எமக்குத் தொழில் அசைபோடுதல் 14
மறுபடியும் எனது சின்ன வயது நினைவுகளுக்குப் போகலாம் வாருங்கள்.
கார்ப்பரேஷன் பள்ளியில் சேர்ந்தாகிவிட்டது. ரொம்பவும் சோகத்துடன் தான் போக
ஆரம்பித்தேன். அம்மாதான் என்னுடன் வந்து அந்தப் பள்ளியில் என்னை சேர்த்துவிட்டாள்.
தலைமையாசிரியை ரொம்பவும் கோபமாக இருந்தார். பார்க்கவே கொஞ்சம் பயமாக இருந்தது.
ஆனால் அப்புறம் தான் தெரிந்தது அவர் முகமே எப்போதும் கடுகடுவென்று இருக்கும்
என்று. சிரிப்பது என்பது அவருக்குத் தெரியாத ஒன்று என்று நினைக்கிறேன்.
ஆறாம் வகுப்பு மாடியில் இருந்தது. அம்மா என்னை வகுப்பில் கொண்டு வந்து
உட்கார வைத்துவிட்டுப் போனாள். அம்மா ரொம்பவும் யோசிப்பது போல இருந்தது. அதற்குக்
காரணம் பின்னால் தெரிந்தது. போய் உட்கார்ந்தவுடன் ஒரு பெண் என்னைப் பார்த்து,
‘பாப்பாத்தியா?’ என்று கேட்டாள். திருதிருவென முழித்தேன். உண்மையில் அவள் என்ன
கேட்கிறாள் என்றே எனக்குப் புரியவில்லை. ‘அப்படீன்னா?’ என்று கேட்க நினைத்தேன். அதற்குள்
வகுப்பு ஆசிரியை வரவே எல்லோரும் அமைதியானோம். ‘புது பொண்ணு யாரு?’ என்றார்
ஆசிரியர். எழுந்து நின்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்தார். ’பிராமின் –ஆ?’ என்றார்.
‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினேன். அதற்குள் வகுப்பில் குசுகுசு வென பேச்சு
ஆரம்பித்தது. ஆசிரியை தன் கண்களை உருட்டிக் கொண்டு ‘ஸ்..........ஸ்...............’
என்றார். வகுப்பு அமைதியானது. முதலில் என்னை கேள்வி கேட்ட பெண் ‘நா கேட்டபோது முழிச்ச!’ என்றாள் கிசுகிசுப்பான குரலில். ஓ! பாப்பாத்தி என்றால் பிராமின் என்று அர்த்தம்! புது வார்த்தை கற்றுக்
கொண்டேன்.
கனகவல்லி பள்ளிக்கும் இந்தப் பள்ளிக்கும் என்ன வித்தியாசம் என்றால் (ஆறு
வித்தியாசம் வருமா என்று பார்க்க வேண்டும்!) இது முழுக்க முழுக்க பெண்கள்
நடுநிலைப்பள்ளி. ஒவ்வொரு பாடத்திற்கும் வேறுவேறு ஆசிரியை. இதுவே எனக்கு பெரிய
அதிசயமாக இருந்தது. பாட்டு, தையல் என்று தனித்தனி வகுப்புகள். பாட்டு வகுப்பு மற்றும் தையல் வகுப்பிற்கு நாங்கள் இடம் மாற
வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு ஆசிரியை வருவார். எங்கள் ஆசிரியை திருமதி கனகவல்லி.
(இந்த கனகவல்லி என்கிற பெயர் என்னை இன்று வரை விடாது துரத்திக் கொண்டிருக்கிறது
என்பது ரொம்பவும் அதிசயமான விஷயம்!) முதல் பள்ளியின் பெயர் கனகவல்லி என்றால் இங்கு
ஆசிரியர் கனகவல்லி. இப்போது என் சம்பந்தியின் பெயர் கனகவல்லி!
இந்தப் புது பள்ளிக்கு மதியம் சாப்பாடு எடுத்துக் கொண்டு
வந்துவிடுவேன். ஏனென்றால் நாங்கள் இப்போது வேறு வீட்டிற்குப் போய்விட்டோம்.
இதுவும் திருவல்லிக்கேணிதான். ஆனால் வேறு ஏரியா. கானாபாக் லேன் என்று டிராம் ரோடு
தாண்டி (இப்போதைய திருவல்லிக்கேணி ஹை ரோடு) ஒரு சிறிய சந்து. பள்ளிக்கும்
வீட்டிற்கும் நிறைய தூரம். என் தம்பி என்னுடனேயே வந்து கனகவல்லி பள்ளிக்குப் போய்விடுவான்.
என் பள்ளி முதலில் வந்துவிடும். இருவருக்கும் அம்மா கையில் சாப்பாடு
கொடுத்துவிடுவாள்.
நாங்கள் இதற்கு முன்னால் குடியிருந்த ராணி (நாய்பாட்டு சொல்லிக்
கொடுக்கக் கேட்டவள்!) வீட்டிற்குப் பின்னால் காமாட்சி மாமி என்று ஒருவர்
இருந்தார். அவர் ஒருமுறை என் அம்மாவிடம் கானாபாக் லேனில் அவர் ஒரு வீடு
வாங்கியிருப்பதாகவும் அம்மா வந்து அந்த வீட்டைப் பார்த்து பிடித்திருந்தால் வரலாம்
என்று சொல்லியிருக்கிறார். அம்மாவிற்கும் ராணி வீடு ரொம்பவும் அசௌகரியமாக இருந்தது
– கீழே சமையலறை மட்டும். மாடியில் படுக்கை அறை என்று ரொம்பவும் உபத்திரவம் என்று
அம்மா சொல்லிக் கொண்டே இருப்பாள். காமாட்சி மாமி கேட்டவுடன் வீட்டைப் பார்த்து அம்மாவிற்குப்
பிடிக்கவே மாறிவிட்டோம்.
இப்போது பள்ளிக்கு மீண்டும் வருவோம். முதல் நாள் முழுவதும் வரும்
ஆசிரியைகள் அனைவரும் என்னை பிராமின் ஆ என்று கேட்பதிலேயே பொழுது போனது. நான் அதை
ஒவ்வொரு முறை உறுதி செய்யும்போதும் நான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருப்பது
போலவும், எல்லோரும் என்னை ஒதுக்குவது போலவும் இருந்தது. அன்று மாலை எப்போது பள்ளி முடியும் என்று காத்திருந்தேன். வீட்டிற்கு
வந்தவுடன் அம்மா என்னைக் கவலையுடன் பார்த்து ‘ஸ்கூல் எப்படி இருந்தது?’ என்றாள்.
‘எல்லோரும் என்னை பாப்பாத்தியா? பாப்பாத்தியா?’ ன்னு கேட்கறா!’ என்றேன். ‘ஆமான்னு
சொல்ல வேண்டியதுதானே?’ ‘அதான் சொன்னேன்’ ‘பொண்கள் கேட்டாப் பரவாயில்லை. ஒவ்வொரு
டீச்சரும் அதையே கேட்கிறா’. அம்மா என் அருகில் வந்து ‘அதப்பத்தி கவலைப்படாதே. நீ
நன்னா படி. எல்லோரும் உன்னோட ப்ரெண்டு ஆயிடுவா’ என்று எனக்கு ஆறுதல் சொன்னாள்.
அன்று இரவு அப்பா வந்ததும் அம்மா சொன்னாள்: ‘ கார்ப்பரேஷன் ஸ்கூல்ல
இவள சேத்துட்டு வந்தேன். அந்த ஹெச்.எம். ‘நீங்க எல்லாம் ஏம்மா இந்த ஸ்கூலுக்கு
உங்க குழந்தைகளை அனுப்புறீங்க?’ ன்னு கேட்டா. ‘பரவாயில்லைம்மா, எந்த ஸ்கூலா
இருந்தா என்ன? படிக்கணும் அவ்வளவுதானே. இவ நன்னா படிப்பா. படிப்புதான் முக்கியம்’
அப்படீன்னு சொல்லிட்டு வந்துட்டேன்’.
அப்பா பதில் சொல்லவில்லை. எனக்கு அம்மா ஏன் யோசித்துக் கொண்டே
இருந்தாள் என்று இப்போது புரிந்தது. முதல் ஒருவாரம் எனக்கு கஷ்டமாக இருந்தது.
ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி ‘செங்கமலம் வந்துடுவா. அவ உன்னைப் பார்த்துப்பா’
என்றார்கள். யாரந்த செங்கமலம் என்று நானும் காத்திருந்தேன்.
அசை போடுதல் தொடரும்...........
அதீதம் இணையஇதழில் வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைத் தொடர்
கனகவல்லி விடாது துரத்துகிறதா? கனகவ்ல்லி உடன் இருப்பது நல்லது இல்லையா?
பதிலளிநீக்கு