புதன், 24 ஜூலை, 2013

ஒரு டன் மூங்கிலில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம்!

தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்வெட்டு, மின்பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு போன்ற வார்த்தை பயன்பாட்டை அடிக்கடி காணமுடியும்.


மின்வெட்டால் மக்கள் படும் அவதியை சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழகத்தின் அரசியலை நிர்ணயிக்கும் அளவுக்கு மின்வெட்டு பிரச்னை தலைத்தூக்கியிருக்கும் நிலையில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முனைந்திருக்கிறார் ஓசூர் நகரில் இயங்கிவரும் குரோமோர் உயிரிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் திரு என்.பாரதி.


இவர் கண்டுபிடித்திருக்கும் பீமா என்ற மூங்கில், மின் உற்பத்தியில் உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.


இது குறித்து திரு பாரதி  கூறியது:
நான்கு ஆண்டுகாலம் கடுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டு பீமா என்ற மூங்கில் வகையைக் கண்டுபிடித்துள்ளேன். வழக்கமான மூங்கிலைக் காட்டிலும் இது மாறுபட்டது. முதல் 6 மாதங்கள் வரை 6 அங்குலம் வளரும். அதன் பிறகு பீமா மூங்கில், 2 ஆண்டுகளுக்கு ஒருநாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை அடி உயரம் வளரும்.


சூரியஒளி உதவியுடன் வளரும் இவ்வகை மூங்கில், கரியமிலவாயுவை அதிகளவில் உறிஞ்சிக்கொண்டு, மனிதன் சுவாசிக்க உதவும் பிராணவாயுவை சுற்றுச்சூழலில் அதிகளவில் வெளியேற்றுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இருப்பது தவிர, நவநாகரீக வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் பீமா மூங்கிலின் பங்கு மகத்தானது.


ஒரு ஏக்கரில் ஆயிரம் பீமா மூங்கில் செடிகளை நடலாம். 2 ஆண்டுகள் கழித்து 40 டன் மூங்கில் கிடைக்கும். ஒருமணி நேரத்திற்கு விறகை எரியூட்டினால் மின்சாரம் தயாரிக்கலாம். அதாவது ஒருகிலோ மூங்கிலில் ஒருயூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். மின் பற்றாக் குறையால் தவிக்கும் இந்தியாவில் கிராமந்தோறும் மூங்கில் பயிரிட்டால் அடுத்த 2 ஆண்டுகளில் நமது நாடு மின் தேவையில் தன்னிறைவு பெறும்.


கிராமந்தோறும் 200 ஏக்கரில் மூங்கில் விளைவித்தால், ஒருமணி நேரத்திற்கு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். அப்படியானால், ஆண்டின் 52 வாரங்களில் 7 ஆயிரம் மெகாவாட் முதல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும்.வழக்கமாக ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு ரூ.5.40 ஆகிறது. ஆனால் மூங்கில் விறகில் தயாராகும் மின்சாரத்தின் அடக்கவிலை ரூ.1.50 மட்டுமே. மாற்று எரிசக்திக்காக ஏங்கும் இந்தியாவில் மாற்று சிந்தனையால் உருவானதுதான் பீமா மூங்கில். மூங்கில் விறகால் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை, மின் தேவையிலும் தன்னிறைவு அடையமுடியும்.


ஒரு ஏக்கரில் மூங்கில் பயிரிட்டால் ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டமுடியும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, கிராம பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். இது கனவு போல தோன்றினாலும், நடைமுறை சாத்தியமானது என்பதை இந்தியா தவிர, தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிரூபித்துள்ளேன்.


கடந்த 8 ஆண்டுகளில் இந்நாடுகளில் 14 லட்சம் பீமா மூங்கில் செடிகளை நட்டுள்ளோம். இந்தியாவில் மட்டும் 1.5 லட்சம் மரக்கன்றுகளை விநியோகித்துள்ளேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மூங்கில் மரச்செடி தவிர, இதனை பயிடுவதற்கான முறை மற்றும் அறுவடை தொடர்பான பயிற்சியை அளிக்கிறோம். தரிசுநிலம், வறண்டவானிலை போன்ற எந்த இயல்புள்ள சூழலிலும் பீமா மூங்கில் வளமாக வளரும். மூங்கில் பயிருக்கு உரம், ஊட்டச்சத்து, பாசனம் அவசியம்.


வழக்கமாக ஒருடன் மரவிறகு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மூங்கில் விறகு ஒருடன் ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மின் உற்பத்திக்கு ஆகும் செலவு குறைகிறது. விவசாயிக்கும் உற்பத்திச்செலவு கிடைத்துவிடும். இதன்விளைவாக ஒருஏக்கர் நிலத்தில் மூங்கில் பயிரிட்டால் ஓராண்டில் விவசாயிகள் ஒருலட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.தமிழகத்தில் இயங்கிவரும் 12 சர்க்கரை ஆலைகளில் மூங்கில் விறகு மற்றும் கரும்புச் சக்கை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெள்ளோட்டமாக, 15 மாவட்டங்களில் 
2 ஆயிரம் ஏக்கரில் பீமா மூங்கிலை பயிரிடுமாறு தமிழக அரசு எங்களை கேட்டுக்கொண்டுள்ளது.இதேபோல, கர்நாடகத்திலும் பீமா மூங்கில் பயிரிடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஊக்கம் அளிக்க திட்டமிட்டுள்ள இந்திய அரசு, உயிரி எரிசக்தி (எனர்ஜி பிளான்டேஷன்) என்ற திட்டத்தை வகுத்துள்ளது.விறகு மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுவதை ஊக்குவிப்பதற்காக மத்திய திட்டக்குழு உயிரி எரிசக்திக்கான துணைக்குழுவை அமைத்துள்ளது. அதில் என்னையும் உறுப்பினராக சேர்த்துள்ளனர்.எதிர்வரும் காலத்தில் உயிரி எரிசக்தி பிரபலமடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் பீமா மூங்கில் முக்கியப் பங்காற்றும். இந்தியாவின் மின் தேவைக்கு மூங்கில் விறகின் பங்கு மகத்தானதாக அமையும் என்றார் பாரதி.


தகவல் நன்றி: திரு அனந்தநாராயணன்

செவ்வாய், 16 ஜூலை, 2013

ஒரு மாற்றத்தின் கதை - அருணா ராய்


ஜூலை 'ஆழம்' இதழில் நான் எழுதி வெளிவந்த திருமதி அருணா ராய் பற்றிய கட்டுரை.

‘எனக்கு டாக்டர் மன்மோகன்சிங் மீது எந்த வருத்தமும் இல்லை; எனது வருத்தமெல்லாம் அரசாங்கத்தின் மீதும், மிகவும் முக்கியமான ஒரு சட்டத்தை நிறைவேற்றமுடியாத நாடாளுமன்றத்தின் மீதும்தான்!’ கடந்த மாதம் தேசிய ஆலோசனைக் குழுவிலிருந்து ராஜினாமா செய்திருக்கும் சமூக ஆர்வலர் அருணா ராய் தனது செயலுக்கு அளித்திருக்கும் விளக்கம் இது.
உணவுப் பாதுகாப்பு,  ஓய்வூதியம் போன்றவற்றுக்கு அரசு தேவையான முக்கியத்துவம் கொடுக்காதது வருத்தமளிக்கிறது என்கிறார் அருணா ராய். ‘இந்த நாட்டில் 60% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். பசியால் வாடும் பல லட்சம் ஏழை மக்களைப் பார்த்து அக்கறைப்படாமல் வேறெதற்கோ முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அமைப்பைப் பார்த்து வருத்தமாக இருக்கிறது.’
கடந்த ஒரு வருடமாகவே தேசிய ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகளை விமரிசித்து வந்த அருணா ராயின் பதவிக்காலம் மே 31 அன்று முடிவடைவதாக இருந்தது.  அதனை நீட்டிக்கவேண்டாம் என்று சோனியா காந்தியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய ஆலோசனை குழுவிலிருந்து (என்ஏசி) அருணா ராய் விலகுவது இது முதல் முறை அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல் முறையாக அரசு அமைத்தபோது இந்தக் ஆலோசனைக் குழுவில் (2004 &2006) அங்கத்தினராக இருந்த அருணா, தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத சட்டம் (MGNREGA) ஆகியவற்றில் குடிமக்களின் உரிமைகளை உறுதிசெய்ய முக்கியப் பங்காற்றியிருக்கிறார். குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் கொள்கைகளைப் பற்றிய குழுவின் பரிந்துரையை அரசு ஏற்காத காரணத்தால் 2006 ஆம் ஆண்டு அதிலிருந்து விலகினார். ஆனால் ஐ.மு.கூ. இரண்டாம் முறையாக பதவி ஏற்றபோது இந்தக் குழுவின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பதவி ஏற்றார்.

மீதி கட்டுரை படிக்க: மாற்றத்தின் கதை 

சனி, 13 ஜூலை, 2013

இயற்கையின் கொடை - பழங்கள்


இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.

பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும்.பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.சிவப்பு நிறப் பழங்கள்கண்ணைக் கவரும் பழங்கள்தான்

சிவப்பு நிறப் பழங்கள்

இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள்,பிளம்ஸ்,செவ்வாழை,மாதுளம்பழம்,இலந்தை,செர்ரி,போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

மஞ்சள் நிறப் பழங்கள்

எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும்.மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும்.பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்வைப் போக்கும். மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்களை ஆற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும். வாழைப்பழம் - பொதுவாக கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும். அஜீரணத்தைக் குறைக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். முகப்பொலிவு கொடுக்கும். பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும். ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமி நாசினி.

பச்சை நிறப் பழங்கள்

பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய் போன்றவை அடங்கும் .இப்பழங்கள் காய்கறிகளை ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன.மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.


ஆரஞ்சு நிறப் பழங்கள்

மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும்.உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.

நீல நிறப் பழங்கள்

நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும். மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள் நீல நிறப் பழங்களாகும். துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது.தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும். தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும். இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.

மண் நிற பழங்கள்

சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும்.இது உடலுக்கு ஊக்கமளிக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.


இயற்கை நமக்களித்த வரங்கள் இந்தப் பழ வகைகள். இவற்றை உண்டு ஆரோக்கியமாக இருப்போம்.