செவ்வாய், 5 ஏப்ரல், 2016

திருப்பாவையும், சர்மா சாரும்!





திருப்பாவையும், சர்மா சாரும்!

எனது பள்ளிநாட்களில் இருந்தே திருப்பாவை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அந்த நினைவுகளை இந்த பகுதியில் அசைபோடுகிறேன்.
இது மார்கழி மாதம்.

திருவாடிப் பூரத்து செகத்துதித்த, திருப்பாவை முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்றெடுத்த, பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான, ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த, உயரரங்கற்கு கண்ணி உகந்தளித்த, மருவாறும் திருமல்லி வளநாடி, வண்புதுவை நகர்கோதை அருளிச் செய்த திருப்பாவையால் சிறந்து விளங்கும் மாதம்.

தினமுமே திருப்பாவையை சேவித்த போதும் மார்கழியில் சேவிப்பது மன நிறைவைத் தரும். திருப்பாவையை நினைவு தெரிந்த நாளாக சேவித்து வருகிறேன்.

திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது விடியற்காலையில் மார்கழி மாதம் தினமும் பஜனை கோஷ்டி ஒன்று எங்கள் வீதி (நாகப்பா ஐயர் தெரு) வழியே போகும். அதுதான் எங்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி!
‘ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப.....’
என்று அவர்கள் பாடிக்கொண்டே போவார்கள். இன்னும் இந்தப் பாட்டு அதே மெட்டில் என் நினைவில் இருக்கிறது.

பள்ளியிலும் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுப்பார்கள். என் அம்மா இன்றைக்கும் வியப்புடன் சொல்லிக்கொண்டிருப்பது கனகவல்லி பள்ளியில் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் வரும் திருவல்லிக்கேணி பாசுரங்களான ‘விற்பெருவிழவும் கஞ்சனும் மல்லும்....’ என்ற பாட்டை எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததுதான்.


என் அக்கா, திருமதி எம்.எல்.வி. பாடிய ராகத்திலேயே எல்லாப் பாடல்களையும் அழகாகப் பாடுவாள். வாசலில் பெரிய கோலம் போடுவாள். நான்? ரசிப்பேன் அவ்வளவுதான்! நம்மால் முடிந்ததைத்தானே நாம் செய்ய முடியும்?

பிறகு புரசைவாக்கம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பில் லேடி எம்.சி.டி. முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.

திருப்பாவை என்றால் எனக்கு நினைவுக்கு வரும் ஆண்டாளைத் தவிர ஒருவர் திரு கேதாரேஸ்வர ஸர்மா. எங்கள் தமிழ் வாத்தியார், ஸர்மா ஸார்.

மார்கழி மாதம் முப்பது நாளும் பள்ளி முடிந்த பின் திருப்பாவை அன்றைய நாள் பாட்டை சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவரது மாணவிகளுள் ஒருவர் வீட்டிலிருந்து பிரசாதம் வரும்.

வெள்ளைவெளேரென்ற பஞ்சகச்சம். வெள்ளை நிற அங்கி அதன் மேலே வண்ண ஷால். கட்டு குடுமி. நெற்றியில் பளீரென்ற திருநீறு.
ஆண்டாளைப் பற்றி சொல்லுகையில் கண்களில் நீர் ததும்பும்!

தமிழ் வாத்தியார் என்றால் மனதில் தோன்றும் பிம்பத்துக்கு ஏற்றார்போல் எங்கள் ஸர்மா ஸாருக்கும் நிறைய பெண்கள் + ஏழ்மை.

திருப்பாவை உபன்யாசத்துக்கு நடுவே தன் ஏழ்மையையும், ஆண்டாளும் அவள் சாதித்த திருப்பாவையுமே தன் பெண்களை கரையேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்ணீருடன்  ஆண்டாளின் முன் வைப்பார்.
நாங்களும் கண்களில் கண்ணீருடன் அவருக்காக ஆண்டாளிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்து கொள்ளுவோம். 

அவரது மாணவிகளைத் தவிர, சில தாய்மார்களும் அவரது உபன்யாசத்தைக் கேட்க வருவார்கள். பல தாய்மார்கள் நேரில் வராவிட்டாலும் பிரசாதம் செய்து அனுப்பி விடுவார்கள்.

கடைசி நாளன்று வங்கக் கடல் கடைந்த  பாசுரத்தன்று ஆண்டாள் கல்யாணம் நடத்துவார். ரொம்பவும் அமர்க்களமாகப் பண்ணுவார். பூக்களும் நகைகளுமாக ஆண்டாளும் ரங்கமன்னாரும் மின்னுவார்கள். ஆண்டாள் பெருமாளுடன் கலந்து விட்டதை அவரால் சொல்லவே முடியாது. நா தழுதழுக்கும். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டும். உணர்ச்சிப் பெருக்கில் எல்லோரும் ஊமைகளாக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு நிறைய மாணவிகள், பெற்றோர்களுடன் வருவார்கள்.

நடுவில் ஒரு நாள் திருப்பாவைப் போட்டி நடக்கும்.

வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள் படம் பரிசு. வருடம் தவறாமல் கலந்து கொண்டு பரிசும் வாங்கி விடுவேன் நான்.

ஆண்டாள் சாதித்த திருப்பாவை முப்பதையும் தப்பாமல் சொன்னால் நல்ல வாழ்க்கை அமையும்  என்ற  விதையை ஒவ்வொரு மாணவியின் உள்ளத்திலும் விதைத்தவர் அவர்தான்.

அவரது பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. அவர் நம்பிய ஆண்டாள் அவரைக் கைவிடவில்லை.

நானும் அவர் சொல்லியதை அப்படியே நம்பினேன். என் பெண்ணின் உள்ளத்திலும் திருப்பாவை என்கிற வித்தை விதைத்தேன்.

எனக்கு ஒரு நாராயணனும், அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும்  கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது.

'சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்....

என்பதற்கு  இதைவிட சாட்சி வேண்டுமா?






அதீதம் இணையஇதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர்.

1 கருத்து:

  1. I like thiruppavai very much. In Seattle (where I live), hindu temple in seattle is conducting thiruppavai recitals everyday on Margazhi. Priest was explaining the meaning of pasuram everyday. I was very surprised to see many people were coming early morning to attend it.

    பதிலளிநீக்கு