செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

எடைக் குறைப்பும் தூக்கமும்:



"மத்தியானத் தூக்கம் உடல் எடையை அதிகரிக்கும்."

"தூங்கித் தூங்கியே குண்டாகி விட்டாள் அல்லது விட்டான்."

"அதிகத் தூக்கம் நல்லதல்ல"

பலமுறை இப்படி பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தூக்கத்திற்கும் நம்முடைய உடல் எடைக்கும் கட்டாயம் சம்பந்தம் இருக்கிறது.

தூக்கம் சரியானபடி இருந்தால் உடல் இளைக்கலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

பத்திரிக்கைகளிலும், இணைய தளத்திலும் ஒரே வாரத்தில் 5 கிலோ குறைப்பது எப்படி என்பதில் இருந்து பல பல டிப்ஸ். பல பல வகையான டயட் குறிப்புக்கள்உடம்பு இளைக்கவேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்கிறார்கள் சிலர். சில மாதங்களுக்கு ஜிம், சில மாதங்களுக்கு யோகா என்று மாற்றி மாற்றி உடம்பை வருத்திக் கொண்டாலும் உடம்பு என்ன வோ இளைப்பதில்லை.   

குண்டாக(fat )  இருந்தாலோ, அதிக எடை (over weight)  யுடன் இருந்தாலோ அல்லது அதிக பருமனாக (obese) இருந்தாலோ அது ஆரோக்கியக் கேடு இல்லை, அதுவே பல வியாதிகளுக்கு காரணம் ஆகலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் எல்லோருமே இளைக்கத்தான் விரும்புகிறார்கள். அட் லீஸ்ட் இளைக்க முயற்சிக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வின்படி தூக்கமின்மை ஒருவரது வளர் சிதை மாற்றத்தை (metabolism ) மெத்தனப் படுத்தி அதன் காரணமாக உடல் இளைப்பை தடைப் படுத்தும் என்று தெரிய வந்திருக்கிறது. 

இது எப்படி என்று பார்க்கலாம்.

அறிவியலாளர்களின் கூற்றுப் படி இரண்டு வளரூக்கிகள் (hormones) - ஒன்று க்ரேலின் (ghrelin) இன்னொன்று லெப்டின் (leptin) - நமது தூக்கமின்மையால் பாதிக்கப் படுகின்றன. க்ரேலின் நமது பசிக்கும், லெப்டின் சாப்பிட்டு முடித்தவுடன் வயிறு நிரம்பிய உணர்வுக்கும் காரணங்கள்.  

போதுமான தூக்கம் இல்லாமையால் க்ரேலின் அளவு அதிகரிக்கிறது. லெப்டின் அளவு குறைகிறது. இதனால் இரண்டு வகைத் துன்பங்கள்: ஒரு பக்கம் பசியோ பசி; எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தீராத அவா; இன்னொரு பக்கமோ,
எத்தனை சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்ச்சியே இருப்பதில்லை.

இந்தப் போராட்டத்தில் மூன்றாவது நபர் கார்டிசால் (cortisol) என்கிற வளரூக்கி. மன அழுத்தம், தூக்கமின்மை இவற்றால் கார்டிசால் அதிகமாக சுரக்கிறது. இதனால் பசியும், எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்  என்கிற  (cravings) நிலையும் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல; நமது உடலில் இருக்கும் கொழுப்புடன் இந்த கார்டிசாலுக்குத் தொடர்பு இருப்பதால், உடலில் வேண்டாத கொழுப்பு தொப்பையாக உரு மாறுகிறது.

ஆக, ஒருவருக்கு ஒரு நாளைக்கு எத்தனை தூக்கம் தேவை? எத்தனை தூக்கம் போதுமானது?
நமது வளரூக்கிகளை (hormones) சரியான நிலையில் சுரக்க - அதாவது அதிகமாகவோ, குறைச்சலாகவோ இல்லாமல்-  சுரக்க 7 லிருந்து 9 மணி நேரத் தூக்கம் ஒவ்வொரு இரவும்  தேவை.

நீங்கள் சரியாகத் தூங்குகிறீர்களா என்பதைக் கண்டு பிடிக்க கீழ் கண்ட கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
  1. தூங்க ஆரம்பிப்பதற்கே கஷ்டப் படுகிறீர்களா?
  2. தூக்கத்தில் அடிக்கடி விழித்துக்    கொள்ளுகிறீர்களா?
  3. காலையில் சீக்கிரம் தூக்கம் கலைந்து போய், மறுபடி தூங்க முடியவில்லையா?
  4. தூங்கி எழுந்திருக்கும் போது களைப்பாக இருக்கிறதா?
மேற் கண்ட கேள்விகளில் ஒரு கேள்விக்கேனும் உங்கள் பதில் ஆமாம் என்றால், உங்களுக்கு, உங்களது தூக்கம் பற்றிய விழிப்புணர்வு உடனடியாகத் தேவை. சரியான தூக்கம் இல்லாததே உங்கள் எடை கூடுவதற்கும் காரணம்.

நன்றாகத் தூங்குவதற்கு என்ன செய்யலாம்?
  • தூங்கப் போவதற்கு முன்பு காபி, தேநீர் முதலிய ௧ஃபைன் (caffeine-rich) அதிகம் உள்ள பானங்களை அருந்த வேண்டாம். பதப்படுத்தப் பட்ட, கார்பநேடேட் குளிர் பானங்கள் அனைத்திலும் இந்தக் ௧ஃபைன் உள்ளது. மிதமான சூட்டில் ஒரு கோப்பை பால் அருந்துவது தூக்கத்தை வரவழைக்கும்.
  • ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்கு படுக்கச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருங்கள். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் இதைக் கடைப்பிடியுங்கள்.
  • படுத்த பத்து நிமிடத்தில் தூங்கி, அலாரம் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
  • நம்மில் பலர் தூங்குவதற்கு முன்பு டீ.வி. பார்க்கிறோம். சொல்லப் போனால் இது நல்லதல்ல. பலர் நினைப்பது போல தொலைக் காட்சி நம் களைப்பைப் போக்குவது இல்லை; மாறாக மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. உடல் அசதி போக, உடலை தளரச் செய்ய தூங்குவதற்கு முன் குட்டி குளியல் போடுவது சாலச் சிறந்தது.
  • படுக்கை அறையில் கைபேசி, இரவிலும் மணி காட்டும் கடியாரங்கள் தேவை இல்லை. இவை உங்கள் தூக்கத்திற்கு எதிரி. படுக்கை அறை முற்றிலும் இருட்டாக இருக்கட்டும். இருட்டு நம் உடலுக்கு நன்மை தரக் கூடிய மெலடோனின் என்கிற வளரூக்கியை நன்றாக சுரக்க செய்கிறது.
  • கோபத்துடன் தூங்கப் போகாதீர்கள். மனதில் சமாதானத்துடனும் அமைதியுடனும் தூங்க செல்வது, உங்கள் உடலையும் மனத்தையும் முழுமையாக தளரச் செய்து நல்ல தூக்கத்தை உங்களுக்குக் கொடுக்கும்.
ஆகவே நண்பர்களே, நன்றாகத் தூங்கி  நம் உடலை இளைக்கச் செய்வோமா?


published in a2ztamilnadunews.com மீள்பதிவு 

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

வயது முதிர்ந்தவர்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்



ஆரோக்கியம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும், வயது ஏற ஏற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கலாம்.

  • தொலைபேசியில் பேசும்போது இடது காதில் ரிசீவரை வைத்துக் கொண்டு பேசவும்.
  • இரண்டு வேளை காப்பி அருந்த வேண்டாம்.
  • குளிர்ந்த தண்ணீரில் (ப்ரிட்ஜ் தண்ணீர்) மாத்திரைகளை சாப்பிடாதீர்கள்.
  • மாலை 5 மணிக்கு மேல் கனமான  ஆகாரம் வேண்டாம்.
  • எண்ணெய் பதார்த்தங்களை கூடுமானவரையில் தவிர்க்கவும்.
  • காலை வேளைகளில் நீர் அதிகம் அருந்தவும். இரவு வேளைகளில் குறைவாக குடியுங்கள்.
  • ஹெட் போன், இயர் போன் அதிக நேரம் பயன் படுத்த வேண்டாம்.
  • இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை தூங்குவதை பழக்கப் படுத்திக் கொள்ளவும்.
  • மருந்து சாப்பிட்டவுடன் படுக்க வேண்டாம்.
  • கைபேசி சார்ஜ் ஆகும்போது அருகில் செல்ல வேண்டாம். பாட்டரி மிகவும் குறைந்து - அதாவது கடைசிக் கோட்டில் இருக்கும்போது பேச வேண்டாம். ஏனெனில், கைபேசியிலிருந்து வரும் கதிர் வீச்சு 100 மடங்கு அதிகம் இருக்கும். சார்ஜ் செய்யும்போது கைபேசியை பயன்படுத்த வேண்டாம்.

