சனி, 2 ஏப்ரல், 2016

அரசு நடுநிலைப்பள்ளி.....



எமக்குத் தொழில் அசைபோடுதல் – 7



அன்னிலேருந்து நான் ஸ்கூலில் எல்லோரிடமும் ஒரே கேள்வியைக் கேட்க ஆரம்பித்தேன்:அடுத்த வருடம் நீ எந்த ஸ்கூலில் சேரப் போற?’என்று. அப்போது திருவல்லிக்கேணியில் இரண்டு பள்ளிகள் மிகவும் பிரபலம். என்கேடி (என்.கே. திருமலாச்சாரியார்) நேஷனல் பள்ளி, மற்றும் லேடி வெலிங்டன் பள்ளி. இரண்டுமே மெரீனா கடற்கரை அருகில் இருந்த பெண்கள் பள்ளிகள். இவற்றில் படிப்பது மிகப்பெரிய விஷயம். இங்கு படிக்கும் பெண்களுக்கு தலையில் இரண்டு இல்லை கூடுதலாக இரண்டு நான்கு கொம்புகள் முளைத்திருக்கும். அதனால் அவர்கள் குனிந்து நிலம் பார்த்து நடக்க மாட்டார்கள். ஆகாயத்தைப் பார்த்துத்தான் நடப்பார்கள்.

என் தோழி சந்திரப்பிரபா தீர்மானமாகச் சொன்னாள்: நான் லேடி வெலிங்டன் பள்ளியில் தான் படிக்கப் போகிறேன். அதற்கு பரீட்சை எழுத வேண்டும். அதில் பாஸ் செய்தால் தான் அட்மிஷன். இப்போதிலிருந்தே தயார் செய்து கொள்ளவேண்டும்’. எனக்கும் அவளைப் போலவே அந்தப் பள்ளியில் சேர ஆவல் அதிகமாயிற்று.

அப்பாவிடம் சொன்னேன். எப்போ நுழைவுப் பரீட்சை இருக்கும் என்று கேட்டு வாஎன்றார். அம்மாவிற்கு இந்த யோசனை பிடிக்கவே இல்லை. அவ்வளவு தூரம் இவளால் நடக்க முடியாது. பக்கத்துல இருக்கிற ஸ்கூல்ல சேருங்கோஎன்றாள். பக்கத்துல எந்த ஸ்கூல் இருக்கு?’ என்ற என் கேள்விக்கு அம்மாவின் பதில்: திருவட்டீச்வரன்பேட்டையில் கார்ப்பரேஷன் ஸ்கூல் இருக்கே. நாகப்பையர் தெருவில்என்றாள். போம்மா....அங்கெல்லாம் நான் படிக்க மாட்டேன். என் சினேகிதி சந்திரப்பிரபாவுடன் லேடி வெலிங்டன் ஸ்கூலுக்குத்தான் போவேன். என்னால் நடக்க முடியும்என்றேன்.

வீட்டில் அம்மாவின் செல்வாக்குத் தான் அதிகம் என்றாலும் மொதல்ல நீ நுழைவுத் தேர்வு எழுது. பிறகு பார்க்கலாம்என்று அப்பா துளி நம்பிக்கை கொடுத்தார்.

இங்கு ஒரு இடைச்செருகல்: நாங்கள் முதலில் இருந்தது நாகப்பையர் தெரு தான். அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குக் குடி போனோம் – நாய்ப்பாட்டு ராணி வீடு அது. அதற்குப் பிறகு இன்னொரு வீடு. இது திருவல்லிக்கேணியின் அடுத்த பகுதி. இரண்டு பகுதிகளையும் பிரித்தது அன்று டிராம் ரோடு (Tram Road) – ஒரு காலத்தில் அங்கு டிராம் ஓடிக்கொண்டிருந்ததாம்  – இப்போது திருவல்லிக்கேணி ஹை ரோடு. டிராம் ஓடுவது நின்றுபோனதும், அந்தத் தண்டவாளங்களை எடுத்ததும் எனக்கு லேசாக நினைவில் இருக்கிறது.

சென்றமுறை திருவல்லிக்கேணிக்கு ஆட்டோவில் போகும்போது நாங்கள் குடியிருந்த கானாபாக் தெருவைப் பார்த்துக்கொண்டே போனேன். ஒருமுறை இங்கெல்லாம் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொள்ளுகிறேன். என் அக்கா கூட சொல்லிக் கொண்டிருக்கிறாள் கனகவல்லி பள்ளிக்கூடத்திற்குப் போய் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கித் தரவேண்டும் என்று. அவளுடன் கூட நானும் போகவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அசை போடுவதைத் தொடர்வோம் வாருங்கள். நாங்கள் இருந்த கானாபாக் லேன். (கானாபாக் தெருவில் ஒரு முட்டுச் சந்து). அங்கிருந்து தினமும் கனகவல்லிப் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தேன் நான். திருவல்லிக்கேணி பெரிய தெருவிற்கு குறுக்காகப் போகும் இந்த தெரு. பெரிய தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவில் பெரியது. பரீட்சைக்கு முதல் நாள் அங்குதான் போய் தோப்புக்கரணம் போட்டு பிள்ளையாரை காக்கா பிடித்து விட்டு வருவோம்.

நுழைவுத் தேர்வு நாள் அன்று சந்திரப்பிரபாவும் எங்களுடனேயே வந்தாள். ஆங்கிலம், கணிதம் இரண்டிலும் தேர்வு எழுதினோம். முடிவு ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் வரும்; அந்தப் பள்ளிகூடத்திற்கே வந்து பார்த்துக் கொண்டு போகவேண்டும் என்றெல்லாம் முதலிலேயே சொல்லிவிட்டார்கள். நான் அத்தனை சிறப்பாக எழுதியதாக நினைவில்லை. சந்திரப்பிரபாவும் அபஸ்வரத்தில் அதாவது ஈனஸ்வரத்தில் தான் பேசினாள். சரி இருவருக்கும் கிடைக்காது என்று நினைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு  அதை மறந்தும் போனேன். பல நாட்கள் கழித்து அப்பா சொன்னார் எங்கள் இருவரின் பெயரும் தேர்வானவர்கள் லிஸ்டில் இல்லை என்று. நான் ஏற்கனவே இந்த முடிவிற்குத் தயாராக இருந்ததால் ரொம்பவும் அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு நாள் சந்திரப்பிரபாவை கடைத்தெருவில் பார்த்தேன். அவள் லேடிவிலிங்டன் பள்ளியில் சேர்ந்துவிட்டதாகச் சொன்னாள். எனக்கு பயங்கர அதிர்ச்சி. ‘நீ எப்போ சேரப்போற?” என்றாள். ‘நானா? என் பெயரே வரவில்லைன்னு எங்க அப்பா சொன்னாரே! உன் பெயரும் இல்லை என்றாரே!’ வாயைப் பிளந்துகொண்டு சொன்னேன். ‘உங்க அப்பா பொய் சொல்றா. நம் இரண்டு பேர் பேரும் இருந்தது. நான் ஏற்கனவே பீஸ் கட்டி புத்தகம் எல்லாம் வாங்கிவிட்டேன். நீயும் உங்க அப்பாவிடம் சொல்லி சீக்கிரம் சேர்ந்துவிடு’ என்றாள்.

நான் வந்து அப்பாவிடம் கேட்டேன். அப்பா சொன்னார்: ‘உனக்கு அப்புறம் தம்பி இருக்கான் மா. அவனை நான் நல்ல ஸ்கூலில் போடவேண்டும். அதனாலே நீ ஒரு இரண்டு வருடங்கள் கார்ப்பரேஷன் ஸ்கூலுக்குப் போ. ஹை ஸ்கூலுக்குப் பார்க்கலாம். அப்போ நல்ல ஸ்கூலில் சேர்க்கிறேன்’ என்றார்.

பலநாட்கள் சாப்பிடாமல், அழுது அடம் பிடித்தேன். என் அக்கா சொன்னாள்: ‘அப்பாவிற்கு நாம ரெண்டுபேரும் தான் உதவி பண்ணனும். அண்ணா படிக்கிறான். தம்பியையும் நல்ல படிப்பு படிக்க வைக்க வேண்டும். பாவம் அப்பா என்ன செய்வா சொல்லு. புரிஞ்சுக்கோ. பேசாம கார்ப்பரேஷன் ஸ்கூலுக்குப் போ. அங்கேயும் இதே பாடங்களைத்தான் சொல்லித் தருவா. நீ நன்னா படி. அதுதான் முக்கியம்’. என்றாள்

அவள் என்றைக்குமே பெரிய மனுஷி மாதிரிதான் பேசுவாள். என் அம்மா, ‘இஷ்டமான ஸ்கூலுக்குப் போ. இல்லைன்னா பத்துப் பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து எனக்கு உதவி பண்ணிண்டு ஆத்துல இரு’ என்று பயமுறுத்தினாள். ஐயையோ! இதற்கு கார்ப்பரேஷன் ஸ்கூல் தேவலாம் என்று ஒப்புக்கொண்டு விட்டேன். என்தலையில் கார்ப்பரேஷன் ஸ்கூல் என்று எழுதியிருக்கிறது. விதியை மாற்ற முடியுமா?

தொடர்ந்து அசை போடலாம்.....


அதீதம் இணைய இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடர்

1 கருத்து:

  1. உங்கள் "அசை போடலாம்" என்னையும் பல வருடங்கள் பின்நோக்கி இழுத்து சென்று அசை போட வைக்கிறது.மிகவும் சுவாரஸ்யம் ரஞ்சனி. உங்கள் அக்கா சொன்னது போல் பள்ளியை விடவும் பாடமல்லவா முக்கியம்.

    பதிலளிநீக்கு