எமக்குத் தொழில் அசைபோடுதல் 17
நன்றி: விக்கிபீடியா
இலவச மதிய உணவு திட்டம் போலவே இலவச சீருடையும்
பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் நான் படித்த அரசு
நடுநிலைப்பள்ளியில் நாங்கள் எல்லோருமே கலர் யுனிபார்ம் தான் (அதாவது கலர் டிரஸ்)
போட்டுக்கொண்டுதான் வருவோம். அதுவும் நான் எப்பவும் பட்டுப்பாவாடை தான்! என் அக்கா
அப்போது திருவல்லிக்கேணி NKT பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். அங்கு சீருடை. அதனால்
அவளது பாவாடைகளையும் நான் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போவேன்.
என் பெரியம்மாவின் பெண்கள் (இரண்டு பேர்) போட்டு
கொஞ்சம் பழையதான பாவாடைகளும் எனக்கு வந்துவிடும். என் அம்மாவின் கூறைப்புடவை,
பெரியம்மாவின் கூறைப்புடவை எல்லாம் பாவாடைகளாக மாறி என்னால்
அணியப்பட்டிருக்கின்றன. என் அம்மாவின் கருப்புக்கலர் கெட்டி ஜரிகை தலைப்பு மஜந்தா
கலர் புடவை இரண்டு பாவடைகளாயிற்று. மஜந்தா
கலர் பாவாடை ஒன்று. அதனுடைய கருப்புக்கலர் கெட்டி ஜரிகை தலைப்பு இன்னொரு பாவாடை!
அதேபோல பாவாடைகள் ஆக மாறிய என் பெரியம்மாவின் புடவைகள் என்று நிறைய பாவாடைகள்
அதுவும் பட்டுப்பாவாடைகள்!
பட்டுப்பாவாடையை விட்டால் சீட்டி என்று ஒருவகைத்
துணி வரும். அதிலும் பலபல வண்ணங்களில் பாவாடைகள் போட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த
வகைத் துணிகளிலும் தனியாக பார்டர் போட்டு வரும். குறிப்பாக முயல்குட்டி பார்டர் போட்டு
வரும் பாவாடை என் தோழிகள் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்துவிட்டு நானும் என்
அப்பாவிடம் கேட்டேன். வாங்கிக்கொடுத்தார். ஆனால் அம்மா அது என் அக்காவிற்கு என்று
சொல்லியவுடன் ரொம்பவும் நொந்துவிட்டேன். என் அப்பாவிடம் கேட்டபோது ‘எப்படியும் அது
உனக்குத்தானே வரப்போறது, இப்போ போகட்டும் விடு!’ என்று சொல்லிவிட்டார். என்ன
இருந்தாலும் புதுசு போல வருமா?
எப்போதுமே பாவாடைதான். ஃப்ராக் போட்டதே கிடையாது.
நான் படித்த பள்ளிகளிலும் யாரும் அந்தக்காலத்தில் கவுன் என்று அழைக்கப்பட்ட ஃப்ராக்
போட்டது கிடையாது. ஒருவேளை அந்த நாகரீகம் எல்லாம் அப்போது வரவில்லையோ என்னவோ.
பாவாடைகளை என் அம்மாவே தைத்துவிடுவாள். அப்போது மேட்சிங் ஆக போட்டுக்கொள்ள
வேண்டும் என்ற அறிவெல்லாம் வந்திருக்கவில்லை. என் அம்மாவின் மொழியில்
சொல்லவேண்டும் என்றால் ‘கருப்பு ரவிக்கை ஒன்று, வெள்ளை ரவிக்கை ஒன்று இருந்தால்
போதும், எல்லாக்கலர் பாவாடைகளுக்கும் இவை மேட்ச் ஆகும்’ என்றும் சொல்லலாம்.
அம்மாவே எங்களுக்கு ஃபாஷன் டிசைனர் ஆக
இருந்ததால் இத்தனை பட்டுப்பாவாடைகள் சாத்தியம் ஆயிற்று என்று தோன்றுகிறது.
அம்மாவிடம் ஒரு கை தையல் இயந்திரம் இருந்தது. அம்மா அதை ரொம்ப ரொம்ப பத்திரமாகப்
பார்த்துக் கொள்வாள். வலது கையால் சக்கரம் போல இருப்பதை சுற்றிக்கொண்டு இடது
கையால் துணியைக் கொடுக்க வேண்டும். கால் தையல் இயந்திரத்தில் இருக்கும் பெரிய
சக்கரம் இங்கே சின்னதாக வலது பக்கம் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு கைப்பிடியுடன்.
தையல் இயந்திரம் ஒரு சின்ன மணை மீது இருக்கும். அம்மா
தரையில் உட்கார்ந்து கொண்டு தைப்பாள். இன்னும் இருக்கிறது அந்த தையல் இயந்திரம் அக்கா
வீட்டுப் பரண் மேல். அம்மா அதை ரொம்ப ரொம்ப பத்திரமாகப் பார்த்துக் கொள்வாள். நாங்கள்
யாரும் அதன் அருகில் கூட போகக்கூடாது. அம்மா நல்ல மூடில் இருந்தால் சக்கரத்தை
சுற்ற எங்களுக்கு அனுமதி கிடைக்கும். அப்போது அம்மா இரண்டு கைகளாலும் துணியை
இயந்திரத்தில் கொடுப்பாள். சுற்றுவதும் அம்மாவின் வேகத்திற்கு சரியாக, அம்மா
நிறுத்து என்றவுடன் நிறுத்தி மிக மிக ஜாக்கிரதையாக விழிப்புடன் இருக்க வேண்டும்.
என் அம்மாவிற்கு கோபம் அதிகம். தவறு செய்துவிட்டால் அடிதான்!
அந்தக்காலத்திலேயே அந்த இயந்திரம் அவுட் ஆப்
பாஷன் தான். கிட்டத்தட்ட எல்லோர் வீடுகளிலும் கால் தையல் இயந்திரம் எனப்படும்
பெடல் இயந்திரம் வந்துவிட்டது. அம்மா தைக்கும் சமயத்தில் யாராவது வீட்டிற்கு
வந்தால் உடனடியாக கால் மிஷின் வாங்கிக்கொள்வது தானே என்ற இலவச அறிவுரை கிடைக்கும்.
‘எனக்கு இதிலேயே பழகிவிட்டது. இதுவும் நன்றாகவே தைக்கிறது’ என்று அம்மா பதில்
சொல்வாள்.
எனக்கு அந்த இயந்திரத்தில் பிடித்த விஷயம்
பாபினில் நூல் போடுவதுதான். வலது பக்கம் இருக்கும் பெரிய சக்கரத்தின் அடியில், அதற்கென்று
சின்னதாக ஒரு சக்கரம் இருக்கும். அதனுடன் பாபினை பிடித்துக்கொள்ள ஒரு சின்ன
பிடிப்பான் இருக்கும். பாபின் உள்ளே இருக்கும் நூல் தண்டில் சிறிது நூலைச் சுற்றி பிடிப்பானின்
இடையில் வைக்கவேண்டும். அந்த நூலை ஒரு கையால் பிடித்துக் கொள்ளவேண்டும். தையல்
இயந்திரம் ஓடாதவாறு அந்தச் சக்கரத்தில் இருக்கும் ஒரு திருகியை இறுக்கிவிட
வேண்டும். இப்போது பெரிய சக்கரமும் அதனுடன் இணைந்த சின்ன சக்கரமும் சுற்றும். நூல்
இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் போய்விட்டு வரும். நூல் தண்டில் நூல் அழகாக
சுற்றப்படும்.
தையல் இயந்திரத்தின் இடது பக்கத்தில்தான் ஊசி
இருக்கும். சக்கரம் சுற்றச்சுற்ற இந்த ஊசி மேலும் கீழும் போய் தையல் போடும் அழகே
அழகு. கீழே போகும்போது அடியில் இருக்கும் பாபினிலிருந்து நூலை இழுத்துக் கொண்டு
வரும். அந்தக்காலத்தில் எனக்கு இது ஒரு மிக அதிசயமான விஷயமாக இருந்திருக்கிறது.
பாபினில் அம்மா நூல் சுற்றுவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அம்மா
தைக்கும்போது அதை வேடிக்கைப் பார்ப்பதும் எனக்குப் பிடித்த ஒன்று. சிலசமயங்களில்
நூல் சரியாக வராமல் மேலே மேலே தையல் விழும். அம்மாவே தனக்குத் தெரிந்த ரிப்பேர்
வேலையெல்லாம் பார்த்தும் சரியாகாது. அப்போது சரியாக விழாத தையலை நான் பொறுமையாகப்
பிரித்துக் கொடுப்பேன். அது அம்மாவிற்கு பெரிய உதவியாக இருக்கும்.
இப்படியெல்லாம் அம்மாவை சந்தோஷப்படுத்தி
எனக்குள் இருந்த ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தேன். அது என்ன?
அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்.....
அதீதம் இணைய இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடர்