதால், அலி ஜாபர், அலி அஸ்மத், ஜோஷ் முதலியவர்களையும், சூஃபி, ஹிப்-ஹாப் டோல் முதலியவற்றையும் பயன்படுத்தியிருக்கிறேன். தெற்கு ஆசிய இசை நிகழ்ச்சிகளில் இடம் பெறும் பாடல்களும் இடம் பெறுகின்றன.


உங்களை தூண்டிய சக்தி எது?

எங்கள் பொறுப்புகளை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். நாட்டின் பிரச்னைகள் எங்கள் முகத்தில் அறையும்போது ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. எங்கள் நாட்டிற்காக நல்லது செய்வதில் பெருமைப்படுகிறோம்.பாகிஸ்தானிய பாப் பாடகர்கள் வெறும் ஸ்டைலை மட்டும் காண்பிக்காமல் தங்கள் எண்ணங்களின் சாரத்தையும் கொடுக்க தயாராகி வருகிறார்கள். நல்ல விஷயம் யார் செய்தால் என்ன? வரவேற்போம்.

5 கருத்துகள்:

 1. . நல்ல விஷயம் யார் செய்தால் என்ன? வரவேற்போம்.பாராட்டுவோம்..!!

  பதிலளிநீக்கு
 2. புர்கா தொடரைப் பார்க்கும் ஆவலைத் தஊண்டுகிறது உங்கள் விமரிசனப் பதிவு. நிஜமாகவே இப்படி ஒரு ஆசிரியை இருந்தால் நலமே!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  அம்மா

  கட்டுரை நன்றாக உள்ளது ஆழம் இதழில் படைப்பு வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. இதுவரை அறியாத விஷயம்
  தெளிவாக முழுமையாக அறிந்துகொள்ளும்படி
  விரிவாகப் பதிவிட்டமைக்கு மனமார்ந்த
  நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. நல்ல விஷயம் யார் செய்தால் என்ன? வரவேற்போம்.//
  நல்ல விஷயத்தை வர.வேற்போம்.

  பாப் பாடகர் திரு ஆரோன் ஹரூன் ரஷித் அவர்களை பாரட்டுவோம்.

  பதிலளிநீக்கு