செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

எமக்குத் தொழில் ‘அசைபோடுதல்!’

அதீதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடரின் முதல் பகுதி 

அந்தக் கால்டாக்சி ஓட்டுனர் ரொம்ப நல்ல  மாதிரி. வண்டியில் ஏறி உட்கார்ந்து மும்பை சிஎஸ்டி ரயில் நிலையம் என்றதும், ‘கித்னா நம்பர் பிளாட்பாரம் ஜி?’ என்று கேட்டார். சட்டென்று வாயில் வந்த ‘கொத்தில்லா’ வை பாதில முழுங்கிட்டு, ‘பதாநஹி, பெங்களூரு காடி’ என்றேன். அதற்கு மேல் நமக்கு அந்த மொழி வராது! பெங்களூரு செல்லும் உதயான் விரைவு வண்டி 17வது நடைமேடையில் வரும் என்று தெரிந்துகொண்டு எங்களை மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தின் பின்பக்கத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டு கிளம்பிப் போனார். நாங்கள் இறங்கினது 18 வது நடைமேடை. எப்படி இங்கிருந்து 17 வது நடைமேடைக்கு போறது? ஒருபக்கத்தில் பிரம்மாண்டமான படிக்கட்டுகள் ‘ஹோ’ என்று விரிந்து ‘வா, வா’ என்று கூப்பிடுவது போலிருந்தது. அதில் பெட்டிகளையும் வைத்துக்கொண்டு ஏறுவது சிரமம்.  மாடிப்படிகளை அனாயாசமாக ஏறி இறங்கியது ஒரு காலம். ‘எப்டி இருந்தா நா இப்டி ஆயிட்டேன்!’  என்று யோசித்தபடியே நின்ற என்னைத் தாண்டி ஒரு தானியங்கி வண்டி சென்றது. ‘காடிவாலா!, காடிவாலா!’ என்று கூவினேன். அவர் வண்டியை நிறுத்தாமலேயே என்னைப் பார்த்து ஹிந்தியில் ஏதோ ‘போலி’விட்டு வேகமாகப் போய்விட்டார். பார்த்துக் கொண்டே இருக்கும்போது 17 வது நடைமேடையில் ஒரு ரயில் வந்து பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றது. ஆ! அதுதான் நாங்கள் செல்ல வேண்டிய உதயான் விரைவு வண்டி!

கைபேசியில் நேரம் பார்த்தேன். ரயில் புறப்பட இன்னும் நிறைய நேரம் இருந்தது. இந்தப் படிக்கட்டுகள் ஏறி இறங்காமல் அங்கு போக முடியுமா? என்று மெதுவாக பார்த்துக்கொண்டே நடந்தேன். ஆஹா! நான் காண்பதென்ன கனவா, இல்லை நனவா?  என் கண்ணெதிரே லிப்ட்! அருகே போய் பார்த்தபின் என் மகிழ்ச்சி இரட்டிப்பாயிற்று!  பின்னே? நம்ம தகுதிகளையெல்லாம் எழுதிப் போட்டிருக்கிறார்களே, அதன் தலைப்பக்கத்தில்! ‘Handicapped, senior citizen, ladies’ என்று!! சுறுசுறுவென கணவரையும் அழைத்துக்கொண்டு பெட்டிகளைத் தள்ளிக் கொண்டு லிப்ட் அருகே வந்தேன். லிப்ட், நடைமேடையிலிருந்து சற்று பள்ளத்தில் இருந்தது. மெதுவாக அங்கே இங்கே பிடித்துக் கொண்டு முதலில் நான் இறங்கினேன். பிறகு பெட்டிகளை இறக்கினேன். கடைசியாக கணவரையும் இறக்கி, அவரிடம் ‘மேலே பாருங்கள்!’ என்றேன். அவரும் லிப்டின் தலைமாட்டில் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு ‘அட! அத்தனை தகுதியும் உனக்கு இருக்கிறதே!’ என்று உற்சாகத்துடன் சொல்லிக்கொண்டே லிப்டில் ஏறினார். அவரது பாராட்டை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டு, முதல் மாடி பொத்தானை அழுத்தினேன். முதல்மாடிக்கு சென்று வெளியே வந்து அடுத்த லிப்டில் இறங்கி 18வது நடைமேடையை அடைந்தோம். அப்பாடி! என்ன ஒரு இமாலய சாதனை!

இதை எதற்கு இங்கு சொல்லுகிறேன் என்றால், மேலே சொன்ன தகுதிகளைத் தவிர வயதான எங்களுக்கு இன்னொரு தகுதியும் தன்னடையே வந்து சேரும். அதுதான் பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல பழைய சம்பவங்களை அசைபோடுதல். ஆடுமாடுகள் மட்டும் தான் அசைபோடுமா? வயதான மனிதர்களும் அசை போடுகிறார்கள்; ‘எப்பப் பாத்தாலும் பழசையே பேசிண்டு......வேற வேல இல்லையா?’ அப்படின்னு இன்னிக்கு வயசாளிகளை திட்டற இளசுகள் நாளைக்கு நிச்சயம் தங்களது பழசுகளை அசை போடுவார்கள். இப்படி அசை போடறதுதானே அந்த வயதின் சுவாரஸ்யம்? அதுதானே எங்களது நாளைய சரித்திரம்?

இந்தக் காலம் போல இல்லை அந்தக்காலம். தொலைக்காட்சி, தொலைபேசி, என்று எங்களைத் தொலைக்கக்கூடிய சமாச்சாரங்கள் எதுவுமே கிடையாது. அதனால் தானோ என்னவோ நாங்களும் எதிலும் தொலைந்து போகாமல் இருந்தோம். எங்கள் வீட்டில் சின்னதாக ஒரு ரேடியோ கூடக் கிடையாது. எங்களுக்கு ‘போர்’ என்பதே தெரியாது. கூடப் பிறந்தவர்களுடன் ஒட்டி உறவாடி வளர்ந்து வந்தோம். ஒரே ரூமில் எல்லோரும் (நாங்கள் நால்வர்)  படித்து, தூங்கி, சண்டைபோட்டு விளையாடினோம். பொழுதுபோக்கு என்றால் புத்தகங்கள் படித்தல்; பதைபதைக்கிற வெய்யிலில் தம்பியின் நண்பர்களோடு கில்லி, கோலி, பம்பரம் விளையாடுதல்; அப்போல்லாம் பாய் பிரெண்ட், கர்ல் பிரெண்ட் கிடையாது. எல்லோரும் பிரெண்ட்ஸ் தான்.

போன் செய்யாமலேயே உறவினர் வீட்டிற்குப் போவோம். ஒரு டாக்டர் தான் எல்லா வியாதிகளுக்கும். டாக்டரிடமும் அப்பாயிண்ட்மெண்ட் கிடையாது. தமிழ் மீடியத்தில் அரசுப் பள்ளியில் தான் படித்தோம். எங்கு போகவேண்டுமானாலும் நடை தான். பேருந்து என்பதே ஆடம்பரம்! சினிமா, உணவகங்கள் எல்லாமே எப்போதோ ஒருமுறை தான். கையேந்தி பவன்கள் வராத காலமது. பள்ளியில் பாட்டு வகுப்புகள் நடக்கும், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் – திருவல்லிக்கேணியில் படித்ததால் ஆழ்வார் பாசுரங்களும் கற்றோம். எளிமையான மனஅழுத்தம் குறைவான வாழ்க்கை.

சம்மர் கேம்ப் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பாட்டி அகத்தில் தான். காலையில் கொள்ளிடக் குளியல்  மாலையில் கோவிலுக்குள் இருக்கும் மணல்வெளியில் விளையாட்டு; மதிய வேளைகளில் பாட்டி வீட்டுப் பிரம்மாண்டத்  திண்ணையில் புளியங்கொட்டைகளைப் பரப்பிப் போட்டு மணிக்கணக்கில் ஆடுவோம். ஐந்து கல், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம், தாயம் இவைகள் இண்டோர் கேம்ஸ்.  கில்லி, கோலி, பாண்டி, பம்பரம் இவை அவுட்டோர் கேம்ஸ். இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது அசை போட.......


எல்லாவற்றையும் அசைபோட ஆசை! 

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

வக்கீலிடமும், வைத்தியரிடமும் உண்மையைச் சொல்ல வேண்டும்!
உறவினர் ஒருவர் குளியலறையிலிருந்து வெளியே வரும்போது வழுக்கி விழுந்துவிட்டார். இரண்டு நாட்கள் எங்கேயும் அடிபடவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான்காம் நாள் இடது கை மணிக்கட்டில் வீக்கம் கண்டது. அவரை அழைத்துக் கொண்டு எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்றிருந்தோம். மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு எக்ஸ்-ரே எடுத்து வரச்சொன்னார்.

எக்ஸ்ரேயில் எலும்பு முறிவு உறுதி ஆயிற்று. மருத்துவர்  எங்கள் உறவினரிடம் சில கேள்விகள் கேட்டார். இந்தப் பதிவிற்கு இந்தக் கேள்வி பதில்தான் மிகவும் முக்கியம்.

மருத்துவர் : உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா? மருந்து எடுத்துக் கொள்ளுகிறீர்களா?
உறவினர் : ம்....ம்....கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.....!
மருத்துவர் : உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா? மருந்து எடுத்துக் கொள்ளுகிறீர்களா?
உறவினர் : ம்.....ம்.....கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.....!

இந்தப் பதில்களைக் கேட்டு மருத்துவருக்கு வந்ததே கோவம்! '

'உங்களை நான் சுகர் இருக்கிறதா என்று தான் கேட்டேன். கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா  என்று கேட்கவில்லை. இருக்கிறதா, இல்லையா? அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளுகிறீர்களா, இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள். கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா இல்லையா என்பதை நாங்கள் மருத்துவர்கள் சொல்ல வேண்டும். அதேபோலத்தான் உயர் இரத்த அழுத்தமும். இருக்கிறது, அதற்கு இந்த இந்த மருந்துகள் சாப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள். ஒரு விஷயம் புரிந்துகொள்ளுங்கள், இத்தனை மருந்துகள் சாப்பிடுவதால் உங்கள் சர்க்கரையும், இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவரிடம் சாமர்த்தியமாக பதிலளிக்க வேண்டாம். இப்போது உங்கள் சர்க்கரையையும், இரத்த அழுத்தத்தையும் பரிசோதித்தால் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்குத் தெரிந்து விடும்.

மருத்துவரிடம் எதையும் மறைக்கக்கூடாது. உங்கள் உடல் இருக்கும் நிலையைப் பார்த்து நாங்கள் மருந்துகள் கொடுப்போம். அதற்குத்தான் ஒவ்வொன்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறோம், புரிகிறதா?' என்றார்.

'நோயாளிகளின் பூரண ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும். இப்போது எல்லோருக்கும் சுகர், பிபி இருக்கிறது. இதைச் சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்?'

உறவினர் பேசவேயில்லை. சற்று நேரம் கழித்து மருத்துவரிடம் மன்னிப்புக் கேட்டார்.

வக்கீலிடமும், வைத்தியரிடமும் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பது இதுதான் போலும்.

படம்: கூகிள் நன்றி