உடல் ஆரோக்கியத்திற்கான ஜூஸ்கள் :
  • காரட் + இஞ்சி +  ஆப்பிள் = நமது உடல் உறுப்புகளை சுத்தம் செய்து வலுப் பெறச் செய்கிறது.
  • ஆப்பிள் + வெள்ளரிக் காய் + செலெரி கீரை = கான்சர் வருவதை தடுக்கிறது; வயிறு கெடாமல் இருக்கவும்  தலை வலி வாராமல் பாதுகாக்கவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் நல்லது.
  • தக்காளி + காரட் + ஆப்பிள் = சருமப் பாதுகாப்பிற்கும், வாய் துர்நாற்றத்தை தடுக்கவும் நல்லது.
  • பாகற்காய் + ஆப்பிள் + பால் = உடம்பின் உள்சூட்டைக் குறைக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
  • ஆரஞ்சு + இஞ்சி + வெள்ளரிக் காய் = சருமம் உலராமலும் வறண்டு போகாமலும் காக்கிறது.
  • அ ன்னாசி + ஆப்பிள் + தர்பூசணி = உடலில் சேரும் அதிகப்படி உப்பை நீக்கி சிறுநீரகத்தைக் காக்கிறது.
  • ஆப்பிள் + வெள்ளைக் காய் + கிவி பழம் = சருமத்தைக் காக்கிறது.
  • பேரிப்பழம் + வாழைப் பழம் = இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப் படுத்துகிறது.
  • காரட் + ஆப்பிள் + பேரி + மாம்பழம் = உடல் உஷ்ணத்தை குறைக்கிறது; உடலின் நச்சுத் தன்மையை போக்குகிறது; இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • தேன் + திராட்சை + தர்பூசணி + பால் = வைட்டமின் C + B2 இவற்றில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது.
  • பப்பாளி + அன்னாசி + பால் = விட்டமின்கள் C, E, மற்றும் இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால் சருமப் பளபளப்புக்கும் உடலின் வளர் சிதை மாற்றத்திற்கும் உதவும்.
  • வாழைப் பழம் + அன்னாசி + பால் = உடலுக்குத் தேவையான போஷாக்கைக் கொடுக்கின்றன. மலச் சிக்கல் வராமல் பாது காக்கும்.
இந்த ஜூஸ் வகைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடவும்.

பொதுவான குறிப்புகள்:

காலை வேளைகளில் தவறாமல் வாக்கிங் போவது உடலை நாள் முழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

வேளை தவறாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிடவும். மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எப்போதும் கைவசம் மருந்து மாத்திரைகளை வைத்திருங்கள். மருத்துவரின் அனுமதி இல்லாமல் நீங்களாகவே ஒருபோதும் மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்.

வெளியில் போகும்போது எங்கு போகிறீர்கள், எப்போது வருவீர்கள் என்று சொல்லிவிட்டுப் போகவும். கைபேசியை நினைவாக எடுத்துப் போகவும். போக வேண்டிய இடத்திற்குப் போனபின் பத்திரமாக போய் சேர்ந்ததை உங்கள் வீட்டிற்குத் தெரியப் படுத்துங்கள். அதேபோல உங்கள் வீட்டிற்குத் திரும்பியபின், நண்பருக்கோ, உறவினருக்கோ வீட்டிற்கு வந்து சேர்ந்த விவரத்தை சொல்லுங்கள். இந்தப் பழக்கம் பல அனாவசிய பயங்களைப் போக்கும்.

உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு மிகவும் அவசியம். டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு படிப்பது, வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுக்களை விளையாடுவது,  குறுக்கெழுத்துப் போட்டி, கதை எழுதுவது, பேரன் பேத்திகளுடன் விளையாடுவது என்று சந்தோஷமாக பொழுதைக் கழியுங்கள்.

நண்பர்களுடன் வெளியில் போவது, குடும்பத்துடன் மாதம் ஒரு நாள் வெளியில் சாப்பிடப் போவது இவையெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

வீட்டில் சின்னச் சின்ன வேலைகளை செய்து தரலாம். சிறு வயதில் கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தும் முடியாமல் போனவற்றை இப்போது மனமும் ஆரோக்கியமும் இருந்தால் கற்றுக் கொள்ளலாம். சுற்றலாத் தளங்களுக்கோ, கோவில்களுக்கோ போய் வரலாம்.

மனதை அமைதியாக வைத்திருக்கப் பழகுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கும் மன அமைதியைக் கொடுக்கும். அலுவலகத்திற்கு போனபோது இருந்தது போல வாழ்க்கை இப்போது இருக்காது. மாற்றத்திற்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகள் விளையாடும் போது ரசிக்க உங்களுக்கு நேரம் இருந்திருக்காது. இப்போது பேரக் குழந்தைகளின் விளையாட்டை ரசியுங்கள். அவர்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுங்கள்; கதை சொல்லுங்கள். ஒய்வு பெற்றபின் வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். வீட்டில் பெரியவர்கள் இருப்பது ஒரு பெரிய பாக்கியம். பெரியவர்கள் ஆரோக்கியமாகவும் இருந்து விட்டால் குடும்பத்தில் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.


உங்கள் எலும்புகளின் வயது என்ன?

சனி, 9 பிப்ரவரி, 2013

காதலர் தினம்




காதல் என்பது இரு நெஞ்சங்கள் அன்பால் இணைந்து, அன்பைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு உணர்வு. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் என்பது இதன் முக்கிய அங்கம். ஒருவரையொருவர் அப்படியே குறை நிறைகளுடன் ஏற்றுக் கொள்ளுதல் அடுத்த கட்டம். குறைகளை தன் மனம் கவர்ந்தவளுக்காக அல்லது ‘வனுக்காக’ மாற்றிக் கொள்ள முயலலாம். அல்லது நிறைவை நிறைவாக நினைத்துக் குறைகளை மன்னிக்கவும் மறக்கவும் செய்யலாம். ஏதானாலும் உனக்காக நான், எனக்காக நீ, என்று வாழ்வாங்கு வாழலாம்.


நம் இதிகாச புராணங்கள் பல காதல் கதைகளைச் சொல்லுகின்றன. ஸ்ரீ ராமாயணத்தில் பட்டாபிஷேக காட்சி. பட்டாபிஷேகம் நல்லபடியாக நடந்தேறியது. எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்தாகிவிட்டது; அனுமனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று சீதைக்கு அவா. இராமபிரானைப் பற்றிய செய்தி கொண்டு வந்து சீதையின் ஆருயிர் காத்த உத்தமன் அல்லவா அனுமன்? சிந்தனை வயப்பட்டவளாய் இராமனைப் பார்க்கிறாள் சீதை; இராமனும் கண்களாலேயே உத்திரவு கொடுக்கிறான். தன் கழுத்தில் இருந்த மணி மாலையைக்  கழற்றி அனுமனின் கையில் கொடுக்கிறாள் சீதை. பார்வையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம் இராமனுக்கும் சீதைக்கும் இருந்தது.

மலரின் மணம் போல, தேனின் சுவை போல இருக்க வேண்டும் காதல். ஆனால் இப்போது நாம் கேள்விப் படும் காதல் என்பதன் பொருளே வேறு மாதிரி ஆகிவிட்டது. இந்த நாளைப் பற்றி நினைக்கும்போது எனக்கு மறைந்த நடிகர் சந்திர பாபுவின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
“காதல் என்பது எதுவரை? கல்யாணக் காலம் வரும்வரை...”

அவர் காலத்திலேயே இப்படி என்றால் இப்போது கேட்கவே வேண்டாம்!

“ஏங்க, காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை முதலிய படங்களை நீங்கள் பார்த்ததில்லையா?” என்று கேட்கிறீர்களா? அந்தப் படங்கள் என்னவோ வெற்றிப் படங்கள் தான்; மக்களும் கூட்டம்கூட்டமாக போய்ப் பார்த்தார்கள்; ஆனால் இப்படங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எத்தனை பேர் பின்பற்றினார்கள்?

காதல், காதல், காதல், காதல் இல்லையேல், சாதல் என்றார் பாரதியார்.

மனிதனின் வாழ்வில் காதல் என்னும் அன்பு இல்லை என்றால் அவனது வாழ்வு அர்த்தம் இல்லாதது; கிட்டத்தட்ட உயிரில்லாதவனைப் போன்றவன் அவன் என்று இதற்கு நாம் பொருள் கொள்ளவேண்டும். 

ஆனால் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் காதலிப்பதும் காதலில் தோல்வி என்றாலோ  அல்லது பெற்றோர்கள் இதுபற்றி தெரிந்து கோபித்துக் கொண்டாலோ உடனே தூக்கில் தொங்குவதும், விஷம் குடித்து உயிரை விடுவதும்.... காதலைப் பற்றிய எண்ணமே மாறிவிடுகிறது, இல்லையா?

சரி இப்போது ஒரு கதை.. 

காதல் கதைதாங்க! ஒரு இணைய தளத்தில்     (பி)படித்தது.


வெகு காலத்திற்கு முன், மகத தேசத்தில் அகல்யா என்றொரு அழகான பெண் இருந்தாள். அரசனுக்கு அவள் மேல் ஆசை. ஆனால் அவளுக்கோ இந்திரன் என்கிற இளைஞன் மேல் ஆசை; அவனுக்கும் அப்படியே. எத்தனையோ ரகசியாமாக வைத்திருந்தும் ஒரு நாள் அரசனுக்கு அவர்களின் காதல் தெரிந்து விடுகிறது. தனக்கு அகல்யா கிடைக்காத கோபத்தை அவர்கள் இருவரையும் தண்டிப்பதில் தீர்த்துக் கொண்டான்.

முதலில் அவர்கள் இருவரையும் பனிக் காலத்தில் எலும்புகளை உறைய வைக்கும் நீரில் தள்ளினான். காதலில் மூழ்கி இருந்த அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“நீ எத்தனை கடுமையாக தண்டித்தாலும், நாங்கள் எங்களைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருப்பதால், உடல் துன்பம் பெரிதாகத் தெரியவில்லை”. என்றனர்.

கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் இருவரையும் போட்டான்; “எங்களைப் பற்றிய தியானத்தில் ஆழ்ந்து விட்டோம்; வலியை உணரவில்லை” என்றனர்.

யானையின் கால்களில் இருவரையும் கட்டி யானையை ஓட விட்டான். “இருவருக்கும் இடையே இருக்கும் ஈர்ப்பு, எல்லையில்லா ஆனந்தத்தை தருகிறது; உடல் துன்பம் பெரிதல்ல” என்றனர்.


சாட்டையால் அடித்தும் இரும்புக் கம்பிகளால் உடல் முழுவதும் துளைத்தும் இன்னும் எப்படி எப்படியோ துன்புறுத்தியும், அரசன் தான் அசந்து போனானே ஒழிய இளம் காதலர்கள் அயரவே இல்லை. 

“நீ கொடுத்த தண்டனை எல்லாம் எங்கள் உடலைத்தான் பதம் பார்த்தன; எங்கள் காதலை அல்ல” என்று சொன்னார்கள்.

வேறு வழி தெரியாத அரசன் பரத முனிவரிடம் அந்தக் காதலர்களை அவரது சாபத்தால் அழியும்படி செய்தான். உடல்கள் தான் அழிந்ததே தவிர உள்ளமோ, ஆத்மாவோ அல்ல.

அகல்யாவும், இந்திரனும் முதலில் பின்னிப்பிணைந்த புழுக்களாக பிறந்தனர். பின்பு முத்தமிடும் மீன்களாகப் பிறவி எடுத்தனர். அடுத்து ஜோடிப் புறாக்களாக பிறந்து, வான் வெளியில் ஆனந்தமாய் பறந்து திரிந்தனர். அடுத்த பிறவியில் ஜோடி மான்களாய் பச்சைப் புல்வெளியில் பாடித் திரிந்தனர்.

கடைசியில் ஆணும் பெண்ணுமாய் இந்த பூவுலகில் வந்து பிறந்தனர்.

கதையின் நீதி என்ன?
மனம் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம்; உடல் அதன் வெளிப்பாடு; அவ்வளவு தான். இரண்டு மனங்கள் இணைந்துவிட்டால் யாராலும், மரணத்தாலும் கூட அவற்றை பிரிக்க முடியாது.

இரண்டு தனிநபர்கள் மனத்தால் இணைந்து இத்தனை துன்பங்களை தாங்கிக் கொள்ளமுடியும் என்றால், ஒரு நிமிடம் யோசியுங்கள் நீங்கள் உங்கள் மனத்தைக் கடவுளிடம் இணைத்து விட்டால் என்னதான் நடக்காது?

இப்படி ஒரு க்ளைமேக்ஸ் உடன் முடிகிறது இந்தக் காதல் கதை!

இந்தக் கதையில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்கிறீர்களா?
நீங்கள் என்ன புரிந்து கொள்ளுகிறீர்களோ, அது உங்கள் பாடு.... நான் எஸ்கேப்!

எனது இரண்டாவது எண்ணம் தளத்தில் காதல் கதை - 1

a2ztamilnadu.com  வலைதளத்தில் போன வருடம் நான் எழுதி வெளியான கட்டுரை இது.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

இந்தியனாக இருப்போம்!




இந்தியாவில் பிறந்த பின் இந்தியனாக இல்லாமல் வேறு எப்படி இருக்கமுடியும்? நான் இந்தியன்தான் என்கிறீர்களா? உண்மைதான். இந்தியாவில் பிறந்ததால் இந்தியனாக இருக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு நம் நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரியும்? பண வீக்கம் பற்றி தெரியுமா? பணம் எப்படி வீங்கும் என்று அப்பாவித் தனமாக கேட்கும் இந்தியர்களே அதிகம்.

பண வீக்கம் என்றால் என்ன?
உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது. அதில் நீங்கள் வாங்கும் பொருளின் மதிப்பு 80 ரூபாய் என்றால், அதாவது 100 ரூபாயின் மதிப்பு உண்மையில் 80 ரூபாய் என்பதுதான் பணவீக்கம் என்று சொல்லப்படுகிறது. இன்னும் சுலபமாகப் புரிய வேண்டுமானால் ஒரு காலத்தில் 100 ரூபாயில் நீங்கள் வாங்கிய பொருட்களை இப்போது அதே விலையில் வாங்க முடியாது. 50 வருடங்களுக்கு முன் தங்கம் ஒரு பவுன் 100 ரூபாய். இப்போது? பொருட்களின் விலை ஏறுவதும் பண வீக்கத்தின் அறிகுறிதான்.

ஒரு நாட்டின் நிஜமான சுதந்திரம் என்பது அரசியல் ரீதியான சுதந்திரம் அல்ல. பொருளாதார முன்னேற்றம் தான் மிக மிக அவசியம்.

ஒரு வருடத்திற்கு முன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாய் 39தான். இன்றைய மதிப்பு ரூபாய் 52 – 15. அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்கள் தாங்கள் சம்பளமாக வாங்கும் டாலரை 52 . 15 ஆல் பெருக்கிப் பார்த்து சந்தோஷப்படலாம். ஆனால்,இந்த புள்ளி விவரம் எதைக் காட்டுகிறது? நம் நாட்டின் பொருளாதாரம் சரிகிறது என்பதைத்தான். பல ஆசிய நாடுகளைப் போல நம் நாடும் ஒரு பொருளாதார நெருக்கடியை நோக்கிப் போய்கொண்டிருக்கிறது. நாம் உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால் இந்தப் பொருளாதாரச் சரிவை நேர் செய்ய முடியாது.
வெளி நாட்டில் தயாராகும் சோப்புகள், அழகு சாதனப் பொருட்கள், குளிர் பானங்கள், தின்பண்டங்கள், போன்றவற்றை நாம் பயன்படுத்துவதால் சுமார் 30,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி நம் நாட்டிலிருந்து அயல் நாடுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

மிகக் குறைந்த விலையில் தயாராகும் இப்பொருட்கள் நம் நாட்டில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் வரும் லாபத்தில் பெரும் பங்கு வெளிநாட்டிற்கு போகிறது. இதனால் நம் பொருளாதாரம் வற்றி விடுகிறது.

ஏன் வெளி நாட்டுக் கம்பனிகள் இந்தியாவில் தாங்கள் கடையை விரிக்கிறார்கள்? நம் நாட்டில் முதலீடு செய்வது அவர்களுக்கு லாபகரமானது. குறைந்த சம்பளத்திற்கு, நிறைய நேரம் உழைக்கத் தயாராக இருக்கும் தொழிலாளிகள், அரசாங்கத்தால் கிடைக்கும் பல விதமான உதவிகள் இவற்றால் அவர்களது நாட்டில் செய்யப்படும் முதலீட்டை விட இங்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைப் பார்க்கலாம்.

இப்படிச் சொல்லுவதால், அந்நிய முதலீடு நம் நாட்டிற்கு வேண்டாம் என்றோ, வெளி நாட்டுப் பொருட்கள் நமக்கு வேண்டாம் என்றோ அர்த்தம் இல்லை. கட்டாயம் நமக்கு வெளிநாட்டு முதலீடு தேவை. அக்கம்பனிகளால் நமக்கு தொழில், வேலை வாய்ப்பு பெருகுகிறதே, அதனால் அயல் நாட்டு முதலீடு வேண்டாம் என்று சொல்லுவது தவறு. இந்த கம்பனிகள் நம் நாட்டில் இருக்கும் பொருட்களையும் தொழிலாளர்களையும் வைத்துக் கொண்டு தயார் செய்யும் பொருட்களை மற்ற வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால், நமக்கு அந்நிய செலாவணி கிடைக்கும். நம் நாட்டில் நம் ஆட்களை கொண்டு தயார் செய்த பொருட்களை நமக்கே அதிக விலையில் விற்கும் போதுதான் வருத்தம் ஏற்படுகிறது. 6 ரூபாயில் தயாரிக்கப்படும் குளிர் பானம் 30 ரூபாய்க்கு விற்கப்படும் பொது எத்தனை லாபம் தயாரிப்பவர்களுக்கு!

இவர்களால் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப் படும் இந்த குளிர் பானங்கள் பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும் கிடைக்கின்றன. இவர்களால் ஏற்படும் வியாபாரப் போட்டியை சமாளிக்க முடியாமல் உள்நாட்டு குளிர் பானங்கள் தயாரிப்புக் கம்பனிகள் பல மூடப்பட்டு விட்டன.

நம்மைப் போன்ற சாதாரணக் குடிமக்கள் என்ன செய்யமுடியும் என்று தோன்றுகிறதா? நிறையவே செய்யமுடியும்.

நம் நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்க வேண்டும். குளிர் பானங்களிலிருந்து ஆரம்பித்து அழகு சாதனங்கள், கைபேசி வரை, ஷேவிங் கிரீமிலிருந்து குளியல் சோப் வரை, குழந்தைகளின் உணவுப் பொருட்கள், பவுடர்கள், நாப்கின்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
நம் உணவு வகைகளான இட்லி, தோசை, வடை ஆகியவற்றை சாப்பிடலாம். இந்தியர்களில் 5 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது; 4 பேர்களில் ஒருவர் கூடுதலான எடையுடன் இருக்கிறார் என்றும் சில நாட்களுக்கு முன் செய்தித் தாள்களில் வந்திருந்தது. இதற்கான காரணம் நமக்குப் பழக்கமில்லாத உணவுவகைகளை உண்ணத் தொடங்கியதுதான். சுமார் 10 – 15 வருடங்களாகவே வெளியில் சாப்பிடும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக வரும் இந்த நோய்களை life style diseases என்கிறார்கள். நம் தாத்தாக்கள், பாட்டிகள் நம்மை விட ஆரோக்கியமாக இருந்ததற்குக் காரணம் வீட்டில் தயாரிக்கப் பட்ட பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வந்ததுதான்.

இப்படிச் சொல்லுவதால் பிட்சா, பர்கர் சாப்பிடுவதை ஒரேயடியாக விட்டுவிடுங்கள் என்று சொல்லவில்லை. ஒரு அளவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் சாப்பிடுவதும், நம் நாட்டு உணவு வகைகளை சாப்பிடுவதும் நமக்கு மட்டுமல்ல; நம் நாட்டிற்கும் நல்லது. நம் குழந்தைகளுக்கும் நல்ல உணவுப் பழக்கங்களை சொல்லிக் கொடுப்போம்.

‘சிறு துளி பெரு வெள்ளம்’ – இல்லையா? நாம் எடுக்கும் சிறு சிறு முயற்சியும் நம் நாட்டைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுவோம். எத்தனையோ இந்தியர்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடு பட்டனர். சுதந்திர இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தைக் காப்பது நம் கையில். காப்பாற்றுவோமா?