வியாழன், 24 ஏப்ரல், 2014

வோட்டு போட்டாச்சு!


வோட்டு போட்டாச்சு என்று சந்தோஷமாகச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் கர்நாடகாவில் மொத்த வாக்குப்பதிவுகள் 65% தான். மக்களின் தேர்தல் குறித்த அலட்சிய மனப்பான்மை தொடருவது வருத்தத்தைக் கொடுக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூரு நகரில் குறைவான வாக்குகள் தான் பதிவாகியிருக்கின்றன என்பது பெரிய குறைதான். சென்ற முறையை (44%) விட இந்த முறை பரவாயில்லை என்பது சரியான கருத்து இல்லை. 

செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் உங்கள் பெயர் வாக்குப் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபாருங்கள் என்று பலமுறை அறிவிப்பு வந்தும் இணையம் மூலமும் இதைச் செய்யலாம் என்ற வசதி இருந்தும் பொதுமக்களின் மெத்தனம் வாக்குச் சாவடி வாசலில் நின்று கொண்டிருந்தவர்களின் பேச்சிலிருந்து தெரிந்தது. பலருடைய பெயர்கள் பட்டியலில் இல்லை. சிலரிடம் அடையாள அட்டை இல்லை. வீடு மாற்றிய விவரம் கொடுக்கவில்லை போன்ற சாக்குபோக்குகள் காதில் விழுந்த வண்ணம் இருந்தது.


தேர்தல் தினங்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே இங்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. தேர்தல் தேதியை மாற்றி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டும், ஏனோ தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. ஏப்ரல் 14 திங்கள் அம்பேத்கர் தினம். விடுமுறை. அதற்கும் முன் சனி ஞாயிறு விடுமுறை. 15, 16 இரண்டு நாட்கள் மட்டும் வேலை. பிறகு மறுபடி புனித வெள்ளி விடுமுறை. சென்றவார சனி, ஞாயிறு தினங்களையும் சேர்த்து, நடுவில் மேற்சொன்ன இரண்டு நாட்கள் விடுமுறையை எடுத்தக் கொண்டால் தொடர்ந்து பத்துநாட்கள் விடுமுறை. ஜாலியாக சுற்றுலா போவார்களா? வாக்களிக்க வருவார்களா? இதைத்தவிர கோடை விடுமுறையும் இங்கு மார்ச் மாதத்திலேயே தொடங்கி விடும். அம்மாக்கள் எல்லோரும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தங்கள் பிறந்த வீட்டிற்குப் போயிருப்பார்கள்.

சமீபத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல்கள் காரணமாக இந்த முறை இடது கைப்பெருவிரலில் மை தடவப்பட்டது.

இந்தத் தேர்தலில் தெற்கு பெங்களூரு தொகுதிதான் விஐபி தொகுதியாக மாறி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. ஆதார் அட்டை புகழ், இன்போசிஸ் இணை நிறுவனர், கோடீஸ்வரர் நந்தன் நிலேகனி காங்கிரஸ் சார்பில், 1996 லிருந்து ஐந்து முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கும் பாஜக பாராளுமன்ற அங்கத்தினர் திரு அனந்தகுமாரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்றால் சும்மாவா? ஆதார் திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.

குழந்தைகள் உரிமைக்காக போராடும் சமூக ஆர்வலர் திருமதி நீனா நாயக் ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டாலும் உண்மையில் திரு அனந்தகுமாருக்கும் , திரு நிலேகனிக்கும் இடையில்தான் பலத்த போட்டி.

ஐந்துமுறை தொடர்ந்து வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர், நிலேகனி இந்தமுறை அனந்தகுமாருக்கு சபாஷ், சரியான போட்டிதான். நிலேகனிக்கு மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த படித்தவர்களின் வாக்குகள் கணிசமாகக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஐந்துமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மக்கள் இப்போது அனந்தகுமாருக்கு மாற்றுத் தேடுகிறார்கள் என்கிறார் நிலேகனி.


நிலேகனிக்கும் அனந்தகுமாரை எதிர்கொள்வது கடினம்தான். அனந்தகுமார் தெற்கு பெங்களூரில் பழம் தின்று கொட்டை போட்டவர். இந்தத் தொகுதி அவரது கோட்டை என்றே சொல்லலாம். ஆதார் அட்டை காலைவாரி விட்டதில் நிலேகனியின் பெயர் கொஞ்சம் கேட்டுவிட்டது. ஆதார் அட்டையில் பதிக்கப்படும் தகவல்கள் நம் நாட்டிற்கு வெளியே சேமிக்கப்படுவது நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல என்ற வாதத்தை முன் வைக்கிறது, பாஜக.  ஆதார் அட்டையின் தோல்வியைத்தான் பாஜக கட்சியினர் நிலேகனிக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு விஷயமும் நிலேகனிக்கு எதிராக இருக்கிறது. அதாவது 1989 லிருந்து இதுவரை இந்தத் தொகுதியிலிருந்து பாராளுமன்றம் சென்றவர்கள் எல்லோருமே காங்கிரஸ் கட்சி அல்லாதவர்கள் தான்.

இந்த கடும்போட்டியை உணர்ந்து தானோ என்னவோ நிலேகனியின் மனைவி திருமதி ரோஹிணியும் கணவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கிவிட்டார். தனது கணவருக்கு பலம் சேர்க்க நடிகரும், நாடக ஆசிரியருமான திரு கிரீஷ் கர்னாட்-ஐயும் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் இந்தத் தொகுதியிலிருக்கும் படித்தவர்களின் வாக்குகள் நிலேகனிக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார் ரோஹிணி.

நிலேகனியும், ரோஹிணியும் பலவிடங்களிலும் வீதி நாடங்கங்கள் நடத்தினர். கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களைச் சந்தித்தனர். பூங்காக்கள், சேரிகள், குடியிருப்புகள் என்று ஒரு இடம் விடாமல் சென்று மக்களை சந்தித்தனர் இந்த தம்பதிகள்.

பெங்களூரு மாநகரப் பேருந்துகளிலும் தேர்தல் பிரசாரத்திற்காக பயணம் செய்தார் நிலேகனி. பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் அவலநிலையை அவர் உணர்ந்திருப்பார் என்று நம்பலாம். பேருந்துப் பயணத்தின்போது பேருந்துகளின் கண்ணாடிகளின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் பலவிதமான விளம்பரங்களும் அவரது கவனத்தை கவர்ந்திருக்க வேண்டும். இதனால் மக்களுக்கு எத்தனை இன்னல்கள் என்பதையும் நிலேகனி உணர்ந்திருப்பாரா?

நிலேகனிக்கு துணை ரோஹிணி என்றால் அனந்தகுமாருக்காக அவரது மனைவி தேஜஸ்வினி வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். வாக்காளர்கள் தேசிய அளவில் இந்த தேர்தலைப் பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் அனந்தகுமார். நாடெங்கும் வீசிக்கொண்டிருக்கும் மோடி அலையில் பயணம் செய்வதே சாலச்சிறந்தது, நாட்டிற்கு இப்போது தேவை நிலையான ஆட்சி, அந்த ஆட்சியை பாஜகவின் பிரதம மந்திரியாக அறிவிக்கப் பட்டிருக்கும் திரு மோடியால் மட்டுமே அளிக்கமுடியும் என்பதை தனது பிரச்சாரத்தில் சொல்லுகிறார் அவர்.

பெங்களூரு மத்திய தொகுதியில் நந்தன் நிலேகனியின் முன்னாள் சகா திரு வி. பாலகிருஷ்ணன் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நிற்கிறார். ஜேடி (எஸ்) சார்பில் முன்னாள் முக்கியமந்திரியும், இராமக்கிருஷ்ண ஹெக்டேயின் நெருங்கிய தோழரும் ஆன ஜீவராஜ் ஆல்வாவின் மனைவி திரு நந்தினி ஆல்வா நிற்கிறார். பாஜக சார்பில் பி.சி. மோகன், காங்கிரஸ் கட்சி சார்பில் ரிஸ்வான் அர்ஷத் ஆகியோர் நிற்கிறார்கள்.

இந்த நால்வரும் சென்ற ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்களை சந்தித்து பெங்களூரு நகரத்தின் குறைகளை விவாதித்தனர். ஆமை போல நகரும் போக்குவரத்து, பொறுமையை சோதிக்கும்  போக்குவரத்து நெரிசல், வளர்ந்துகொண்டே போகும் நகரத்திற்கு தேவையான சுத்தமான குடிநீர் வசதி, தினந்தோறும் மலைபோல குவியும் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை என்று பலவும் விவாதிக்கப்பட்டன.


என்ன நடந்து என்ன பயன்? நமது வாக்குகள் மூலமே நம்மால் நமக்கு வேண்டியதை பெற முடியும் என்பதை மக்கள் உணர மறுக்கிறார்களே!ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

வியக்க வைக்கும் இந்திய தேர்தல்
4tamilmedia.com - தளத்தில் 11.4.2014 அன்று வெளியான கட்டுரை. 
இந்தியாவில் தேர்தல் என்பது இமாலய நிகழ்வு. இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதியிலிருந்து மே மாதம் 12 ஆம் தேதி வரை 7 தவணைகளாக நடக்கும் இந்தத் தேர்தலில் சுமார் 815 மில்லியன் மக்கள் வாக்களிக்கிறார்கள். இதுதான் உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நிகழ்ச்சி. 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 100 மில்லியன் மக்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். இத்தனை பெரிய தேர்தலுக்கு ஆகும் செலவும் இதை ஏற்பாடு செய்வதில் இருக்கும் சிக்கல்களையும் யோசிக்கும்போது, தேர்தல் அமைதியாகவே நடந்து முடிகிறது என்பது வியப்பான ஒன்று. அரசியல்கட்சிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அளவுகோல்களை தாண்டி செலவழித்தாலும், இந்தியாவில் தேர்தல்கள் சுத்தமாகவே நடக்கின்றன -  அதாவது முடிவுகளில் மோசடி நடப்பதில்லை.

வாக்குப்பதிவுகள் மேற்கத்திய ஜனநாயக நாடுகளைப் போலவே இங்கும் இருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு நடக்கும் இந்த 16வது தேர்தலில் சுமார் 60-70% வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மாவோயிஸ்டுகள், மற்ற பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் கூட மிதமிஞ்சிய கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாவதில்லை. இந்தியாவின் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, நேபால், ஏன் மாலத்தீவுகளில் கூட நடைபெறும் ரத்தக்களறியான தேர்தல்களை ஒப்பிடும்போது, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் அமைதியானவையே.

இதையெல்லாம் பார்க்கையில் இந்த வெற்றிகரமான நிகழ்வு கொஞ்சம் புதிராகவே இருக்கிறது. இந்தியர்களை அவர்களது மாநிலத்தின் திறனைப்பற்றிக் கேளுங்கள்: அவர்களின் பதில் நிராகரிக்கப்பட வேண்டியதாகவே இருக்கும். அரசு நிகழ்ச்சிகள் எல்லாமே மோசமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.  அவ்வளவு ஏன்? ஒரு அரசு பள்ளியையோ, அரசு மருத்துவ மனையையோ உதவிக்கு அணுகமுடியுமா? ஒரு காவல்காரரிடம் ஒரு உதவி கேட்கமுடியுமா? உணவு மான்யத் திட்டங்களை நம்ப முடியுமா? எங்கு பார்த்தாலும் ஊழல், குப்பை, எங்குபோனாலும், எந்த வேலையானாலும் தாமதம், நிர்வாக சீர்கேடு என்று எல்லாமே மனதை அயர்த்துவது நிஜம். பொதுத்துறை எதுவானாலும் இந்த நிலை தான். உதாரணமாக இந்திய கப்பற்படையின் நிலையைப் பாருங்கள்.  தோல்விகளாலும், உயிர்களை பலி கொண்ட விபத்துகளாலும் எப்படியெல்லாம் பாதிப்படைந்திருக்கிறது. நீண்ட நாட்களாக பணமுதலீடு இல்லாமல் இயங்கும் ரயில்வே துறை, மக்களுக்கு தேவையான சாலைகள், மின்சார இணைப்புகள்  இவற்றை அமைத்துத் தரமுடியாத மாநில அரசுகள். இத்தனை பின்னடைவுகள் இருந்தும், இந்திய தேர்தல்கள் எப்படி கச்சிதமாக நடந்து முடிகின்றன?

முதல் விடை: இந்திய தேர்தல்கள் குறுகிய காலக் கவனத்துடன் ஒரு சிறிய காலத்திற்கு நடைபெறுவதுடன், மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதைப்போன்ற சூழ்நிலைகளில் அரசு நிர்வாகிகள் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள். இதற்கு முதல் உதாரணம் 10 வருட தேசிய ஜனத்தொகை கணக்கெடுப்பு.  இன்னொரு உதாரணம் இப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல் கணக்கெடுப்பு. சுமார் 600 மில்லியன் மக்களின் கண்கள், கை ரேகைகள் ஆகியவற்றை சேகரிப்பது சும்மாவா? இந்தத் தகவல்களை நல்லமுறையில் பயன்படுத்துவார்களா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இத்தனை தகவல்களும் தனியார் நிறுவனங்களால் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன என்பது.

இரண்டாவது விடை: அரசு அதிகாரிகள் தேர்தல்களை நடத்தி முடிப்பதை   மிகப்பெரிய கௌரவமான வேலையாக நினைக்கிறார்கள். இந்த சமயத்தில் இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இந்திய வான்வெளி ஆராய்ச்சியும் இதைப்போன்ற ஒன்றுதான். வியக்கத்தக்க வகையில் குறைந்த செலவில் சமீபத்தில் செலுத்தப்பட்ட ‘மங்கள்யான்’ இதற்கு உதாரணம். இதேபோல சமீபத்தில் ‘இளம்பிள்ளைவாதத்திலிருந்து விடுதலை’ என்று இந்திய பொதுநலத்துறை அறிவித்ததையும் இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம்.

மூன்றாவது விடை:. ரிசர்வ் வங்கி போல இந்திய தேர்தல் கமிஷனும் சுதந்திரமானது. இதன் செயல்பாடுகளில் அரசியல் தலைவர்கள் தலையிட முடியாது. அரசியல் தலையீடு, மற்றும் லஞ்சம் இல்லாத காரியங்களை அரசு அதிகாரிகள் மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் போல எப்போதும் லஞ்சம் வாங்கி மேலிடத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில் தேர்தல் அதிகாரிகள் இல்லை. தேர்தல் நடத்த போடப்படும் பெரிய பட்ஜெட் பணத்தை வேறுவழியில் செலவழிக்க முடியாது. தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்க வாய்ப்புகளும் கிடையாது.

இந்த மாதிரியான அப்பழுக்கற்ற தேர்தல் நடவடிக்கைகள் பிற அரசுத் துறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும் என்பதுடன் இதிலிருந்து நல்ல பல பாடங்களையும் படிக்கலாம். முக்கியமான பாடம் நமது இலக்கு சுலபமானதாக, நன்கு வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டியதின் அவசியம். இதை மனதில் வைத்துக்கொண்டு எளிதாக வர்த்தகம் செய்யக் கூடய இடங்களில் இப்போது இந்தியா இருக்குமிடத்தை  (134 வது இடம் 189 இடங்களில்). ஒவ்வொரு வருடமும் பத்து பத்தாகக் குறைத்துக் கொண்டு வாருங்கள் என்று அரசு அதிகாரிகளிடம் சொல்லலாம்.

இன்னொரு பாடம் செய்யும் செயல்களில் காணப்படும் வெளிப்படையின் முக்கியத்துவம். தேர்தல் அதிகாரிகளைப் போல மக்களின் தொடர்ந்த கண்காணிப்பில் இருக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளில்  அரசியல்வாதிகளால் குறுக்கிட்டு திருட்டுத்தனம் செய்ய முடியாது. தகவல் அறியும் உரிமையினால் எத்தனை கேடுகெட்ட செயலாக இருந்தாலும் வெளியே வருவது மிகப்பெரிய சிறப்பான விஷயம்.

கடைசியாக இந்த தேர்தல்களை நடத்தும் அதிகாரிகளுக்கு எல்லையில்லா அதிகாரம் கிடையாது.  யார் வாக்கு அளிக்கலாம், யார் அளிக்கக் கூடாது என்று நிர்ணயிக்க முடியாது இவர்களால். இதன் காரணமாகவே இவர்கள் திறமையாகவும் ஊழல் இல்லாமலும் செயல்படுகிறார்கள். மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கோ, ஏமாற்றுவதற்கோ இடம் கொடுக்காமல், தேர்தல்களை நல்லபடியாக நடத்தி முடிப்பது ஒன்று தான் இவர்களது.  வேலை,

இந்தமுறை யார் வெற்றிபெற்றாலும், தேர்தல் நடக்கும் முறைகளை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தியாவின் அரசு அதிகாரத்துவத்தை எப்படி கூர்மைப்படுத்துவது என்று யோசிக்கலாம்.

நன்றி: தி எகனாமிஸ்ட் பத்திரிக்கை
4தமிழ்மீடியாவிற்காக மொழியாக்கம்/ கட்டுரை வடிவம்: ரஞ்சனி நாராயணன்புதன், 9 ஏப்ரல், 2014

திருவாளர் பொதுஜனம் என்ன நினைக்கிறார்?


தேர்தல் முடிவுகள் – 2014

ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று ஒரு சொலவடை உண்டு. இந்தமுறை நம்மூரு மூன்று பட்டிருக்கிறதே! கூத்தாடியின் கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சிகளுக்கு கொண்டாட்டமோ, கொண்டாட்டம். சத்தம் தாங்கமுடியவில்லை, சாமி! எப்போது தேர்தல் முடிந்து வீடு எப்போது அமைதிக்குத் திரும்பும் என்று இருக்கிறது. அவர்கள் இருபத்துநான்கு மணிநேரம் ஒலிபரப்பினால், அதையே திருப்பித் திருப்பி 48 மணிநேரமும் வேறு வேறு சானல்களில் கேட்டால் வீட்டில் இருப்பவர்கள் எங்கு போவது? எங்கள் காதுகளைக் காப்பாற்று இறைவா!

இப்படி நொந்துகொண்டாலும், சில நகைச்சுவைகளும் இருக்கத்தான் செய்கிறது. Headlines today சானலில் வரும் So Sorry..! ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும் அவைகளின் தலைவர்களையும் சித்தரிக்கும்விதம் சுவாரஸ்யம், பலசமயம் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கிறது. வடஇந்தியாவில் இருக்கும் தேர்தல் தீவிரம் இங்கு நம் பக்கத்தில் இல்லையோ என்று தோன்றுகிறது. அந்த சானல்களில் வரும் ஆர்னாப் கோஸ்வாமி, பர்கா தத், ராகுல் கன்வல் போல ஏன் இங்கு எவரும் காணவில்லை? இங்கு நடக்கும் விவாதங்களும் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் இருக்கின்றன. என்ன காரணம்?

தேர்தல்கள் ஆரம்பித்துவிட்டன. முடிவுகள் எப்படி இருக்கும் என்று சில சானல்களும், எப்படி இருக்க வேண்டும் என்று கட்சிகளும் தங்களுக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று சொல்லுகிறது. சென்னையை சேர்ந்த ஜோசியர், நியுமராலாஜிஸ்ட் திரு கே.வி. கோபால்கிருஷ்ணன் ஒவ்வொரு முறை சொல்லும் கணிப்புகளும் நூறு சதவிகிதம் பலிக்கின்றனவாம். இந்த முறை அவர் சொல்லும் கணிப்புகள் இவை:

·                  அடுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி.
·                  பாஜக/என்டிஏ கூட்டணிக்கு 286 இடங்கள் காங்கிரஸ்/யுபிஏ கூட்டணிக்கு   100 இடங்கள்.
·                இந்திய வரலாற்றிலேயே மிகவும் மோசமானதொரு தோல்வியை        காங்கிரஸ் சந்திக்கும்.
·                 காங்கிரஸ் 63 இடங்களைப் பிடிக்கும்.
·               இரண்டு பெருந்தலைகள் தோல்வியை சந்திப்பார்கள். (யார் யாரென்று    ஏன் சொல்லமுடியவில்லை, திரு கோபால்கிருஷ்ணன்?)
·              தீதி, அம்மா மற்றும் நவீன் பட்நாயக் மூவரும் மோடியை ஆதரிப்பார்கள்.
·         பங்குச்சந்தை, சென்செக்ஸ் இரண்டும் மோடியின் பாதிப்பால்  ஜூன் 13 க்குப் பிறகு 25000 யை எட்டும்.
·         சரக்குகளின் விலை சரிந்து உணவுப்பண்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் விலைகள் இறங்கும்.
·         தங்கம், வெள்ளி, இரும்பு இவைகளின் விலைகளும் இறங்கும்.
·         கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படும்.

திரு மோடி எப்போது பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் திரு. கோபால்கிருஷ்ணன். மே 25 ஆம் தேதி காலை 11.41 மணிக்கு அல்லது 27 ஆம் தேதி காலை 10.34 மணிக்கு திரு மோடி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டால் அவர் அடுத்த பத்து வருடங்களுக்கு இந்தியாவை ஆளக்கூடும். இந்த பத்து வருடங்களும் நமது நாட்டின் பொற்காலமாக இருக்கும்.


ஆனால் இந்தக் கணிப்புகளை நிஜமாக்குவதும் பொய்யாக்குவதும் திருவாளர் பொதுஜனம் கையில் அல்லவா இருக்கிறது? திருவாளர் பொதுஜனம் என்ன நினைக்கிறாரோ? அவருக்கும் கடவுளுக்குமே வெளிச்சம்!
செவ்வாய், 8 ஏப்ரல், 2014

பானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்!

இன்றைக்கு ஸ்ரீராம நவமி. ஸ்ரீராமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஸ்ரீராமனுக்கு என்ன வயது? இந்தக் கேள்விக்கு திரு செல்லப்பா அவர்களின் தளத்தில் ஸ்ரீராமனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. எப்படி அத்தனை துல்லியமாக ஸ்ரீராமாயணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை தேதி, வருஷம் குறிப்பிட்டு சொல்ல முடியும் என்பது வியப்பான செய்தி. பின்னூட்டத்தில் இன்னுமொரு வியப்பான தகவல். திரு காஷ்யபன் எழுதியிருக்கிறார். அதையும் படியுங்கள். வியப்பின் உச்சிக்கே போய்விடுவீர்கள்.

பானகம் என்று தலைப்பு கொடுத்துவிட்டு எதையோ பற்றிப் பேசுகிறேனே என்று நினைக்க வேண்டாம். இதோ அதைப்பற்றி சொல்லுகிறேன். நாங்கள் பெங்களூரு வந்த புதிதில் எதிர் வீட்டில் தீடீரென ஒருநாள் காலை வாசலில் பந்தல். இன்று என்ன விசேஷம் பந்தல் போட்டிருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டே இருக்கையில் அவர்கள் வீட்டுப் பெண் கையில் மூன்று பாத்திரங்களுடன் (பெரிய பாத்திரங்கள் தான்!) எங்கள் வீட்டிற்கு வந்தாள். நான் என்ன எது என்று கேட்கும் முன்பே எதிர் வீட்டிலிருந்து ஒரு குரல்: ‘இன்னிக்கு ஸ்ரீராம நவமிம்மா! பான்கா (பானகம்), கோசம்பரி, நீரு மஜ்ஜிகே (நீர் மோர்) அனுப்பியிருக்கேன். சாயங்கலாம் புதுசா பண்ணி ஸாருக்கு அனுப்பறேன். இதை நீங்களும் குழந்தைகளும் சாப்பிடுங்க!’ அங்கு இருந்தவரை இந்த விருந்து வருடாவருடம் ஸ்ரீராம நவமியன்று எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது.

பானகமும், கோசம்பரியும், நீர் மோரும் என்ன ருசி என்கிறீர்கள்! எப்படி இவ்வளவு ருசி ருசியாகப் பண்ணமுடியும் என்று நினைத்துக் கொண்டே நாங்கள் மூவரும் சாப்பிட்டு, குடித்து முடித்தோம். கொஞ்ச நேரத்தில் எதிர்வீட்டு வாசலில் நிறைய மனிதர்கள். என்னவென்று பார்த்தோம். (வயிறு நிரம்பிவிட்டது. இனி, பொழுது போகவேண்டுமே!) எதிர் வீட்டில் அந்தப் பக்கம் வருவோரையெல்லாம் அழைத்து ஒரு காகித டம்ப்ளரில் பான்கா, ஒரு டம்ப்ளரில் நீரு மஜ்ஜிகே, ஒரு தொன்னையில் கோசம்பரி என்று கொடுத்துக் கொண்டிருந்தனர். ரொம்பவும் வியப்பாக இருந்தது. நிறைய பேர்கள் வந்து வாங்கி சாப்பிட்டு, குடித்துவிட்டு சென்றுகொண்டிருந்தனர்.

ஸ்ரீராம நவமி அன்று ஒவ்வொரு வீதியிலும் இதுபோல பல தண்ணீர்பந்தல்கள் அமைக்கப்பட்டு பானகம், நீர்மோர், கோசம்பரி எல்லாம் விநியோகம் செய்கிறார்கள். பெரிய பெரிய அண்டாக்களில் இவையெல்லாம் தயார் செய்யப்படும். கிட்டத்தட்ட சாயங்காலம் வரை இந்த விநியோகம் நடக்கிறது. இதையெல்லாம் பிறகு தெரிந்துகொண்டோம். பெரிய பெரிய கடைகளில் கூட இதைபோல செய்து வைத்து வருவோருக்கெல்லாம் கொடுப்பார்கள். ஒருமுறை ‘விவேக்’ கில் சாப்பிட்டோம். (சும்மா கொடுத்தா விடுவார்களா?)
இந்தப் பானகம் இவர்கள் செய்யும் முறையும் வித்தியாசமானதுதான். நம்மூரில் கிர்ணி பழம் என்று சொல்லுகிறோமே, (அதை இவர்கள் தர்பூசணி என்பார்கள்) அந்தப் பழம், விளாம்பழம் இவற்றை இந்தப் பானகத்தில் சேர்க்கிறார்கள். முதலில் கிர்ணிப் பழங்களை தோல் சீவி, அதை விளாம்பழங்களுடன் சேர்த்து கையால் நன்கு பிசைந்து வேண்டும் அளவு நீர் சேர்த்து, பிறகு வெல்லம் அல்லது நாட்டி சர்க்கரை (நம்ம ஊரு நாட்டு சர்க்கரை) சேர்த்து, அதில் சுக்கு, உப்பு (கொஞ்சமே கொஞ்சம்) சேர்த்து பானகம் செய்கிறார்கள். ஏலக்காய் சேர்க்கிறார்கள். பானகத்தைக் குடிக்கும்போது இந்தப் பழங்கள் வாயில் சின்னச்சின்ன துண்டுகளாக அகப்படுவது பானகத்தின் ருசியை கூட்டுகிறது.

நாம் வடைபருப்பு என்று சொல்வதை இவர்கள் கோசம்பரி என்கிறார்கள். இதற்கு பயத்தம்பருப்பு, கடலைபருப்பு இரண்டையும் ஊற வைத்து, நீரை வடிகட்டி அதனுடன், வெள்ளரிக்காய், காரட், கொத்தமல்லி, தேங்காய் சேர்க்கிறார்கள். கடுகு, பச்சைமிளகாய், பெருங்காயம் தாளித்துக் கொட்டுகிறார்கள்.

நீர் மோர் எல்லோருக்கும் தெரிந்ததுதான். திரு பால ஹனுமான் பதிவில் இருக்கும் இந்தப் பதிவைப் பாருங்கள். கல்யாண மோர் எப்படி செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறார்.

சரி, வயிற்றுக்கு போட்டாயிற்று. இனி காதுக்கு இனிய இசை கேட்போமா? இன்றிலிருந்து ஆரம்பித்து சுமார் ஒரு மாதத்திற்கு எங்கள் ஊர் ஃபோர்ட் ஹை ஸ்கூலில் (Fort High School, Chamrajpet) ஸ்ரீராம நவமி கச்சேரிகள் ஆரம்பம். முதல் நாள் எல்லா வருடமும் கத்ரி கோபால்நாத் கச்சேரிதான். நம்மூரு பெரிய பெரிய பாடகர்கள் - சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, உன்னி கிருஷ்ணன், ஜேசுதாஸ், நெய்வேலி சந்தான கோபாலன் - என்று எல்லோரும் வருவார்கள். சீசன் டிக்கட் உண்டு. சீசன் டிக்கட் வாங்கிக் கொண்டு தவறாமல் கச்சேரி கேட்பேன் நான். சுமார் 76 வருடங்களாக தொடர்ந்து வருடாவருடம் நடைபெறுகின்றன இந்தக் கச்சேரிகள். எம்.எஸ். சுப்புலட்சுமி கூட வந்து பாடியிருக்கிறாராம் இங்கு.

நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன். ‘இந்த முறை இந்தக் கச்சேரிகள் பணப்பற்றாக்குறை காரணமாக 5 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று. மனதிற்கு மிக மிக வருத்தமாகிப் போய்விட்டது. இங்கு வந்து பாடி பிரபலமாக ஆகியிருக்கும் பாடகர், பாடகிகள் ஆளுக்கு கொஞ்சம் (கொஞ்சம் என்ன, நிறையவே போடலாம்) பணம் போட்டு ஒரு நிதிய மூலதனத்தை உருவாக்கி, இந்தக் கச்சேரிகள் தொடர்ந்து நடக்கும்படி செய்யலாம். அதைத்தவிர எல்லோரும் பணம் வாங்கிக் கொள்ளாமல் இங்கு வந்து பாடலாம். தங்களது வியாபார மனதை சற்று கழற்றி வைத்துவிட்டு இந்த ஒரு சரித்திர நிகழ்வு நின்று விடாமல் தொடர்ந்து நடக்க, ஏதாவது செய்வார்களா?

ஸ்ரீராமன் தான் இந்தக் கேள்விக்கு விடை அளிக்க வேண்டும்.


சீதா பிராட்டியுடன் கூடிய ஸ்ரீராமன் எல்லோருக்கும் எல்லா மங்களங்களையும் அளிக்கட்டும்.