ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

‘இரண்டு சொட்டு மசி கொடு....!’



எமக்குத் தொழில் அசைபோடுதல் 15


 

பள்ளிக்கூடம் திறந்து ஒருவாரம் கழித்து வந்தாள் செங்கமலம். வந்தவுடனேயே நேராக என்னிடத்தில் வந்தாள். சரி, இவளும் என்னைப்பார்த்து அதே கேள்வி கேட்கப்போகிறாள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவள் ஒன்றும் கேட்காமல் என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். எனக்கு தைரியம் சொல்வது போல என்னைப் பார்த்து சிரித்தாள். யாரும் எங்களை அறிமுகம் செய்து வைக்காமலேயே இருவரும் தோழிகள் ஆகிவிட்டோம்.

ஆங்! சொல்ல மறந்துவிட்டேனே! நாங்கள் உட்காரும் விதம் இந்தப் பள்ளியில் வேறு மாதிரி இருந்தது. கனகவல்லி பள்ளியில் தரையில் உட்கார்ந்து கொள்வோம். பள்ளிக்குப் போனவுடன் வரிசையில் உட்காரச் சொல்வார்கள் ஆசிரியைகள் ஆனால் போகப்போக வரிசைகள் கலைந்து ஆளுக்கொரு திசையைப் பார்த்து உட்கார்ந்திருப்போம். யாராவது ஒரு ஆசிரியையின் கண்களில் நாங்கள் இப்படி உட்கார்ந்திருப்பது பட்டால் ஒரு அதட்டல் போடுவார்: ‘ஏன் இப்படி நவகிரகம் போல உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என்று. உடன் மறுபடி வரிசையில் உட்காருவோம்.

இங்கே அரசு நடுநிலைப்பள்ளியில் உட்காருவதற்கென்று ஒரு நீளப்பலகை. அதன் முன் கொஞ்சம் உயரமான நீளமான பெஞ்ச். மூன்று பேர்கள் மட்டுமே உட்கார முடியும் ஒரு வரிசையில். பள்ளி முடிந்தவுடன் பெஞ்ச்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவிடவேண்டும். உட்காரவேண்டிய பலகைகளை சுவற்றில் சாய்த்து நிறுத்திவிட்டுப் போகவேண்டும். பள்ளிமணி அடித்தவுடன் இந்த பெஞ்ச் அடுக்குவதில் போட்டாபோட்டி நடக்கும். ‘எந்திரி! எந்திரி!’ என்று உட்கார்ந்திருப்பவர்களை கிட்டத்தட்டத் தள்ளி விட்டுவிட்டு உட்கார்ந்திருக்கும் பலகைகளை உருவுவார்கள்! அவரவர் பெஞ்சுகளை அவரவர் கொண்டு போய் வைக்கவேண்டும். அதிலும் அடிதடிதான். ‘நேத்திக்கு நீ வரலைன்னு நான் அடுக்கினேன். இன்னிக்கு நீதான் அடுக்கணும்!’ ‘இந்த வாரம் முழுக்க நான் அடுக்குகிறேன். அடுத்தவாரம் நீ அடுக்குவியாம்!’ என்றெல்லாம் வசனங்கள் கேட்கலாம்.

எடுத்த எடுப்பிலேயே நானும் செங்கமலமும் ரொம்ப நாட்கள் பழகியவர்கள் போல பேச ஆரம்பித்துவிட்டோம். செங்கமலம் எல்லோரும் கேட்ட கேள்வியை என்னிடம் கேட்காமலிருந்ததே எனக்கு அவளை ரொம்பவும் பிடித்துப்போகக் காரணம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. அவள் என்னை அந்தக் கேள்வி கேட்காததற்குக் காரணம் அவளும் என் இனத்தைச் சேர்ந்தவள் என்பதே என்று பிற்பாடு தெரியவந்தது. பாடங்கள் படிப்பதில் எல்லா மாணவிகளும் மும்முரம் ஆனதில் அந்தக் கேள்வியும் மறைந்து போனது. நானும் அதிகம் கவலைப்படவில்லை. எல்லோரும் என்னை ஒத்துக் கொண்டு விட்டார்கள் என்றே தோன்றியது.

ஆரம்பப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளிக்கு நான் வந்திருந்தேன். அத்துடன் கூட இன்னொரு மாற்றமும் நடந்தது. அதுவரை பென்சிலில் எழுதிக் கொண்டிருந்த நான் ஆறாம் வகுப்பிலிருந்து பேனாவில் எழுதத் தொடங்கினேன். மை போடவேண்டிய பேனாதான். பால் பாயிண்ட் பேனாக்கள் வராத காலம். புதிய பேனா வாங்கிய நாள் மறக்க முடியாதது. இருப்பதிலேயே மிகவும் மலிவான பேனா வாங்கித் தரப்பட்டது. என் சகோதர சகோதரிகள் உபயோகித்த பேனாக்களை நான் நிராகரித்ததால் இந்த தண்டனை! இரண்டு நாள்கள் நன்றாக எழுதும் அந்த மலிவு விலைப் பேனா. அதன் பிறகு கைகளில் மசி கறை; சில சமயம் பாவாடை சட்டையின் மேல் மசி கறை என்று ஆரம்பிக்கும். சில சமயங்களில் நோட்டுப் புத்தகங்களில் மசி கொட்டும். கொஞ்சம் அழுத்தி எழுதினால் நிப் உடையும். இத்தனை வருடங்கள் பென்சிலில் அழுத்தி எழுதி எழுதி அதேபோல பேனாவையும் அழுத்துவதால் இப்படி ஆகிறது என்று புரிந்துகொள்ளவே பல மாதங்கள் ஆனது.

அடுத்த பிரச்னை: ஒருநாள் முழுவதும் எல்லாப் பாடங்களையும் பேனாவில் எழுதுவதால் மசி தீர்ந்துவிடும் அபாயம். தினமும் மசி போடவேண்டும். மறந்துவிட்டால் பேனா எப்போது வேண்டுமானாலும் நம் கழுத்தை அறுக்கும். சில ஆசிரியைகள் நம் கஷ்டத்தைப் புரிந்து கொள்வார்கள். சிலர் அவர்களுக்கு யார் மேலோ இருக்கும் ஆத்திரத்தை நம் மேல் காண்பித்து தீர்த்துக்கொள்வார்கள்.  சில தோழிகள் உடனே உதவுவார்கள் – அவர்களிடம் இருக்கும் எழுதாத, நிப் உடைந்த பேனாக்களைக் கொடுத்து.

ஆசிரியையிடம் பேனாவில் மசி தீர்ந்து போய்விட்டாலும் திட்டு வாங்காமல் இருப்பது என்பதை நானே கண்டுபிடித்தேன். என்னிடம் தயாராக இருக்கும் பென்சிலை எடுத்து எழுத ஆரம்பித்துவிடுவேன். ஆசிரியை முறைத்தால் ‘டீச்சர்! நாளைக்கு பேனாவில் எழுதிக் கொண்டு வந்து காண்பிக்கிறேன். ப்ராமிஸ்’ என்பேன். அதேபோல அடுத்தநாள் ஆசிரியை மறந்துவிட்டாலும் நானாகவே போய் நோட்டைக் காண்பித்துவிட்டு வருவேன். நான் செய்வதைப் பார்த்துவிட்டு சில தோழிகள் பென்சிலில் எழுத ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் அதிர்ஷ்டம் அடுத்தநாள் ஆசிரியை நினைவாகக் கேட்பார் ‘பேனாவில் எழுதினாயா?’ என்று! எழுதாத சிலர் மாட்டிக் கொண்டனர். அதனால் எனக்கும் தடை போட்டார் ஆசிரியை. பேனாவில் எப்போதுமே மசி இருக்க வேண்டிய கட்டாயம் வந்தது.

ஒருநாள் சமூகப் பாடம் எழுதிக் கொண்டிருக்கும்போது என் பேனா உயிரை விட்டது. அப்போதுதான் செங்கமலம் ஒரு அபாரமான யோசனை சொன்னாள். ‘என் பேனாவிலிருந்து உன் பேனாவிற்கு ரெண்டு, மூணு சொட்டு மசி விடறேன். நாளைக்கு எனக்கு நீ ஞாபகமாக திருப்பிக் கொடுத்துடு’ என்றாள்.

ஆபத்பாந்தவி, அனாதரக்ஷகி என்று அவள் காலில் விழாத குறையாக என் பேனாவைத் திறந்து அவள் விடும் மசியை வாங்கிக் கொண்டேன். அன்றிலிருந்து இப்படி சொட்டுச்சொட்டாக மசி கடன் வாங்கி திருப்பிக் கொடுக்கும் பழக்கம் பெரிய trend ஆகிவிட்டது! செங்கமலம் trend-setter ஆகிவிட்டாள்!


 அதீதம் இணையஇதழில் வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைத் தொடர்





3 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்
    தொடர்கிறேன் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. இங்க் இல்லையென்று கூறி யாரும் எழுதுவதைத் தவிர்ப்பதையோ, ஏமாற்றுவதையோ தடுப்பதற்காக நாங்கள் ஐந்தாம் படித்தபோது பள்ளியாசிரியர் இங்க் மாத்திரை வாங்கி (ஒரு மாத்திரை 2 பைசா, ஒரு முறைக்கு ஐந்து மாத்திரைகள் வாங்கி) இங்க் தயாரித்து வகுப்பிலேயே வைத்திருப்பார். அந்த நாள் எனக்கு இப்போது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  3. அன்றிலிருந்து இப்படி சொட்டுச்சொட்டாக மசி கடன் வாங்கி திருப்பிக் கொடுக்கும் பழக்கம் பெரிய trend ஆகிவிட்டது! செங்கமலம் trend-setter ஆகிவிட்டாள்!//
    நாங்களும் இப்படி வகுப்பில் கொடுக்கும் பழக்கம் உண்டு.

    பதிலளிநீக்கு