சனி, 11 மே, 2013

அம்மா என்றால் அன்பு!எல்லோருக்கும் தெரிந்தது தான் அம்மாக்களின் தினம். அன்று ஒருநாள் மட்டும் தான் அம்மாவை நினைக்க வேண்டுமா? மற்ற தினங்களில் மறந்துவிடலாமா? அம்மாக்களின் தினம் என்று வைத்ததற்கு அதுவல்ல அர்த்தம். நம் அம்மாவிடமிருந்து நாம் கற்றது என்ன? நம் குழந்தைகளுக்கு நம் அம்மாவைப் போல நாம் சிறந்த அம்மாவாக இருக்கிறோமா? இவற்றைப் பற்றிச் சிந்திக்கத்தான் இந்த நாள்.


என்ன செய்யலாம் அன்று? அம்மா அருகில் இருந்தால் வாழ்த்து அட்டை கொடுக்கலாம் நாமே தயாரித்து; பூக்கொத்து கொடுக்கலாம்; அவளுக்குப் பிடித்ததை சமைத்து அவளுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம். அவள் மடியில் தலை வைத்துப் படுத்து அவளது பழைய கதைகளைக் கேட்கலாம்.


 எல்லா அம்மாவுமே பழங்கதைகள் தான் பேசுவார்கள். அடுத்தடுத்த தலைமுறைகள் வந்தவுடன் வீட்டின் முதியவர்கள் தனித்துப் போய்விடுகிறார்கள். அவர்களது தனிமைக்கு பழைய நினைவுகள் தான் துணை.


 இவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது அம்மாவிடம் இருந்து நாம் என்ன கற்றோம், எதை நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப் போகிறோம் என்று சிந்திக்கலாம். அம்மாவிடம் நாம் ரொம்பவும் விரும்பும் குணம் நமக்கு வந்திருக்கிறதா என்று யோசனை செய்யலாம்.


மற்றவர்களுக்குச் சொல்லும் முன் நான் சற்று யோசிக்கிறேன்: நான் என்ன கற்றுக் கொண்டேன் என் அம்மாவிடமிருந்து? என் அம்மா மிக நன்றாகப் பாடுவாள். பரவாயில்லை, நாங்கள் நாலு பேருமே சுமாராகப் பாடுவோம். அம்மாவின் சங்கீத ஞானம் எங்கள் குழந்தைகளுக்கும் வந்திருக்கிறது.


 குழந்தைகளாக இருந்தபோது அம்மா தான் எங்கள் உடை வடிவமைப்பாளர்; அம்மா கையால் தைத்த உடைகள் ஏராளம். தையல் கலையை மிக ஆர்வமாகச் செய்வாள். ஊஹும்….! ஊஹும்….! நாங்கள் யாரும் இதை மட்டும் கற்கவே இல்லை.


 வீடு பளிச்சென்று இருக்கும். இந்த விஷயத்தில் என் அக்கா அப்படியே என் அம்மா! அம்மா நன்றாக சமைப்பாள். நான் என் அம்மாவிடம் சமையல் கற்றதே இல்லை. திருமணம் ஆனபின் முழுக்க முழுக்க என் மாமியாரிடம் தான் கற்றுக் கொண்டேன். அவரும் அம்மா தான் இல்லையா?


 என் அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். மிகக் கோர்வையாக எழுதுவாள். அந்தக் காலத்து இன்லேண்ட் கவரில் ஒரு துளி இடம் பாக்கி விடாமல் எழுதுவாள். அம்மாவின் முத்து முத்துக் கையெழுத்து யாருக்கும் வரவில்லை. ஆனால் எனக்கு என் அம்மாவிடமிருந்து வந்த சொத்து எழுதும் திறமை தான். எத்தனை அரிய திறமை இது! நான் எழுதுவது எல்லாவற்றையும் பிரின்ட் அவுட் எடுத்து அம்மாவுக்குக் கொடுப்பேன். என் கதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் அம்மா பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள்.


அம்மா நிறையப் படிப்பாள். எங்கள் நால்வருக்கும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அம்மாவிடமிருந்து வந்ததுதான். இப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் ஈடுபாடு வந்தது அம்மாவால்தான். இப்பவும் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாசுரத்தைச் சொல்லிஎன்ன தமிழ் பாரு! அருவி மாதிரி என்ன ஒரு நடை பாரு!’ என்று தானும் வியந்து எங்களையும் வியப்பில் ஆழ்த்துவாள்.


 ஒவ்வொரு முறை அம்மாவைப் பார்க்கும்போதும் அம்மா தன் டைரியை கொடுத்துப் படிக்கச் சொல்லுவாள். தான் படித்ததில் மிகவும் கவர்ந்ததை அதில் முத்து முத்துக் கையெழுத்தில் எழுதி வைத்து இருப்பாள். அம்ம்மாவின் டைரி அவளைப் பற்றிப் பேசாது; அவளது ரசனையைப் பேசும்.


 இவை எல்லாவற்றையும் விட மிக மிக அரிய சொத்து ஆரோக்கியம். என் அம்மாவுக்கு இப்போது 84 வயது. முதுமை என்பதைத் தவிர வேறு எந்தவித தொந்திரவும் அம்மாவுக்குக் கிடையாது. ( டச் வுட்!) இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தன் வேலையைத் தான் பார்த்துக் கொண்டு ஒருவருக்கு ஒரு கஷ்டம் கொடுக்காமல் இருந்து வருகிறாள். உணவு விஷயத்தில் இது கூடும் கூடாது என்பதே இல்லை அம்மாவுக்கு. மிக மிக குறைந்த அளவு தான் சாப்பிடுவாள். இரண்டு வேளை சாப்பாடு; மதியம் ரொம்ப கொஞ்சமாக சிற்றுண்டி.


