புதன், 6 ஏப்ரல், 2016

பிரபலங்களும் நானும்!



எமக்குத் தொழில் அசைபோடுதல் – 11


பிரபலங்களும் நானும்! 

பள்ளி நாட்களிலேயே எனக்கு பிரபலங்களுடன் தொடர்பு உண்டு. கனகவல்லி பள்ளிக்கூடத்தில் என்னுடன் ஒரு பிரபலம் படித்து வந்தார். அதேபோல புரசைவாக்கம் லேடி முத்தையா செட்டியார் பள்ளியில் படிக்கும்போதும் ஒரு பிரபலம் எனக்கு ஒரு வருடம் சீனியர் ஆக படித்து வந்தார் – எங்கள் பள்ளியில் இல்லை -  எங்கள் பள்ளிக்கு அடுத்தாற்போல இருந்த முத்தையா செட்டியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில். அவரைப் பற்றிப் பிறகு பார்க்கலாம். இப்போதைக்கு கனகவல்லி பள்ளியில் படித்த அந்தப் பிரபலம் யார்?

அவர் பெயரில் ஏற்கனவே ஒரு பிரபல நடிகை இருந்ததால் இவரைப் ‘பப்பி’  என்று அழைத்தனர். பெரியவர் ஆனதும் ‘குட்டி......’ என்ற அடைமொழியில் அழைக்கப்பட்டார். திருவேட்டீச்வரன் கோவில் அக்ரஹாரத்திலேயே அவரது வீடு இருந்தது. அவரது அம்மாவும் சில பல திரைப்படங்களில் தலையைக் காண்பித்துக் கொண்டிருந்தார். யார் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் பள்ளியில் படித்து வந்தார் என்று தான் சொன்னேன். பள்ளிக்கூடத்திற்கு வருவார் என்று சொல்லவில்லை. என்ன குழப்பம் என்கிறீர்களா? அந்தச் சிறிய வயதிலேயே பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்ததால் தினமும் பள்ளிக்கு வர மாட்டார். எப்போது அவருக்கு ஷூட்டிங் இல்லையோ, அப்போது பள்ளிக்கு வருவார். அதாவது மழைக்கு ஒதுங்குவார் என்று சொல்லலாம்!

அவர் வந்தால் பள்ளியே களை கட்டும். மிக அழகாக உடை (குட்டையாக ஒரு ‘ஃப்ராக்’ – குடை போல விரிந்திருக்கும்) உடுத்திக் கொண்டு, தலையை நவநாகரீகமாக ‘கட்’ செய்துகொண்டு அம்மாவுடன் காரில் வந்திறங்குவார். அவரது அம்மாவிற்கு தனது மகளை யாராவது பார்த்து, திருஷ்டி பட்டுவிட்டால் என்ன செய்வது என்று கவலை இருக்கும் என்று தோன்றும். ஏனெனில் உள்ளே வரும்போதே, ‘பாப்பாவிற்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஷூட்டிங்....ரொம்ப அலுப்பா இருக்கா....என்று சொல்லிக்கொண்டே வருவார். அவர் இருக்கும்வரை அந்தப் பாப்பாவை யாரும் நெருங்க முடியாது. அவர் அந்தப்பக்கம் கிளம்பிப் போனவுடன் ஆசிரியைகள், மாணவ மாணவிகள் எல்லோரும் அவரைச் சுற்றி சுற்றி வருவார்கள். ‘பப்பிம்மா! இப்போ எந்த படத்துல நடிக்கிற? யாரு ஹீரோ, யாரு ஹீரோயின்? உன்னோட அவங்க நல்லா பேசுவாங்களா? ஷூட்டிங் எங்க நடக்குது? மெட்ராஸ்லயா? வெளியூரா?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்வார்கள். ‘உங்கூட ஷூட்டிங் பார்க்க நாங்க வரலாமா? எங்களை எல்லாம் நீ ஒரு தடவ  கூட்டிக்கிட்டுப் போறியா?’ இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல; எந்தக் கேள்விக்கும் அந்தக் குழந்தை நட்சத்திரத்திடமிருந்து பதில் வராது. பொம்மை போல நின்று கொண்டிருக்கும் அந்தக் குழந்தை. ஒருவேளை தனது பிரபலத்தின் விலை புரிந்திருக்கவில்லையோ, என்னவோ. இல்லை அதிகமாக புரிந்து கொண்டு விட்டதோ?

சில தடவைகளில் தான் நடித்த காட்சிகளிலிருந்து சில நடனங்களை ஆடிக் காட்டும் அந்தப் பாப்பா. வாயைத் திறந்து பாடாது. சும்மா அபிநயம் மட்டும் பிடிக்கும். வசனம் ஏதாவது சொல்லும்மா என்றால் பேசாமல் நிற்கும். எப்போதோ ஒரு தடவை வருவதால் அந்தக் குழந்தை பள்ளிக்கு வரும் நாள் விழா நாள் போல இருக்கும். அடுத்த நாள் வருமா என்பது தெரியாததால் வந்த அன்றைக்கே அத்தனை கேள்விகளும் கேட்கப்படும்; எல்லா விவரங்களும் அறியப்படும். எல்லோரிடமும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுவிடவேண்டும் என்கிற  ஆர்வமும் அதிகமாக இருக்கும்.

திரைப்படம் என்கிற ஊடகத்தின் சக்தியை, வீச்சை அப்போதே என்னால் அறிய முடிந்தது என்று சொல்லலாம். ஒருமுறை கூட அந்தக் குழந்தை நட்சத்திரம் தொடர்ந்தாற்போல பள்ளிக்கு வந்தது கிடையாது. ஆனாலும் கூட என்ன வரவேற்பு, என்ன உபசாரம்!. நான் உட்பட பல மாணவிகளும் அந்தக் குழந்தையைப் பார்த்து  ஒருவகையான பொறாமை கொண்டோம் என்றால் மிகையாகாது.

ஒரு மாயவலையில் எல்லோரும் வீழ்ந்தது போல ஒரு தோற்றம் ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் இந்த வலையின் வீச்சில் விழுந்துவிட்டவர்கள் என்பது சற்று வருத்தமான உண்மை. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இந்த நிலை மாறவில்லை. அதிகம் ஆகியிருக்கிறது என்று சொல்ல வேண்டும். திரைப்படம் என்று ஒரே ஒரு ஊடகம் செய்து வந்த வேலையை இப்போது தொலைகாட்சி நமது வீட்டின் கூடத்திற்கே கொண்டு வந்துவிட்டது. குடும்பத்தினர் ஒருவருடன் ஒருவர் பேசுவதற்குக் கூட முடியாமல் யாரிடம் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறதோ அவரே பெரியவர் என்கிற ஒரு கர்வம்! கூடவே இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைபேசி.

பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச நேரம் இருப்பதில்லை. அவர்களின் முகத்தைப் பார்க்காமல் எங்கோ இருப்பவரிடம் பேச்சு. குழந்தைகள் வெளியில் போய் விளையாடுவதை மறந்துவிட்டன. உட்கார்ந்த இடத்திலேயே மணிக்கணக்கில் விளையாடுகிறார்கள். சிறுவயது உடற்பருமன் குழந்தைகளிடம் அதிகம் காணப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. கைக்குழந்தைகள் கூட அம்மாவின் கைபேசியில் தான் விளையாடுகின்றன. அம்மாக்களும் குழந்தை அழாமல், தங்களைப் படுத்தாமல் இருந்தால் போதும் என கைபேசியைக் கொடுத்து விடுகிறார்கள். இவற்றின் பலனை அடுத்த தலைமுறையினர் உடல்நலக்குறைவு என்ற பெயரில் அனுபவிக்கப் போகிறார்கள். ஆனால் அதைப் பற்றி இப்போது என்ன கவலை? அப்போது ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டால் போகிறது.

நாம் தொடர்ந்து அசை போடலாம்!

அதீதம் இணையஇதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடர்.

1 கருத்து:

  1. அதிசயம் தான். திரைப் படங்களில் அத்தனை வாயடிப்பவர் பதில் சொல்ல மாட்டாரா. இப்பவும் வயதாகி இருக்குமே. நல்ல பிரபலம்.ரஞ்சனி. வெகு சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு