வியாழன், 7 ஏப்ரல், 2016

ரமாவும் ரஞ்சனியும் 2





 

ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதைப்படித்துவிட்டு என் அக்கா ரமா ரொம்பவும் நெகிழ்ந்து போனாள். ஆனால் இந்தக் கட்டுரையை நான் மிகவும் மனம் நொந்து, நெகிழ்ந்து எழுதுகிறேன். இதைப் படிக்க அவள் இல்லை என்கிற உண்மை என்னை மிகவும் வதைக்கிறது.


அக்கா பிறக்கும்போதே ‘பெரியவள்’ ஆகப் பிறந்தாள் என்று எனக்குப் பல சமயங்களில் தோன்றும். கோடை விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் போகும்போது நான் தெருவில் பாண்டி, கோலி எல்லாம் விளையாடிக் கொண்டிருப்பேன் என் சகோதரர்களுடன். இவள் என் பாட்டியுடன் இருப்பாள். பாட்டியுடன் கூடவே வெளியே போவாள். வீட்டிலும் பாட்டியுடன் அடுப்படியில் என்னவோ பேசிக்கொண்டு இருப்பாள். பாட்டியும் அவளை பெரியவள் ஆகவே நினைத்து எல்லாக் கதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பாள். திரும்ப ஊருக்கு வந்தாலும் இவள் என் அம்மாவுடனே இருப்பாளே தவிர தன் வயதை ஒத்த தோழிகளுடன் விளையாட மாட்டாள். என் அம்மா, பெரியம்மா, பாட்டி இவர்களே இவளது தோழிகள் என்று தோன்றும் அளவிற்கு அவர்களுடன் பழகுவாள்.

அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களை வெகு அக்கறையாகக் கேட்பாள். என்னிடம் பேசும்போது ‘பாவம், பாட்டி, பாவம் பெரியம்மா’ என்பாள். எனக்குத் தெரியாத உறவினர்களை எல்லாம் இவள் தெரிந்து வைத்திருப்பாள். அவளுடன் கோவிலுக்குப் போனால் எதிரில் வருகிறவர்கள் அத்தனை பேர்களும் இவளை விசாரித்துவிட்டுப் போவார்கள். ‘பாட்டியோட அத்தான் மன்னி இவர்’, ‘பாட்டியோட அம்மாஞ்சி இவர்’ என்று உறவுமுறை சொல்லுவாள். ‘உனக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!’ என்றால் ‘நீ எப்போ பார்த்தாலும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறாய். பாட்டி பெரியம்மாவுடன் எல்லாம் பேச வேண்டும்’ என்பாள். என்னால் முடியவே முடியாத காரியம் இது என்று நினைத்துக் கொள்ளுவேன்.

ஸ்கூல் முடித்தவுடன் ‘மேலே படிக்க விருப்பம் இல்லை. நான் வேலைக்குப் போய் உனக்கு உதவறேன்’ என்று அப்பாவிடம் சொல்லிவிட்டாள். நான் பள்ளிப் படிப்பை முடித்தவுடனே என்னிடமும், ‘மேலே படிக்க வேண்டாம். வேலைக்குப் போய் அப்பாவிற்கு உதவி செய்’ என்று அதையே சொன்னாள். எனக்கு திருமணம் நிச்சயம் ஆனவுடன் (திருமணத்திற்கு ஐந்தாறு மாதங்கள் இருக்கும்போது) வேலையை விட்டுவிட்டேன். அவளுக்கு ரொம்பவும் வருத்தம். திருமணம் ஆகும்வரை வேலைக்குப் போனால் அப்பாவிற்கு உதவியாக இருந்திருக்கும், இல்லையா என்றாள்.

மொத்தத்தில் அக்கா உண்மையில் அக்காவாக இருந்தாள். பாட்டி, அம்மா, பெரியம்மா என்று எல்லோருடைய கஷ்டங்களையும் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ அக்காவிற்கும் கஷ்டங்களே வாழ்க்கை ஆனது. 22 வயதில் திருமணம். 34 வயதில் அத்திம்பேரை இழந்தாள். யாரையும் எதிர்பார்க்கவில்லை. யார் கூடவும் இருக்கவும் விரும்பவில்லை. கையில் வேலை இருந்தது. அம்மாவின் துணையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்தாள். எதற்கும், யாரையும் அண்டி இருக்காமல் தன் முடிவுகளைத் தானே எடுத்தாள்.

தன் வாழ்க்கையை அலுவலகம், வீடு என்று அமைத்துக் கொண்டாள். அவளுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு திவ்ய தேச யாத்திரை. அம்மாவையும் அழைத்துக் கொண்டு எல்லா திவ்ய தேசங்களையும் சேவித்துவிட்டு வந்தாள். முக்திநாத் தவிர மற்ற திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்திருக்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ஒரு வீடு வாங்கினாள். முடிந்த போதெல்லாம் போய் நம்பெருமாளை சேவித்துவிட்டு வருவாள். ஸ்ரீரங்கம் போவது என்பதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பாள். தன் பேத்திகள் இருவர் மேலும் உயிரை வைத்திருந்தாள். பேத்திகள் இருவரையும் பார்த்துக் கொள்வதை ஆசைஆசையாகச் செய்தாள். பேத்தியை மடியில் விட்டுக் கொண்டு நிறைய பாட்டுக்கள் பாடுவாள்.
‘மாணிக்கம் கட்டி, வயிரமிடை கட்டி....’ என்று பாசுரம் பாடிப் பாடி அவர்களை கொஞ்சி மகிழ்வாள். 

ஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பதே அவளது வாழ்நாளின் குறிக்கோள் என்பது போல அடிக்கடி ஸ்ரீரங்கம் போவாள். நம்பெருமாளை அவள் சேவிக்கும் அழகைக் காண வேண்டும். அந்தப் பக்கம் நின்று சேவிப்பாள். இந்தப் பக்கம் வந்து சேவிப்பாள். வீதியில் எழுந்தருளும் போதும் இந்த வீதியில் சற்று நேரம் சேவித்துவிட்டு அடுத்த வீதிக்கு பெருமாள் எழுந்தருளுவதற்குள்  அங்கு போய் நிற்பாள். 


சமீபத்தில் ஒருநாள் அடையாறு அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு போக ஆசைப்பட்டிருக்கிறாள். அவள் பிள்ளை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறான். ‘கோவிலுக்குள் நுழைந்தவுடன் அம்மா கிடுகிடுவென சந்நிதிக்குள் சென்ற வேகம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, சித்தி. அம்மாவிற்கும் பெருமாளுக்கும் நடுவில் ஏதோ பேச்சு வார்த்தை நடப்பது போல இருந்தது. அம்மாவை அவர் வா என்று சொல்வது போலவும் அம்மாவும் வேறு எங்கும் பார்க்காமல் உள்ளே சென்றதும்..... என்ன நடக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சட்டென்று வேகமாக நடக்கும் அம்மாவைப் பிடித்துக் கொண்டேன்’ என்றான் அக்கா பிள்ளை. அதுதான் ரமா.


தனது சோகங்களை சற்று மறந்து பேத்திகளுடன் வாழ்க்கையை கழிக்க ஆரம்பித்த வேளை அந்தக் கொடிய நோய் அவளை பீடித்தது. சென்ற பிப்ரவரி மாதம் நாங்கள் ஸ்ரீரங்கம் போயிருந்தோம். இரண்டு நாட்களில் அக்காவும் வருவதாக இருந்தது. முதல் நாள் போன் செய்து ரொம்பவும் வயிற்றுவலி அதனால் ஸ்ரீரங்கம் பயணத்தை ரத்து செய்துவிட்டேன் என்று அவள் கூறியபோது மனதில் இனம் புரியாத சங்கடம். என்னவானாலும் ஸ்ரீரங்கம் பயணத்தை ரத்து செய்யாதவள் இப்போது செய்கிறாள் என்றால்...என்று மனதை கவலை சூழ்ந்து கொண்டது. சில நாட்களில் தெரிந்துவிட்டது, வயிற்றில் புற்றுநோய் இருப்பது. அப்போதே முற்றிய நிலை தான். ஆறு கீமோதெரபி என்று மருத்துவர் கூறினார். ஒவ்வொரு மாதமும் நான் சென்னைக்குப் போய் அவளுடன் மருத்துவமனையில் தங்குவேன். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தபின் இரண்டு நாட்கள் அவளுடன் இருந்துவிட்டு திரும்புவேன்.


40 வருடங்களுக்கு முன் எங்கள் அப்பாவை இந்த நோய் தாக்கியபோது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அந்த நினைவுகள் வந்து என்னை பயமுறுத்தின. ஆனால் இத்தனை வருடங்களில் மருத்துவம் நிறைய முன்னேறியிருக்கிறது அதனால் அக்கா பிழைத்துவிடுவாள் என்று நினைத்தேன். அம்மா தினமும் திருவள்ளூர் பாசுரம் சேவிக்க ஆரம்பித்தாள். நாளாக ஆக, எங்கள் நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. 


இன்றைக்கு ஒரு வேலை செய்ய வேண்டும் என்று அக்கா நினைத்தால் அதை செய்து முடித்துவிட்டு மறுவேலை பார்ப்பாள். அசாத்திய சுறுசுறுப்பு. அம்மா சொல்வாள்: ‘ரமா அடுப்படியில் நுழைந்தால் அடுப்பு தானாகவே பற்றிக் கொள்ளும். உலை தானாகவே கொதிக்கும்!’ என்று. எப்போதும் ஒரு பரபரப்பில் இருப்பாள். ஒருநிமிடம் அயர்ந்து உட்கார மாட்டாள். அப்படிப்பட்டவளை இந்தக் கொடிய நோய் முடக்கிப் போட்டுவிட்டது. மிகவும் சுதந்திரமானவள் அக்கா. அப்படிப்பட்டவள் இப்போது துணையில்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை. கூடவே ஒரு ஆள் அவளுடன் இருக்க வேண்டியிருந்தது. இந்த நிலை அவளை மிகவும் பாதித்திருக்க வேண்டும். 


அவள் செய்யும் காரியங்களில் எல்லாம் ஒரு ஒழுங்கு இருக்கும். ‘போன் பேசுவது எப்படி என்று ரமாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அவள் தோழிகள் சொல்வார்கள். ‘சொல்ல வந்த விஷயத்தை நறுக்கென்று சொல்லிவிட்டு ‘வைக்கட்டுமா?’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். வளவளவென்று பேசவே மாட்டாள்’ 


நிறைய தானதர்மம் செய்வாள். கோவில்களுக்கு வாரி வழங்குவாள். அவளுக்கு வரும் கடிதங்கள் எல்லாமே கோவில்களிலிருந்து வரும் பிரசாதக் கவர்கள் தான். சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து வைகுண்ட ஏகாதசி பிரசாதம் செல்வர் அப்பம் வந்திருந்தது. அவளால் அதை சாப்பிட முடியவில்லை, பாவம். 


நான் அவளுடன் மருத்துவமனையில் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை. எங்கள் திருமணத்திற்கு முன் நாங்கள் இருவரும் எப்படி இருந்தோமோ அதேபோல இப்போது இருந்தோம். அக்கா தங்கை என்ற உறவை மீறி தோழிகள் போல இருவரும் ஒருவரின் அண்மையை இன்னொருவர் விரும்ப ஆரம்பித்தோம். நான் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பாள். ‘நீ வந்துட்டயா? நான் பிழைத்துவிடுவேன்’ என்பாள். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம். நான் அறியாத ரமாவை இந்த ஒரு வருட காலத்தில் அறிந்தேன். எத்தனை வேதனை பட்டிருக்கிறாள்! தனி ஒரு ஆளாக எல்லாவற்றையும் தாண்டி சற்று நிம்மதியாக இருக்க வேண்டிய நிலையில் எதற்கு இப்படி ஒரு நோய் அவளுக்கு? ‘யார் சோற்றில் மண்ணைப் போட்டேனோ, சாப்பிடக்கூட முடியவில்லையே’ என்று மனம் நொந்து அழுவாள். கடைசியாக நான் அவளைப் பார்த்தது ஜனவரி 9. நான் ஊருக்குப் போகிறேன் என்றவுடன் முகத்தில் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தாள். கட்டாயம் போகணுமா என்றாள். பண்டிகை முடிந்தவுடன் மறுபடியும் வருகிறேன் என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டேன். ‘சீக்கிரம் என்னைத் திருவடி சேர்த்துக் கொள்ளச் சொல்லி நம்பெருமாளை வேண்டிக் கொள்’ என்றாள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. 


மருத்துவர்கள் சொன்ன காலக்கெடு 3 மாதங்கள். ஆனால் ஒரே வாரத்தில் அக்காவின் கதை முடிந்துவிட்டது. இனி அவள் பிழைக்க மாட்டாள் என்று தெரிந்தவுடன் நான் நம்பெருமாளிடம் இந்தக் கோரிக்கையைத் தான் வைத்தேன்: ‘இனியும் இந்த சித்திரவதை அவளுக்கு வேண்டாம். நிறைய பாடுபட்டு விட்டாள். அதிக சிரமம் கொடுக்காமல் அவளுக்கு இரங்கு’ 


ஜனவரி 13 காலையிலேயே அக்காவிற்கு நினைவு தப்பிவிட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை ஆரம்பித்திருக்கிறார்கள். நினைவு போன நிலையில் ஒருமுறை என் பெயரை சொன்னாள் என்று அக்காவின் பிள்ளை சொன்னான். அவ்வளவுதான். நாங்கள் காஞ்சீபுரம் அருகில் போய்க்கொண்டிருந்த போது செய்தி வந்துவிட்டது. ‘அம்மாவின் முகம் ரொம்பவும் அமைதியாக இருக்கிறது’ என்று அக்கா பிள்ளை சொன்னான். அவளது எல்லாக் கஷ்டங்களும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டன பிறகு அமைதி தானே! 


‘நீ இப்படி எனக்காக ஓடி ஓடி வருகிறாயே!’ என்பாள் ஒவ்வொருமுறை நான் போகும்போதும். என்ன பலன்? அவளுடைய வலி, வேதனைகளை என்னால் வாங்கிக் கொள்ள முடியவில்லையே! நான் மாறனேர் நம்பி இல்லையே! பலமுறை இப்படி நினைத்து அவளுக்குத் தெரியாமல் அழுவேன். 

சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின

என்ற நம்மாழ்வாரின் வாக்குப்படி என் அக்காவிற்கும் பரமபதத்தில் வரவேற்பு கிடைத்திருக்கும். முமுக்ஷுக்களுக்கு (மோக்ஷத்தை விரும்பும் நாரணனின் பக்தர்கள்) கிடைக்கும் திரும்ப வர முடியாத உலகத்தில் என் அக்கா ரமாவிற்கும் ஒரு இடம் கிடைத்திருக்கும்.  அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று விரஜா நதியில் நீராடி வந்திருக்கும் அவளை நம்பெருமாள் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு ‘ரொம்பவும் சிரமப்பட்டு விட்டாயோ?’ என்று முதுகை தடவி விட்டுக் கொண்டிருப்பார். 


இனி அவளுக்குப் பிறவி கிடையாது. இந்த ரஞ்சனியின் நினைவுகளில் மட்டுமே வாழ்ந்திருப்பாள் ரமா. 


2 கருத்துகள்:

  1. அன்பு ரஞ்சனி. பெருமாள் தனக்குப் பிடித்தவர்களைத்தான் மிகவும் சோதிப்பாராம்.
    இந்த நோய் வந்தவருக்கு இன்னும் என்ன சோதனை.
    பார்த்தவர்களுக்கு இன்னும் அதிக துன்பம்.

    மெர்சி டெத் இருக்கணும். எனக்கு ஏதாவது என்றால் நான் வருந்தவோ மற்றவர்களை வருத்தவோ
    நினைக்கவில்லை. என் ஆசை உடன் மரணம்.
    ரஞ்சனி உங்களுக்கு பகவான் நிம்மதி கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க வல்லிமா!
    அக்காவைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் மனது வலிக்கிறது. காலப்போக்கில் தான் இந்த வலி மாற வேண்டும்.

    உங்களைப் போலத்தான் எல்லோருமே நினைக்கிறோம். நடக்க வேண்டுமே!

    பதிலளிநீக்கு