 அம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும்? இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.


 நாங்கள் இப்போது இறைவனிடம் பிரார்த்திப்பது இரண்டு விஷயங்கள் தான்: இப்படியே அம்மா எந்தவித நோயும் இல்லாமல் கடைசி வரை இருக்க வேண்டும்; அம்மாவின் ஆரோக்கியம் எங்களுக்கும் வேண்டும்.சென்ற வருட வோர்ட்ப்ரஸ் அன்னையர் தினப் பதிவு 

இதையும் படிக்கலாம்: எங்கள் பாட்டி 

12 கருத்துகள்:

 1. சிந்திக்க வேண்டிய சிறப்பான யோசனைகள் அம்மா... அருமை... நன்றி...

  அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் தனபாலன்!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   நீக்கு
 2. அம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும்? இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

  அருமையான பிரார்த்தனை ..!
  இனிய அன்னையர் தின் வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
   ஆரோக்கியம்தான் சிறந்த சொத்து இல்லையா?
   அதனால்தான் இந்தப் பிரார்த்தனை.
   வருகைக்கும் அன்னையர் தின நல் வாழ்த்திற்கும் நன்றி!

   நீக்கு
 3. அம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும்? இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

  நாங்கள் இப்போது இறைவனிடம் பிரார்த்திப்பது இரண்டு விஷயங்கள் தான்: இப்படியே அம்மா எந்தவித நோயும் இல்லாமல் கடைசி வரை இருக்க வேண்டும்; அம்மாவின் ஆரோக்கியம் எங்களுக்கும் வேண்டும்.//

  நல்ல பிரார்த்தனை.
  இறைவன் அருளால் அம்மா ஆரோக்கியமாய் இருப்பார்கள்.
  அன்னையர் தினத்தில் அருமையான பதிவை அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.
  அன்னையர் தின வாழ்த்துக்கள்.
  அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் கோமதி அரசு!
   உங்கள் வணக்கங்களை என் அம்மாவிடம் நிச்சயம் தெரிவிக்கிறேன்.

   நீக்கு
 4. என் அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். மிகக் கோர்வையாக எழுதுவாள். அந்தக் காலத்து இன்லேண்ட் கவரில் ஒரு துளி இடம் பாக்கி விடாமல் எழுதுவாள். அம்மாவின் முத்து முத்துக் கையெழுத்து யாருக்கும் வரவில்லை. //

  என் அம்மாவின் கையெழுத்தும் முத்த் முத்தாக இருக்கும். அம்மாவும் இன்லேண்ட் கவரில் முழுவதும் எழுதி விடுவார்கள். சமையல் குறிப்பு, கோலங்கள், சாமி பாட்டு என்று எழுதி அனுப்புவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஷயங்கள் நிறைய எழுதுவதுடன், நம்மையும் ஒன்று விடாமல் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்! அம்மாவின் கடி தங்கள் இன்றும் சுவாரஸ்யமானவை.

   ஒரு சிறிய வேண்டுகோள்: என் இன்னொரு தளத்திற்கும் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் ப்ளீஸ்!
   இதோ இணைப்பு: http://wp.me/p244Wx-uu

   இந்தப்பதிவின் கடைசியில் இருக்கும் எங்கள் பாட்டி இணைப்பை
   சொடுக்கினாலும் அந்த தளத்திற்குச் செல்லலாம்.

   நீக்கு
 5. உங்கள் தாயாரைப்பற்றி படித்துக்கொன்டிருக்கும்போதே பாட்டியைப்பற்றியும் போய் படித்து விட்டு மறுபடியும் இங்கு வந்து விட்டேன். இரண்டுமே என்றும் நீங்காத‌ நினைவுகள் தான்!

  அம்மாவிடம் எதை எதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என்று அழகாக அலசியிருக்கிறீர்கள்! திறமைகளும் கல்வியறிவும்கூட முன்னோரின் மரபணுக்களால் வந்து விடுவதாகச் சொல்லுகிறார்கள். அவற்றிற்கும் அப்பால் அன்பு செலுத்துவதும் குடும்பத்தைக் கட்டிக் காத்து கொண்டு போகும் விதமும்தான் வழி வழியாய் பாட்டிகளிடமிருந்தும் அம்மாக்களிடமிருந்தும் கற்றுக்கொண்டோமென்று தோன்றுகிறது!

  அருமையான, நெகிழ்வடையச் செய்த பதிவு!!

  பதிலளிநீக்கு
 6. வாருங்கள் மனோ!
  நீங்கள் எழுதியிருப்பது ரொம்பவும் சரி.

  எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல், யார் மனத்தையும் புண்படுத்தாமல், அத்தனை பேரையும் அணைத்து
  சென்று பாட்டி நடத்திய குடும்பம் உதாரணமாகத் தான் இன்றுவரை இருக்கிறது.

  வருகைக்கும், படித்து நெகிழ்ந்து கருத்துரை வழங்கியதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. அம்மாவைப் பற்றியும் பாட்டியைப் பற்றியும் எழுதி எல்லோரையும் அவ்வாறே நினைக்க வைத்துவிட்டீர்கள்.உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.தாமதமான வாழ்த்து என்றாலும் தினம்தினம் அம்மாக்கள் தினம்தானே!

  பதிலளிநீக்கு
 8. சும்மா
  சும்மா சும்மா
  சும்மா சும்மா சும்மா
  அம்மாவுக்குப் பிறகு எல்லாமும்
  -விக்ரமாதித்யன்
  தங்கள் பதிவை வாசித்ததும் விக்ரமாதித்யனின் மேற்கண்ட கவிதை ஞாபகம் வந்தது.
  நல்ல பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு