செவ்வாய், 21 அக்டோபர், 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!


ஐம்பது நபர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தனர். கருத்தரங்கில் பேசிக் கொண்டிருந்த பயிற்சியாளர் தனது பேச்சை நிறுத்திவிட்டு அங்கிருந்தவர்களின் கையில் ஒரு பலூனைக் கொடுத்தார்.

‘உங்கள் பெயரை பலூனில் எழுதி அதை அடுத்த அறையில் விட்டு விட்டு வாருங்கள்’ என்றார்’.

எல்லோரும் அப்படியே செய்தார்கள்.

‘இப்போது அந்த அறைக்குச் சென்று உங்கள் பெயர் உள்ள பலூனை ஐந்து நிமிடங்களுக்குள் கண்டுபிடித்து எடுத்து வாருங்கள்’, என்றார் பயற்சியாளர்.

எல்லோரும் அவசர அவசரமாக அந்த அறைக்குள் போய் தங்கள் பெயர் எழுதப்பட்டிருந்த பலூனைத் தேடினார்கள். ஒருவரின் மேல் ஒருவர் மோதிக்கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு குழப்பமோ குழப்பம்!

ஐந்து நிமிடத்தில் யார்க்குமே அவர் பெயர் எழுதப்பட்டிருந்த பலூனை கண்டுபிடிக்க முடியவில்லை.

பயிற்சியாளர் இப்போது சொன்னார்: ‘ஏதாவது ஒரு பலூனை எடுத்து வாருங்கள். அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர் கொண்டவரைக் கண்டுபிடித்து அவரிடம் அந்தப் பலூனைக் கொடுங்கள்’.

சில நிமிடங்களில் ஒவ்வொரு கையில் அவரவர் பெயர் எழுதப்பட்டிருந்த பலூன் இருந்தது. எல்லோர் முகத்திலும் சிரிப்பு; நிம்மதி.

பயிற்சியாளர் சொன்னார்: ‘நாம் எல்லோரும் இப்படித்தான். சந்தோஷம் எங்கே என்று நம்மைச் சுற்றி சந்தோஷத்தை தேடிக் கொண்டே இருக்கிறோம். நம் சந்தோஷம் மற்றவர்களின் சந்தோஷத்தில் இருக்கிறது. மற்றவர்களுக்கு அவர்கள் சந்தோஷத்தைக் கொடுங்கள். உங்கள் சந்தோஷம் உங்களைத் தேடி வரும்!’

எல்லோருக்கும் இந்த இனிய தீபாவளி நன்னாள் சந்தோஷத்தைக் கொண்டு வரட்டும்!

இனிய 2014 ஆம் வருட தீபாவளி வாழ்த்துக்கள்!
வெள்ளி, 26 செப்டம்பர், 2014

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் விபரம்
Inline images 1


உலக நாடுகள் வெகு நாட்களுக்கு முன்பே தடை செய்த பின்பும் இந்தியாவில் விற்பனையில் இருந்த இந்த மாத்திரைகள் தாமதமாகதான் தடை செய்யப்பட்டன. 

ஆனால் இன்னமும் பல மருந்துக்கடைகளில் விற்கவும் செய்கின்றன.

இதோ அந்த தடைசெய்யப்பட்ட மருந்துகளின் விபரம்.

1 . அனால்ஜின் ( Analgin)
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு

2 . நிமிசுலைட் (Nimisulide)
பயன்பாடு - வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு - கல்லீரல் செயல் இழப்பு

3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine )
பயன்பாடு - சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு - மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்

4 . சிசாபிரைடு ( cisapride )
பயன்பாடு - மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்து
பக்க விளைவு - இதயத் துடிப்பு சீர்கேடு

5 . குயிநோடக்ளர் (quinodochlor )
பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு - கண்பார்வை பாதிப்பு

6 . பியுரசொளிடன் (Furazolidone )
பயன்பாடு - வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – புற்றுநோய்

7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone )
பயன்பாடு - கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்

8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone )
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு

9 . பைப்பரசின் ( Piperazine )
பயன்பாடு - வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு - நரம்புச் சிதைவு

10 . பினப்தலின் (Phenophthalein )
பயன்பாடு - மலமிலக்கி
பக்க விளைவு – புற்றுநோய்

சரி, இந்த மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் என்ன தெரியுமா?

1 . அனால்ஜின் - Paralgan-M,Novalgin,

2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol

3 . பினைல் ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,

4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride

5 . பியுரசொளிடன் - Furoxone

6 . பைப்பரசின் -Piperazine citrate

7 . குயிநோடக்ளர் - Entero quinol


இதைத்தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள்.


இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் மருத்துவர்களுமே தான் -உங்கள் அன்பானவர்களை எச்சரியுங்கள்

தகவல், நன்றி: திரு அனந்தநாராயணன்

திங்கள், 22 செப்டம்பர், 2014

கிட்னி அறிந்ததும் அறியாததும்‬..!


Inline images 1
"ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். 


அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். 


சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துவக் கண்காணிப்பு செய்து வந்தவர். 
சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். 


சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் இதோ:-


யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.


பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன?

வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.


சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?

முடியும். 

எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. 

படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். 

அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.


அதை எப்படி கண்டுபிடிப்பது..?

வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். 

பிரச்சினை இருந்தால், இதில் தெரிந்துவிடும். 

ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. 

சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.


அறிகுறிகள் இருக்குமா..?

இருக்கும். 

கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீ­ர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 

பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்­ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.


எதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..?

தண்­ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.


தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். 

போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், 
சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், 

சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.


உணவு முறைகள் என்ன?

எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது.
 
கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. 

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாசியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். 

ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாசியம் சேர்த்துக்கொள்ளலாம்.


எந்தெந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது..?

வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.


சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாசியம் சாப்பிடக்கூடாதா..?

அப்படியில்லை. 

டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலைவரைக்கும் போனவர்கள் பொட்டாசியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். 

ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.


வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே...?

வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். 

அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?

முடியும். 

தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. 

எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.

சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்...
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். 

அல்லது தள்ளிப் போடலாம்.

இல்லாவிட்டால்...

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். 

வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.

அப்புறம்...

இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. 

அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.


இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..?

இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். 

ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. 

அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. 

அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். 

கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.


கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..?

என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. 

டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.


நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?

முடியாது. 

தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. 

அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. 
காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. 

அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. 

அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். 

இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. 

அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். 

சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். 

இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். 

அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.


நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..?

முடியாது. 

அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. 

ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.


நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். 

அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். 

அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.


-நன்றி டாக்டர். சௌந்தரராஜன் -


தகவல் நன்றி: திரு அனந்த நாராயணன்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

இசை உலகின் பேரிழப்பு: மாண்டலின் ஸ்ரீநிவாஸ்Mandolin Srinivas


குழந்தை மேதை என்று அறியப்பட்ட மாண்டலின் ஸ்ரீநிவாஸ் கல்லீரல் செயலிழப்பால் மறைந்தார் என்பதை மிகுந்த மன வேதனையுடன் இங்கு பதிவு செய்ய விழைகிறேன். 


எப்போதுமே முகத்தில் தவழும் புன்னகையுடன், இசையைத் தவிர வேறு எதையும் பேசாமல் இருந்த அவரை மரண தேவதையும் விரும்பியதில் வியப்பு இல்லை.


ஆந்திராவிலுள்ள பலகோல் என்னுமிடத்தில் 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி பிறந்த உப்பலாபு ஸ்ரீநிவாஸ் மிகவும் சிறு வயதிலேயே தனது தந்தையின் மாண்டலின் வாத்தியத்தால் ஈர்க்கப்பட்டார். தனது முதல் கச்சேரியை 1978 ஆம் ஆண்டு செய்தார்.  இவரது தந்தையின் குருவான ருத்ரராஜூ சுப்புராஜூ தான் இவரது குருவும் கூட. சுப்புராஜு ஒரு வாய்பாட்டுக் கலைஞர். அவர் வாயால் பாடிக் காண்பிப்பதை அப்படியே மாண்டலினில் வாசிப்பார் ஸ்ரீநிவாஸ்.


எல்லோரிடத்திலும் மரியாதையாகவும் பணிவுடனும் நடந்து கொள்ளுவார். ஆரம்ப காலத்தில் மேற்கத்திய இசைக்கருவியான மாண்டலினை கர்நாடக இசை வாசிக்க பயன்படுத்தியபோது நிறைய எதிர்மறை விமரிசனங்கள் எழுந்தன. அவர் வாசிப்பது கர்நாடக இசையே இல்லை என்று கூட கேலி செய்தனர். தமது அபாரமான வாசிப்பால் அத்தனை வாய்களையும் மூட வைத்தார். மாண்டலின் என்றால் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீநிவாஸ் என்றால் மாண்டலின் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய மாண்டலின் இசை உலகை மயக்கியது. கர்நாடக இசையின் நெளிவு சுளிவுகளை அனாயாசமாக மாண்டலினில் வரவழைத்தார்.


மாண்டலினை வாசிக்கும் போது ஸ்ரீநிவாஸ் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை நிரந்தரமாக இருக்கும். தான் வாசிக்கும் இசையை தானும் ரசித்து கேட்பவரையும் ரசிக்கச் செய்வார். மாண்டலினுக்கு தவில் வாத்தியத்தை துணையாகக் கொண்டு இவர் செய்த கச்சேரிகள் ரசிகர்களிடையே பரபரப்பையும், வியப்பையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தின. அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களை மாண்டலின் இசை ஈர்க்க ஸ்ரீநிவாஸ் 11 வயதில் தமிழக அரசின் ஆஸ்தான வித்துவான் ஆக நியமிக்கப்பட்டார்.


‘மாண்டலின் ஒரு மேற்கத்திய இசைக்கருவி. அதில் எப்படி அவர் கமகங்களைக் கொண்டு வருகிறார் என்பது எனக்கு ஒரு புரியாத புதிராகவே இன்னும் இருக்கிறது’ என்கிறார் தூரதர்ஷன், ஆல்இந்தியா ரேடியோவில் மாண்டலின் ஸ்ரீனிவாஸின் கச்சேரிகளை பதிவு செய்த திரு சம்பத்குமார். ‘முதன்முதல் ஸ்ரீநிவாஸ் ஒரு கோவிலில் வாசிப்பதைக் கேட்டு அவரை தூரதர்ஷனுக்குக் கூட்டி வந்தேன். அவரது தேர்வு ஒத்திகையின் போது இமனி சங்கர சாஸ்த்ரி உடனிருந்தார். நாங்கள் அவரது கச்சேரியை ஒலிபரப்பியவுடன் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களிடமிருந்து கச்சேரியின் ஒரு நகல் அவருக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டு தொலைபேசி வந்தது’ என்று திரு சம்பத்குமார் பழைய நினைவுகளை அசைபோடுகிறார்.


கிடார் கலைஞர் வாசு ராவ் கூறுகிறார்: ’ஸ்ரீனிவாஸின் அப்பா சத்யநாராயண அவரை அழைத்துக்கொண்டு எனது தந்தையின் ஆசி கேட்க வந்திருந்தார். சிறுவன் ஸ்ரீநிவாஸிடம் ஒரு பொறி இருப்பதை உணர்ந்த என் தந்தை  என்னை அவருக்கு சொல்லிக் கொடுக்கும்படி கூறினார். அப்போது ஸ்ரீநிவாஸிடம் இருந்தது ஒரு பழைய உடைந்த மாண்டலின் தான். அவரது குடும்பம் சாதாரண நிலையில் அப்போது இருந்தது. ‘வாரம் ஒரு முறை என்னிடம் பேசுவார் ஸ்ரீநிவாஸ். இப்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குப் போகும்போது கூட எனக்கு தொலைபேசி இறைவனை பிரார்த்திக்குமாறு கூறினார்’.


முதன்முதலில் இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில் ஸ்ரீநிவாஸ் வாசித்த போது அரங்கில் முதல் வரிசையில் வீணை எஸ். பாலச்சந்தரும், பாடகர் திரு சேஷகோபாலனும் அமர்ந்திருந்தனர். முதலில் சற்று பதட்டப்பட்டாலும் மிகச்சிறப்பாக வாசித்து முடித்தார் ஸ்ரீநிவாஸ். கச்சேரி முடிந்தவுடன் திரு சேஷகோபாலன் மேடைக்கு வந்து ஸ்ரீநிவாஸை அணைத்துக் கொண்டு தனது அன்பளிப்பாக தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தை அவருக்கு அணிவித்தார்.


கர்நாடக சங்கீதம் மட்டுமில்லாமல் இணைவு இசை (fusion music) யிலும் ஆர்வமுடையவராக இருந்தார் ஸ்ரீநிவாஸ். இந்தியாவிலும் வெளிநாடுகளில் பல இசை வல்லுனர்களுடன் இணைந்து வாசித்தார். 1998 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்குக் கொடுக்கப்பட்டது. பத்மபூஷண் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டாராம். ஆனால் இவருக்கு இந்த விருதுகளில் அத்தனை ஆர்வம் இல்லை.


இசையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்ரீனிவாஸின் சொந்த வாழ்க்கை அத்தனை சந்தோஷமானதாக அமையவில்லை. தன்னை மிகவும் கொடுமைப் படுத்தியதாக கூறி மனைவி யுவஸ்ரீ மீது இவர் போட்ட வழக்கு இவருக்கு 2012 இல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தந்தது. இவர்களது ஒரே மகன் சாய்கிருஷ்ணா இப்போது அம்மாவுடன் இருக்கிறார். புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தரான இவர் 2011 இல் சாய்பாபா இறந்தது முதல் மிகுந்த துயரத்திலும், மனஅழுத்தத்திலும் இருந்ததாகத் தெரிகிறது.


மிகச் சிறந்த இசைக்கலைஞருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.


நான்காம்தமிழ் ஊடகத்தில் வெளியான கட்டுரை 


ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

ரசம் என்னும் சூப்பர் திரவம்!

Inline images 1


என் அக்காவிற்கு தினமும் ரசம் வேண்டும். ரசம் இல்லாமல் ஓர் சாப்பாடா? என்று கேட்பாள் அவள். 

நீங்களும் அதேபோலவா? அப்போ இதைப்படியுங்க!

சிலர் வேறு விதமாக இருப்பாங்க - இதோ இவங்களைப் போல : 

உங்கள் தாய் , துணைவி சமைக்கும் ரசத்தை விரும்பாதவரா நீங்கள் ? 

அப்ப இதை உடனே படிங்க!

சாப்பிட ஆரம்பிச்சுடுவீங்க ...

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். 

இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

Inline images 4

புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

பல நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம்.

வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். 

இது, ரசத்தின் மறுவடிவமே. 

ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.


Inline images 3

சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேர்க்கும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. 

வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. 

மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.

நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. 

ஆண்மை அதிகரிக்கிறது. 

அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. 

புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. 

உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. 

கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. 

மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.

வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரகக்  கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.


Inline images 2

கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

ரசத்தில் சேர்க்கும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. 

தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன.
 
ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. 

மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.

ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.

தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.

வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.

மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். 

வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.தகவல், நன்றி: திரு அனந்தநாராயணன்

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

முதுமையின் ரகசியங்கள்

old age advice


 • நடுவயதிற்கு முன் முதுமையைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
 • நடுவயதைத் தாண்டிய பின் முதுமை வந்துவிட்டதே என்று வருத்தப்படாதீர்கள்.
 • இயலாமை வருவதற்கு முன் வாழ்க்கையை அனுபவியுங்கள்.
 • நடக்கக் கூட முடியாமல் போன பின் தவறவிட்ட வாழ்க்கையை நினைத்து வருந்துப் பயனில்லை. 
 • உடலில் தெம்பு இருக்கும்போதே ஆசைப்பட்ட இடங்களுக்கு போய்வாருங்கள்.
 • வாய்ப்பு கிடைக்கும்போது பழைய பள்ளித் தோழர்கள், அலுவலகத்தில் உடன் வேலை செய்தவர்கள், பழைய நண்பர்கள் என்று எல்லோரையும் சந்தியுங்கள்.
 • வங்கியில் பணத்தைப் போட்டு வைத்து காவல் காப்பதை விட, உங்களுக்குத் தேவையான போது செலவழியுங்கள். வயதாக ஆக உங்களுக்குத் தேவையானவற்றை செய்து கொள்ளுங்கள்.
 • உங்கள் குழந்தைகள் அவர்களுக்கு வேண்டிய பணம் காசு முதலானவற்றை தாங்களே சம்பாதித்துக் கொள்ளுவார்கள்.
 • உங்கள் ஆரோக்கியத்திற்குத் தேவையானவற்றை சாப்பிடுங்கள்.
 • ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பனவற்றை கொஞ்சமாக, மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடுங்கள். எதையும் அறவே ஒதுக்காதீர்கள். 
 • உடல்நலகுறைவு ஏற்பட்டால் நம்பிக்கையுடன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
 • உடல்நலகுறைவு ஏற்பட்டால் கவலைப் படாதீர்கள்; வருத்தப்படாதீர்கள்.
 • வாழ்க்கை என்றால் பிறப்பு, முதுமை எய்துதல், உடல்நலகுறைவு, இறப்பு இதெல்லாம் சேர்ந்ததுதான். 
 • யாருக்கும் இவற்றில் எந்த விதச் சலுகையும் கிடையாது.
 • முடிக்க வேண்டிய வேலைகளை ஒன்று பாக்கி இல்லாமல் முடித்து விடுங்கள். விடை பெறும்போது நிம்மதியாக மன அமைதியுடன் விடை பெறலாம்.
 • மருத்துவர்களிடம் உங்கள் உடலை ஒப்படையுங்கள். கடவுளிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படையுங்கள். உங்கள் மனம் உங்களின் வசம் இருக்கட்டும்.
 • கவலைப்படுவது உங்கள் உடல்நலகுறைவை சரி செய்யும் என்றால் தாராளமாகக் கவலைப்படுங்கள்.
 • கவலைப்படுவது உங்கள் ஆயுளை நீட்டிக்கும் என்றால் கவலைப்பட்டுக் கொண்டே இருங்கள்.
 •  கவலைபடுவதில் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்குமென நீங்கள் நினைத்தால் மறுப்பே இல்லாமல் கவலைப்படுங்கள்.
 • ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
 • உங்களுக்கு அருகில் இருக்கும் உங்கள் பழைய,  நீண்ட நாளைய துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். யாரோ ஒருவர் முதலில் விடை பெற வேண்டும், இல்லையா?
 • எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் உங்கள் பழைய நண்பர்களுடன் பேசி சிரியுங்கள். நாள் செல்ல செல்ல இந்த வாய்ப்புகள் குறைந்து போகும்.
 • தினமும் புன்னகையுங்கள். வாய்விட்டு சிரியுங்கள்.
 • அழவேண்டுமா, சத்தமாக அழுது மனப்பாரத்தை இறக்கி விடுங்கள்.
 • கனவுகள் நின்றுவிட்டால் வாழ்க்கையும் நின்றுபோகும்; நம்புவதை நிறுத்தும்போது நம்பிக்கை போய்விடும்; அக்கறை போய்விட்டால் அங்கு அன்புக்கு இடமில்லை. இன்பதுன்பங்களை பங்கு போட்டுக்கொள்ள முடியாதபோது நட்பு முறிந்துவிடும்.
 • ஓடிக்கொண்டிருக்கும் நீர் போல வாழ்க்கை. இயன்றவரை சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திச் செல்லுங்கள்.
 • எல்லா முதியவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

வியாழன், 24 ஏப்ரல், 2014

வோட்டு போட்டாச்சு!


வோட்டு போட்டாச்சு என்று சந்தோஷமாகச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் கர்நாடகாவில் மொத்த வாக்குப்பதிவுகள் 65% தான். மக்களின் தேர்தல் குறித்த அலட்சிய மனப்பான்மை தொடருவது வருத்தத்தைக் கொடுக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூரு நகரில் குறைவான வாக்குகள் தான் பதிவாகியிருக்கின்றன என்பது பெரிய குறைதான். சென்ற முறையை (44%) விட இந்த முறை பரவாயில்லை என்பது சரியான கருத்து இல்லை. 

செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் உங்கள் பெயர் வாக்குப் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபாருங்கள் என்று பலமுறை அறிவிப்பு வந்தும் இணையம் மூலமும் இதைச் செய்யலாம் என்ற வசதி இருந்தும் பொதுமக்களின் மெத்தனம் வாக்குச் சாவடி வாசலில் நின்று கொண்டிருந்தவர்களின் பேச்சிலிருந்து தெரிந்தது. பலருடைய பெயர்கள் பட்டியலில் இல்லை. சிலரிடம் அடையாள அட்டை இல்லை. வீடு மாற்றிய விவரம் கொடுக்கவில்லை போன்ற சாக்குபோக்குகள் காதில் விழுந்த வண்ணம் இருந்தது.


தேர்தல் தினங்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே இங்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. தேர்தல் தேதியை மாற்றி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டும், ஏனோ தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. ஏப்ரல் 14 திங்கள் அம்பேத்கர் தினம். விடுமுறை. அதற்கும் முன் சனி ஞாயிறு விடுமுறை. 15, 16 இரண்டு நாட்கள் மட்டும் வேலை. பிறகு மறுபடி புனித வெள்ளி விடுமுறை. சென்றவார சனி, ஞாயிறு தினங்களையும் சேர்த்து, நடுவில் மேற்சொன்ன இரண்டு நாட்கள் விடுமுறையை எடுத்தக் கொண்டால் தொடர்ந்து பத்துநாட்கள் விடுமுறை. ஜாலியாக சுற்றுலா போவார்களா? வாக்களிக்க வருவார்களா? இதைத்தவிர கோடை விடுமுறையும் இங்கு மார்ச் மாதத்திலேயே தொடங்கி விடும். அம்மாக்கள் எல்லோரும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தங்கள் பிறந்த வீட்டிற்குப் போயிருப்பார்கள்.

சமீபத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல்கள் காரணமாக இந்த முறை இடது கைப்பெருவிரலில் மை தடவப்பட்டது.

இந்தத் தேர்தலில் தெற்கு பெங்களூரு தொகுதிதான் விஐபி தொகுதியாக மாறி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. ஆதார் அட்டை புகழ், இன்போசிஸ் இணை நிறுவனர், கோடீஸ்வரர் நந்தன் நிலேகனி காங்கிரஸ் சார்பில், 1996 லிருந்து ஐந்து முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கும் பாஜக பாராளுமன்ற அங்கத்தினர் திரு அனந்தகுமாரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்றால் சும்மாவா? ஆதார் திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.

குழந்தைகள் உரிமைக்காக போராடும் சமூக ஆர்வலர் திருமதி நீனா நாயக் ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டாலும் உண்மையில் திரு அனந்தகுமாருக்கும் , திரு நிலேகனிக்கும் இடையில்தான் பலத்த போட்டி.

ஐந்துமுறை தொடர்ந்து வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர், நிலேகனி இந்தமுறை அனந்தகுமாருக்கு சபாஷ், சரியான போட்டிதான். நிலேகனிக்கு மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த படித்தவர்களின் வாக்குகள் கணிசமாகக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஐந்துமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மக்கள் இப்போது அனந்தகுமாருக்கு மாற்றுத் தேடுகிறார்கள் என்கிறார் நிலேகனி.


நிலேகனிக்கும் அனந்தகுமாரை எதிர்கொள்வது கடினம்தான். அனந்தகுமார் தெற்கு பெங்களூரில் பழம் தின்று கொட்டை போட்டவர். இந்தத் தொகுதி அவரது கோட்டை என்றே சொல்லலாம். ஆதார் அட்டை காலைவாரி விட்டதில் நிலேகனியின் பெயர் கொஞ்சம் கேட்டுவிட்டது. ஆதார் அட்டையில் பதிக்கப்படும் தகவல்கள் நம் நாட்டிற்கு வெளியே சேமிக்கப்படுவது நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல என்ற வாதத்தை முன் வைக்கிறது, பாஜக.  ஆதார் அட்டையின் தோல்வியைத்தான் பாஜக கட்சியினர் நிலேகனிக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு விஷயமும் நிலேகனிக்கு எதிராக இருக்கிறது. அதாவது 1989 லிருந்து இதுவரை இந்தத் தொகுதியிலிருந்து பாராளுமன்றம் சென்றவர்கள் எல்லோருமே காங்கிரஸ் கட்சி அல்லாதவர்கள் தான்.

இந்த கடும்போட்டியை உணர்ந்து தானோ என்னவோ நிலேகனியின் மனைவி திருமதி ரோஹிணியும் கணவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கிவிட்டார். தனது கணவருக்கு பலம் சேர்க்க நடிகரும், நாடக ஆசிரியருமான திரு கிரீஷ் கர்னாட்-ஐயும் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் இந்தத் தொகுதியிலிருக்கும் படித்தவர்களின் வாக்குகள் நிலேகனிக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார் ரோஹிணி.

நிலேகனியும், ரோஹிணியும் பலவிடங்களிலும் வீதி நாடங்கங்கள் நடத்தினர். கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களைச் சந்தித்தனர். பூங்காக்கள், சேரிகள், குடியிருப்புகள் என்று ஒரு இடம் விடாமல் சென்று மக்களை சந்தித்தனர் இந்த தம்பதிகள்.

பெங்களூரு மாநகரப் பேருந்துகளிலும் தேர்தல் பிரசாரத்திற்காக பயணம் செய்தார் நிலேகனி. பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் அவலநிலையை அவர் உணர்ந்திருப்பார் என்று நம்பலாம். பேருந்துப் பயணத்தின்போது பேருந்துகளின் கண்ணாடிகளின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் பலவிதமான விளம்பரங்களும் அவரது கவனத்தை கவர்ந்திருக்க வேண்டும். இதனால் மக்களுக்கு எத்தனை இன்னல்கள் என்பதையும் நிலேகனி உணர்ந்திருப்பாரா?

நிலேகனிக்கு துணை ரோஹிணி என்றால் அனந்தகுமாருக்காக அவரது மனைவி தேஜஸ்வினி வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். வாக்காளர்கள் தேசிய அளவில் இந்த தேர்தலைப் பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் அனந்தகுமார். நாடெங்கும் வீசிக்கொண்டிருக்கும் மோடி அலையில் பயணம் செய்வதே சாலச்சிறந்தது, நாட்டிற்கு இப்போது தேவை நிலையான ஆட்சி, அந்த ஆட்சியை பாஜகவின் பிரதம மந்திரியாக அறிவிக்கப் பட்டிருக்கும் திரு மோடியால் மட்டுமே அளிக்கமுடியும் என்பதை தனது பிரச்சாரத்தில் சொல்லுகிறார் அவர்.

பெங்களூரு மத்திய தொகுதியில் நந்தன் நிலேகனியின் முன்னாள் சகா திரு வி. பாலகிருஷ்ணன் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நிற்கிறார். ஜேடி (எஸ்) சார்பில் முன்னாள் முக்கியமந்திரியும், இராமக்கிருஷ்ண ஹெக்டேயின் நெருங்கிய தோழரும் ஆன ஜீவராஜ் ஆல்வாவின் மனைவி திரு நந்தினி ஆல்வா நிற்கிறார். பாஜக சார்பில் பி.சி. மோகன், காங்கிரஸ் கட்சி சார்பில் ரிஸ்வான் அர்ஷத் ஆகியோர் நிற்கிறார்கள்.

இந்த நால்வரும் சென்ற ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்களை சந்தித்து பெங்களூரு நகரத்தின் குறைகளை விவாதித்தனர். ஆமை போல நகரும் போக்குவரத்து, பொறுமையை சோதிக்கும்  போக்குவரத்து நெரிசல், வளர்ந்துகொண்டே போகும் நகரத்திற்கு தேவையான சுத்தமான குடிநீர் வசதி, தினந்தோறும் மலைபோல குவியும் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை என்று பலவும் விவாதிக்கப்பட்டன.


என்ன நடந்து என்ன பயன்? நமது வாக்குகள் மூலமே நம்மால் நமக்கு வேண்டியதை பெற முடியும் என்பதை மக்கள் உணர மறுக்கிறார்களே!ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

வியக்க வைக்கும் இந்திய தேர்தல்
4tamilmedia.com - தளத்தில் 11.4.2014 அன்று வெளியான கட்டுரை. 
இந்தியாவில் தேர்தல் என்பது இமாலய நிகழ்வு. இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதியிலிருந்து மே மாதம் 12 ஆம் தேதி வரை 7 தவணைகளாக நடக்கும் இந்தத் தேர்தலில் சுமார் 815 மில்லியன் மக்கள் வாக்களிக்கிறார்கள். இதுதான் உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நிகழ்ச்சி. 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 100 மில்லியன் மக்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். இத்தனை பெரிய தேர்தலுக்கு ஆகும் செலவும் இதை ஏற்பாடு செய்வதில் இருக்கும் சிக்கல்களையும் யோசிக்கும்போது, தேர்தல் அமைதியாகவே நடந்து முடிகிறது என்பது வியப்பான ஒன்று. அரசியல்கட்சிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அளவுகோல்களை தாண்டி செலவழித்தாலும், இந்தியாவில் தேர்தல்கள் சுத்தமாகவே நடக்கின்றன -  அதாவது முடிவுகளில் மோசடி நடப்பதில்லை.

வாக்குப்பதிவுகள் மேற்கத்திய ஜனநாயக நாடுகளைப் போலவே இங்கும் இருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு நடக்கும் இந்த 16வது தேர்தலில் சுமார் 60-70% வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மாவோயிஸ்டுகள், மற்ற பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் கூட மிதமிஞ்சிய கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாவதில்லை. இந்தியாவின் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, நேபால், ஏன் மாலத்தீவுகளில் கூட நடைபெறும் ரத்தக்களறியான தேர்தல்களை ஒப்பிடும்போது, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் அமைதியானவையே.

இதையெல்லாம் பார்க்கையில் இந்த வெற்றிகரமான நிகழ்வு கொஞ்சம் புதிராகவே இருக்கிறது. இந்தியர்களை அவர்களது மாநிலத்தின் திறனைப்பற்றிக் கேளுங்கள்: அவர்களின் பதில் நிராகரிக்கப்பட வேண்டியதாகவே இருக்கும். அரசு நிகழ்ச்சிகள் எல்லாமே மோசமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.  அவ்வளவு ஏன்? ஒரு அரசு பள்ளியையோ, அரசு மருத்துவ மனையையோ உதவிக்கு அணுகமுடியுமா? ஒரு காவல்காரரிடம் ஒரு உதவி கேட்கமுடியுமா? உணவு மான்யத் திட்டங்களை நம்ப முடியுமா? எங்கு பார்த்தாலும் ஊழல், குப்பை, எங்குபோனாலும், எந்த வேலையானாலும் தாமதம், நிர்வாக சீர்கேடு என்று எல்லாமே மனதை அயர்த்துவது நிஜம். பொதுத்துறை எதுவானாலும் இந்த நிலை தான். உதாரணமாக இந்திய கப்பற்படையின் நிலையைப் பாருங்கள்.  தோல்விகளாலும், உயிர்களை பலி கொண்ட விபத்துகளாலும் எப்படியெல்லாம் பாதிப்படைந்திருக்கிறது. நீண்ட நாட்களாக பணமுதலீடு இல்லாமல் இயங்கும் ரயில்வே துறை, மக்களுக்கு தேவையான சாலைகள், மின்சார இணைப்புகள்  இவற்றை அமைத்துத் தரமுடியாத மாநில அரசுகள். இத்தனை பின்னடைவுகள் இருந்தும், இந்திய தேர்தல்கள் எப்படி கச்சிதமாக நடந்து முடிகின்றன?

முதல் விடை: இந்திய தேர்தல்கள் குறுகிய காலக் கவனத்துடன் ஒரு சிறிய காலத்திற்கு நடைபெறுவதுடன், மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதைப்போன்ற சூழ்நிலைகளில் அரசு நிர்வாகிகள் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள். இதற்கு முதல் உதாரணம் 10 வருட தேசிய ஜனத்தொகை கணக்கெடுப்பு.  இன்னொரு உதாரணம் இப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல் கணக்கெடுப்பு. சுமார் 600 மில்லியன் மக்களின் கண்கள், கை ரேகைகள் ஆகியவற்றை சேகரிப்பது சும்மாவா? இந்தத் தகவல்களை நல்லமுறையில் பயன்படுத்துவார்களா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இத்தனை தகவல்களும் தனியார் நிறுவனங்களால் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன என்பது.

இரண்டாவது விடை: அரசு அதிகாரிகள் தேர்தல்களை நடத்தி முடிப்பதை   மிகப்பெரிய கௌரவமான வேலையாக நினைக்கிறார்கள். இந்த சமயத்தில் இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இந்திய வான்வெளி ஆராய்ச்சியும் இதைப்போன்ற ஒன்றுதான். வியக்கத்தக்க வகையில் குறைந்த செலவில் சமீபத்தில் செலுத்தப்பட்ட ‘மங்கள்யான்’ இதற்கு உதாரணம். இதேபோல சமீபத்தில் ‘இளம்பிள்ளைவாதத்திலிருந்து விடுதலை’ என்று இந்திய பொதுநலத்துறை அறிவித்ததையும் இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம்.

மூன்றாவது விடை:. ரிசர்வ் வங்கி போல இந்திய தேர்தல் கமிஷனும் சுதந்திரமானது. இதன் செயல்பாடுகளில் அரசியல் தலைவர்கள் தலையிட முடியாது. அரசியல் தலையீடு, மற்றும் லஞ்சம் இல்லாத காரியங்களை அரசு அதிகாரிகள் மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் போல எப்போதும் லஞ்சம் வாங்கி மேலிடத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில் தேர்தல் அதிகாரிகள் இல்லை. தேர்தல் நடத்த போடப்படும் பெரிய பட்ஜெட் பணத்தை வேறுவழியில் செலவழிக்க முடியாது. தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்க வாய்ப்புகளும் கிடையாது.

இந்த மாதிரியான அப்பழுக்கற்ற தேர்தல் நடவடிக்கைகள் பிற அரசுத் துறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும் என்பதுடன் இதிலிருந்து நல்ல பல பாடங்களையும் படிக்கலாம். முக்கியமான பாடம் நமது இலக்கு சுலபமானதாக, நன்கு வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டியதின் அவசியம். இதை மனதில் வைத்துக்கொண்டு எளிதாக வர்த்தகம் செய்யக் கூடய இடங்களில் இப்போது இந்தியா இருக்குமிடத்தை  (134 வது இடம் 189 இடங்களில்). ஒவ்வொரு வருடமும் பத்து பத்தாகக் குறைத்துக் கொண்டு வாருங்கள் என்று அரசு அதிகாரிகளிடம் சொல்லலாம்.

இன்னொரு பாடம் செய்யும் செயல்களில் காணப்படும் வெளிப்படையின் முக்கியத்துவம். தேர்தல் அதிகாரிகளைப் போல மக்களின் தொடர்ந்த கண்காணிப்பில் இருக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளில்  அரசியல்வாதிகளால் குறுக்கிட்டு திருட்டுத்தனம் செய்ய முடியாது. தகவல் அறியும் உரிமையினால் எத்தனை கேடுகெட்ட செயலாக இருந்தாலும் வெளியே வருவது மிகப்பெரிய சிறப்பான விஷயம்.

கடைசியாக இந்த தேர்தல்களை நடத்தும் அதிகாரிகளுக்கு எல்லையில்லா அதிகாரம் கிடையாது.  யார் வாக்கு அளிக்கலாம், யார் அளிக்கக் கூடாது என்று நிர்ணயிக்க முடியாது இவர்களால். இதன் காரணமாகவே இவர்கள் திறமையாகவும் ஊழல் இல்லாமலும் செயல்படுகிறார்கள். மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கோ, ஏமாற்றுவதற்கோ இடம் கொடுக்காமல், தேர்தல்களை நல்லபடியாக நடத்தி முடிப்பது ஒன்று தான் இவர்களது.  வேலை,

இந்தமுறை யார் வெற்றிபெற்றாலும், தேர்தல் நடக்கும் முறைகளை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தியாவின் அரசு அதிகாரத்துவத்தை எப்படி கூர்மைப்படுத்துவது என்று யோசிக்கலாம்.

நன்றி: தி எகனாமிஸ்ட் பத்திரிக்கை
4தமிழ்மீடியாவிற்காக மொழியாக்கம்/ கட்டுரை வடிவம்: ரஞ்சனி நாராயணன்