வெள்ளி, 30 நவம்பர், 2012

நலம் நலம் தானே நீயிருந்தால்சென்ற வாரம் வாழ்க்கை துணைவருக்கு உடல் நலம் சரியில்லை. தலை சுற்றல்.
மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு, ‘அடுத்த வாரம் வாருங்கள், தேவைப் பட்டால் ப்ரைன் ஸ்கேன் செய்யலாம்,’ என்றார்.
‘ஏதாவது நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் சொல்லுங்கள். மறதி அதிகம் இருக்கிறதா?’
எப்போதுமே யாருடைய பெயரும் நினைவிருக்காது துணைவருக்கு. ஒரு முறை வழக்கமான தொலைக்காட்சி தொடரை ஒரு நாள் பார்க்க முடியாமல் போயிற்று. துணைவரிடம் ‘என்ன ஆச்சு?’ என்றேன்.
‘ஒண்ணும் ஆகலை. அவ இருக்கால்ல… இவளோட வீட்டுக்கு அவ வரா. இவளோட அம்மா அவளைப் பத்தி எதோ சொல்ல…இவளுக்கு கோவம் வந்து…இவளோட ஆம்படையான் அவளை திட்ட….’
அடுத்த வாரம் நானே பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி விட்டேன்!
மருத்துவரும் எங்களுடன் கூட சிரித்து விட்டு ‘உட்கார்ந்த இடத்திலேயே தூங்குகிறாரா?’ என்று அடுத்த கேள்வி கேட்டார்.
‘பின்ன? உட்கார்ந்த இடத்தில் தான் தூங்குவார்.  தொலைக்காட்சி சத்தம் தான் தாலாட்டு. தொலைக்காட்சியை நிறுத்தினால் அடுத்த நொடி எழுந்து விடுவார். அத்தனை மின் விளக்குகளும் எரிய…தூங்கினால் தான் உண்டு. படுத்தால் தூக்கம் போய் விடுமே…!’
மருத்துவர் வாய் விட்டு சிரித்தார். ‘நீங்கள் இப்படி பேசினால்…..’
‘உங்களுக்கு நோயாளிகள் குறைந்து விடுவார்கள்….’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.
அடுத்த வாரம். மருத்துவ மனை செல்ல லிப்ட் அருகே போனோம். வா.து. மூக்கை இழுத்து இழுத்துப் பார்த்து விட்டு, ‘ஏதோ பர்னிங் ஸ்மெல்….!’ என்றார்.
‘ப்ரைன் ஸ்கேன் தேவை இல்லை….யு ஆர் பர்பெக்ட்லி ஆல்ரைட்’ என்றேன் நான்.
மருத்துவர் நான் சொன்னதை ரசித்துவிட்டு ‘எதற்கும் ஈ.என்.டி – யை பாருங்கள்’ என்றார்.
ஈ.என்.டி நிபுணர் பல்வேறு நிலைகளில் துணைவரை படுக்க வைத்து, எழ வைத்து…..  ‘ஒன்றுமில்லை…. காதுக்குள் இருக்கும் திரவத்தில் ஏதேனும் குறை இருக்கலாம். காதுக்குள் சிறிது மெழுகு சேர்ந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு இந்த மருந்தைப் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் காதுகளை சுத்தம் செய்யலாம்’ என்று கூறி அனுப்பினார்.
வீட்டிற்கு வந்தோம். வா.து. சொன்னார்.
‘கண்ணிற்கு மருந்து காலை 8 மணிக்கு. கொஞ்ச நேரம் கழித்து காதிற்கு மருந்து போடு’ என்றார்.
நான் சிரித்தேன். ‘பழைய வண்டிகளுக்கு எண்ணெய் போட்டு ஓவர்ஹால் செய்வது போல  ஒரொரு உறுப்புக்கும் மருந்து போட்டு சரி செய்து கொள்ள வேண்டும் – வயதானால்….’ என்றேன்.
வாழ்க்கை துணைவரும் கூடவே சிரித்தார்
வயதுடன் கூட நகைச்சுவையும் கூடினால் நல்லதுதானே?
நலம் (நான்), நலம்(ஆகத்) தானே நீயிருந்தால்!

செவ்வாய், 27 நவம்பர், 2012

என்னுடைய இன்னமுதே....!


 இதுவும் திருக்கண்ணபுரம் பற்றிய பதிவு தான்.
‘நாங்கள் போனதில்லை’ என்று பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. அதனால் இந்த இரண்டாவது பாகம்.
மாயவரம் என்னும் மயிலாடுதுறைக்குப் போய் அங்கிருந்து நாகபட்டினம் போகும் பேருந்தில் போகலாம்.
இன்னொரு வழி. திருவாரூரிலிருந்தும் வரலாம். உங்கள் பக்கம் அதிருஷ்டம் இருந்தால் திருக்கண்ணபுரம் உள்ளேயே வரும் பேருந்தும் கிடைக்கலாம் திருவாரூரிலிருந்து!
திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இடது பக்கம் போனால் திருப்புகலூர். வலது பக்கம் திருக்கண்ணபுரம்.
எழுதிய அளவு அத்தனை சுலபமல்ல திருக்கண்ணபுரம் சென்று அடைவது.
பேருந்து செல்லும் முக்கிய பாதையிலிருந்து 3 அல்லது 4 கிலோமீட்டர் உள்ளே நடக்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உங்களை வரவேற்பது காவிரி ஆறு. நீரில்லாத ஆறு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் நிறைய நீர் ஓடியிருக்க வேண்டும். ஆற்றின் மேல் இருக்கும் பாலம் இதற்கு அத்தாட்சி!
‘எனக்கு கல்யாணம் ஆகி – அம்பது வருடம் முன்னால – திருக்கண்ணபுரம் வந்தேன். அப்போ ஆத்துல நிறைய தண்ணி. அப்போ பாலம் இருக்கல. மாட்டு வண்டில வந்து அந்தப் பக்கக் கரைல இறங்கினோம். மாடுங்க தண்ணிய பார்த்து மிரண்டுதுங்க. அப்பறம் எல்லோரும் இறங்கி சாமான் செட்டல்லாம் எடுத்துண்டு ஆத்த கடந்து வந்தோம்.’ என்று ஊருக்குள் நான் பார்த்த ஒரு பெண்மணி கூறினார்.
அவர் அப்போது பார்த்த திருக்கண்ணபுரம் ரொம்பவும் மாறவே இல்லை என்றே கூறலாம். பலர் ஊரை கிட்டத்தட்ட காலி பண்ணிக் கொண்டு பட்டணம் பார்க்கப் போய் விட்டார்கள். பல வீடுகள் விற்பனைக்குத் தயார்.
‘டீவி (கேபிள் தொடர்புடன்), ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, கெய்சர் எல்லாம் இருக்கு. கரண்ட்டு தான் இல்லை….’ சிரித்துக் கொண்டே நாங்கள் எப்போதும் தங்கும் வீட்டின் சொந்தக்காரர் திரு ரவியின் மனைவி திருமதி கீதா கூறினார்.
எப்படி இங்கு இருக்கிறார்கள் என்று தோன்றும்.
‘பெருமாள் இருக்கும்போது வேறென்ன வேண்டும்?’
யோசிக்க யோசிக்க இன்னும் நிறைய எழுத வேண்டும் போல இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்… கணபுரத்தென் கருமணியை…..

நானும் என் மொழிப் புலமையும்


தலைப்பை படித்தவுடன் நானும் நமது முன்னாள் பிரதமர் (17  மொழிகளில் மௌனம் சாதிப்பவர் என்று திரு மதன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்!) திரு நரசிம்மராவ் மாதிரி பன்மொழி புலமை உடையவள் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பாளி அல்ல!
திரு அப்பாதுரை சொன்னது போல ஆங்கிலத்தையும் தமிழில் கற்றவள் நான். அந்த காலத்து வழக்கப்படி என் அக்காவின் வழியில் SSLC முடித்தவுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
ஒரு அலுவலகத்தில் வேலையும் கிடைத்து, 1971 ஜூன் 2 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன். நேர்முக தேர்வில் எனது ஆங்கில அறிவு தடையாக இல்லை. ஆனால் போகப் போக,  வெறும் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் மட்டுமில்லாமல் தொலைபேசிக்கும் பதில் சொல்லவேண்டும் என்று வந்தபோது ரொம்பவும் தவித்தேன். ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது.
என் அப்போதைய பாஸ் கொஞ்சம் முரடன். அவனைப் பார்த்தாலே பயமாக இருக்கும். ‘sslc – வரைக்கும் ஆங்கிலம் படித்திருக்கிறாய் இல்லையா? பேசு!’ என்பான். கடிதங்கள் எழுதுவதிலேயோ, வரும் கடிதங்களுக்கு பதில் எழுதுவதிலேயோ எனக்கு எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை. பேசுவதற்குத் தயங்கினேன்.
இன்னொரு பிரச்சினை என் பாஸ்- களின் பெயர்கள்! நான் பொதுமேலாளருக்கு உதவியாளியாக இருந்துபோதும் சேர்மன், மானேஜிங் டைரக்டர் என்று எல்லோருக்கும் வரும் தொலைபேசி அழைப்புகளை பெற்று அவர்களுக்கு தொடர்பு கொடுக்கும் வேலையையும் செய்ய வேண்டி வந்தது.
எனது நேர் பாஸ் பெயர் நடராஜ். சேர்மன் எதிராஜ். மானேஜிங் டைரக்டர் (சேர்மனின் தம்பி) நாகராஜ். சேர்மனின் பிள்ளை ஹரிராஜ்!
முதலே ஆங்கிலம் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஒரேமாதிரியான பெயர்களும் சேர்ந்து என்னைபோட்டுக் குழப்பியதில் (நான் என் ஆங்கிலத்தில் கவனம் செலுத்துவேனா, பெயர்களை கவனிப்பேனா?) இந்த ராஜ்-க்கு வரும் அழைப்பை அந்த ராஜ்-க்கும், இளைய  ராஜ்-ஜின் பெண் தோழியின் அழைப்பை அவனது அப்பாவிற்கும் மாற்றி மாற்றிக் கொடுத்து……
இதெல்லாம் நடந்து சிறிது காலம் ஆயிற்று. ஒரு நாள் காலை எனது நேர் பாஸ் அலுவலகத்திற்கு வந்தவன் ஏதோ அவசர அழைப்பு வர தலைமை அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டான். தலைமை அலுவலகம் பாரி முனையில். நான் வேலை பார்த்தது தொழிற்சாலை – திருவேற்காடு பக்கத்தில். இனி இவன் எங்கே திரும்பி வரப் போகிறான் என்ற தைரியத்தில் தட்டச்சு இயந்திரத்திற்கு உறையைப் போட்டு மூடி, ஆனந்தமாக கையோடு எடுத்துப் போன ஆனந்த விகடனில் மூழ்கினேன்.
நிஜமாகவே மூழ்கிப் போனவள் பாஸ் வந்ததையே பார்க்கவில்லை. ஏதோ ஃபைலை எடுத்துப் போக திரும்பி வந்திருக்கிறான். எனது அறையில் தான் ஃபைல் ராக் இருக்கிறது.
‘ரஞ்ஜனி…!’ அவனது இடி முழக்கம் கேட்டு ஆ. வி. யில் மூழ்கி போனவள் திடுக்கிட்டு எழுந்தேன்.
கையில் ஆ.வி!
என் கையிலிருந்த ஆ.வி.யை ஒரே பிடுங்காகக் பிடுங்கி இரண்டாகக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டான்!
(அப்போதெல்லாம் ஆ.வி. குண்டு புத்தகமாகவே வரும். இவன் எப்படி ஒரே தடவையில் இரண்டாகக் கிழித்தான் என்று எனக்கு இன்னும் ஆச்சரியம் தான்!)
‘காச் மூச் என்று கத்த ஆரம்பித்தான். சாரம் இதுதான்: உன்னை ஆங்கிலம் கற்க சொன்னால் தமிழ் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்….. இன்னொரு தடவை நீ தமிழ் புத்தகம் படிப்பதைப் பார்த்தால்….என்ன நடக்கும் தெரியுமா?’
(என்ன நடக்கும் இதேபோல கிழித்துப் போடுவாய்!)
பதிலே பேசவில்லை நான்.
‘உனக்கு வேலையில்லை, ‘போர்’ அடிகிறது என்றால்…..’ என்று சொல்லியபடியே அவனது அறைக்குள் போய் அவனது மேஜை டிராயரில் இருந்து கேம்ப்ரிட்ஜ் அட்வான்ஸ்ட் டிக்ஷனரியை கொண்டு வந்து என் மேஜை மேல் போட்டான்.
‘இதைப் படி…வாழ்வில் உருப்படுவாய்….என்று சொல்லியபடியே திரும்ப காரில் ஏறிக் கொண்டு போய்விட்டான்.
வீட்டிற்குப் போய் என் அப்பாவிடம் இனி ஆபீசுக்குப் போகவே மாட்டேன் என்று நடந்ததை சொல்லி என் பாஸ்-ஐ கன்னாபின்னாவென்று (இடியட், ஸ்டுபிட்….என்று எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்!) திட்டித் தீர்த்தேன்.
‘சரி தூங்கு, காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்றார் அப்பா.
அடுத்த நாள் கலையில் வழக்கம்போல அப்பா என்ன சீக்கிரமே எழுப்பினார். எங்கள் வீட்டிலிருந்து பூந்தமல்லி ஹை ரோட் வரை நடராஜ சர்வீஸ். அங்கிருந்து அலுவலகத்திற்கு பேருந்து. அதனால் 8.30 மணி ஆபிசுக்கு சீக்கிரமே எழுந்து 7 மணிக்கு கிளம்ப வேண்டும்.
‘நான்தான் போகப் போவதில்லையே!’ என்றேன்.
‘யார் மேல தப்பு? நிதானமா யோசி. உன் மேல தப்பு என்றால் உடனே கிளம்பு. பாஸ் மேலே என்றால் போக வேண்டாம்’ என்றார் அப்பா.
அடுத்த அரை மணியில் கிளம்பி அலுவலகம் போய் சேர்ந்தேன். என் பாஸ்-க்கும் என்னைத் திட்டியது ஒரு மாதிரி இருந்திருக்க வேண்டும். மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை. என்னைக் கொஞ்சம் கருணையுடன் நடத்தத் தொடங்கினான்.
நானும் அன்றிலிருந்து அவன் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு டிக்ஷனரி படிக்க ஆரம்பித்தேன். பெரிய ஆங்கில அகராதியில் ஒரு வார்த்தைக்கு வெறும் அர்த்தம் மட்டும் கொடுத்திருக்க மாட்டார்கள். அதை வைத்து எப்படி வாக்கியம் பண்ணுவது என்றும் உதாரணங்கள் கொடுத்திருப்பார்கள். அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
இன்றும் எனக்கு டிக்ஷனரி படிப்பது மிகவும் விருப்பமான பொழுது போக்கு.
இன்றைக்கு என் மாணவர்கள் என் ஆங்கிலத்தை மதிக்கிறார்கள் என்றால் எனக்குப் பிடிக்காத அந்த பாஸ் தான் காரணம்.
நாளை நானும் கன்னடமும்……!

சனி, 17 நவம்பர், 2012

கணபுரத்தென் கருமணியே....!


சுமார் 30 வருடங்களுக்கு முன் ஒரு நல்லிரவில் முதல் முறையாக திருக்கண்ணபுரம் சென்றோம். அங்கு யாரையும் எங்களுக்குத் தெரியாது – தலைப்பில் சொன்னவரைத் தவிர!

கோவில் முன்னே மிகப் பெரிய குளம். குளத்தின் நீள அகலத்தைவிட என்னைக் கவர்ந்தது குளம் நிறைய, காற்றினால் சிறுசிறு அலைகளுடன் அலைபாய்ந்து கொண்டிருந்த நீர்!

‘வா, வா..... எத்தனை வருடமாகச் சொல்லிக்கொண்டே இருந்தாய் – திருக்கண்ணபுரம் போகவேண்டுமென்று?’ என்று அழைப்பதுபோல இருந்தது. சிலுசிலுவெனக் காற்று தண்ணீரின் வாசனையையும் சுமந்து வந்தது. எப்படி இத்தனை தண்ணீர்?

‘கோவிலுக்குள் போலாமா? அப்புறம் மூடி விடுவார்கள்.....’ கணவரின் குரல்.

கோவிலுக்குள் இன்னொரு ஆச்சரியம்: கருத்த திருமேனியுடன் நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில். அறையில் சார்த்திய சிவந்த ஆடை....’அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்ற தாம் என் சிந்தனையே....’
என்ன ஒரு காம்பீர்யம்! முதல் பார்வையிலேயே மனம் கொள்ளை போயிற்று.

மிகப்பெரிய கோவில். உள்ளே யாரும் இல்லை. நாங்களும் பெருமாளும்தான்!

உற்சவர் செளரிராஜன். தன் அடியவரைக் காப்பாற்ற கூந்தல் வளர்த்ததாக கதை. சௌரிகொண்டையுடன் பின்னழகும் நம்மைக் கவரும். ரொம்பவும் புராதனத் திருமேனி. வலது திருக்கையில் ப்ரயோகச் சக்கரம்.

கோவில், கோவில் முன்பு பெரிய நித்ய புஷ்கரிணி. நான்கு புறமும் மட விளாகம் என்னும் அக்ரஹாரம். அவ்வளவு தான் ஊர்!

முதல் தடவை சென்று வந்தபின் நிறைய தடவைகள் போய் வந்தோம். இந்த வருடம் இரண்டு முறை போய் வந்தாயிற்று.

உற்சவத்தின் போது கொஞ்சம் வெளி ஆட்களைப் பார்க்கலாம். பெருமாள் வருடத்திற்கு ஒரு முறை திருமலைராயன் பட்டினம் போய் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

ஒவ்வொரு முறை சென்று திரும்பும்போதும் மறுபடி வர வேண்டும் என்றே தோன்றும்.

போனதடவை சென்றபோது எங்கள் நண்பர் சொன்னார்: ‘இங்க வந்துடுங்கோ, தினமும் கோவிலில் உட்கார்ந்து நாலாயிரம் சேவிக்கலாம் அவன் காது குளிர... ஆனந்தமாகக் கேட்பான்.’

‘நம்மால இங்க வந்து இருக்க முடியாது. ஆஸ்பத்திரி வசதியே கிடையாது.. ஏதாவது ஆச்சுன்னா...’

என் கணவர் ரொம்ப ப்ராக்டிகல்.

எங்கள் ஆடிட்டர் நண்பர் சொன்னார்: ‘ஏதாவது ஆச்சுன்னா போய்ச்சேர வேண்டியதுதான். எதுக்கு ஆஸ்பத்திரி?’

போனதடவை திருக்கண்ணபுரம் போயிருந்தபோது ஒரு மாமா மாமி வந்திருந்தார்கள். ‘ஒரு வருஷம் ஸ்ரீரங்கத்துல இருக்கப் போறோம். அத்தனை உத்ஸவமும் சேவிக்க’ என்றார் மாமி.

எனக்குக் கூட ஆசைதான். இந்த முறை போயிருந்த போது மறுபடி அதே மாமா, மாமி. ‘ஸ்ரீரங்கத்தில இருந்துட்டு, கும்மோணத்துலேயும் ஒரு வருஷம் இருந்தாச்சு,’ என்ற மாமியைப் பார்த்து ரொம்பப் பொறாமையாக இருந்தது.

என்றைக்கு நான் இதைபோல கிளம்பப் போகிறேன்?

திருக்கண்ணபுரத்தில் கேட்ட திண்ணைப் பேச்சு:
ஸ்ரீரங்கத்தில் பிறக்கணும். திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கணும். ரொம்ப விசேஷம்.

யார் செய்த புண்ணியமோ, ஸ்ரீரங்கத்தில் பிறந்து விட்டேன்.

‘சரணமாகும் தன தாளடைந்தார்கெல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’

என் ஆசையை நிறைவேற்றுவானா?


தொடர் பதிவு : என்னுடைய இன்னமுதே!


புதன், 14 நவம்பர், 2012

‘அத்தே! நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்...!’
‘எனக்கு தொலைக்காட்சியில் விளம்பர இடைவெளிதான் பிடிக்கும்....’
‘என்னங்க! இப்படி சொல்லுறீங்க?’
‘அப்பத்தானே என் பெண்டாட்டி எனக்கு சாப்பாட்டு போடுறா....’
பலமுறை கேட்ட ஜோக்.


பண்டிகை சமயங்களில் முழு சமையலையே முடித்து விடலாம் – விளம்பர இடைவெளிகளில்!

அலுப்புத் தட்டும் விளம்பரங்கள்!

இன்னொரு விஷயத்திற்காகவும் நான் விளம்பரத்திற்கு விரோதி. இந்த சானலில் விளம்பரம் என்று அடுத்த அடுத்த சானல்களுக்குப் போய், முதலில் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி எதுவென்று மறந்துவிடும் அல்லது முடிந்து விடும்!


இப்போதெல்லாம் ரிமோட் என் கையில் இருந்தால்தான் தொலைக்காட்சி பார்ப்பது என்று தீர்மானம் செய்து விட்டேன்.


காலை 6.30 (ஸ்ரீ ராமபிரான் கதையமுதம்)  மாலை 6.30 (ஸ்ரீ கண்ணபிரான் கதையமுதம்)  இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் போது மட்டும் தான் எனக்கு ரிமோட் வைத்துக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். அதாவது ரிமோட்டினால் எனக்கு பயன் ஏதும் இல்லாத போது!


ஓர் விஷயத்திற்கு பொதிகை தொலைக்காட்சியைப் பாராட்ட வேண்டும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் இடையில் விளம்பரங்கள் கிடையாது. மிகப் பெரிய ஆசுவாசம்!

இந்த நிகழ்ச்சிகள்  ஆரம்பிப்பதற்கு முன் வரும்  விளம்பரத்தின் வார்த்தைகள்தான் இந்தப் பதிவின் தலைப்பு.


இதோ முழு விளம்பரம்:

ஒரு பெண் வேகவேகமாக பாத்திரம் துலக்குகிறாள்; துணி துவைத்து காயப் போடுகிறாள்; வீட்டைக் கூட்டுகிறாள்; ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் மாமியாரின் கடுகடு பார்வை அவளின் ஒவ்வொரு அசைவையும் தொடர்கிறது.


எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு ‘அத்தே! நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்...!’ என்கிறாள்.


‘ஸ்கூலுக்கா? கல்யாணம் கட்டிக்கிட்டு வரச்சே என்னமோ சொன்ன, படிச்சிருக்கேன்னுட்டு....?’
தலையை ஒரு நொடிப்பு நொடித்து அத்தை கேட்கிறாள்.

மருமகள் ஒரு சிறிய புன்சிரிப்புடன் பதிலளிக்கிறாள்: ‘அட அத்தே! நா பார்ம் ஸ்கூலுக்குப் போறேன்....விவசாயத்துல புதுசு புதுசா கத்துக்க......’


உடனே விவசாயிகளுக்காக பார்ம் ஸ்கூலில் என்னென்ன சொல்லித் தருகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். முடிந்தவுடன்....


‘நீங்களும் வாங்க அத்தே! குறைந்த செலவில்......’ மருமகள் ஆரம்பிக்க ‘நிறைந்த லாபம்...’ என்று ஒரு புன்னகையுடன் அத்தை முடிக்கிறார்.

இன்னொரு விளம்பரம்:

ஒரு விவசாயி. கைபேசியில் சிரித்து சிரித்து பேசிக்கொண்டே வருவார். அவரது மனைவி பார்த்துக் கொண்டே இருப்பார்.

ஒரு வழியாக பேசி முடித்து விட்டு மனைவி பக்கத்தில் வந்து அமருவார்.

‘இவ்வளவு நேரம் சிரிச்சு சிரிச்சு யார் கிட்ட பேசிகிட்டு இருந்தீங்க?’

‘விவசாயிகள் கால் சென்டர்ல பயிர் பாதுகாப்பு பத்தி பேசிட்டு இருந்தேன்...’

‘காலேல சரி, மதியம் கூடவா.....?

‘ஆமா....விவசாயிகள் கால் சென்டர் 24 மணி நேரமும் திறந்திருக்கும்......’

‘ஞாயிற்றுக் கிழமை கூடவா?’

‘ஆமா, வருஷம் 365 நாளும் உண்டு....’

‘அப்படியா...? இத்தனை செலவு யார் கொடுப்பாங்க?’

‘அரசாங்கம் தான்...........ஆமா...நீ என்ன நெனச்சே.....?

‘நான் என்னமோன்னு நெனேச்சேன்......’ மனைவியில் குரலில் ஒரு நிம்மதி.

கணவன் மனைவி இருவரும் வாய் விட்டு சிரிப்பார்கள்.

விவசாயிகள் கால் சென்டரில் இருப்பவர்களுடன் சிரித்து சிரித்து (!!) பேச முடியுமா என்று தோன்றினாலும் பெரிய பெரிய பிராண்ட் பொருள்களுக்கு காட்டப்படும் விளம்பரங்களின் அசட்டுத் தனங்கள் (நீ பஜ்ஜி சாப்பிடும்மா... ) இதில் மைனஸ்.

மூன்றாவதாக ஒரு சாமியார்: விவசாயிகளுக்கு  பயிர் விளைச்சல் பற்றியும், பாதுகாப்பு பற்றியும் சாமியார் சொல்வதெல்லாம் பலிக்கிறதாம். ஒரு நாள் சாமியாரின் குட்டு வெளிப்பட்டது! (இந்த சமயத்தில் சாமியார் தொலைபேசியில் - விவசாயிகள் கால் சென்டரில் விவரங்கள் கேட்டுக் கொண்டே தன் சாமியார் ‘விக்’ கை எடுப்பார். வாசலில் இரண்டு போலீஸார்கள்!) நல்ல காமெடி!


போலித்தனங்கள் இல்லாமல் வெகு இயற்கையாக அமைந்திருக்கும் இந்த விளம்பரங்கள்.
இதில் நடித்திருப்பவர்கள் வழக்கமான நடிகர்கள் இல்லை என்று நினைக்கிறேன்.


ஆண்கள் ஷேவ் செய்வது பெண்களுக்காகவே என்பது போலவும், பெண்களின் சிகப்பழகு கிரீமை எடுத்துக் கொண்டு ஆண் ஓடுவது போலவும், இளம் பெண்களை கைகளைத் தூக்குங்கள் என்று சொல்லுவதும் லெட்ரீன் கம்மோடை வலது கையால் தடவிப் பார்த்து ஆனந்திக்கும் (!?) இல்லத்தரசியும் - விளம்பரம் உருவாக்குபவர்களுக்கு கிரியேட்டிவிட்டி என்பதே இருக்காதோ என்று நினைக்க வைக்கும்.


மருத்துவ மனையில் உடல் முழுக்க கட்டுகளுடன் படுத்திருக்கும் ஒருவரை தூக்கி நாற்காலியில் உட்கார வைத்து விட்டு தொலைக்காட்சி பார்க்கும் இளைஞன், ‘உங்கள் சந்தோஷத்தை திறவுங்கள்’ என்கிறான் கோகோகோலா பாட்டிலைத் திறந்தபடி!


கற்பனையை மூட்டை கட்டிப் போட்டு விட்டு அல்லது கற்பனைக் குதிரையை கன்னாபின்னாவென்று தாறுமாறாக ஓடவிட்டு இந்த விளம்பரங்களை எடுத்து இருப்பார்களோ என்று தோன்றும். (சந்தோஷத்தைத் திறக்க கற்பனையை மூடி விடு!)


இன்னொரு விளம்பரம் வொண்டர் கேக்-கிற்கு வருவது. அதில் வரும் சின்னப்பையன் இப்போது வளர்ந்து திருமணம் ஆகி அப்பா ஆகி இருப்பான். வருடக்கணக்காக அதே சின்னப் பையனையும், அதே ‘அ..ஹ்..ஹஹா.......வொண்டர் கேக் ...’ பாடலையும் மாற்றாமல் பயன்படுத்தி வருகிறார்கள். கடைகளில் போய் வொண்டர் கேக் இருக்கிறதா என்று கேட்க பயம்.  எப்போதோ தயார் செய்த விளம்பரம் போல எப்போதோ தயார் செய்த அதே கேக்கைக் கொடுத்தால் என்ன செய்வது என்று!


நான் ரசிக்கும் விளம்பரங்கள் பொதிகை தொலைக்காட்சியில் மட்டுமே வரும்; அதுவும் நான் சொன்ன நேரங்களில் மட்டுமே!செவ்வாய், 13 நவம்பர், 2012

கங்கா ஸ்நானம் ஆச்சு!


‘ஸ்ரீராமா ஜெயஜெயா.....சீதே மனோஹரா ....
காருண்ய சாகரா கருணாநீ ஜெயஜெயா...’

விடியற்காலை 5 மணிக்கே (!) எழுந்து பிள்ளை மாட்டுப் பெண்ணை மணையில் உட்கார வைத்துப் மேற்சொன்ன பாட்டைப் பாடி நலங்கு இட்டு.....தலைக்கு எண்ணெய் வைத்து...
முதலில் இந்தப் பாட்டை பாடி பிறகு இதன் தமிழ் பதிப்பை பாடுவது என் வழக்கம்.
மேலே சொன்ன பாட்டோட தமிழாக்கம் – சம்ஸ்க்ருத / தமிழறிஞர்கள் கோபிக்க வேண்டாம்.
முழுக்க முழுக்க வேடிக்கை!


சீராமா, மொ(மி)ளகாமா – சேர்த்தரைச்சா விழுதாமா
காய்ச்சினா ரசமாமா – கடுப்பு வலிக்கு இதமாமா!       
ஒரிஜினல் பாட்டை பாடும் அதே ராகத்தில் இதைப் பாடலாம்!

கங்கா (காவேரி) ஸ்நானம் செய்து புதுசு கட்டிண்டு பட்டாசு வெடிக்க கீழே போனோம்.
மாடி வீட்டு ஸ்ருதி நான் வருவதைப் பார்த்துவிட்டு, ‘பாட்டி, ஹேப்பி தீபாவளி’ என்றது. 3 வயதுக் குழந்தை. அதை அப்படியே கட்டிண்டு, ‘ஹேப்பி தீபாவளி’ என்றேன்.
ஸ்ருதியின் அண்ணா ராகுல் வாசலில் வெடி வெடிச்சுண்டு இருந்தான். ஸ்ருதி காதைப் பொத்திண்டு, ‘எனக்கு வெடின்னா ரொம்ப பயம்’ ன்னு காதைப் பொத்திக்கொண்டு எங்கிட்ட வந்து ஒட்டிண்டு நின்னுது.
குழந்தைகளை அணைப்பது என்பது எத்தனை பெரிய இன்பம்! நம் குழந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ‘உன்னைத் தழுவிடிலோ... கண்ணம்மா..உன்மத்தம் ஆகுதடி!’
என் பிள்ளை என்னிடம் ‘நீ ஆட்டம்பாம் வைக்கிறயா?’ என்றான்.
‘சரி’ என்று எழுந்தேன்.
‘பாட்டி...! நீ வெடிப்பியா?’ என்றது ஸ்ருதி.
‘ம்ம்ம்ம்.......’ என்றபடியே வெடி வெடித்து விட்டு வந்தேன்.
‘நீங்க செம பாட்டி....!’ என்றான் ராகுல்.
கங்கா ஸ்நானம் ஆச்சு!
பதிவுலக வாசகர்களுக்கும், பதிவாளர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! posted on 13.11.12