சனி, 14 செப்டம்பர், 2013

மென்பொருள் வல்லுனர்கள் கவனிக்க:




பொதுவாகவே பார்வேர்டட் மெசேஜஸ் என்றால் படிக்காமலேயே குப்பைத்தொட்டியில் போட்டு விடுவேன். அதுவும் ஒரு  கும்பலுக்கே பார்வேர்ட் பண்ணியிருந்தால் திறக்காமலேயே மோட்சம்தான்.


ஆனால் இந்த மெசேஜ் இன்போசிஸ் திரு நாராயணமூர்த்தி அவர்கள் தனது நிறுவனத்தில் ‘கடுமையாக’ உழைக்கும் மென்பொருளாளர்களுக்கு எழுதியது என்று இருக்கவே படிக்க ஆரம்பித்தேன். நிறைய விஷயங்கள் தெளிவாயின.


இதோ உங்களுக்கும்:

“இரவு மணி எட்டரை. அங்கே பாருங்கள் நிறுவனத்தின் பல பகுதிகளிலும் விளக்குகள் எரிகின்றன; கணனிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன; காபி இயந்திரங்கள் விடாமல் காபி  வழங்கிக் கொண்டிருக்கின்றன. 


யார் இன்னும் அங்கே உட்கார்ந்திருப்பது?

நன்றாகப் பாருங்கள்! மனிதர்கள் தாம்; ஓ! சில ஆண் இனங்கள்!


இன்னும் அருகில் போய் பார்க்கலாம்; ஆஹா.... திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள்!


ஏன் அலுவலக நேரம் கடந்த பின்னரும் இத்தனை நேரம் இங்கேயே இருக்கிறார்கள்?

ஒருவரைக் கேட்கலாம்:

“வீட்டிற்குப் போய் என்ன செய்வது? இங்கே கணனியில் கால வரையன்றி மேயலாம்; ஏசி ரூம்; தொலைபேசி வசதி; உணவு, காப்பிக்குப் பஞ்சமில்லை; முக்கியமாக ‘பாஸ்’ இல்லாத நேரம்! அதனால் தான் நான் நேரம் கடந்து ‘வேலை’ செய்து கொண்டிருக்கிறேன்”.

திருமணம் ஆகாத இளைஞர்கள் அலுவலக நேரம் முடிந்த பின், வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று இதுபோல தங்களது ‘காலத்தை ஓட்ட’ அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதன் பின் விளைவுகள் என்ன என்று பார்ப்போம்.


இப்படி நேரம் காலமில்லாமல் ‘வேலை’ செய்வது அந்தக் கம்பனியின் கலாச்சாரம் என்று  வெளியுலகுக்கு தவறான செய்தி பரவுகிறது.


‘பாஸ்’- களும் இவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் டாக்ஸி வவுச்சர்களும், உணவு பில்களும் மறுபேச்சில்லாமல் மேலிடத்து அனுமதியைப் பெற்று விடுகின்றன.  இவர்களைப் பற்றிய ‘பாஸ்’ களின் feedback க்குகளும் – (ரொம்பவும் கடுமையாக உழைப்பவர், உடை மாற்றிக் கொள்ள மட்டுமே வீட்டுக்கு போவார் – என்ற ரீதியில்) நல்லவிதமாகவே அமைகின்றன.

 
அதிக நேரம் உழைப்பதற்கும் அதிக நேரம் ‘உட்கார்ந்து’ இருப்பதற்கும் வித்தியாசம் தெரியாத ‘பாஸ்’ கள்! விளைவு? எல்லோரும் அதேபோல அதிக நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று இந்த ‘பாஸ்’ கள் எதிர்பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.


இந்த பிரம்மச்சாரிகளுக்குத் திருமணம் ஆனவுடன் காட்சி மாறுகிறது. கல்யாணம் குடும்பம் என்ற இவர்களது முன்னுரிமை லிஸ்ட்டில் அலுவலகம் கடைசி இடத்தைப் பிடிக்கிறது. குடும்பத்தின் பொறுப்பும் சேர்ந்து கொள்ள, ஆரம்பமாகிறது ‘பாஸ்’ –உடன் ஆன பிரச்னை!
அவர்களுக்கு என்று இருக்கும் வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டு, அலுவலக நேரம் முடிந்து ஒரு மணி நேரம் கழித்துக் கிளம்பினாலும் ‘பாஸ்’ ஸுக்கு திருப்தி இல்லை. ஒருகாலத்தில் ரொம்பவும் ‘கடுமையாக’ உழைத்துக் கொண்டிருந்த மனிதரின் மேல் இப்போது ‘சரியில்லை’ என்று முத்திரை குத்தப்பட்டுவிடுகிறது.


வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பவர்கள் அதிகப்படியான வேலை செய்ய சுணக்கம் காட்டுகிறார்கள் என்றும், அலுவலகத்தில் அதிக நேரம் கழிக்க விரும்பாத பெண்கள் ‘ஊஹும், not upto the mark!’  என்றும் அடையாளம் காட்டப் படுகிறார்கள். 
அதிக நேரம் ‘உழைப்பதாக’ பாவ்லா பண்ணிக் கொண்டு, தங்கள் முதுகில் தாங்களே ஷொட்டு கொடுத்துக் கொண்டு, அலுவலகத்தின் வேலை கலாசாரத்தை கெடுத்துக் கொண்டிருந்த பிரம்மச்சாரிகள் ஒரு கால கட்டத்தில் தங்கள் செய்கைக்கு வருத்தப் பட ஆரம்பிக்கிறார்கள்.

இதனால் அறிவது என்ன?

நேரத்தில் அலுவலகத்திருந்து புறப்படுங்கள். உண்மையிலேயே தேவைப் பாட்டால் ஒழிய அதிக நேரம் இருக்க வேண்டாம். அனாவசியமாக அலுவலகத்தில் நேரத்தைக் கழித்துவிட்டு அதனால் உங்கள் சக ஊழியர்களுக்கும் நிறுவனத்திற்கும் அவப் பெயர் ஏற்படும்படி நடந்து கொள்ளாதீர்கள்.


அந்த நேரத்தில் வேறு என்ன செய்யலாம்? ஆயிரம் வேலைகள் செய்யலாம்.
புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளுங்கள்;


சங்கீதம், புதிய பாஷை, புதிய விளையாட்டு இப்படி ஏதாவதொன்று.


ஒரு பெண் தோழியோ, ஆண் தோழனோ நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் வெளியே போய் விட்டு வாருங்கள்.


இப்போதெல்லாம் சைபர் மையத்தில் மிகவும் சல்லீசான தொகையில் மணிக்கணக்கில் இணையத்தில் மேயலாம்.


சமையல் செய்ய ஆரம்பிக்கலாம் – வெளி உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாமல்!


Smirnoff விளம்பரத்திலிருந்து புரிந்து கொள்ளுங்கள் : Life's calling, where are you??


அதிக நேரம் அலுவலகத்தில் செலவழித்தால் கஷ்டப்பட்டு, நூறு சதவிகித அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார் என்பது அப்பட்டமான இந்திய மனோபாவம்.


வேலை நேரத்திற்கு மேல் அலுவலகத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள், தங்களது நேரத்தை சரியானபடி ஆளத் தெரியாதவர்கள்.


இந்த கடிதத்தை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் – அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் முன்.  இதை அனுப்ப வேண்டும் என்று நேரம் கடந்த பின்னும் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்க வேண்டாம்!


வாழ்த்துக்களுடன்,

என்று முடிந்திருந்தது கடிதம்.


மென்பொருள் வல்லுனர்களாக இருக்கும் பிரம்மச்சாரிகள் கவனிப்பார்களா?


தொழிற்களம் தளத்தில் வெளியிடப்பட்ட எனது கட்டுரை

22 கருத்துகள்:

  1. நேரத்தில் அலுவலகத்திருந்து புறப்படுங்கள். உண்மையிலேயே தேவைப் பாட்டால் ஒழிய அதிக நேரம் இருக்க வேண்டாம். அனாவசியமாக அலுவலகத்தில் நேரத்தைக் கழித்துவிட்டு அதனால் உங்கள் சக ஊழியர்களுக்கும் நிறுவனத்திற்கும் அவப் பெயர் ஏற்படும்படி நடந்து கொள்ளாதீர்கள்.//

    நல்ல யோசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி!
      முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  2. இது எல்லோருக்குமான நல்ல செய்தி! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிப்ரியன்!
      முதல்தடவையாக வந்து கருத்துரை கொடுத்ததற்கு நன்றி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வாங்க தனபாலன்!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  4. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். அலுவலகப் பணி நேரத்தில் ஒருவேலையை சரியாகத் திட்டமிட்டு முடிப்பவனுக்கு மதிப்பில்லை. வேலை நேரத்தில் சொந்த வேலைகளைப் பார்த்து விட்டு மாலையில் வந்து கொஞ்சநேரம் அதிகம் உட்கார்ந்து நாற்காலியைத் தேய்க்கும் பேர்வழிகளுக்குத்தான் அதிகாரிகளிடம் நல்ல பெயர். அரசு சார்ந்த அலுவலகங்களில் அன்றாடம் காணும் நிகழ்வு. தனியார் நிறுவனங்களிலும் இந்த கூத்து நடக்கிறது என்பதனை உங்கள் கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் இளங்கோ!
      வருத்தமான விஷயம் இது, இல்லையா? வேலை செய்பவர்களின் மனநிலை மாறவேண்டும்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  5. அந்த நேரத்தில் வேறு என்ன செய்யலாம்? ஆயிரம் வேலைகள் செய்யலாம்.
    புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளுங்கள்;


    சங்கீதம், புதிய பாஷை, புதிய விளையாட்டு இப்படி ஏதாவதொன்று.


    ஒரு பெண் தோழியோ, ஆண் தோழனோ நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் வெளியே போய் விட்டு வாருங்கள்.//

    உண்மையான வார்த்தைகள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சிம்புள்!
      உங்களது முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  6. அலுவலகத்த்தில் வேலை செய்யும் அனைவைருக்கும் பொருத்தமான பதிவு.
    தமிழ் இளங்கோ ஐயா சொன்னது முற்றிலும் சரி. மேலதிகாரிகளின் மனோபாவமும் இப்படித் தான் இருக்கிறது.அலுவலர்க்கான ஒரு பயிற்சியோ அல்லது அல்லது ஆய்வுக் கூட்டங்களோ நடை பெறும்போது. உயர் அலுவலர்கள் முடியும் நேரத்திற்குத்தான் வருகை தருவார்கள்.சில நேரங்களில் நிகழ்வு முடிந்த பின்னும் காக்க வைத்து தாமதமாக வருவார்கள். ஒருவர் பின் ஒருவராக பேச ஆரம்பித்து அறுவை உரை வழங்கி இரவு 10 மணி வரை கூட இழுத்தடிப்பார்கள். இதில் ஆண்களாவது பரவாயில்லை, பெண் அலுவலர்களின் நிலைதான் கவலைக்குரியது. குறிப்பாக இயக்குனர்(ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட) மட்டத்தில் உள்ளவர்கள் ஒரு வித சாடிஸ மனோபாவத்துடன்தான் நடந்து கொள்வார்கள். ஆனால் அரசியல் வாதிகளுக்கு சலாம் போடுவார்கள் .விதிவிலக்குகளும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் முரளி!
      எல்லாவிடங்களிலும் இப்படி நடைபெறுகிறது என்பது ரொம்பவும் வருத்தமான ஒன்று. மனித ஆற்றல் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  7. அருமையான பதிவு
    முன்னெல்லான் இந்த மனோபாவம்
    அரசு அலுவலக்த்தில் மட்டும்தான் இருந்தது
    இப்போதுதான் இது சகல துறைகளுக்கும்
    மாறியுள்ளது,கவனிக்கப்படவேண்டிய விஷயம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ரமணி!
      நீங்கள் சொல்வதுபோல நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தான் இது.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  8. இது பொதுவாக இந்திய நிறுவனங்கள் பலவற்றில் நான் கண்கூடாக பார்ப்பது. நன் கல்கத்தாவில் பணியில் இருந்த பொது அங்கு சில 'கடுமையான' உழைப்பாளிகள், காலை வந்தவுடன் எல்லா அலுவலக காகிதங்களையும் டேபிள் மீது பரப்பிக்கொண்டு அரட்டை அடிப்பதையும், நான்கு மணிக்கு மேல் நிதானமாக வேலையே ஆரம்பிப்பதையும் பார்த்திருக்கிறேன். மேலதிகாரி ஆறு மணி வாக்கில் கிளம்பும்போது இந்த பேர்வழிகள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருப்பார்கள். இதில் பல நாட்கள் ஓவர் டைம்!
    மென்பொருள் இஞ்சினியர்கள் நேரம் கழித்து இருப்பதில் அதில் இருக்கும் ப்ரிஞ் பெனிபிட்களும் காரணம். இங்கு அமேரிக்கா குறைந்த நாட்கள் ப்ராஜெக்டில் வரும் பலரும், ஏழு மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்தால் இரவு உணவு இலவசம் என்ற ஒரே காரணத்திற்க்காக பல நாட்கள் அலுவலகத்திலேயே பலியாக கிடப்பதை பார்த்திருக்கிறேன்!
    இன்னொன்று.. நேரம் கழித்து அலுவலகத்தில் இருந்து செல்வது என்பது ஜப்பானியர் பலரும் செய்வது தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் Bandhu!
      இந்த மாதிரியான போக்கிற்கு இன்னொரு முகமும் இருக்கிறதை உங்கள் கருத்துரை காட்டுகிறது. இவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது.
      வருகைக்கும், இந்த பிரச்னையின் இன்னொரு பக்கத்தை காட்டியதற்கும் நன்றி!

      நீக்கு
  9. Life's calling, where are you??

    அனைத்துத் துறையினரும் கவனிக்கவேண்டிய பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
      அனைத்துத்துறையினரும் கவனிக்க வேண்டிய விஷயம் தான் இது.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  10. மிகவும் சரியான கருத்து. வேலை நேரத்திற்கு மேல் அலுவலகத்தில் இருப்பவர்கள் வேலைக்கு லாயக்கற்றவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கந்தசாமி ஐயா!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  11. காலமாற்றத்தை அழகாகப் பதிவுசெய்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் முனைவர் ஐயா!
      நலமா?
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு