எமக்குத் தொழில் அசைபோடுதல் 16
பேனாவிற்கு இப்படியாக மசி கடன் வாங்குவதும்
திருப்பிக் கொடுப்பதும் வெகு வேகமாக பள்ளிக்கூடம் முழுவதும் பரவியது. அப்போதுதான் இன்னொரு
தோழி மீரா வந்து சொன்னாள்: பக்கத்து செட்டியார் கடையில் மசி கிடைக்கிறது என்று.
ஆனால் கையில் பைசா வேண்டுமே அவர் கடையில் மசி வாங்கவேண்டும் என்றால். அது தான்
எங்கள் எல்லோருடைய பிரச்னையுமே. பாக்கெட் மணி என்பதெல்லாம் கனவில் கூட
நினைத்துப்பார்க்க முடியாத காலம் அது. செட்டியார் கடையில் ஒரு பேனா நிறைய மசி
வேண்டுமென்றால் அந்தக் காலத்தில் ஓரணா அல்லது இரண்டணா கேட்பாரோ என்னவோ, இப்போது
நினைவு இல்லை. ஆனால் எல்லோருக்கும் ஒருமுறையாவது காசு கொடுத்து மசி போட்டுக்கொள்ள வேண்டும்
என்ற ஆசை இருந்தது. அதனால் அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி காசு வாங்கிக்கொண்டு
வந்துவிட்டேன் ஒருநாள். எப்படா மதிய இடைவெளி வரும், ஓடிப்போய் செட்டியார் கடையில்
பேனாவைக் கொடுத்து மசி போட்டுக்கொள்ளலாம் என்று ஒரு துடிதுடிப்புடன் இருந்தேன்.
ஏதோ ஒரு பெரிய சாகசம் செய்யப்போவதுபோல மனமெல்லாம் பரபரப்பு.
என்னாவாயிற்று என்று சொல்வதற்கு முன் செட்டியார்
கடையைப் பற்றி சொல்லிவிடுகிறேன். கடையின் முன்பக்கம் இருப்பது வேறு பக்கத்தில்.
எங்கள் அரசு நடுநிலைப்பள்ளி அருகே இருக்கும் பாண்டுரங்கன் சந்நிதி அருகில்
செட்டியார் கடையின் ஜன்னல் இருக்கும். நாங்கள் ஜன்னல் வழியாகவே மசி வியாபாரத்தை
முடித்துவிடுவோம்.
மாணவிகள் பேனாக்களை ஜன்னல் வழியாக செட்டியாரிடம்
கொடுப்பார்கள். அவர் கடையின் மேசை மீதிருக்கும் மசி புட்டியில் மசி நிரப்பானை
விட்டு மேலே அழுத்துவார். மசி நிரப்பான் முழுக்க நிரம்பும். அதை அப்படியே எடுத்து
பேனாக்களில் விடுவார். பெரிய பேனாக்கள் என்றால் ஒரே தடவையில் நிரம்பிவிடும்.
சின்னப் பேனாக்கள் என்றால் பாதி மசியை மசி புட்டியில் திரும்ப கொட்டிவிடுவார்
செட்டியார். ஆனால் எல்லாவற்றிற்கும் காசு ஒரே கணக்குத் தான்.
மதிய சாப்பாடு
இடைவெளி மணி அடித்தது. ‘அப்புறமா சாப்பிடலாம், இப்போ வா, செட்டியார் கடைக்குப் போய் மசி போட்டுக்கொண்டு
வரலாம்’ என்று செங்கமலத்தை இழுத்துக் கொண்டு ஓடினேன். செட்டியார் கடையின் ஜன்னல்
மூடியிருந்தது. என்னுடைய உற்சாகம் எல்லாம் வடிந்து போயிற்று. ‘ச்சே! அதிர்ஷ்டமே
இல்லையடி, எனக்கு...!’
என்று கண்களில் நீர் தளும்ப பள்ளிக்குத் திரும்பினேன். செட்டியார் கடையின் மசி
போட்டுக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் வீட்டில் மசி போட்டுக்கொண்டு வரவில்லை.
மறுபடி செங்கமலத்திடம் மூன்று சொட்டு கடன் வாங்கிக் கொண்டு அன்றைய நாளை
ஒப்பேற்றினேன்.
மேலே தொடர்வதற்கு
முன், மிக முக்கியமான சரித்திர நிகழ்வுகள் சிலவற்றை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் சரித்திரத்தில் அந்த
வருடங்களில் தான் சத்தம் போடாமல் ஒரு பெரிய புரட்சி நடந்து கொண்டிருந்தது. தமிழக
முதல்வராக திரு காமராஜர் பதவியேற்றார். மதிய உணவு மற்றும் இலவசக் கல்வி, இலவச
சீருடை ஆகியவற்றை அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சி செய்தார்
பெருந்தலைவர் காமராஜர். அந்த வயதில் இவற்றைப் பற்றி எனக்கு அதிகம்
தெரிந்திருக்கவில்லை. அதனால் இந்நிகழ்ச்சிகள் பற்றி இணையத்தில் நான் தேடி
எடுத்தவைகளை இங்கே கொடுக்கிறேன்:
எந்தச் சொத்தும்
இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற
நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் திரு காமராஜர் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19
லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின்
எண்ணிக்கை 1,995 ஆனது. (நன்றி
தமிழ் ஹிந்து பத்திரிகை)
தினமணி பத்திரிக்கையிலிருந்து எடுத்தது:
காமராஜர்
முதல்வராக இருந்தபோது ஒருமுறை அவர் காரில் கிராமப்புறத்தில் பயணம் செய்தார். ஒரு
இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு கார் நிறுத்தப்பட்டதால் காரிலிருந்து இறங்கி
வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மக்களைச் சந்திக்க நேரிட்டது. காமராஜரை
கண்ட ஆண்களும் பெண்களும் அவரை நோக்கி ஓடி வந்தனர். அவர்களின் நலம் விசாரித்த
முதல்வர் அவர்களுடன் பல சிறுவர்களும் சிறுமியரும் நின்று கொண்டிருந்ததைக்
கவனித்தார்.
""இவர்களெல்லோரும்
பள்ளிக்கூடம் செல்லவில்லையா?'' என கேட்டார்.
""ஐயா, எங்களிடம் வசதி
இல்லை'' என்ற பதில்
வந்தது.
பள்ளிக் கல்வி
இலவசம் என்ற நிலைமையில், அவர்கள்
வசதியில்லை எனக் குறிப்பிட்டது மதியம் குழந்தைகளுக்காகும் உணவுச் செலவு என்பதை
அவர்கள் மூலம் தெரிந்துகொண்ட காமராஜர், சென்னை திரும்பியதும் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ஏழைக் குழந்தைகளுக்குப்
பள்ளியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அது 1956-ஆம்
ஆண்டு. அன்றைய நிலைமையில் வறுமையில் வாடிய சுமார் 20 லட்சம் குழந்தைகள், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை
தொடக்கக் கல்வி நிலையங்களில் ஆண்டுக்கு 200 நாள்கள் இந்த இலவச மதிய உணவை உண்டு
பலனடைந்தனர். (நன்றி: தினமணி)
கீற்று
இணையதளத்திலிருந்து:
ஓலைக்குடிசைகளையே
உறைவிடமாகக் கொண்டிருந்த ஏழை மாணவர்களுக்கு, உணவு தந்து கல்வி கற்க வகை செய்த காமராஜர்,
அவர்களுக்கு உடையும்
கொடுக்க முடிவு செய்தார். 1960-ம் ஆண்டு பள்ளிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு,
இலவசமாக வழங்கப்பட்டது.
அது மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்ற
ஏற்றத்தாழ்வைப் போக்கியது.
காமராஜர்
குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை ஒரு கடமையாக மட்டும் கருதாமல் அதை ஒரு மக்கள்
இயக்கமாக மாற்றியமைத்தார். “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்னயாவினும்
புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற மகாகவியின் வார்த்தைகளை
நிஜமாக்கிக் காட்டுவதற்கான காமராஜரின் சீரிய முயற்சிகளுக்கு ஒட்டுமொத்த தமிழக
மக்களும் ஒன்றிணைந்து ஆதரவளித்தனர். மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதிலும்,
சீருடைகள் வழங்குவதிலும்
மக்களும் துணை நின்றனர். இயன்றவர்கள் பலரும் பணமாகவும், பொருளாகவும் வழங்கினர். (நன்றி கீற்று
இணையதளம்)
தொடர்ந்து அசை
போடலாம்.....
அதீதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைத் தொடர்
நன்றி சகோதரியாரே
பதிலளிநீக்குExcellent! உண்மையை உரக்கக் கூறியதற்கு!
பதிலளிநீக்குஇளமை பருவ நிகழ்ச்சிகளும் சரித்திர நிகழ்வுகளும் மிக அருமை.
பதிலளிநீக்குநான் சிவகாசியில் பள்ளியில் படிக்கும் போது காமராஜர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்தார்கள் அப்போது எல்லோருக்கும் பென்சில் கொடுத்தார்.