செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கிரெடிட் கார்ட் ஸ்கிம்மிங்டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பரவலான பயன்பாட்டினால், பணத்தை கையிலேயே எடுத்துக் கொண்டு அலைய வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டு, தனிமனித வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மிகக் கவனமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் உபயோகிப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் புகுந்து ஏமாற்றக்கூடிய மோசடிப் பேர்வழிகள் நம் உடைமைகளைக் களவாட நாமே வழியமைத்துக் கொடுத்தது போலாகிவிடும். சமீப காலத்தில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய ஏராளமான மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவற்றுள், கார்டு ஸ்கிம்மிங் (card skimming) மோசடி, சர்வசாதாரணமாக அடிக்கடி நிகழும் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கார்டு ஸ்கிம்மிங் என்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு காந்தப் பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களை, சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்து கொள்ளும் ஒரு மோசடி செயலாகும். இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள் மற்றொரு வெற்றுக் கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கோ சட்டவிரோதிகளால் உபயோகிக்கப்படுகின்றன.எவ்வாறு கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது?பொதுவாக, அசல் கார்டு ரீடருக்குப் பதிலாகப் பொருத்தப்படும் போலி ரீடரைக் கொண்டு, தேய்க்கப்படும் கார்டுகளில் இருக்கும் தகவல்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய போலி ஸ்கிம்மிங் சாதனங்கள், பெரும்பாலும் கையில் பிடித்துக் கொள்ளக்கூடியதான பின்பேட்கள் மற்றும் ஏடிஎம்கள் போன்ற இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன. மேலும் ஒற்றையாக, கையடக்கமாக மற்றும் பாண்ட் பாக்கெட்டில் அடங்கி விடக்கூடியதாக இருப்பதனால், இச்சாதனத்தை பல்வேறு இடங்களுக்கும் தூக்கிச் செல்வது மிகவும் எளிது.தப்பிக்க வழிகள்இத்தகைய மோசடிகளை அறவே தவிர்ப்பது மிகக் கடினமான காரியமே; என்றாலும் கார்டு ஹோல்டர்களுக்கு உதவக்கூடிய சில வழிமுறைகளும் இருக்கின்றன. இவற்றைக் கடைபிடிப்பதின் மூலம் இத்தகைய மோசடிகளின் விஸ்தீரணத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.
·         பில்களை நேரடியாக செலுத்துங்கள்.


·         உங்கள் பில்களை செலுத்துவதற்கு, உங்கள் பிளாஸ்டிக் பணக் கார்டுகளை ஏதேனும் சர்வர்களிடம் கொடுத்து விடாமல், நேரடியாக நீங்களே விற்பனை கூடத்திற்கு சென்று கார்டு மூலம் உங்கள் பில்லுக்கான தொகையை செலுத்துங்கள்.ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் முறைஎப்போதும் ட்ரான்ஸாக்ஷன் செய்ய முற்படுகையில், உங்கள் கைகளைக் கொண்டு சாதனத்தை நன்கு மூடியுள்ளீர்களா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், பின்-ஹோல் காமிராக்களோ அல்லது உங்கள் தோள் வழியாக எட்டிப் பார்க்கும் ஸர்ஃபரோ உங்கள் பின் நம்பரைப் பார்த்துக் குறித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.


எந்தவொரு வணிக மையத்தின் பேமெண்ட் கவுன்ட்டரில் ஏடிஎம் கார்டை கொடுத்து வாங்கும் போதும் உங்கள் கார்டின் மேல் தனி கவனம் இருக்கட்டும்.வங்கி ஸ்டேட்மெண்ட்டுகளை சரி பார்த்தல்கார்டு ஸ்கிம்மிங் மற்றும் அதனை ஒத்த இதர மோசடிகள் அனைத்தும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவை. கார்டு தொடர்பான ஸ்டேட்மெண்ட்டுகளை சீரான இடைவெளிகளில் சரி பார்ப்பதன் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் நீங்கள் ஏதேனும் போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் அல்லது பின்பேடை எங்கேனும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதனைப் பற்றி உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது காவல்துறைக்கு உடனே தெரிவிக்கவும்.


புதிய சிப்- ஏடிஎம் கார்டுகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் கார்டு ஸ்கிம்மிங் சம்பவங்களை கருத்தில் கொண்டு, ஆர்பிஐ, வர்த்தகத்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளை காந்த பட்டை உடைய கார்டுகளுக்குப் பதிலாக கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான சிப்-அடிப்படையிலான கார்டுகளை நவம்பர் 30, 2013 -க்குள் மாற்றும்படி அறிவுறுத்தி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.காந்தப் பட்டையை தன் பின்புறத்தில் கொண்டுள்ள, தற்போது புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் கார்டுகளைப் போலல்லாமல், உட்பதிக்கப்பட்ட மைக்ரோபிராசஸர்களைக் கொண்டிருக்கும், இந்த புதிய சிப்-அடிப்படையிலான கார்டுகளை, இயந்திரத்தின் உள்ளே முழுக்க செலுத்திய பின்னரே, எந்த ஒரு ட்ரான்ஸாக்ஷனை செயல்படுத்துவதற்கும், கார்டுஹோல்டர் தன் பாதுகாப்பான 4-இலக்க பின் நம்பரை அழுத்த வேண்டியிருக்கும்.ஆட்சேபனை இல்லையென்றால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே ....நன்றி: திரு அனந்தநாராயணன்


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

எச்சரிக்கையாக இருங்கள்
எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை. எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை. பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்? அது எப்படி சாத்தியமாயிற்று?புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலேயே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் /புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது. அந்த ட்ரோஜன் என்கிற புரோகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமோட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன். உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள். இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்து விட்டதுதான் அவள் செய்த தவறு.கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம். கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள்.இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுன்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத் தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள். இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.


நன்றி: நெல்லை ராஜன் / அனந்தநாராயணன்

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு எழுதுகோல், ஒரு புத்தகம்!

ஆகஸ்ட் ஆழம் இதழில் வெளியான எனது கட்டுரை உலகை மாற்ற இவை போதும் என்கிறாள் தனது 16 வது பிறந்த நாளை  ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டாடிய மலாலா.


பெண்களுக்குக் கல்வி அவசியம் என்பதை பிரசாரம் செய்ததற்காக  தாலிபான் தீவிர வாதிகளால் தலையில் சுடப்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த, பதின்மவயது சிறுமி மலாலா அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது.


அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்று கேட்கும் தாலிபான்களுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா திருக்குரானில் எங்காவது எழுதியிருக்கிறதா, பெண்கள் படிக்கக் கூடாது பள்ளிக்குப் போகக்கூடாது என்று?’ என்ற எதிர் கேள்வியை தனது விடையாக முன் வைக்கிறாள்.


சென்ற வருடம் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பள்ளிவிட்டு வீட்டுக்கு வருகையில் மலாலாவும் மற்ற சிறுமிகளும் பயணம் செய்த சிற்றூந்து குறிபார்க்கப்பட்டு சுடப்பட்டது. தீவிரவாதி ஒருவன் மலாலாவின் பெயரை உரக்கக் கூவிக் கொண்டே அவளை சுட்டான். ஆனால் அதிஷ்ட வசமாக மலாலா இந்தத் தாக்குதலிலிருந்து சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினாள். பாகிஸ்தானின் அவசர சிகிச்சை மருத்துவ பிரிவில் இருந்து உடனடியாக லண்டன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின் 5 மாதங்கள் கழித்து  லண்டன் பிர்மிங்ஹம் பள்ளியில் சேர்க்கப் பட்டாள் மலாலா.


ஐக்கியநாடுகள் சபையின் உலக கல்வி சிறப்புத் தூதரான திரு கோர்டன் பிரவுன் மலாலாவை ஐக்கிய நாடுகள் சபையில் ஜூலை 16 மலாலாவின் பிறந்தநாள் அன்று உரையாற்றுமாறு அழைத்தார். மலாலாவின் பெயர் நோபல் பரிசிற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

தனது உரையில் ஒவ்வொரு குழந்தையும் இலவசக் கட்டாய கல்வி பெறும் வசதியை செய்து கொடுக்குமாறு உலகத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டாள் மலாலா.


மேலும் படிக்க : மலாலா 

சனி, 17 ஆகஸ்ட், 2013

முதல் கணனி அனுபவம்முதலில் என்னைத் தொடர் பதிவிற்குக் கூப்பிட்ட திரு தமிழ் இளங்கோ, மற்றும் திருமதி கீதா சாம்பசிவம் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

நானும் எல்லோரையும் போல கணனி மொழிகள் கற்கத்தான் வகுப்பில் சேர்ந்தேன். முதலில் பேசிக். அது கொஞ்சம் பரவாயில்லை போல மண்டையில் ஏறியது. அடுத்து கோபால். (cobal) யாருன்னு கேட்காதீங்க. நீங்க எல்லாம் கேட்க மாட்டீங்க. ஆனால் எங்கள் ஆசிரியர் சொன்னபோது நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். கோபாலா? யாரு? என்று! அப்படி கேட்டதுக்கு கைமேல் பலன். ஒன்றும் புரியவில்லை. திக்கி திணறி அடுத்து லோட்டஸ். வீட்டில் கணனி இல்லை. அதனால் எழுதிய ப்ரோக்ராம்கள் சரியா தவறா கண்டுபிடிக்க முடியவில்லை. கணனி மையத்திற்கு போய் கணனியில் தட்டச்சு செய்தால் திரை முழுக்க error!

என் மாமா பிள்ளை இங்கு வேலை கிடைத்து வர, தினமும் அவனைப் போட்டு படுத்த  (உண்மையில் ‘பிடுங்க’) ஆரம்பித்தேன். பாவம் ஒரே மாதத்தில், ‘அக்கா! ஆபீஸ் அருகில் வீடு பார்த்திருக்கேன்’ என்று தலைமறைவாகி விட்டான்.

ஒரு நாள் என் பிள்ளையிடம் சொன்னேன். ‘ரொம்ப கஷ்டமா இருக்கே!’ அவன் என்னை பரிதாபமாகப் பார்த்துவிட்டு, ‘இதுக்கெல்லாம் ‘logic’ புரியணும்-மா’ என்றான். அடுத்த நாள் ஆசிரியரிடம் ஏதோ விளக்கம் கேட்டேன். அவரும் ‘logic’ புரியணும் என்றார். வேறு யாரையும்  கேட்க துணிவில்லை. மூன்றாவது நபரும் logic பற்றி பேசினால் – எனக்கு logical thinking இல்லை என்பது நிச்சயமாகிவிடுமே!

நன்றாகப் புரிந்தது MS Word மட்டுமே! இதுக்கு logic எல்லாம் வேண்டாம் போலிருக்கு! இதன் நடுவில் பாண்டிச்சேரியில் இருந்த என் ஓர்ப்படி கீழே விழுந்து தலையில் அடி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தி வந்தது. அவளது பிள்ளை அப்போது SSLC. அவனுக்கு பரீட்சை சமயம். உதவ ஓடினேன். இத்துடன் கணனி மொழிக்கு ‘நீநாம ரூபமுலகு’ பாடியாயிற்று.

அடுத்து என் பெண் ஒரு யோசனை கூறினாள்: ‘உனக்கு நல்லா வரைய வருமே. நீ flash, coraldraw கத்துக்கோ’ என்று. நமக்கு யாரு எப்போ எதிரியாவாங்கன்னு சொல்லவே முடியாது!

அந்த மையம் இருந்தது மல்லேஸ்வரம். எங்க வீட்டுலேருந்து ஜெயநகர் 4வது ப்ளாக்கிற்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் பிடித்துப் போகணும். முதல்நாள் வீட்டைவிட்டு கிளம்பினேன். எங்கள் தெரு முழுக்க தோண்டி வைத்திருந்தார்கள். ஒரு பள்ளத்தில் கால் இடற, கீழே விழுந்தேன். முழங்காலில் அடி. மறுபடி வீட்டிற்கு வந்து நியோஸ்பிரின் போட்டுக் கொண்டு போனேன். முதல் நாளே வகுப்பை மிஸ் பண்ணக் கூடாது, இல்லையா?

விழுந்தால் நான் கலங்குவது இல்லை. ஒவ்வொருமுறை விழும்போதும் பிரமாதமாக எழுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும். என் அனுபவம் இது. அதையெல்லாம் பிறகு பதிவு எழுதுகிறேன். இப்படியாக திரும்பவும் கணனி! இந்தமுறை கொஞ்சம் சுவாரஸ்யமாக. இரண்டு மாதத்தில் கோர்ஸ் முடிந்துவிட்டது. ஆனால் வீட்டில் கணனி இல்லை. சிறிது காலம் கழித்து animation கற்றுக் கொள்ளலாம் என்று இன்னொரு மையத்தில் சேர்ந்தேன். இது வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தது.

இப்போது வீட்டில் கணனி வாங்கலாம் என்று தீர்மானம் செய்தோம். பிள்ளையும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தான். கணனி வாங்கி அதில் நான் கற்றுக்கொண்ட எல்லாவற்றுக்கும் தேவையான மென்பொருட்களை ஏற்றி.....

மையத்தில் முதல் முறை நான் வரைந்திருந்த படத்தை உயிரூட்டியதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன படம் தெரியுமா? வேடனும் புறாவும், எறும்பும். முதலில் வேடன் வருவான். அவன் கையிலிருந்த வில்லிலிருந்து அம்பு பறக்கும். ‘சர்..........!’ என்று. என் ஆசிரியை ரொம்பவும் சின்னப்பெண். சௌஜன்யா (இவளைப் பற்றி இங்கே படிக்கலாம்) அவளிடம் ரொம்பப் பெருமையாகக் காண்பித்தேன். ‘பார் எப்படி அம்பு பறக்கிறது’ என்று. அவள் இன்னும் சில அம்புகளை வரைந்தாள். ‘இப்போ பாருங்க!’ சர் சரென்று பல அம்புகள் பறந்தன. நான் ஒண்ணே ஒண்ணு தான் போட்டிருந்தேன்!

அப்புறம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இன்னொரு படம் வரைந்தேன். ஒரு குளம் அதில் ஒரு மீன். நீந்திக் கொண்டே இருக்கும். அப்போது மேலிருந்து ஒரு தூண்டில் வரும். அதில் ஒரு புழு. (புழு மாதிரி என்று சொல்வது பொருந்தும்!) மீன் போய் அதை சாப்பிடும். மறைந்து விடும்!

இதற்கு முன்னாலேயே மின்னஞ்சல் அனுப்பக் கற்றுக் கொண்டிருந்தேன். நான் வரைந்து உயிரூட்டிய படத்தை எல்லோருக்கும் அனுப்பினேன். என் நாத்தனார் பெண்ணிற்கு மட்டும் தான் படத்துடன் போய் சேர்ந்தது. மற்றவர்கள் படம் திறக்கவேயில்லை என்றார்கள். ‘உங்க கணனியை upgrade பண்ணிக்குங்க’ என்றேன்!
அப்புறம் தமிழ் எழுத்துருக்களை தேடிக் கண்டுபிடித்து, தம்பி வீட்டில் இருந்த என் அம்மாவிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதை ‘send’ பண்ணிவிட்டு அம்மாவிற்கு தொலைபேசி ‘அம்மா என் கடிதம் வந்ததா?’ என்றால் அம்மா ‘இன்னிக்கு தான போட்ட? இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்’ என்றாள். ‘ஐயோ! அம்மா! இது இமெயில் மா, அடுத்த நொடி வந்துடும்’

‘இமெயில், எறும்பு மெயில் எல்லாம் அனுப்பாதே. ஒழுங்கா இன்லன்ட் லெட்டர்- ல எழுதி போஸ்ட் பண்ணு. எனக்கு இந்த கம்ப்யூட்டர் தெரியாது. இனிமே கத்துக்கறாதாகவும் இல்லை’ என்று என் ஆசையை அப்படியே வழித்து குப்பைத் தொட்டியில் போட்டாள்.

2011 ல பிள்ளைக்குக் கல்யாணம். மாட்டுப்பெண் வந்தவுடன் நானும்  அவளும் எப்படி ஒருவரையொருவர் சமாளிக்கிறோம் என்று ஒரு கட்டுரை எழுதினேன். எந்தப் பத்திரிக்கையிலும் வரலை. அப்போதான் இந்த வேர்ட்ப்ரஸ் தளம் பார்த்தேன். அதிலேயே இந்த முதல் பதிவைப் போட்டேன். இதற்கு மேல நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியும். எல்லாமே வரலாறு!