வெள்ளி, 1 ஏப்ரல், 2016

புடலங்காய் கொண்டு வா!



எமக்குத் தொழில் அசைபோடுதல் – 6 



முதல் வகுப்பு ஆசிரியை பெயர் தர்மு என்கிற தர்மாம்பாள். அதிகம் நினைவில்லை என்றாலும் இந்த ஆசிரியை ‘வீட்டை எப்பவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; தினமும் வீட்டைப் பெருக்க வேண்டும்; காலையில் வாசல் தெளித்து கோலம் போடவேண்டும்; வாரம் ஒருமுறை ஒட்டடை அடிக்க வேண்டும்’ என்று சொன்னார் என்பதற்காக நான் ஒரு நாள் ஒட்டடை அடித்தேன் என்று அம்மா இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பாள். சிறுவயதில் ஆசிரியர்கள் நம்மை வெகுவாகக் கவர்ந்து விடுகிறார்கள், இல்லையா? 

இரண்டாம் வகுப்பிற்கு லூசி என்றொரு ஆசிரியை. அவ்வப்போது யாரையாவது வகுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பிற ஆசிரியைகளுடன் பேசப் போய்விடுவார். தலைமை ஆசிரியை வெளியில் போய்விட்டால் மற்ற ஆசிரியைகளுக்குக் கொண்டாட்டம் தான். சொல்ல மறந்துவிட்டேனே! எங்கள் பள்ளி சிறுவர், சிறுமியர் சேர்ந்து படிக்கும் பள்ளி. கோ-எட் பள்ளி. ஆனால் அதற்குப் பிறகு நான் படித்ததெல்லாம் பெண்கள் பள்ளிகள் தான்.

மூன்றாம் வகுப்பு ஆசிரியை கோவிந்தம்மாள். பயங்கர ஸ்ட்ரிக்ட்! சரியாகப் படிக்கவில்லை என்றால் முதுகுத் தோல் கழண்டு விடும். நாங்கள் எல்லோருமே இந்த ஆசிரியைக்குத் தான் ரொம்பவும் பயப்படுவோம். அடித்து நொறுக்கி விடுவார். அப்போதெல்லாம் எந்த பெற்றோரும் வந்து ஏன் அடித்தீர்கள் என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். நீ என்ன தப்பு செய்தாய் என்று அவர்களும் சேர்ந்துகொண்டு அடிப்பார்கள்! அதனால் மூன்றாம் வகுப்பில் நாங்கள் எல்லோருமே சமத்தாக நன்றாகப் படித்தோம். 

இந்தப் பள்ளியில் இருந்தவரை ஒரே ஆசிரியை தான் எல்லா பாடங்களையும் சொல்லித் தருவார். அப்போதிலிருந்தே எனக்கு கணிதப் பாடம் சிம்ம சொப்பனம் தான். என்னைப் பாடாய்ப்படுத்தியது வாய்ப்பாடு ஒப்பித்தல் தான். 

நான்காம் வகுப்பிற்குப் போனபின் கமலா டீச்சர் வாய்ப்பாடு ஒப்பிக்கவில்லை என்றால் கண்மண் தெரியாமல் அடித்துவிடுவார். ‘வாய்ப்பாடு படித்தால்தான் கணிதம் ஒழுங்காக வரும்’ என்ற தன் கொள்கையில் மிகக் கடுமையாக  இருந்தவர் இந்த ஆசிரியை. எழுதும்போது மனதிற்குள் கூட்டி கூட்டி எழுதிவிடுவேன். சொல்லும்போது தடுமாறுவேன். கணித வகுப்பில் எப்பவும் நான் கடைசி வரிசைக்குப் போய்விடுவேன். எல்லோரையும் கேட்டுவிட்டு என்முறை வரும்போது அந்த பீரியட் முடிந்திருக்கும் அல்லது பள்ளியே முடிந்திருக்கும். இப்படியாக கமலா டீச்சரிடம் அடி வாங்காமல் தப்பித்தவள் நான். முழுக்க முழுக்க தமிழில் இந்த வாய்ப்பாடுகளைப் படித்ததால் இப்போதும் எப்போதும் தமிழில் சொன்னால் தான் வாய்ப்பாடு சரியாக வரும். கூட்டுவது, கழிப்பது எல்லாமே தமிழில் தான்!

இந்த ஆசிரியையுடன் ஒரே ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது. தேர்வு எழுதுவதற்கு தாள்கள் ஸ்கூலில் கொடுப்பார்கள். கோடு போடாத தாள்கள். மார்ஜின் நாங்கள் போட்டுக் கொள்ள வேண்டும். இந்தத் தாள்களில்  எழுதுவது எனக்கு ரொம்பவும் கஷ்டம். நேராக எழுத வராது. கமலா டீச்சரின் வகுப்பில் ஒருமுறை தேர்வின் போது ஸ்கேல் எடுத்துவர மறந்துவிட்டேன். எப்படி மார்ஜின் போடுவது? தேர்வு அதனால் யாருடனும் பேசவும் கூடாது. அதனால் ஸ்கேல் கொடு என்று யாரிடமும் கேட்கவும் முடியாது. ரொம்பவும் யோசித்தேன். பளிச்சென்று பல்பு எரிந்தது. என்னிடம் இரண்டு பென்சில்கள் இருந்தன. ஒரு பென்சிலை வைத்து இன்னொரு பென்சிலால் மார்ஜின் வரைந்தேன். டீச்சர் பார்க்கவில்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். என் பின்னாலிருந்து ஒரு குரல் வந்தது: 'நாளைக்குப் பரீட்சைக்கு மார்ஜின் போட புடலங்காய் கொண்டுவா’ என்று.

அன்று மாலை வீட்டில் எல்லோருக்கும் நான் தான் வேடிக்கைப் பொருள் ஆனேன்!

கனகவல்லி பள்ளியிலேயே நான், என் அக்கா, என் தம்பி மூவரும் ஐந்தாம் வகுப்பு வரை படித்தோம். ஐந்தாம் வகுப்பிற்கு எங்கள் தலைமையாசிரியர் திருமதி சுசீலா தான் ஆசிரியர். ஆ! சொல்ல மறந்துவிட்டேனே! ஐந்தாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தார்கள். சுசீலா டீச்சர்தான் ஆங்கிலத்திற்கும். முதல் நாள் டீச்சர் கேட்டார்: ‘யாருக்கெல்லாம் உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தெரியும்?’ எல்லோரும் கையைத் தூக்கினார்கள். நான் மட்டும் ‘திருதிரு’. டீச்சர் ரொம்பவும் ஆச்சரியப்பட்டுப் போனார். ‘என்னடி பேரு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாதா? மக்கு, மக்கு, பாரு உன் வகுப்புல இருக்கற எல்லோரும் எழுதும் போது நீ மட்டும் ஏன் கத்துக்கல?’ என்றார்.

எனக்கு யாரும் வீட்டில் சொல்லிக் கொடுக்கவில்லை என்று சொன்னேன். என் அக்கா ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஸ்ரீரங்கம் போய் பாட்டி அகத்தில் தங்கி அங்கேயே படிக்கவும் ஆரம்பித்துவிட்டாள். என் அண்ணா ஏற்கனவே ஸ்ரீரங்கத்தில்  படித்துக் கொண்டிருந்தான். தம்பி அப்போது இரண்டாம் வகுப்பில் இருந்தான். யாரிடம் ஆங்கிலம் கற்பது? ஐந்தாம் வகுப்பில் தான் ஆங்கில அரிச்சுவடி படித்தேன். என் வகுப்பில் எல்லோருக்குமே அரிச்சுவடி தவிர வார்த்தைகளும் தெரிந்திருந்தன. எனக்கு ரொம்பவும் வியப்பு. எப்படி இவர்கள் எல்லோரும் ஆங்கிலம் கற்றுக் கொண்டனர் என்று.

என்னுடன் படித்த இன்னொரு தோழி சுனந்தா. அவளிடம் கேட்டேன், ‘உனக்கு எப்படி ஆங்கிலத்தில் நிறைய தெரிந்திருக்கிறது?’ என்று. அவள் சொன்னாள்: ‘அடுத்த வருடம் வேற ஸ்கூலில் சேரணும், இல்லையா? ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் தான் நேஷனல் ஹை ஸ்கூல், லேடி வெலிங்டன் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் ஆறாம் வகுப்பிற்கு சேர முடியும். அங்கெல்லாம் டீச்சர்கள், மாணவர்கள் எல்லோருமே ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். அதனால நான் டியூஷன் போகிறேன்’ என்றாள். வியப்புக்கு மேல் வியப்பு. நான் ரொம்பவும் பின்தங்கி இருக்கிறேன் என்று புரிந்தது.

அன்று மாலை வீட்டிற்குப் போய் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன். அம்மா சொன்னாள்: ‘உன்னை அந்த ஸ்கூலுக்கெல்லாம் அனுப்பப் போறதில்லை’
‘பின்ன?’
‘அப்பா வரட்டும். அவரிடம் கேளு’ என்று அம்மா சொல்லிவிட்டாள்.
அப்பா கழுவுற மீனில் நழுவுற மீன். ‘நீ முதலில் ஐந்தாவது பாஸ் பண்ணு. அப்புறம் பார்க்கலாம்....!’ என்று சொல்லி கழன்று கொண்டார்.


 தொடர்ந்து அசை போடலாம்.....

அதீதம் இணைய இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக