ஞாயிறு, 17 மார்ச், 2013

ஆலிவ் ஆயில்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். உள்ளத்தில் நல்ல எண்ணம் இருந்தால் அது நம் முகத்தை பொலிவுறச் செய்யும் என்பது பொருள். நமது உள்ளழகு, வெளியழகு இரண்டுக்கும் ஆலிவ் ஆயில் மிகச் சிறந்தது. ஆலிவ் ஆயிலை சமையலுக்குப் பயன்படுத்துவதால் நமது உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்; அழகு சாதனமாக பயன் படுத்துவதால் வெளி உறுப்புக்களும் பொலிவடையும். ஆக, அகத்தின் அழகு, முகத்தின் அழகு இரண்டுக்கும் ஆலிவ் ஆயில் ஏற்றது என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், மருந்து தயாரிப்பிலும், சோப் செய்யவும் இந்த ஆயில் பயன்படுத்தப்படுகிறது. பழங் காலங்களில் விளக்கு ஏற்றவும் இந்த எண்ணையை உபயோகித்தனர்.

ஆலிவ் ஆயிலின் பூர்விகம்:

உலகம் முழுவதும் இந்த ஆயில் பயன்படுத்தப்பட்டாலும், மத்திய தரைக் கடல் நாடுகளிலேயே அதிகம் உபயோகப்படுத்தப் படுகிறது.  அங்கு  அதிகமாகக் காணப்படும் ஆலிவ் மரத்திலிருந்து ஆலிவ் ஆயில் தயாரிக்கப்படுகிறது. கிரேக்க கவி ஹோமர் இந்த எண்ணையை “திரவத் தங்கம்” என்று குறிப்பிடுகிறார். வெறும் சமையல் பொருளாக மட்டுமில்லாமல், இந்த எண்ணெய் மருத்துவ குணமுடையதாகவும் மாய மந்திர சக்தி உடையதாகவும் நம்பப் படுகிறது. விளையாட்டு வீரர்கள் தங்கள் உடம்பில் இந்த எண்ணையை தடவிக் கொள்ளுகிறார்கள்; இந்த எண்ணெய் சக்தியையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் உற்சாக ஊற்றாக கருதப்படுகிறது.

ஆலிவ் மரம்:

பல நூறு ஆண்டுகள் வாழும் இம்மரங்களின் வேர்கள் ஆழமாகவும் பரந்து விரிந்து இருப்பதால் தண்ணீர் குறைந்த இடங்களிலும், கடற் பகுதிகளிலும் (நிலத்தடி நீர் மிகுந்த உப்பு நிறைந்ததாக இருந்தபோதிலும்) செழித்து வளருகின்றன. குளிர் காலத்தில் இலைகளை கத்தரித்து விடுகிறார்கள். இதைத் தவிர வேறு எந்த பராமரிப்பும் இந்த ஆலிவ் மரங்களுக்கு தேவை இல்லை. இலையுதிர் காலத்தில் ஆலிவ் பழங்கள் அறுவடைக்குத் தயாராகின்றன. பழங்களை சேகரிப்பதும், அவற்றிலிருந்து எண்ணெய் எடுப்பதும் மிக எளிய முறையில் செய்யப்படுகிறது.
உலகத்தின் 75 சதவிகித ஆலிவ் ஆயில் தயாரிப்பில் முதல் இடத்தை ஸ்பெயின் நாடும், இரண்டாவது இடத்தை இத்தாலி நாடும், மூன்றாவது இடத்தை கிரீஸ் நாடும் பிடித்திருக்கின்றன. இப்போது ஆஸ்திரேலியாவும் கணிசமான அளவு இந்த ஆயிலை தயாரித்து வருகிறது.

ஆலிவ் ஆயில்:

அதிகக் கொழுப்பு, அதிக கலோரி  இருந்தாலும், இந்த எண்ணெய் உடல் ஆரோக்யத்திற்கு மிக நல்லது. இதை பாதுகாப்பதும் எளிது. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கக் கூடியது.
ஆலிவ் ஆயிலின் MUFA (mono unsaturated fatty acid) கெட்ட கொழுப்புகளையும், டிரைகிளிசரைட்ஸ் (triglycerides) ஆகிய வகைகளையும் குறைக்கவல்லது . உயர் இரத்த அழுத்தம், இதய நோய் முதலியவற்றைக் கட்டுப்படுத்த இந்த ஆயில் உதவுகிறது.

1. ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கும், கேசத்திற்கும்  போஷாக்குஅளிக்கிறது.
2. ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த அளவில் போலிக் ஆசிட் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப்  புற்றுநோய்
இருப்பவர்களுக்கு மருந்தாகவும்  உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
3. ஆலிவ் ஆயிலில் இருக்கும் திறன் வாய்ந்த  வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டேன் மேலும் சில ஆன்டி ஆக்சிடேன்ஸ் கேன்சர் வரமல் தடுக்க உதவுகிறது.
4. சர்க்கரை நோயைக் கட்டுப்பத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும் கட்டுப்பத்துகிறது.

ஆலிவ் ஆயிலின் வகைகள்:

எக்ஸ்ட்ரா விர்ஜின்: (extra virgin): அதிகப் பக்குவப்படுத்தப் படாத, (சூடாக்காமல், அமிலங்கள் கலக்காமல்) முதல் தடவை பிழிந்தவுடன் கிடைக்கும்  எண்ணெய். சுத்தமான, இயற்கையான ஆலிவ் வாசனையுடன் இருக்கும் எண்ணெய்.

விர்ஜின்: இரண்டாம் முறை பிழியும்போது கிடைக்கும் எண்ணெய்.

ப்யூர்:  வடிகட்டுதல் மற்றும் சில சுத்திகரிப்புக்கு உட்பட்டது.

எக்ஸ்ட்ரா லைட்: மறுபடி மறுபடி சுத்திகரிக்கப்பட்டும், சிறிது விர்ஜின் ஆயில் சேர்க்கப்பட்டதும் ஆன எண்ணெய் இது. மிக சிறிதளவே ஆலிவ்வின் வாசனை இதில் இருக்கும்.

ஆலிவ் ஆயிலை பாதுகாக்கும் முறைகள்:

அதிக உஷ்ணம், அதிக வெளிச்சம் இரண்டும் இந்த எண்ணைக்கு எதிரிகள். மிக அழகான புட்டிகளில் கிடைப்பதால் மிக கவனத்துடன் பாதுகாப்பது அவசியம். புட்டிகளை அழுத்தி மூடி, அதிக உஷ்ணம், அதிக வெளிச்சம் படாத இடத்தில் வைக்கவும். மற்ற எண்ணெய்களைப் போலவே அதிக சூடு, காற்று இவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆலிவ் ஆயிலும் இந்திய சமையல் முறைகளும்:

ஆலிவ் ஆயில் நம் சமையலுக்கு ஏற்றதா? இல்லை என்று சொல்லுபவர்கள் கூறும் காரணங்கள்:
ஆலிவ் ஆயிலின் வாசனை நமக்குப் பிடிக்காத ஒன்று.
நாம் சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் முதலில் அதை சூடாக்கிவிட்டுத்தான் பயன்படுத்துவோம். சில சமயங்களில் பச்சை எண்ணையை (இட்லிக்கு மிளகாய் பொடியும், நல்லெண்ணையும்) உபயோகிக்கிறோம். எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை பச்சையாக பயன்படுத்துவது சிறிது கஷ்டம்.

இந்த எண்ணையில் சமைத்த பொருட்களை சாப்பிட்டவுடன் வயிறு பாரமாக இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

இத்தகைய எண்ணங்கள் காரணமாக போமஸ் (pomace) என்ற வகை ஆலிவ் ஆயிலை இந்தியச் சந்தையில் விற்கிறார்கள். இது சுத்தமான ஆலிவ் ஆயில் அல்ல. எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை எடுத்தபின் இருக்கும் கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையை சுத்தம் செய்து சாப்பிடும் தரத்தில் தயாரித்து போமஸ் என்று விற்கிறார்கள். இந்த எண்ணையை நாம் இப்போது பயன்படுத்தும் மற்ற எண்ணெய்களைப் போலவே உபயோகிக்கலாம். 

ஆலிவ் ஆயிலை காய் கறிக் கலவை (vegetable salad) மற்றும் உணவு சமைத்தபின் அதை பரிமாறுவதற்கு முன் அதன் மேல் dressing செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதால் இந்திய சமையல் முறையே மிக ஆரோக்கியமானதாகிவிட்டது என்றும் சொல்லலாம்.

‘Eat locally, think globally’ என்ற கொள்கை உடையவர்கள் நம்மூர் சூரிய காந்தி எண்ணையையே உபயோகிக்க விரும்புகிறார்கள்.10 கருத்துகள்:

 1. அந்த பகிர்வில் பயன்கள், இதில் விரிவான விளக்கங்கள்... அருமை...

  பயன்படுத்தாதவர்கள் சொன்ன காரணங்கள் உண்மை...

  நன்றி அம்மா...

  பதிலளிநீக்கு
 2. நல்ல பயனுள்ள பகிர்வு.
  ஆலிவ் ஆயிலின் பூர்விகம் அறிந்து கொண்டேன்.
  நன்றி இப்போது கொஞ்சநாட்களாய் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரி!
  உங்கள் பக்கத்தைத் தேடி ஒருவாறு இன்று வந்துவிட்டேன்.
  முதற்கண் அங்கு சுப்புத்தாத்தாவின் பக்கத்தில் எனதுகவிக்கு அவர் பாடிய பாடலை ரசித்து கருத்துரை பகிர்ந்திருந்தீர்கள். கூடவே கவி எழுதிய என்னையும் பாராடியமைக்கு மனமார்ந்த என் நன்றிகள்! நான் ஒன்றும் பெரிய கவிஞி இல்லை...:) இப்பதான் கவிமொழியில் எழுத்துக்கூட்டிப் படிக்கின்றேன்...

  இங்கு நீங்கள் தந்திருக்கும் பதிவும் மிக அவசியமான தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. இங்கு நாம் சாப்பாடுடன் முடிந்தவரை ஆலிவ் எண்னையைத்தான் உபயோகிக்கின்றோம். இட்லி தோசைப் பொடிக்கும். நல்ல தரமான ஆயில் விலை அதிகமானாலும் ருசி அபாரம்.
  நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்!
  இங்கு நான் எப்படி ஃபோலோவராகச் சேர்வது... எனக்குப் புரியவில்லை. தெளிவு படுத்துங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் இளமதி!

   இன்றுதான் உங்களைப் பற்றி வலைச்சரத்தில் வாசித்தேன்.
   ப்ரான்ஸ் நாட்டிலிருந்து திருவரங்கத்திற்கு வந்திருக்கும் இளைய நிலாவுக்கு நல்வரவு!

   சுப்பு தாத்தாவின் பக்கத்தில் உங்கள் கவிதையும் அதை அவர் மனமுருகி பாடியிருக்கும் விதமும் ரொம்பவும் பிடித்துப் போயிற்று. நான் அவரது விசிறி. அங்கு உங்களையும் சந்திக்க முடிந்தது சந்தோஷம்.

   google+ follower ஆக சேரலாம். இல்லையென்றால் உங்கள் இமெயில் ஐடி யை இந்தப் பதிவின் இடது ஓரத்தில் கடியாரத்திற்கு கீழ் இருக்கும் இடத்தில் பதியலாம்.
   நான் இங்கு எழுதியவுடன் உங்களுக்கு இமெயில் கிடைக்கும்.

   எனக்கு கவிதை எழுதுபவர்களைப் பார்த்தால் மிகுந்த மரியாதை. எனக்கு கவிதை எழுத வராது அதனால்!
   நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து எல்லாவகையிலும் சிறந்து வாழ எனது வாழ்த்துகள்!

   என்னுடைய முக்கிய வலைத்தளம் http://wp.me/p244Wx-sZ. முடிந்தால் வருகை தரவும்.

   வருகைக்கு நன்றி சகோதரி!

   நீக்கு
  2. அக்கா... வரவேற்புக்கு நன்றி!
   நீங்கள் கூறியவாறே எனது மின்மடல் முகவரி கொடுத்துவிட்டேன். மிக்க நன்றி.
   நான் ஜேர்மனி நாட்டில் வாழ்பவள். உங்கள் வயதிற்கு எனக்கு எதுக்கு அக்கா மரியாதை எல்லாம். நானும் மிகமிக சாதாரணமானவள்தான்.
   முடிந்தால் எனது வலைக்கும் வாருங்கள். மகிழ்ச்சியாயிருக்கும் எனக்கும். மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஆலிவ் ஆயில் பற்றி எழுதவேண்டுமென நினைத்திருந்தேன். நீங்கள் விபரமாக தந்துள்ளீர்கள். நல்லபகிர்வு.

  சலட்ஸ், வெயிட்டபிள் சொப்ஸி வகைகளுக்கு பயன்படுத்துவேன்.

  பதிலளிநீக்கு
 5. சுத்தமான ஆலிவ் ஆயில் எங்கே கிடைக்கும்

  பதிலளிநீக்கு